படம் | BUDDHIKA WEERASINGHE Photo, Getty Images

மீண்டும் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்களுக்கான திகதி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. தற்போது அனைத்து அரசியல் தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போட்டி போடுகின்றனர். அரசியல் அதிகாரத்திற்காக தேர்தல் இயக்கத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பதே அவர்களுக்கிடையிலான போட்டியாகும். யார் எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தாலும் புதிய அரசும் ஜனாதிபதியும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் கீழ் செயற்பட வேண்டும். தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு எவ்வாறு புதிய அரசை வழிநடத்த வேண்டும் என்பது பற்றியே புதிய அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு நாடு என்ற வகையில் நாம் எதிர்நோக்கும் தேசிய நெருக்கடிகளை எவ்வாறு தீர்த்துக்கொள்வது? அவற்றிற்கான நிலைபேறான அடிப்படைகளை எவ்வாறு உருவாக்குவது? யதார்த்த ரீதியாக சமூகத்தில் நிலவும் உண்மையான பிரச்சினைகளை நேர்மையான முறையில் அடையாளம் கண்டு அது தொடர்பாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கும் அவசியமே ஏற்பட்டுள்ளது. மக்களின் உண்மையான பிரச்சினைகளை நேர்மையான முறையில் அடையாளம் காணவேண்டும். போலியான உறுதிமொழிகளையும், கவர்ச்சிகரமான கொள்கைப் பிரகடனங்கள் மூலம் மாத்திரம் பிரச்சினைகளை எதிர்நோக்க முடியாது. எமது நிலத்தில் விதைக்கக் கூடிய கொள்கைகளே சகல கட்சிகளுக்கும் இருத்தல் வேண்டும். அடிமட்டத்தில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாவை? அவற்றிற்கான தீர்வுகளை அடையும் வழிமுறைகள் யாவை? என்பன பற்றி ஒரு விளக்கம் இருத்தல் வேண்டும்.

அரசியல் சவால்கள்

இலங்கைச் சமூகம் சுதந்திரத்தின் பின்னர் அரசியல் ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கியது. இலங்கை ஒரு தேசம் என்ற வகையில் தீர்க்கவேண்டிய எத்தனையோ பிரச்சினைகளும், நெருக்கடிகளும் எம் முன்னே உள்ளன. எதிர்காலத்தில் உருவாக்கப்படும் புதிய அரசிற்கான சவால்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம்:

  1. அனைத்து தரப்பு இலங்கைப் பிரஜைகளினதும் கருத்துக்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டி உள்ளது. இவ்விடயத்தில் தத்தமது அபிமானமோ அல்லது அதிகார ஆசை பிடித்த குழுக்களின் அபிமானங்களையோ கருத்தில் கொள்ளாமல் சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வயிற்றுப் பிழைப்புவாத குறுகிய நோக்கங்களில் இருந்து விடுபட்டு நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி மாத்திரம் சிந்தித்து அனைத்து சமூகக் குழுக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு பொதுமக்களின் அரசியல் அமைப்பை உருவாக்கும் புதிய சவால் அதிகாரத்தை எட்டும் அரசுக்கு உண்டு.
  2. ஆணைக்குழுக்கள் தற்போதைய நிலைமையைவிட சக்திவாய்ந்த வழிமுறையூடாக சாதிக்கப்படுவதையிட்டு முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டும். 19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் ஊடாக 10 ஆணைக்குழுக்கள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. ஆனால், தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய, சமூகத்தில் ஒரு பிரச்சினை ஏற்படும்போது அது தொடர்பாக இடையீடு செய்யும் நாடாளுமன்றம் நிரந்தரமான அதிகாரம்கொண்ட ஆணைக்குழுவை உருவாக்க வேண்டும். இது காலத்தின் அவசியமாகும். ஆணைக்குழுவில் சமய நல்லிணக்கம், சமூக ஒருங்கிணைப்பின் ஊடாகத் தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் பல்வேறு அலகுகளை அமைப்பது அவசியமாகும்.
  3. இலங்கை ஒரு பன்மைத்துவ கலாசார நாடு. இங்கு பல்வகைத் தேசிய இனங்களையும், மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரஜைகள் வாழ்ந்து வருகின்றனர். இச்சகல தேசிய இனங்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
  4. அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகளும் உள்ளூராட்சி அதிகார சபைகளும் மக்களுக்குச் சமீபமான, கலந்துரையாடல்கள் மூலம், மத்திய அரசுக்கும், மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒரு கலந்துரையாடல் மூலம் அதிகாரப் பகிர்வின் மட்டுப்பாடுகள் தீர்மானிக்கப்பட வேண்டும். பிரதேச சபையின் அதிகாரத்தை பன்முகப்படுத்துதல், மாகாண சபைகள், நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்கள் அரசு தொடர்பான விடயங்களைத் திட்டவட்டமாக அடையாளம் கண்டு செயற்படுவது மிக முக்கியமாகும். நிதி ஆணைக்குழு நிதி அமைச்சிற்கும், மத்திய வங்கிக்கும் உயரே நிலவுகின்ற நாடாமன்றத்திற்கு மாத்திரம் வகைப்பொறுப்புக் கூறும் சுயாதீனமான ஆணைக்குழுவாக இருத்தல் வேண்டும். ஏனெனில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கிடையே பணம் செலவு செய்யப்படும்போது பரிந்துரைக்கும் அதிகாரம் மேற்படி நிதி ஆணைக்குழுவிற்கு இருக்க வேண்டியது கட்டாயத் தகைமையாகும்.
  5. அரச சேவையில் சிற்சில ஒருங்கிணைப்புக்களை ஏற்படுத்த வேண்டும். மாகாண சபைகளினதும் மற்றும் மத்திய அரசின் அரச சேவையினதும் சமத்துவம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அடிப்படை உரிமைகளாக கல்வி, சுகாதாரம் மற்றும் வாழும் உரிமை போன்ற உரிமைகள் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும். அரச சேவையை சுயாதீனமான ஒரு சேவையாகக் கருதவேண்டும். அதேசமயம், பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும்போது துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய அரச அதிகாரிகள் செயற்பட வேண்டும். துரிதமாக நடவடிக்கை எடுக்கும் ஆற்றலை அரச அதிகாரிகளுக்கு வழங்குவது அரசின் பொறுப்பாகும்.
  6. உள்ளூராட்சி அதிகார சபைகளும், மாகாண சபைகளும் மத்திய அரசின் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வகையிலும், பிரஜைகள் சபைகளுக்கு அதிகாரம் கிடைக்கக்கூடிய வகையிலும், முறைசார் நிகழ்ச்சித்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.
  7. அரசியல் அமைப்பிற்கான 20ஆவது திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவிருந்த தீர்மானங்களான தொகுதிவாரிப் போட்டி, விகிதாசார முறை ஆகிய தேர்தல் முறையை நாட்டுக்கு ஏற்ற வகையில் புதிய அரசியலமைப்பில் தீர்மானிக்க வேண்டும். நாட்டிற்குப் பொறுத்தமான ஒரு வழிமுறை என்ற வகையில் புதிய அரசியலமைப்பினுள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இது புதிய அரசுக்கான ஒரு சவாலாகும். அரசியல் கட்சிகளின் தேவைகளைவிட, நாட்டின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  8. தேர்தல் ஆணையத்தை வலுவூட்டும் அதேவேளை, உட்கட்சி ஜனநாயகத்தையும் வலுவூட்டுவதற்கு அது ஒரு புறச் சக்தியாக அமைவது மிக மிக அவசியமாகும். அதேசமயம் ஒரு தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் செலவு செய்யக்கூடிய மிக அதிகப்படியான நிதியின் அளவைத் தீர்மானித்தல், வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக உரிய சட்டங்களைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய சட்டங்களைத் துரிதமாக அறிமுகப்படுத்த வேண்டும்.
  9. தகவல் அறியும் உரிமைக்கான சட்டம், கணக்காய்வுச் சட்டம் என்பவற்றிற்கு வலுவூட்டி அவற்றைப் புதிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகரிப்பது புதிய அரசின் முன்னுரிமைப் பொறுப்பாகும்.
  10. யுத்தம் ஓய்ந்ததும் ஒரு நாடு என்ற வகையில் நாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினோம். உள்நாட்டுத் தீர்வாக கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு (LLRC) பரிந்துரைகளை முன்வைத்த போதிலும் அதற்கு அப்பால் எந்தவொரு செயற்பாடும் அமுல்படுத்தப்படவில்லை. எமது நாட்டிற்கு எதிராக சர்வதேச மனிதஉரிமைப் பேரவையில் ஒரு குற்றப் பிரேரணை இருந்து வருகிறது. அதனை எதிர்நோக்குவதற்கு நெறிமுறை சார்ந்த முறைசார் நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அவற்றை சர்வதேச ரீதியாக மனந்திறந்த முறையிலும், சர்வதேச ரீதியில் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாகவும் (LLRC) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். யாராவது குற்றமிழைத்திருந்தால் அதற்கு உரித்தான தண்டனைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பிரஜைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது புதிய அரசின் கடமையாகும். இவ்வாறாகத் திறந்த மனதுடன் நடவடிக்கை மேற்கொண்டால் சர்வதேச ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஒரு அத்திவாரத்தையிட முடியும்.

பொருளாதாரச் சவால்கள்

புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார சவால்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறோம்:

  1. எந்த அரசு பதவிக்கு வந்தாலும் இலங்கையின் பொருளாதாரத்தை பொறுப்புடனும் மிகக் கவனமாகவும் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கையின் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு அமைய தனிநபர் வருமானம் 4000 அமெரிக்க டொலர் வரை வளர்ச்சியடைந்துள்ளது எனக் கூறினாலும், நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளினதும் நிலைப்பாட்டில் இருந்து நோக்கும்போது இங்கு பாரிய இடைவெளி காணப்படுகிறது. இலங்கை தேசிய வருமானத்தின் கூடிய பகுதியை அனுபவிப்பவர்கள் எமது சமூகத்தின் ஒரு பிரிவினர் மாத்திரமே. தேசிய வருமானம் பகிரப்படாத அப்பாவி வறியவர்களும் இந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக சமத்துவமற்ற பொருளாதாரத்தை எவ்வாறு சீர்செய்வது என்பது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது. இதற்குத் தங்கிவாழும் பொருளாதாரத்தில் வாழ்வதைவிட நிரந்தரமான வழிமுறைகள் யாவை என அடையாளம் காண வேண்டியுள்ளது.
  2. வறுமையை முற்றிலும் நீக்குவதற்கான வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் பதவிக்கு வந்த பல்வேறு அரசுகள் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்து வைத்தன. பிரேமதாச அரசு ‘ஜனசக்தி’ (ஜனசவிய) கருத்திட்டத்தை ஆரம்பித்தது. சந்திரிக்கா குமாரதுங்க அரசு சமுர்தி கருத்திட்டத்தை ஆரம்பித்தது. மஹிந்த அரசாங்கம் திவிநெகும (வாழ்வெழுச்சி) கருத்திட்டத்தை ஆரம்பித்தது. இது தொடர்பான விசேட ஆய்வினை மேற்கொண்டு வறிய மக்களின் சார்பில் மிகச் சாதகமான நிவாரண முறைமைகளை தயாரிப்பது தற்போதைய அரசின் பொறுப்பாகும்.
  3. தேசிய உற்பத்தி என்ற வகையில் நெல் விவசாயம் உட்பட இலங்கையின் பயன்பாட்டின் அளவிற்கு அவசியமான உற்பத்தி உள்நாட்டிலேயே மேற்கொள்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கென செயற்கை உர பாவனையற்ற உள்நாட்டு உற்பத்திகளுக்கு அவசியமான உரத்தையும், விவசாய இரசாயனப் பொருட்களையும் உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதேசமயம், இலங்கையின் சூழமைவிற்கு உசிதமான வகையில் நீரை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தி விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
  4. தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் சிறு ஏற்றுமதிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அவசியமான ஒரு சூழமைவைத் தயாரிப்பது புதிய அரசின் மற்றுமோர் சவாலாகும். குறிப்பாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களைப் பாதுகாப்பதும், தென்னைப் பயிர்ச்செய்கை தொடர்பான பாதகமான தாக்கங்களை நீக்குவதும், விஞ்ஞான ரீதியான முன்னேற்றமடைந்த வழிமுறைகள் ஊடே ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை நாட்டிற்குத் தகுந்த வகையில் தயாரிக்கவும் வேண்டியுள்ளது.
  5. இலங்கைக்கு தேசிய வருமானத்தை அளிக்கும் பிரதான மூலோபாயம் சேவை வழங்குதல் ஆகும். இதனை எவ்வாறு மேலும் வலுவூட்டுவது? அதன்மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது எவ்வாறு? அதற்குரிய வழிமுறைகள் யாவை? ஆய்வுகள் யாவை? என்பவை பற்றி ஆய்வுசெய்து சேவை பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும்.

அபிவிருத்தி

ஒரு நாட்டின் முக்கிய அபிவிருத்தி வழிமுறைகளைத் தயாரிக்கும்போது அதனை மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும். விசேடமாகத் துறைமுகம், விமான நிலையம் மற்றும் நகர நிர்மானம் ஆகிய எந்த அபிவிருத்தி நடவடிக்கையாயினும், உரிய முறையில் ஆய்வு செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கான பகிரங்கக் கலந்துரையாடலை சமூகத்தில் மேற்கொள்ள வேண்டும். இது சகல அரசுகளினதும் பொறுப்பாகும். அவ்வாறு இல்லாவிடின் அதிகாரம் கொண்ட அரசியல் குழுக்கள் தனிப்பட்ட அபிலாஷைகள் மீது பாரிய அபிவிருத்தி கருத்திட்டங்களை ஆரம்பிப்பதாயின், அதன் பாதகமான விளைவுகளை இந்நாட்டு மக்களுக்கே ஏற்க நேரிடும். இன்று விமர்சனக் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ள உமா ஓய அபிவிருத்தி கருத்திட்டம், மத்தலை விமான நிலையம், அப்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் சாதகமான பெறுபேறுகளை வழங்கக்கூடிய வகையில் எவ்வாறு உருவாக்குவது என்பது புதிய அரசு எதிர்கொள்ளும் மற்றுமோர் பிரச்சினையாகும்.

ஒரு தேசம் என்ற வகையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். எந்தவொரு அபிவிருத்திக் கருத்திட்டமும் சுற்றாடலைப் பாதிக்காத வகையில் அமுலாக்கப்பட வேண்டும். அபிவிருத்தியின் பெறுபேறுகளை பேதமின்றி அனைத்து சமூக பிரிவுகள் மீதும் பிரயோகிக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது காரசாரமாகக் கண்டிக்கப்பட்ட இலஞ்சம், ஊழல், மோசடிகளைப் புறக்கணிப்பதற்கான சட்டதிட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும்.

அபிவிருத்தியும் கடன் தொடர்பான சவாலும்

எம்மைப் போன்ற மூன்றாம் உலகத்தின் எந்தவொரு நாடாயினும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான வெளிநாட்டுக் கடன் உதவிகளைப் பெற்றேயாக வேண்டும். ஆனால், இதில் பாரதூரமான பிரச்சினைகளும் உண்டு. ஏனெனில், இலங்கையில் தனிநபர் ஒருவரின் கடன் அளவு 360,000 ரூபாவைவிட அதிகமாகும். அனேகமான கடன்கள் அதிக வட்டி வீதத்திலேயே பெறப்படுகின்றன. அவற்றிற்கான வட்டிக் கட்டணமும், தவணைக் கட்டணமும் செலுத்துவதற்கு எமது தேசிய வருமானம் ஈடுகொடுக்க முடியாததால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கான முறைசார் திட்டம் அரசிற்கு இருத்தல் வேண்டும். கடன்பெறுவதற்கு முன்னர் அதுபற்றி மாகாண சபைகளில் கலந்துரையாட வேண்டும். இது முறைசார் திட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும். இதுபற்றி நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டிய அதேசமயம் இவை அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெற நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும்.

சமூக ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்புதல்

சமத்துவம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். குறிப்பாக மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது பற்றி கூடிய கவனம் செலுத்த வேண்டும். வறிய சமூகங்களில் வாழும் மீனவர்கள், சேரிவாழ் மக்கள் ஆகியோரை வலுவூட்டும் பொருளாதார சக்தியை மேம்படுத்தும் உபாய மார்க்கங்கள் பற்றி கண்டறிவது கட்டாயப் பொறுப்பாகும். தோட்டங்களில் வாழும் மக்களைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் அவர்கள் வருகை தந்த நாள் முதல் இன்றுவரை அவர்களுக்கு நிரந்தர முகவரி இல்லை. முகவரி இல்லாத மனிதர்களாகவே அவர்கள் வாழுகின்றனர். ஒரு மனிதனுடைய முகவரி என்பது அடிப்படை உரிமையாகும். இதுவரை பதவியில் இருந்த எந்தவொரு அரசும் இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை. சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள மக்களை ஒருங்கிணைப்பது அரசின் பொறுப்பாகும். குறிப்பாக இந்த மக்களின் வாக்குகளைப் பெறும் மலையக அரசியல்வாதிகள் இதுபற்றி தொடர்ந்தும் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர். இம்மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல், வீட்டு வசதிப் பிரச்சினையையும், சுகாதாரப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் ஒரு பாரிய சவாலாகும்.

கல்விச் சவால்கள்

சமூகரீதியாக கவனிக்கும்போது கல்வித்துறையில் நிலவும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு தவறற்ற நடைமுறைத் தீர்வுகளைச் சிந்திக்க வேண்டும். வளங்களைப் பகிர்வதில் தேசிய பாடசாலைகளுக்கும், கிராமிய பாடசாலைகளுக்குமிடையே பாரிய முரண்பாடு நிலவுகிறது. பாடசாலைகளுக்கான வளங்கள் சமத்துவமாக அமையவில்லை. மிகவும் வறிய பாடசாலைகள் மாகாண சபை மட்டங்களிலேயே அமைந்துள்ளன. இந்நிலைமையை இல்லாதொழிப்பதற்கு மாகாண சபைகள் உரிய பாடசாலைகளுக்கு கூடிய வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதேசமயம், தேசிய கல்விக் கொள்கை ஒன்றை கட்டியெழுப்புவதும் தற்போதைய குறைபாடுகளுக்கு அடிப்படைத் தீர்வாக அமைய வேண்டும். கல்வியியல் நிபுணர்களினதும், ஆசரியர்களினதும், பெற்றோர்களினதும், கல்வி அதிகாரிகளினதும் கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளை அடையாளம் கண்டு குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமே தவறற்ற கல்விக் கொள்கைகளை உருவாக்க முடியும்.

சுகாதாரப் பிரச்சினைகள்

இலங்கையின் தொற்றுநோய்களைவிட தொற்றாத நோய்களின் வளர்ச்சி காணப்படுகிறது. விசேடமாக சிறுநீரக நோய் இன்று முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இன்று, அது தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசிற்குள்ள பாரிய சவாலாகும். அதேசமயம், ஒளடத உற்பத்தி – விநியோகம், சுகாதார துறையைச் சார்ந்த உத்தியோகத்தர்களின் பிரச்சினை போன்ற பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது. ஒளடதச் சட்டத்தை முழுமையாக வலுவூட்டுவது மற்றுமோர் சவாலாகும். அதேசமயம், அரசுகள் கவனிக்காது விட்டுள்ள இலங்கையின் சுதேச வைத்தியத்தை மீண்டும் மீளுருவாக்கம் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், கடந்த காலங்களில் தொற்றாத நோய்களில் அனேகமானவை சுதேச வைத்திய முறையின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உணவு ஒழுங்கு முறைகள், பக்க விளைவுகளைக் குறைக்கும் சுதேச மருத்துவம் அதில் முக்கிய பங்களிப்பை செய்கிறது. மேல் நாட்டு வைத்தியத்துறைக்கும், சுதேச மருத்துவ துறைக்குமிடையே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எமது நாட்டில் தற்போது உருவாகி உள்ளது. இதற்கென விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம், சுகாதாரத் தேசியக் கொள்கை ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பின்மை

இளைஞர்களினதும் யுவதிகளினதும் வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினைக்குப் புதிய தீர்வுகளைத் தேட வேண்டும். கா.பொ.த. (சாதாரணதர)/ (உயர்தர) கல்வியைப் பெறுபவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தற்போதைய பொருளாதார சவால்கள் முன்னே தமது வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு ஓர் ஊக்குவிப்பை வழங்க வேண்டும். உயர் கல்விக்கான பாடநெறிகளையும், தொழிநுட்ப கல்லூரிகளின் பாடநெறிகளையும் எமது தேவைகளுக்கேற்ற வகையில் திருத்தியமைக்க வேண்டும்.

சட்டத்தின் ஆட்சி

ஜனநாயக ரீதியான அரசு சட்டத்தின் ஆட்சியை சகல துறைகளிலும் அமுலாக்க வேண்டியுள்ளது. எனவே, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்தின் ஆட்சி அரச நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், பிரஜைகள் மீதும் கட்டாயமாக நிலைநாட்டப்பட வேண்டும். இதற்கான பண்புகளை மேம்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சியை மேலும் வளர்த்தெடுப்பது புதிய அரசின் பொறுப்பாகும். சாதகமான துறைகளை ஒன்றிணைத்து காலம்கடந்த சட்டங்களை மாற்றியமைத்து நிகழ்கால சமூகத்திற்கும், எதிர்காலத்திற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மொழிகளுக்கும் கலாசாரங்களுக்கும் மதிப்பளித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பழக்கப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவது புதிய அரசின் கடமையாகும். பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ள பெண்கள், இளைஞர்கள், பிள்ளைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி சரியான அனுபவத்தோடு நடவடிக்கை மேற்கொள்வது எதிர்கால ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். அடிப்படை மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மனித கௌரவத்துடனான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும்.

எனவே, அரசியற் கட்சிகள் தமது குறுகிய அதிகார வேட்கைகொண்ட வயிற்றுப் பிழைப்புவாத கொள்கைப் பிரகடனங்களுக்கு அப்பால் சென்று, எமது பூமியில் விதைக்கக்கூடிய, எமது மனிதர்களின் வாழ்க்கைக்கு பொறுப்புக் கூறும், உண்மையான சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து மீளும் கொள்கைகளைத் தயாரிக்க வேண்டும். ஏனெனில், சுதந்திரத்தின் பின்னர் பல தேர்தல்களை நடத்தியுள்ளோம். பல அரசுகளை உருவாக்கியுள்ளோம். ஆனால, சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு சரியான தீர்வுகளைத் தேடியவர்களைக் காணமுடியவில்லை. எனவே, 30 வருடகால யுத்தத்தின் பின்னர் ஜனநாயக நல்லாட்சி சமூக முறையை உருவாக்குவதோடு சகல மக்களும் மாண்புடன் வாழக்கூடிய மனித கௌரவம் பேணப்படும், சமூக பொருளாதார அரசியல், சுற்றாடலைக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம்முன்னே உள்ளது. இப்பொறுப்பினை அடையக்கூடிய வழிமுறையை மக்கள் மத்தியில் கலந்துரையாடப்பட வேண்டும். கொள்ளை, போதைவஸ்த்துக்கள் போன்ற வெறும் கோஷங்களுக்கு அப்பால் சென்று ஒழுக்க நெறிமுறை கொண்ட ஒரு சமூக நடைமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடலை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற​விட்டால், மீண்டும் ஊழலும், மோசடிகளும், இலஞ்சமும் பொதுமக்களின் பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிப்பதன் மூலமும், போதைவஸ்த்துக்கள் மூலமும் எமது சமூகம் மூடிமறைந்து இருக்கும். இங்கு குறைந்தபட்சம் மேற்படி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கூடிய தரப்பினரை நாம் தெரிவுசெய்ய வேண்டியது பிரஜைகளின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும். நேர்மையான அரசியல்வாதிகளிடமே நாம் அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும். தேர்தல் காலங்களின்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்களுக்கும், போலி வாக்குறுதிகளுக்கும் அடிமையாகாமல் சரியான மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய தரப்பினருக்கே அதிகாரத்தை வழங்க வேண்டிய பொறுப்பு பிரஜைகள் சமூகத்திற்கு உண்டு.

அரசியல் ரீதியாக நிலவும் நெருக்கடி எந்த அரசு பதவிக்கு வந்தாலும் தொடரும். ஆனால், தற்போது நாம் எதிர்நோக்கும் புதிய நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். நாம் தெரிவுசெய்யும் எமது பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய கடமைப் பொறுப்பு உண்டு. போலி தீர்வுகளை நாடுவதைத் தவிர்த்து உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு செயற்படுவதே சிறந்தது. இதற்குச் சமூகத்தின் மனப்பாங்கை மாற்றியமைக்க வேண்டும். கண்ணோட்ட ரீதியாக பிரஜைகளை ஆட்கொண்டுள்ள இனவாத, சமூகவிரோத போலிக் காரணிகளால் சமூகம் மூடிமறைக்கப்பட்டு உள்ளது. 1977க்குப் பின்னர் புதிய பொருளாதார முறைமையும், அரசியல் கலாசாரமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் பணத்தை அடிப்படையாகக் கொண்டு இழந்துபோன மனிதமாண்பை நாம் மீளக்கட்டியெழுப்ப வேண்டும். சமூக கண்ணோட்டங்களை மாற்றியமைப்பதற்கு கட்சிக் கொள்கைப் பிரகடனங்களை கலந்துரையாட வேண்டிய பரந்துபட்ட நிகழ்ச்சித்திட்டத்தை சகல ஊடகங்களும் அனுசரிக்க வேண்டும். உண்மையான சமூக தேவைகளைப் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு கொள்கைப் பிரகடனங்களை முன்வைக்கும் தரப்பினர் மீது ஆழமான கலந்துரையாடலை ஏற்படுத்துவது மிக முக்கியமாகும். இது ஊடகங்களின் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும். வரலாறு முழுவதும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணப்படும் சொற்சிலம்பங்களை நாம் கண்டுள்ளோம். அவை நடைமுறையில் ஒன்றையும் சாதிக்கவில்லை. இதுவரை காலம் அரசியல்வாதிகள் பிரஜைகளுடனும், சமூகத்துடனும் விளையாடிய விளையாட்டை நிறுத்திக்கொண்டு உண்மையான சமூகத் தேவைகளையும், மானுடத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சமூகத்தை மூடிமறைத்துள்ள பொருளாதார சமூக, அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பது பிரஜைகளினதும், சகல அரசியற் கட்சிகளினதும் பாரிய பொறுப்பாகும்.