பட மூலம், Amalini De Sayrah

“எனது வீட்டிற்கு ஓர் அஹமதியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வந்தது. அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகளுக்கு நான் அடைக்கலம் அளித்திருந்தேன். இவர்கள் 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களுக்கு அடைக்கலம் வழங்கக்கூடாது என்று வட மாகாண ஆளுநர் என்னிடம் கேட்டுக்கொண்டார். கட்டாயமாக வெளியேற வேண்டும் என்றும் கூறினார். உடனடியாக என்னால் அனுப்ப முடியாது, சட்டத்தரணிகளுடன் ஆலோசித்துவிட்டு அறிவிக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். அதற்காக நான்கு நாட்கள் அவகாசம் தருவதாக கூறினார். இந்த நான்கு நாட்களுக்குள் பொலிஸாரை அனுப்பக்கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கு சரி என்று உறுதிமொழி அளித்தார். இருந்தபோதிலும் அன்றைய தினம் இரவே எனது வீட்டின் முன்னால் பொலிஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.”

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து அடிப்படைவாத பெளத்த பிக்குகள் மற்றும் காடையர்களின் வன்முறை நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் தஞ்சம் கோரியிருந்த 1500 இற்கும் மேற்பட்ட அகதிகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற நேரிட்டது. போகும் இடமெல்லாம் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவ்வாறு பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து எங்கும் இடம்கிடைக்காமல் இறுதியில் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலின் வீட்டில் ஒரு குடும்பம் தஞ்சமடைந்தது. நான்கு பிள்ளைகளுடன் கூடிய அந்தக் குடும்பத்தையே வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வெளியேற்றக் கோரியதாக பேராசிரியர் கூறுகிறார்.

“நான் வெளியே சென்றதும் பொலிஸ் ஜீப் சென்றுவிட்டது. ஆனாலும் மேலும் இரு பொலிஸார் வீட்டுக்கு வந்து விசாரித்தார்கள். அச்சமடைந்த அப்பாஸ் குடும்பத்தினர் அன்றைய தினம் இரவே கொழும்புக்கு சென்றார்கள். கொழும்பில் அலைந்து 3 நாட்களுக்கு மட்டும் வீடொன்றை பெற்றுக் கொண்ட அவர்கள், வீட்டுரிமையாளர் மூன்று நாட்களுக்கு மேல் தங்கமுடியாது என்று கூற இறுதியில் நான்கு பிள்ளைகளுடன் பூந்தோட்டம் முகாமில் தஞ்சமடைந்தார்கள்” என்று கூறுகிறார் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்.

உலக அகதிகள் தினமான இன்று இலங்கையில் தஞ்சம் கோரியிருக்கும் அகதிகள் குறித்து பேராசிரியரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான எஸ். ரத்னஜீவன் எச். ஹூல் மாற்றத்துக்கு வழங்கிய நேர்க்காணல். யுடியூப் வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.


தொடர்புபட்ட கட்டுரைகள்: உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி”, “குண்டுத்தாக்குதல்கள், அகதிகள் மற்றும் அவசரகால ஒழுங்குவிதிகள்: இராணுவ சர்வாதிகாரம் ஒன்று குறித்த ஆபத்துக்கள்