பட மூலம், ForeignPolicy

ஆசிரியர் குறிப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை

2018ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து மூன்று அதிரடியான அறிக்கைகள் வெளியாகின. 1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசை விட்டு வெளியேறியமை, 2. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை, 3. அரசியலமைப்புச் சட்டத்தின் 42 (4) ஆவது பிரிவிற்கமைய ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் அவருக்கு தெரியப்படுத்தியமை ஆகியனவையாகும்.

இந்த நடவடிக்கை சட்டபூர்வமானதா இல்லையா மற்றும் இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகின்றது என்பதன் தெளிவு பற்றிய விவாதங்கள் ஒருபுறமிருக்க, இந்த நடவடிக்கை நாடாளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படாமல் முற்றிலும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட முறை, பிரதமருக்கோ அமைச்சரவைக்கோ முன்னறிவித்தல் அல்லது ஒரு சிறு கால அவகாசம் எதுவும் கொடுக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்டமை, ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரம் அதிரடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு நாட்டிலே அதிர்வலைகளை ஏற்படுத்தியமை போன்ற நடவடிக்கையின் நோக்கங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஜனநாயகத்தில் அரசாங்கத்தை மாற்றுவதற்கான வழிமுறையிதுவல்ல என்பதை இந்த முழுமையான சூழ்நிலைகள் வெளிப்படுத்துகின்றன. மாறாக ஒரு அரசியலமைப்பு சதியையே இது காட்டுகின்றது. இது ஒரு அரசியல் நெருக்கடியை நோக்கித்தான் பெரும்பாலும் நகரும். இந்த நடவடிக்கை ஒரு அரசியல் யாப்பிற்கு முரணான செயல். ஏனெனில், பதவியில் இருக்கும் பிரதமர் புதிய பிரதமர் நியமிக்கப்பட முன்னர் சட்ட பூர்வமாக பதவி விலகவில்லை. இந்த நிலை மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். ஏனெனில், தாம்தான் பிரதமர் என்று இருவர் தெரிவித்துள்ளதுடன் அவர்களுடன் சார்புடைய கட்சியினர் மத்தியில் அதிகாரத்துக்கான மற்றும் சட்ட அங்கீகாரத்துக்குமான போட்டியும் தற்போது ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரில் ஒருவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும். இந்த நடவடிக்கை இந்நாட்டில் எவ்வாறான நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை காலமே பதில் சொல்லவேண்டும்.

பத்தொன்பதாம் அரசியல் யாப்பு திருத்தத்தின்படி பிரதமர் மரணந்தாலோ, பதவி விலகினாலோ, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதிலிருந்து விலகினாலோ அல்லது வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது மேற்கொள்ளப்படும் வாக்கெடுப்பு (பிரிவு 46 (2) மற்றும் 48) ஆகிய சந்தர்ப்பங்களில் அரசு தோற்கடிக்கப்பட்டாலோ பிரதமர் ஒருவர் தனது பதவியை இழக்கலாம். பத்தொன்பதாம் அரசியல் யாப்பு திருத்தத்தின்படி பிரதமர் ஒருவர் மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலேயே தனது பதவியை இழக்கலாம் என்று கூறப்பட்டிருப்பதனாலும், முன்னர் பிரதமரை பதவி விலக்க ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை இந்த திருத்தம் இல்லாமல் செய்ததாலும் மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களை தவிர்த்து வேறு எந்த முறையிலும் பிரதமரை​பதவியிலிருந்து நீக்க முடியாது. குறிப்பாக, மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பிரதமர் தனது பதவியிலிருந்து விலகினால் மட்டுமே ஜனாதிபதி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும்.

தற்போது சேவையிலிருக்கும் பிரதமர் மேற்குறிப்பிட்ட எந்த ஒரு வகையிலும் தனது பதவியை இழக்கவோ இராஜினாமா செய்யவோ இல்லை. எனினும், ஜனாதிபதி பிரிவு 42(4) இல் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கமைய ஒரு பிரதமரை நியமித்துள்ளார். மேற்குறிப்பிட்ட அந்தப் பிரிவின் படி, நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இந்த பிரிவில் கூறப்பட்டுள்ளவற்றை ஜனாதிபதி அவர்கள் அவை கூறப்பட்டுள்ள விதத்திலேயே விளங்கிக்கொண்டுள்ளார். ஜனாதிபதியினுடைய கருத்தின்படி என அப்பிரிவு கூறுகையில், பிரதமராக நியமிக்கப்படுவதற்கு தகுதியான நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த அவருடைய தனிப்பட்ட மற்றும் அகநிலை கருத்தை அது குறிக்கவில்லை. மாறாக புறநிலைக் கண்ணோட்டத்தின் படியும் அரசியல் யாப்பின் கண்ணோட்டத்தின் படியும் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறக்கூடிய நபரை தெரிவு செய்யும் அதிகாரத்தையே குறிப்பிட்ட அந்தப் பிரிவு தெரிவிக்கின்றது. இது பொதுவாக, ஆயினும் எந்நேரமும் அல்ல, நாடாளுமன்றத்தின் மிக பெரிய கட்சியின் தலைவராகவே இருப்பார்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது கணிசமான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றார். அதன் பின்னரோ அல்லது ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட முன்னரோ இவ்வாறான வாக்கெடுப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வி காணாத விக்கிரமசிங்கவை விலக்கி இன்னொருவரை பிரதமராக ஜனாதிபதியினால் அரசியல் யாப்புக்கு அமைவாக நியமிக்க முடியாது.

இதேவேளை பிரிவு 42(2) ஆனது ஜனாதிபதிக்கு ஒரு பிரதமரை நியமித்தற்கான அதிகாரத்தைப்பற்றி தான் கூறுகிறதே தவிர, ஜனாதிபதியால் பிரதமரை விலக்குவதற்கான அதிகாரத்தைப்பற்றி குறிப்பிடவில்லை.

2015இற்கு முற்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதிக்கு பிரதமர் ஒருவரை எவ்வாறு நியமிக்க அதிகாரம் இருந்ததோ அவ்வாறே பதிவியிலிருந்து அகற்ற அதிகாரம் உண்டு எனக் கருதினாலும், பத்தொன்பதாம் அரசியல் யாப்பு திருத்தமானது பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான அல்லது விலக்குவதற்கான சந்தர்ப்பங்களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த நடைமுறைகளை பின்பற்றத் தவறியதனால் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானதும் அரசியல் யாப்புக்கு முரணானதுமாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு காரணமாகக் கருதக்கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விலகல் மூலம் ராஜபக்‌ஷவுக்கு சாதகமாக மாறுபட்டிருந்தால், சிறிசேனவும் ராஜபக்‌ஷவும் அரசியல் யாப்புக்கு அமைவாக பிரதமரை நாடாளுமன்றத்தில் வைத்து ஏன் தோற்கடிக்க முன்வரவில்லை?

ராஜபக்‌ஷ தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தவறினால் இந்த நெருக்கடி மேலும் தொடரும். எனினும், அவரும் சிறிசேனவும் அரசியல் யாப்புக்கும் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு அமைவாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு முன்னர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், வார இறுதி நாட்களில் அரச நிறுவனங்கள், காவல் துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கையின் சவால் நிறைந்த தன்மை காரணமாக நாட்டின் நீதி மன்றங்கள் இதில் தலையிட மாட்டாது என்ற காரணத்தினால், இந்த நடவடிக்கை தொடர்பான சட்டவிரோதத்தன்மைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது எனவும் இவர்கள் சரியாக ஊகித்துள்ளனர்.

ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு நடத்தை மிகவும் சாதாரணமானது. மேலும், ஒரு ஸ்திரமற்ற குடியரசின் ஜனரஞ்சகமான ஜனாதிபதி என்பதனை அவர் வெளிக்காட்டுவதில் தயக்கம் காட்டவும் இல்லை. எனினும், இவ்வாறான ஒரு நிலையை மாற்றுவதற்காகவே 2015 மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும், உயர்ந்த கொள்கைகளைக் கொண்டு நாட்டை சீராக்கும் வீரராக காணப்பட்டார். தற்போது கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வெறுக்கத்தக்க நிலைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Paradise Lost? Preliminary Notes on a Constitutional Coup என்ற தலைப்பில் கலாநிதி அசங்க வெலிகல எழுதி கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.