பட மூலம், ColomboTelegraph

2019 டிசம்பர் மாதமளவில் ஒரு புத்தகத்தின் மீது மட்டும் பழமைவாத எதிர்ப்புக் கருத்துக்கள் குவிந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். “ஹதே அபே பொத” என்று அழைக்கப்படும் பாலியல் கல்வி தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்காக முன்மொழியப்பட்ட பாடத்திட்டத்திற்கு எதிராக முன்னணி மதத்தலைவர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பாலியல் கல்வி என்றால் என்ன என்ற விடயத்தின் மீது மக்களின் கவனம் குவிந்தது.

பாலியல் கல்வி என்றால் என்ன?

பாலியல் கல்வி என்பது பல நபர்களால் மற்றும் பல நிறுவனங்களால் பல்வேறு முறைகளில் விவரிக்கப்படுகிறது. யுனெஸ்கோ இதனை உறவுக் கல்வி என்கிறது. இலங்கையில் பாலியல் கல்வி சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடத்திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுருக்கமான முறையில் சொல்ல போனால், இந்தக் கல்வி மூலம் பிள்ளைகளுக்கு உடலுறவு மற்றும் பாலியல் பற்றிய ஆரோக்கியமான முடிவுகளை எடுக்கத் தேவையான தகவல்களையும் மற்றும் திறன்களையும் வழங்குதல் ஆகும்.

எப்படி உடலுறவு கொள்வது என்பதை பற்றி மட்டும் பாலியல் கல்வி உள்ளடக்கவில்லை. ஆண்குறி மற்றும் யோனியின் உயிரியல் தன்மையை விட தன்னுடைய பாலியல் சுகாதாரத்தை கையாள மற்றும் உறவுகளை நிர்வகிக்கத் தேவையான திறன்களை பெற்றுக் கொள்ளலும் இந்தத் தலைப்புகளுடன் தொடர்புள்ள விழுமியங்களையும் நம்பிக்கைகளையும் ஆராய்வதும் பாலியல் கல்வியில் உள்ளடங்கும் என பிளான்ட் பிரென்ட் ஹூட் நிறுவனம் தெரிவிக்கின்றது.

பாலியல் கல்வியை வழங்குவதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்வது மிக முக்கியம். எம் பிள்ளைகளுக்கு இந்தப் பாடத்தினை சொல்லிக் கொடுப்பதன் அவசியம் என்ன? பாலியல் கல்வியைக் கற்பிப்பதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை யுனெஸ்கோ உருவாக்கி வருகிறது.

உறவுகளை பற்றியும் உடலுறவை பற்றியும் பல இளம் பிள்ளைகள் குழப்பம் உருவாக்கும் தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே, பிள்ளைகள் சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு தேவை உள்ளது. சரியான முறையில் வழங்கப்படும் பொழுது, பாலியல் கல்வி இந்தத் தேவையை பூர்த்தி செய்கிறது. பால்நிலை நோக்கிய வன்முறை, பால்நிலை சமத்துவம், திட்டமிடப்படாத கருத்தரிப்பு, எச்.ஐ.வி. மற்றும் ஏனைய பாலியல் நோய்கள் போன்றவற்றினை பற்றி பிள்ளைகள் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பங்களில் அவர்களின் பாலியல் சுகாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் மற்றும் வாழ்க்கைக்கும் ஏற்படுக்கூடிய பாதிப்புகள் அதிகம்.

இலங்கையில் பாலியல் கல்வி?

பாடசாலைகளில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டாலும், இந்தப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் சரியான முறையில் கற்பிப்பதில்லை எனவும், இனப்பெருக்க சுகாதாரம் பற்றிய பகுதிகளை கற்பிக்க மறுக்கின்றனர் எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தை பற்றி எம் நாட்டில் பேசுவதற்கு உள்ள கூச்ச சுபாவம் ஆகும்.

உதாரணத்திற்கு, ஆசிரியர் வழிகாட்டியில் சுய இன்பம் காண்பதை பற்றி எவ்வாறு மாணவர்களுக்கு விளக்கப்படுத்துவது என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், பல ஆசிரியர்கள் இவாறான விடயங்களை பற்றி மாணவர்களுடன் கதைக்க மறுக்கின்றனர். ஆசிரியர் வழிகாட்டியில் விந்து வெளியாகுதல் என்னவென்றும் இதை பற்றி உள்ள பிழையான கருத்துகள் என்னவென்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. இருப்பினும், இந்தத் தகவல்களை எத்தனை ஆசிரியர்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்?

ஹதே அபே பொத என்ன கூறுகிறது?

இந்த சுகாதாரம் மற்றும் உடற்கல்வி புத்தகங்களில் பல பயனுள்ள விடயங்கள் இருந்தாலும், இதனை மாணவர்களுக்கு கற்பிக்காவிட்டால், அவர்கள் இவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. ஹதே அபே பொத எனும் இந்த புத்தகம் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்தப் பாடத்தின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய விழுமியங்கள் மற்றும் தகவல்கள் பற்றியும், இவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. இவ்வாறான பண்புகளை ஒரு வயது வந்தவருக்கு புரியவைப்பதை விட ஒரு பிள்ளைக்கு தெளிவுபடுத்துவது மிக சுலபமான காரியமாகும். இதனால்தான், இந்தப் பாடங்களை கற்பிப்பதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதே வகையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்று, இந்தப் பாடத்தினை கற்பிப்பதில் உள்ள பிரச்சினைகளை விளக்கியத்துடன் இதனை எவ்வாறு நீக்குவது மற்றும் பிள்ளைகளுக்கு எந்தக் கல்வியை எவ்வாறு பெற்றுக் கொடுப்பது என்றும் தெளிவுபடுத்தியது.

இந்தப் புத்தகத்தில் அப்படி என்னதான் பிரச்சினை உள்ளது?

பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்தே இந்தப் புத்தகம் பற்றி சுவாரஸ்யமான கேள்விகள் எழுந்தன. அறிக்கையை இங்கே பெற்றுக்கொள்ளலாம், இந்த அறிக்கை புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள செயல்முறை மற்றும் காரணங்களைப் பற்றி பேசுகிறது.

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்தப் புத்தகமானது, வயதுக்கு ஏற்ற மற்றும் எளிமையான முறையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை விளக்குகின்றது. “பாடசாலை மாணவர்களுக்கான இனவிருத்தி சுகாதாரக் கல்வியைக் கற்பித்தல்” என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கிட்டத்தட்ட 4 ஆண்டுகாலம் மேற்கொண்ட உழைப்பின் விளைவாகவே இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இந்தப் புத்தகம் பற்றிய எதிர்ப்பு முதல் முறையாக மதத் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டது. மதிப்புக்குரிய மீதாகொட அபேதிஸ்ஸ தேரர் ஒரு ஊடக சந்திப்பின் பொழுது, சுகாதார மற்றும் கல்வி அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் பொருத்தமற்றது எனவும், ஆபாசமானது எனவும் தெரிவித்தார். இதன் பின்னர் ஊடக செய்திகள் இந்தப் புத்தகம் பிள்ளைகளை இயற்கைக்கு மாறான மற்றும் சட்ட விரோதமான தகவல்களை தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறது எனத் தெரிவித்தன. இந்தப் புத்தகம் உளவியல் சார்ந்த வைத்தியர்களால் விமர்சனம் செய்யப்பட்டதா என்ற கேள்வி மதகுருமார்களால் எழுப்பப்பட்டது.

இவர்கள் கூறுவது சரியா?

இந்தப் புத்தகம் எம் நாட்டில் பிரச்சினைகளை அதிகரிக்கும் என்றும், எம் கலாச்சாரத்தை நாசமாக்கும் என்றும் இந்தப் புத்தகத்தை ஆதரிக்காதவர்கள் கூறினார்கள். இருப்பினும், உண்மை என்னவென்றால், எம் நாட்டில் உள்ள பிரச்சினைகளை ஒழிக்க கல்வியே சிறந்து வழி என்பது தான்.

நாம் எம்மிடையே உள்ள வேற்றுமைகளை காண்கிறோமே ஒழிய, எம்மிடையே உள்ள ஒற்றுமைகளைக் காண்பதில்லை. எனவே, இந்தப் பிரச்சினைகளையும் வன்முறைகளையும் ஒழிக்க வேண்டுமாயின், நாம் சிந்திக்கும் விதத்தை மாற்ற வேண்டும்.

நல்ல எண்ணங்களை சிந்திக்க, நல்ல வார்த்தைகளை பேச மற்றும் நல்ல பழக்கங்களைப் பின்பற்ற எம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். எம் பிள்ளைகள் பாடசாலையில் இந்த விழுமியங்களை கற்றுக்கொள்கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும். பாலியல் கல்வியை அனைத்து பாடசாலைகளிலும் வழங்குவதன் மூலம் மட்டுமே இதனை நாம் சாதிக்க முடியும்.

இனி எங்கு செல்வது?

இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் யாதெனில், இது நம் நாட்டில் உள்ள அனைவரையும் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை ஆகும். எம் நாட்டின் எதிர்காலத்தினை பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினையாகும். இது வெறும் பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்கள் கைகளில் இல்லை. அரசாங்கம் இந்த பாடங்கள் சரியான முறையில் கற்பிக்கப்படுகின்றனவா என பரிசோதிக்க வேண்டும். மேலும், பெற்றோர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதம் போன்ற படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், சுகாதாரம் மற்றும் உடல்கல்வி பாடத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனை நாம் அனைவரும் புரிந்துகொண்டு, இந்த பாடம் அனைத்து பாடசாலைகளிலும் சரியான முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றது என உறுதி செய்தால், நாம் 2020ஆம் ஆண்டில் ஓர் புதிய எதிர்காலத்தை உருவாக்கத் தொடங்கலாம். இந்த எதிர்காலத்தில் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள் எனவும், எல்லோருக்கும் சம சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் என்றும் மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள் வன்முறைக்கு வழிவகுக்காது என்றும் நாம் உறுதி செய்ய முடியும்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நாட்டின் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் என நாம் அனைவரும் பாலியல் கல்வி போதிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, இதற்குத் தேவையான முயற்சிகளை உடனடியாக எடுக்கவும், இந்த முயற்சிகளுக்கான ஆதரவை வழங்கவும் முற்பட வேண்டும்.

நன்றி: Bakamoono