படம் | Official Facebook Page of US Department of State

சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதுதான் இன்றைய சூழலின் பிரதான பேசு பொருள். அவ்வாறானதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் ஒரு புறமாகவும் அரசுசாரா நிறுவனங்கள் இன்னொரு புறமாகவும் இயங்கிவருகின்றனர். ஆனால், இன்னொரு இனத்துடன் நல்லிணக்கத்தை காண்பதற்கு முன்னர் அது நமக்குள் இருக்கிறதா என்பதைக் காண்பது அவசியம். அந்த அடிப்படையிலேயே சில விடயங்களை இப்பத்தி முன்கொண்டுவர முயல்கிறது. இது எவர் மீதான விமர்சனமும் அல்ல. எங்கள் அரசியல் போக்கில் உள்ளார்ந்து காணப்படும் ஒரு பலவீனம் பற்றியது மட்டுமே! இது அனைவர் மீதுமான விமர்சனம். ஒரு சமூகம் தன்னுடைய பலவீனத்தை விளங்கிக் கொள்ள முடியாது போனால், அதனால் ஏனைய சமூகங்களை எதிர்கொள்ளுவது என்பது எப்போதுமே எட்டாக் கனிதான். சிங்களவர்களுடன் நல்லிணக்கமாக வாழ்தல் என்பது இன்னொரு சமூகத்தை எதிர்கொள்ளுவதுடன் தொடர்பானது. ஆனால், அதற்கு முதலில் தமிழர்களுக்குள் தங்களது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கூட்டுப் புரிதலும், கூட்டாக இயங்குவதற்கான உடன்பாடும் அவசியம். ஆனால், அது தமிழர்களுக்குள் இருக்கிறதா? அதனை நோக்கி ஏன் இதுவரை தமிழ் அரசியல் கட்சிகளால் பயணிக்க முடியவில்லை?

ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் இருந்த ஓரளவான கூட்டுச் செயற்பாடு கூட தற்போது இறங்குநிலையில் சென்றுகொண்டிருக்கிறது. இம்முறை மேதினத்தை கூட்டமைப்பு தனியாக அனுஸ்டித்துள்ளது. ஒரு மேதினத்தை கூட கூட்டமைப்பாக ஒன்றுபட்டு அனுஸ்டிக்க முடியவில்லை! பின்னர் எவ்வாறு கூட்டமைப்பால் சிங்கள அரசாங்கத்தை எதிர்கொள்ள முடியும்? விடுதலைப் புலிகள் மீதான பிரதான விமர்சனங்களில் ஒன்று, அவர்கள் ஏனைய அமைப்புக்களை இயங்க அனுமதிக்கவில்லை. அதாவது, அவர்கள் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்ற முயற்சிக்கவில்லை என்பது. அந்த விமர்சனம் சரியானதுதான். ஆனால், 2009இற்குப் பின்னர் பல்வேறு தரப்பினரும் விரும்பிய அந்த உவப்பான, புலிகள் இல்லாத சூழல் கிடைக்கப்பெற்றது. ஆயினும், தமிழ் அரசியல் தலைமைகளால் ஒரு கூட்டு இணக்கப்பாட்டை நோக்கி முன்னேற முடியவில்லையே! ஏன்? விஜய் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றின் தலைப்பு ‘வெல்லப் போவது யார்’ – அண்மைக்காலமாக தமிழ் சூழலில் அரங்கேறிவரும் அரசியல் முன்னெடுப்புக்களை பார்க்கும் போதும் – தங்களின் அரசியல் இருப்பை உறுப்படுத்திக் கொள்வதில் வெல்லப் போவது யார் என்பதற்கான ஒரு அரசியல் ஒத்திகையே தெரிகிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் அஸ்தமனத்திற்குப் பின்னர் தமிழ் சூழலில் இயங்க முடியாமல் போன பலரும் தற்போது மீண்டும் ஓரு ஆட்டத்தை ஆடிப்பார்க்கலாம் என்று களமிறங்கியிருக்கின்றனர். தங்களின் ஆற்றலை தமிழ் சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டுமென்னும் நோக்கில் அவர்கள் இருந்தால், அது வரவேற்கத்தக்கது. ஆனால், அது வெறுமனே தங்களை நிரூபிப்பதற்கான ஆட்டமாக இருந்துவிடக் கூடாது.

இன்று விடுதலைப் புலிகள் அமைப்பை தவிர ஏனைய பிரதான அமைப்புக்கள் அனைத்துமே களத்தில் நிற்கின்றன. அந்த அமைப்புக்களின் சிரேஸ்ட தலைவர்கள் அனைவருமே இருக்கின்றனர். தங்களின் சரி பிழைகளை மக்கள் முன்னால் பகிரங்கமாக முன்வைக்கும் சூழலும் அனைவருக்கும் வாய்த்திருக்கிறது. அண்மையில் வரதராஜப் பெருமாள் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., பத்மநாபா அணி, அதனுடைய பெயரை மாற்றி தங்களுடைய பங்கிற்கு புதிய ஓட்டமொன்றிற்கு தயாராகியிருக்கின்றனர். அது நல்லது. பல வருடங்களாக ஈ.பி.டி.பியாக இருந்த சந்திரகுமார் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி புதிய பாதை ஒன்றில் பயணிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். புதிய கட்சிகள் தொடர்பில் சிந்திக்குமளவிற்கு ஏன் ஒரு பொது ஜக்கிய முன்னணியாக இயங்க முடியாமல் இருக்கின்றது என்பதான் இங்கு கவனிக்க வேண்டியது. இதனைத்தான் இப்பத்தி முதலில் தமிழர்களுக்கிடையில் நல்லிணக்கமொன்று அவசியம் என்று குறிப்பிடுகின்றது.

புலிகள் இல்லாத காலத்தில் கூட குறித்த அரசியல் கட்சிகளால் தங்களுக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வர முடியாமல் இருக்கும் நிலைமையானது பிறிதொரு கோணத்தில், புலிகள் மீது இதுவரை (இப்பத்தியாளர் அடங்கலாக) முன்வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களை கேள்விக்குட்படுத்துகின்றது. மற்றைய அமைப்புக்களை ஓரங்கட்டி மேலெழு வேண்டும் என்னும் அரசியல் போக்கு பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ் அமைப்புக்களையும் பீடித்திருந்த ஒரு நோய்க் கூறா என்னும் கேள்வி எழுகிறது. புலிகள் இல்லாத காலத்தில் கூட மேற்படி அமைப்புக்கள் தங்களுக்குள் ஒன்றுபடும் புள்ளியை கண்டடைய முடியாமல் தடுமாறுவதை பார்க்கும் போது இது புலிகளுக்கு மட்டுமான ஒன்றல்ல, அனைவருக்குள் பரவியிருந்த அதிகாரத்துவத்தின் வெளிப்பாடு என்பது தெளிவாகிறது. புலிகள் ஏனைய அமைப்புக்களை தடைசெய்து தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்ற காலத்திலும் அனைவருக்குள்ளும் இருந்தது புலிகளின் மனோபாவம்தான். ஆனால், புலிகள் பந்திக்கு முந்திக் கொண்டனர். இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் – புலிகள் இருந்த காலத்தில் ஒற்றுமையாக இயங்கிய கூட்டமைப்பு, புலிகளுக்கு பிற்பட்ட காலத்தில் கட்சி தனித்துவங்கள் தொடர்பில் மோதிக் கொண்டது. உண்மையில் புலிகள் இல்லாத காலத்தில் கூட்டமைப்பு மேலும் பலமடைந்திருக்க வேண்டுமல்லவா?

ஆழ்ந்து நோக்கினால் ஒற்றுமையின்மை என்பது தமிழ் சமூகத்தின் சகல பிரிவுகளையும் ஆக்கிரமித்திருக்கும் ஒரு நோய்க் கூறு. அரசியல்வாதிகள் மத்தியில் நிலைமை இதுவென்றால், அரசியல் தரப்பினரை நெறிப்படுத்த வேண்டிய ஊடகத் தரப்பினர் ஆய்வாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் என்போர் மத்தியிலும் கூட ஒரு ஒருங்கிணைந்த உரையாடல் இல்லை. ஒவ்வொருவரும் மற்றவரை விடவும் நான் மேலானவன் என்பதை நிரூபிப்பதிலேயே தங்களின் ஆற்றலை விரயம் செய்து கொண்டிருக்கின்றனர். அறிவால் ஒருவரை மேவிச் செல்வது என்பது ஆரோக்கியமானது. ஆனால், வெறும் வசைகளால் மேவிச் செல்லலாம் என்பது சிறுமை. களத்தில் நிலைமை இதுவென்றால் புலத்திலும் அதுவே நடைபெறுகிறது. புலம்பெயர் சூழலிலும் ஆளுக்கொரு அமைப்பு, ஆளுக்கொரு கருத்து. ஆனால், இறுதியில் இவர்களால் தமிழ் மக்கள் அடைந்த நன்மை என்னவென்றால், எதுமில்லை.

விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்து ஏழு வருடங்கள் முடிந்துவிட்டது. இந்த ஏழு வருடங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு கூட்டு வேலைத்திட்டம் நோக்கி முன்னேற முடியாமைக்கான பழியை எவர் மீது சுமத்துவது? இல்லாத புலிகள் மீதா? ஒரு சிலர் அதற்கு தடையாக இருக்கின்றனர் என்றால், அவர்களை ஓரங்கட்டிவிட்டு மற்றவர்கள் ஒரு ஜக்கிய முன்னணி தொடர்பில் சிந்தித்திருக்க முடியும். அதுவும் கடந்த ஏழு வருடங்களில் நிகழவில்லை. ஆனால், சிங்கள அரசியல் தரப்பினரை உற்று நோக்கினால் அவர்கள் மத்தியில் முரண்பாடுகள் இருக்கின்றன. பதவிப் போட்டிகள் இருக்கின்றன. ஆனாலும், சில குறிப்பான விடயங்களில் அவர்கள் அனைவரும் கட்சி, அரசியல் நிலைப்பாடு என்பவற்றை கடந்து ஒன்றாகவே இருக்கின்றனர். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பு இப்படியான விவகாரங்களில் அவர்களுக்கிடையில் கட்சி வேறுபாடில்லை. அவர்கள் அனைவரும் சிங்கள தேசியவாதிகளாகவே இருக்கின்றனர். தங்களை இடதுசாரிகளாகவும் முற்போக்கு வாதிகளாகவும் காண்பித்துக் கொள்ளுபவர்கள் கூட இந்த விடயங்களில் முரண்படுவதில்லை. எனவே, சிங்களவர்களுடன் நல்லிணக்கம் தொடர்பில் உரையாடுவதற்கு முன்னர் தமிழர் தரப்பிற்குள் நல்லிணக்கம் தொடர்பில் சிந்திக்க முயற்சிப்போம். தமிழர்கள் ஒரு தேசம் என்று விவாதிப்பவர்கள் முதலில் தமிழர்கள் தமிழர்களாக சிந்திப்பது தொடர்பில் உரையாடுவதுதான் அவசியம்.