படம் | COLOMBO TELEGRAPH

அப்போதைய பொது எதிரணியினதும் பொது வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கூட்டாக செயற்பட்டதற்கிணங்க ஒரு வருடத்திற்கு முன்னர் மிகப்பெரிய தேர்தல் வெற்றியொன்று ஏற்படுத்தப்பட்டது. ராஜபக்‌ஷ ஆட்சிக்கு சவால் விடுக்கும் பொருட்டு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டமை இது முதற்தடவையாக இருக்கவில்லை. முன்னதாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேகா தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதுடன், சிறையிலும் அடைக்கப்பட்டார். இது எந்தவொரு எதிர்கால போட்டியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்த மறக்க முடியாத சம்பவமாக இருந்தது. அந்த வகையில், மீண்டுமொரு முறை பொது வேட்பாளர் ஒருவர் போட்டியில் களமிறங்குவது என்ற யோசனையானது தனிப்பட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் ஆபத்துக்கள் நிறைந்ததாக காணப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ராஜபக்‌ஷவிற்கு கையளிக்கப்பட்ட பெரும் தேர்தல் தோல்வியானது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் கூட மிகவும் தொலைதூர சாத்தியப்பாட்டை கொண்டதாகவே தோன்றியது. இந்த ஆபத்து இருந்தபோதிலும், அச்சுறுத்தப்படுவதை பொருட்படுத்தாத தைரியமான பிரஜைகள் மற்றும் தனிநபர் குழுக்கள் இன்னும் இருக்கவே செய்தனர். பொது எதிரணியின் விசேடமான அரசியல் தீர்மானம், ஜனாதிபதி சிறிசேனவின் தனிப்பட்ட துணிச்சல் மற்றும் ராஜபக்‌ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர தயாராக இருந்த மில்லியன் கணக்கான வாக்காளர்கள் என்பன இந்த வரலாற்று தேர்தல் வெற்றிக்கு களம் அமைத்தன.

ராஜபக்‌ஷ மேலாதிக்கத் திட்டம்

அதன் தோல்வியின் இயல்பை ஆராய்வதற்கு முன்னதாக ராஜபக்‌ஷ மேலாதிக்கத் திட்டம் என்று நான் குறிப்பிட விரும்புவதின் முக்கிய அம்சங்கள் பற்றி சுருக்கமாக பிரதிபலிக்க வேண்டியது முக்கியமாகும். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்‌ஷ 2015ஆம் ஆண்டில் பெற்ற வெற்றியானது இலங்கை அரசியலில் திருப்புமுனையொன்றை ஏற்படுத்தியது. ராஜபக்‌ஷ ஆட்சிக்கான ஆதரவு மையமானது அரசியல் மற்றும் தத்துவார்த்த ரீதியாக தழிழர் எதிர்ப்பானதும் ஒரு வகை தீவிர சிங்கள தேசியவாத்தால் தூண்டப்பட்டதுமான பெரும்பான்மைவாத சிங்கள பௌத்த வாக்காளர் தொகுதியை கொண்டதாகும். அதிகாரப்பகிர்வு பொதியொன்றை வழங்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு அரசியல் பேச்சுவார்த்தையும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. தழிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத பிரசாரம், அவர்களால் அப்பாவி பொதுமக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டமை, அதேபோல், சிங்கள அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன சிங்கள மக்கள் மத்தியிலான அப்பிராயங்களை கடினமாக்க ஏதுவாக அமைந்திருந்தன. இவ்வாறே, இலங்கையில் காணப்பட்ட அரசியல் பதற்றங்களை தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ளவும் எந்தவொரு எதிரணியையும் ஸ்திரமற்றதாக்குவதற்கும் பயன்படுத்திக்கொள்வதற்கு ராஜபக்‌ஷ ஆட்சியினால் முடிந்திருந்தது. அந்த ஆட்சியினால் தெற்கிலுள்ள அதனது சிங்கள அரசியல் எதிராளிகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தவும் அவர்களை அச்சுறுத்தவும் சிங்கள பௌத்த ஏக்கங்களை பயன்படுத்தக் கூடியதாக இருந்தது.

ராஜபக்‌ஷ ஆட்சியானது இந்தக் காலப்பகுதி முழுவதுமே புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை பேணியும் வந்திருந்தது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்க ராஜபக்‌ஷவினால் முடிந்திருக்கும் என்று ஏனைய முதலாளித்துவ அரசியல்வாதிகள் போதுமானளவு நம்பும் பட்சத்தில், ராஜபக்‌ஷ மேலாதிக்க திட்டத்தில் இணைந்துக் கொள்வதற்கு அவர்களுக்கான சாத்தியப்பாடு திறந்தே காணப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த நிலைமையினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. தமது அதிகமாக முன்னணித் தலைவர்களை அக்கட்சி அந்த காலப்பகுதியில் அரசாங்கத்திடம் இழந்திருந்தது. சிங்கள தேசியவாத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தவர்கள் ராஜபக்‌ஷவின் திட்டத்தினால் ஈர்க்கப்பட்டனர். ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை முன்னணி கூட இரண்டாக பிளவடைந்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஜே.வி.பி. எம்.பி.க்களும் அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்டனர்.

இறுதியில், தசாப்தங்களாக இலங்கையை பிளவுறச் செய்துக் கொண்டிருந்த சிவில் யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை அழித்து ராஜபக்‌ஷ சகோதரர்கள் 2009ஆம் ஆண்டில் இராணுவ ரீதியான வெற்றியை பெற்றனர். இதன் பெறுபேறாக மஹிந்த ராஜபக்‌ஷ இலங்கை அரசியலில் அவர்களது மேலாதிக்க கட்டுபாட்டை உறுதிசெய்து 2010ஆம் ஆண்டில் பெரும் தேர்தல் வெற்றியொன்றை பெற்றார். அரசியல் மற்றும் சமூக அதிகாரத்தில் இருந்து தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் விலகல் மீது உருவாக்கப்பட்டதாகவே அது அமைந்திருந்தது. இந்த ஆட்சியாளர்களின் தேர்தல் வெற்றியின் பின்னரான அவர்களின் அதிகாரத்துடன் கூடிய போதையானது அரசியல் எதிராளிகள் மீதான புதிய அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் அலையை ஆரம்பித்து வைத்தது. அரசியல் எதிராளிகள் கடத்தப்படுதலுடன் கூடிய மோசமான வெள்ளை வான் கலாசாரம், உண்மைகளை எழுதும் தைரியம் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் படுகொலை, நீதித்துறை மீதான தலையீடு, ரத்துபஸ்வெல்லயில் சுத்தமான குடிநீர் கோரிய அப்பாவி பொதுமக்கள் கொலை மற்றும் அளுத்கமவில் முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களது சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்திய பொதுபல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை ஆகிய அனைத்தும் மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு வந்த ஏதேச்சாதிகார ஆட்சியொன்றின் ஆதார அம்சங்களாக இருந்தன. ஒருவர் இரு தடவைகள் மட்டுமே ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என்று வரையறை நாடாளுமன்றத்தால் நீக்கப்பட்டது. இந்த ஆட்சியானது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த புகழை அது அதிகாரத்தில் இருப்பதற்கான காலத்தை நீடித்துக்கொள்ளவும் பலப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்தத் தயாராகியிருந்தது. அதுமட்டுமல்லாது, ஊழல் மற்றும் தேசிய வளத்தை சூறையாடுதல் என்பன தொற்றுநோயைப் போன்று உருவெடுத்திருந்தது.

அதற்குமேலாக, யுத்தத்தின் இறுதி நாட்களில் ஆயிரங்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பொறுப்புக்கூறல் விடயமானது ராஜபக்‌ஷ ஆட்சிக்கு பாரியதொரு விவகாரமாகவும் உருவெடுத்திருந்தது. போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களானது சர்வதேச ரீதியில் இலகுவில் அகற்றப்பட முடியாதவையாக காணப்பட்டன. இசைப்பிரியா சித்தரவதை செய்யப்பட்ட, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்றும் அரை நிர்வாண உடலுடனான படங்கள் மற்றும் பிரபாகரனின் 12 வயது மகன் பிஸ்கட் சாப்பிடுவதும், அதன் பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக கிடப்பதுமான படங்கள் என்பன ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த தண்டனையிலிருந்து விடுப்பாட்டு உரிமைக்கான கலாசாரத்தை சுருக்கமாக சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தன. பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச வலியுறுத்தல்களை அரசாங்கம் தொடச்சியாக புறக்கணித்து வந்திருந்ததுடன், தமிழ் சமூகத்துடன் எந்தவொரு அர்த்தபுஷ்டியான நல்லிணக்கத்தில் ஈடுபடுவதையும் நிராகரித்திருந்தது.

ராஜபக்‌ஷ மேலாதிக்க திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டிருந்த அரசியல் நடவடிக்கையை மாற்றியமைப்பதற்குத் தேவையான எதிர் மேலாதிக்க திட்டமொன்று பற்றி 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நான் வாதிட்டிருந்தேன். அவ்வாறானதொரு எதிர் மேலாதிக்க திட்டமென்பது தமிழ் சமூகத்துக்கான அதிகாரப் பகிர்வு உள்ளடக்கப்படாத வரை வெற்றியளிக்காது என்பதே அதன் வாதமாக இருந்தது. ஆகையால், தமிழ் சமூகத்தின் ஜனநாயக உரிமைகளை உள்வாங்குவது என்பது எந்தவொரு எதிர் மேலாதிக்க திட்டத்தினதும் பிரதான அம்சங்களில் ஒன்றாக அமைய வேண்டியிருந்தது.

புதியதொரு வரலாற்றுக் கூட்டணி

இலங்கையின் ஜனநாயக அரசியல் இடைவெளியை ஏற்படுத்தும் மற்றும் பேணும் முக்கிய முன்னெடுப்புகளானது மனித உரிமைகள் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தனவே தவிர, ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அதை செய்திருக்கவில்லை. அரசியல் அதிருப்தியாளர்களை வாயடைப்பதற்கான ராஜபக்‌ஷ ஆட்சியின் முயற்சிகளை அவர்கள் எதிர்த்ததுடன், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கான பிரசார நடவடிக்கைகான அனைத்து வழிகளிலும் ஆதிக்கம் செலுத்தினர். அவ்வாறு செய்யும்போது, தனிப்பட்ட ரீதியில் அவர்கள் கணிசமானளவு துணிச்சலுடன் செயற்பட்டிருந்ததுடன், ஜனாதிபதி சிறிசேனவின் வெற்றிக்கு முக்கிய அடித்தளத்தையும் ஏற்படுத்தினர். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அடிப்படை இடதுசாரிகள் வரையான வேறுபட்ட கருத்தியல்கள் மற்றும் அரசியல் தத்துவங்களைக் கொண்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் முக்கிய அணியொன்றை அவர்களால் ஒன்றுதிரட்ட முடிந்திருந்தது. ராஜபக்‌ஷ எதிர்ப்பு கூட்டணியொன்றை உருவாக்கும் சாத்தியத்துக்கு தடங்கலாக இருந்துக்கொண்டிருந்த முட்டுக்கட்டையை அவர்கள் தகர்த்தனர். “சுதந்திரத்துக்கான மேடை” என்று அது அழைக்கப்பட்டது. கருத்தியல் மற்றும் அரசியல் அடிப்படையில் இந்த புதிய சக்திகள் அணித்திரள்வானது ஆட்சி மாற்ற பற்றிய அரசியல் பிரசங்கங்களில் பெரும் திருப்புமுனையொன்றை பிரநிதித்துவப்படுத்தியது. இடதுசாரி அரசியல் பிரசங்கத்தின் (லக்லாவ் மற்றும் மௌவ்ஃபி, 1985, ஆதிக்க அரசியல் மற்றும் சோசலிச மூலோபாயம் பக்கம், 177) ‘வகுப்புவாத்தில்’ இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் அவர்களால் அந்த பாத்திரத்தை முன்னோடியாகக் கொண்டிருக்க முடிந்திருக்கவில்லை. முதலாளித்துவத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் யுத்த கனவை தொடர்வதில் இலங்கை இடதுசாரிகள் புதிய சமூக இயக்கங்களின் முக்கிய இயல்பை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். வாழ்வதற்கான உரிமை, சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் வாழும் சூழல்கள் சீரழிக்கப்படுவதற்கு எதிரான சமூக நடவடிக்கைகள் உள்ளிட்ட தனிப்பட்ட சுதந்திர மீறல்களுக்கு எதிரான போராட்டங்களை இடதுசாரி கட்சிகள் கைவிட்டுவிட்டன. எனினும், “சுந்திரத்துக்கான மேடை” தமது பிரசாரத்தில் மேற்படி விவகாரங்களில் சிலவற்றை கவனத்தில் எடுத்திருந்தது. உண்மையில் ஜனவரி 8ஆம் திகதி வெற்றியானது இந்தக் கள யதார்த்தத்தின் சரியான வாசிப்பை ஆதாரமாகக் கொண்டிருந்தது.

அவர்கள் மட்டும் இதில் தனித்து இருக்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரசாரத்திலும் அதேபோல், பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதிலும் அமரர். மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையிலான சமூக நீதிக்கான இயக்கத்தின் தலையீடும் இந்த இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பொன்றை செய்திருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு எதிரணி அரசியல் கட்சிகளுடன் பேசுவதிலும் இணங்கவைப்பதிலும் சோபித்த தேரரின் அயராத மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்பானது, நம்பிக்கை, ஆர்வம் மற்றும் போராடும் உணர்வின் பங்களிப்பின் மூலம் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கியது. இந்த நடவடிக்கையானது பின்னர், “தார்மீக, அறிவார்ந்த மற்றும் அரசியல் தலைமைத்துவம்” என்ற கிராம்ஷயன் சொற்களை பெறுவதில் பங்களிப்பு செய்திருந்தது. அவ்வாறானதொரு பணியின் பெறுபேறின் காரணமாக எதிரணியானது நம்பகத்தன்மையைப் பெற ஆரம்பித்திருந்தது. மைத்திரிபால சிறிசேனவும் ஏனையவர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிரணியின் பொது வேட்பாளர் தாமே என்று சிறிசேன தெரிவித்தமையானது ஆட்டத்தின் போக்கை மாற்றும் தருணமாக அமைந்திருந்தது. இந்தப் புள்ளியில் இருந்து அரசியல் இடைவெளியானது கண்கவர் பாணியில் திறந்துவிடப்பட்டது. அதுவரைக்கும் ஒதுங்கியிருந்த மக்கள் வெளியில் ஆரம்பித்ததுடன், அவர்களது உணர்வுகளையும் ராஜபக்‌ஷ குடும்ப நிறுவனத்தின் கீழ் அவர்கள் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பதையும் பகிரங்கமாக வெளிப்படுத்தவும் செய்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான கோரிக்கையானது எதிரணியின் ஜனநாயக கோரிக்கைகளை செறிவிப்பதாக அமைந்திருந்ததுடன், சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ரீதியாக அசைக்க முடியாததாக காணப்பட்ட ராஜபக்‌ஷ ஆட்சியில் பிளவுகள் தோன்றவும் ஆரம்பித்திருந்தன.

மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவருக்கு பெரும் எண்ணிக்கையிலான சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி வந்த லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கமியூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இடதுசாரிகள் ஆகியோரின் ஆதரவு கிடைத்திருந்தது. அவர்களில் சில உறுப்பினர்கள் ராஜபக்‌ஷ அணியில் தொடர்ந்தும் அங்கம் வகித்தனர். தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்காக பல வருடங்களாக தீவிரமாக பிரசாரம் செய்த நவ லங்கா சமசமாஜ கட்சியும் பொது வேட்பாளர் சிறிசேனவுக்கு ஆதரவளித்தது. சிறிசேனவின் அணியில் இருந்த அனைத்து கட்சிகளிலும் அதிக வாக்கு வங்கியைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியானது, பொது வேட்பாளர் சிறிசேனவை ஆதரிக்க ஒத்துக்கொண்டதன் மூலம் உண்மையில் தேர்தல் தியாகமொன்றை செய்திருந்தது. அத்துடன், தமிழர் வாக்கு வங்கியை அரசியல் தீர்வொன்றுக்கு உறுதியளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொது வேட்பாளர் சிறிசேனவுக்கு தந்திரோபாய ரீதியான ஆதரவை வழங்கியிருந்தது. அதேபோல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் சிறிசேனவுக்கு ஆதரவளித்திருந்தது. இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வலதுசாரி தொடக்கம் இடதுசாரி வரையான கட்சிகளினதும் சிங்களம் தொடக்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களினதும் ஆதரவை திரட்டிக் கொள்ளவும் அதேபோல், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்று அழைக்கப்பட்ட புதிய வரலாற்று அரசியல் கூட்டணியொன்றையும் உருவாக்கிக் கொள்ளவும் முடிந்திருந்தது. அமைப்பு ரீதியாகவும் சரி, அரசியல் தத்துவ ரீதியாகவும் சரி அது “சுதந்திரத்துக்கான மேடையின்” ஒரு விரிவாக்கமாக இருந்தது. இந்த வகையான கூட்டணியானது கருத்தியல் மற்றும் அரசியல் வேறுபாடுகள் வரையறைகளை கொண்டிருக்கக்கூடிய போதிலும், மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிக்கும் பொதுவான போராட்ட வாசகத்தின் பின்னணியில் அவர்கள் ஐக்கியப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன எதிர்பாராதவொன்றை நிகழ்த்திக்காட்டினார். ராஜபக்‌ஷவுக்கு எதிரான அவரது வெற்றியானது பாரிய தேர்தல் வெற்றியாக அமைந்திருந்தது. உண்மையில், ராஜபக்‌ஷ அரச அதிகாரம், அரச வளங்கள் மற்றும் அரச ஊடகங்களை விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தியிருந்ததுடன், தமது வெற்றி பாதுகாப்பாக உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் நம்பினார். ஏனினும், அவரது ஆட்சியின் கீழ் அடிக்கடி சத்தமின்றி பாதிக்கப்பட்டவர்கள் இறுதியில் பேசுவதற்கும் அவரை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வாக்களிப்பதற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர். அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டதுடன், கட்சியில் அவரது அதிகாரத்தை சட்டப்பூர்வமாக்குவதில் அது குறிப்பிடதக்க தருணத்தை உருவாக்கியிருந்தது. தேர்தல் காலத்தின் போதான பிரசாரங்களில் மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரித்திருந்த கட்சி சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் வந்திருந்ததுடன், சுதந்திரக் கட்சியில் ராஜபக்‌ஷவின் கருத்தியலையும் அரசியல் செல்வாக்கையும் நீக்குவதற்கான வாய்ப்பொன்றை அது அவருக்கு வழங்கியிருந்தது. புதிய வரலாற்றுக் கூட்டணியை பலப்படுத்துவதில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியானது புதிய சுதந்திர காற்றுக்கான வாயிலாக அமைந்திருந்ததுடன், இதற்கு முன்னர் இருந்திராத வகையில் மிகவும் அவசியமாக இருந்த அரசியல் அவகாசத்தையும் விஸ்தரித்திருந்தது. அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனைகளில் இருந்தான விடுபாட்டுரிமை என்பன காணாமல்போனதுடன், சட்ட ஆட்சி படிப்படியாக மீள நிலைநாட்டப்பட்டது. எவ்வாறிருப்பினும், கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்களை கைதுசெய்தலானது மக்கள் விரும்பியதைப் போன்று விரைந்து நடக்கவில்லை. கடந்த ஆட்சியினர் தமது குற்ற இயந்திரத்தையும் அதிகாரத்துவத்தையும் அப்படியே விட்டுச் சென்றுள்ளதுடன், சட்டம் தன் கடமையைச் செய்ய அது எளிதானதாக அமைந்திருக்கவில்லை. அவ்வாறான நிலைமையானது கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது.

சில விரக்திகள் காணப்பட்டபோதிலும், ஜனவரி 8ஆம் திகதி தேர்தல் வெற்றியானது உண்மையில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். அது கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் வழியேற்படுத்திக் கொடுத்து, மக்கள் சக்திகளுக்கு இரட்டை வெற்றியையும் ஏற்படுத்தியிருந்தது. மக்கள் சக்திகள் என்பது, மூவினங்களையும் சேர்ந்த சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களை தவிர வேறு யாருமில்லை. மக்களின் ஜனநாயக உரிமைகள் ஆபத்தமான வகையில் மிதித்த மற்றும் இன இருப்புகளுக்கு ஊழ்வினை விளைவித்த அதிகாரமிக்க அரசியல் மற்றும் இராணுவ வலிமையானது அம் மக்களால் எதிர்பாராத விதமாக துக்கியெறிப்பட்டமை இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இது முதற் தடவையாகும். பல்வேறுபட்ட சமூகங்களையும் பல்வேறு மற்றும் வித்தியாசமான ஜனநாயக குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளையும் கொண்ட மக்களையும் ஐக்கியப் படுத்துவதற்கு அவ்வாறானதொரு அமைப்பு ரீதியான கட்டமைப்பொன்றை உருவாக்கியவர்கள், அவர்களது புதுமையானதும் வரலாற்று ரீதியானதும் சாதனைக்காக பாராட்டப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது, வகுப்பு அடிப்படையிலான அரசியலுக்கு அப்பால் பணியாற்றுவதற்கும் ஜனநாயக கோரிக்கைகளை வெற்றிக்கொள்வதற்குமான விவேகமுள்ள அரசியல் முன்மாதிரியொன்றையும் அது வழங்கியது. இலங்கையின் பரந்துப்பட்ட இடதுசாரி அரசியல் நடைமுறைக்கு ஒவ்வாத ஜனநாயக அரசியல் விவாதமாக அது இருக்கிறது.

சவால்கள்

தற்போதைய வரலாற்றுக் கூட்டணியானது தற்போதைய இந்தத் தருணத்தில் நான்கு சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறது.

முதலாவதாக, தமிழ் சமூகத்துக்கு அதிகாரத்தை பகிர்வதில் சிங்கள் பௌத்த மேலாதிக்க சக்திகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை அது சந்திக்கிறது. இது கணிசமான அரசியல் ஆபத்தொன்றை கொண்டுள்ளது. ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியை இழந்துவிட்ட போதிலும், தெற்கில் அவர் மேலாதிக்கவாத வெளிப்படுத்தல்கள் வழங்கிய சிங்கள பௌத்த சக்திகள் தங்களது தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்குகின்றன. அவர்கள் தேர்தலில் தோற்றுவிட்ட போதிலும் கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவர்களது வாக்குத்தளம் சில சிங்கள பௌத்த கோட்டைகளில் சுருங்கிவிடவில்லை. தமிழ் சமூகத்தின் ஜனநாயக அபிலாஷைகளை அடக்குமுறைக்கு உட்படுத்திய ராஜபக்‌ஷவின் போலியான தேசப்பற்றை விடவும் தமது அணுகுமுறையானது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பாதுகாப்பானது என்று சிங்கள பௌத்த வாக்காளர் தொகுதியை ஜனாதிபதி சிறிசேன நம்பச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் போக்கில் தொடர்வதில் ஜனாதிபதி சிறிசேன துடிப்பாக இல்லாவிட்டால், அவரது வெற்றியை திடப்படுத்திக் கொள்வதும் அவரை அதிகாரத்திற்கு கொண்டு வந்த கூட்டணியுடன் இணைந்து செல்வதும் அவருக்கு கடினமாகிவிடும்.

இரண்டாவதாக, நவதாராளவாத பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது அரசியல் ரீதியாக அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும். தற்போதிருக்கும் நலன்புரி கட்டமைப்புகளை குறைக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான எந்தவொரு நகர்வும் மிகவும் செல்வாக்கற்றதாகவே அமையும். ஏழை இலங்கை மக்களின் வாழ்க்கைச்   சந்தர்ப்பங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சுகாதாரம் மற்றும் கல்வி சம்பந்தமான விடயங்களில் இது குறிப்பாக முக்கியமானதாகும். புதிய ஆட்சியை அதிகாரத்துக்கு கொண்டு வந்த தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் அண்மைய வரவு – செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் பின்னர் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களானது அரசாங்கம் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய எதிர்ப்பு இயக்கங்களின் விஸ்தீரணத்தையே எடுத்துக் காட்டுகிறது.

மூன்றாவதாக, பரந்தளவிலான கருத்தியல் மற்றும் அரசியல் வேறுபாடுகள் அதன் ஐக்கியத்தை அழித்துவிடக்கூடும். கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியான முரண்பாடுகள் சுமுகமானதொரு வழியில் அரசாங்கத்துக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளப்படாவிட்டால், தற்போதயை கூட்டணியானது சிதைவுறும். வேறுபட்டதும் வித்தியாசமானதுமான அபிப்பிராயங்களானது ஜனநாயக மற்றும் சகிப்புத்தன்மை உணர்வில் தீர்த்துக்கொள்ளப்படும் பட்சத்தில் சாதகமாக அமையக்கூடும். எவ்வாறிருப்பினும், பொது இடங்களில் குற்றச்சாட்டுக்களையும் பதில் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கும் சில அமைச்சர்களின் நடத்தையானது ஏமாற்றமளிப்பதாகவும் அரசியல் பக்குவமின்மையை காட்டுவதாகவும் அமைகிறது.

நான்காவதாக, எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை மக்களுக்கு இருப்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த வகையில்தான் ஜனநாயகம் செயற்படும். தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் காரணத்திற்காக எந்தவொரு மக்கள் குழுவுக்கும் எதிராகத் தாக்குதல் நடத்துவதோ அல்லது பலத்தை பிரயோகிப்பதோ குற்றவியல் செயற்படாகவே இருக்கும்.

இந்தச் சவால்கள் வெற்றிக்கொள்ளப்படாத வரை ஜனவரி 8ஆம் திகதி வெற்றியை முழுமையாக உணர்வது கடினமானதாகவே இருக்கும். அத்துடன், இந்தப் புதிய வரலாற்று கூட்டணியானது மேலாதிக்கத் திட்டமொன்றாக மாற்றம்பெறவும் செய்யாது.

முடிவுகள்

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியானது தெளிவாக இந்த நாட்டிலுள்ள மக்களின் ஜனநாயக வெற்றியாக அமைந்திருந்ததுடன், செப்டெம்பர் மாதம் பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி பெற்ற வெற்றியானது மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை கைக்கூடக்கூடிய எதிர்ப்பார்ப்பாக்கியிருந்தது. மைத்திரி – ரணில் தலைமைத்துவம் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே அது சாத்தியப்படும். சிறுபான்மையினங்களின் உள்ளடக்கத்துடனான அதிகாரம் பகிரப்பட்ட கட்டமைப்புடன் அவர்கள் இந்த வரலாற்று கூட்டணியை மேலாதிக்கத் திட்டமாக மாற்றும் பட்சத்தில், தற்போதைய கூட்டணியினால் கிராம்சியன் உணர்விலான “தேசிய பிரபலமான” ஆட்சியொன்றை கட்டியெழுப்ப முடியும். மைத்திரி – ரணில் தலைமைத்துவமானது, அனைத்து சமூகங்களும் மதிப்பு, மரியாதையுடன் வாழக்கூடிய ஐக்கிய ஜனநாயக நாடொன்றை கட்டியெழுப்பும் அவர்களது முயற்சியில் அரசியல் நண்பனாக உருவாவதற்கு சிங்கள பௌத்த வாக்காளர் தொகுதியை இணங்கச் செய்ய வேண்டும். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியினால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் அது ஜனவரி 8ஆம் திகதி வெற்றியை அர்த்தமுள்ளதாக்கும். அதன் பின்னர் மாத்திரமே அது ஜனநாயக புரட்சி என்று அழைக்கப்பட முடியும். இல்லாவிட்டால், மேல்தட்டு அரசியல் வகுப்பினர் வெற்றிபெறும், மக்கள் சக்திகள் தோல்வியாளர்களாகும் பெறுபேறாகவே அது அமையும். பின்னர் நாம் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

தயாபால திரணகம எழுதி One Year After The 8th January: Winners And Losers என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.