பட மூலம், Scroll

இன்று கேள்விக்குறியாகியுள்ள விடயம் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலமோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோயில்லை. மாறாக ஜனநாயகமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான  அரசமைப்பை மீறாமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியனவே இன்று ஆபத்தைச் சந்தித்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிப்பதற்கான ஜனநாயக வழிமுறையொன்று உள்ளது. வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்தைத் தோற்கடிப்பதே அந்த வழிமுறையாகும். அது அரசமைப்பிற்கு உட்பட்ட நடவடிக்கையாகயிருந்திருக்கும். மாறாக நாட்டை குழப்பத்திற்குள் தள்ளியிருக்காது.

மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு நாடாளுமன்ற பெரும்பான்மை உள்ள பட்சத்திலேயே அவ்வாறான நடவடிக்கை சாத்தியம். நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத ஒருவரை பிரதமராக்குவதற்காகவே அரசமைப்பு சதி இடம்பெற்றது.

சபாநாயகருடன் கலந்தாலோசனை செய்யாமல் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டமைக்குக் காரணம் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் பெரும்பான்மையில்லை என்பதே.

அரசமைப்பை இவ்வாறு மீறியுள்ள புதிய அரசாங்கம் அரசமைப்பை விட வலுக்குறைந்த சட்டங்களை பின்பற்றுமா? புதிய அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்குமா? அல்லது தன்னிடம் நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லை என்பதை அது ஏற்றுக்கொள்ளுமா? அல்லது அது நாடாளுமன்றத்தின் அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைப் பயன்படுத்தி தனக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்த முயலுமா? ஒக்டோபர் 26ஆம் திகதி அரச ஊடகங்கள் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டமை எதிர்காலத்தில் என்ன காத்திருக்கின்றது என்பதை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது. அரசாங்கத்தினால் சட்டத்தின் ஆட்சி அல்லது ஜனநாய நடைமுறைகளை பின்பற்ற முடியாது. அது அதனை செய்யாது. ராஜபக்‌ஷாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்திலிருப்பதற்காக எதனையெல்லாம் செய்யவேண்டுமோ அதனையெல்லாம் செய்வார்கள்.

கொலைச்சதி நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான நாமல் குமார சனிக்கிழமை செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியதுடன் கொலை சதியின் முக்கிய சூத்திரதாரி ரணில் விக்கிரமசிங்க எனத் தெரிவித்தார். அதேவேளை தன்னிடம் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட அவர், தான் காதால் கேள்விப்பட்டதை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கை ஜனநாயகத்தை மாத்திரமல்ல உண்மையை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தத்தையும் இழக்கவுள்ளது. முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதைக் கருத்தில் கொள்வதும் அவசியம். சதிமுயற்சி தொடர்பில் எந்த அரசியல்வாதியாவது கைதுசெய்யப்பட்டால் அவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயே கைதுசெய்யப்படுவார்கள். மஹிந்த ராஜபக்‌ஷவிற்கான பெரும்பான்மையை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான தந்திரோபாயங்கள் பின்பற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

கோட்டாபய ராஜபக்‌ஷ வெள்ளிக்கிழமை இரவு சண்டே டைம்ஸுடன் உரையாடியவேளை அவருடன் ராவன பலயவின் பௌத்த மதகுரு இத்தாகந்தே சத்தாதிஸ்ஸவும் காணப்பட்டார்.

புதிய பிரதமரை அங்கீகரித்துள்ள ஒரேயொரு நாடு சீனா. அதுவே முதலில் அங்கீகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அரசமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வந்தவர்களால் மீண்டும் மீண்டும் சட்டங்கள் மீறப்படும், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஜனநாயகம் கைவிடப்படும் ஒரு நிலைக்குள் இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கிய எங்கள் பயணம் ஆரம்பமாகியுள்ளது.

கிரவுண்ட்விவ்ஸ் தளத்துக்காக திசரணி குணசேகர எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்