படம் |U.S. Department of State, Flickr

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆவார். அதனைத் தொடர்ந்து அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதன் மிக உயர் பொறுப்புக்களில் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்பவரின் இலங்கை விஜயமானது, ஒரு குறியீட்டு அரசியல் பெறுமதியை கொண்டதாகும். தன்னுடைய தோல்விக்குப் பின்னால் இந்திய, அமெரிக்க உளவுத் துறைகளின் திரைமறைவு சதியிருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்‌ஷ கூறிவரும் நிலையில்தான் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்திய பிரதமரின் விஜயமும் தற்போது அமெரிக்க வெளியுறவுச் செயலரின் விஜயமும் இடம்பெற்றிருக்கிறது என்பதையும் இங்கு குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜோன் கெரியின் விஜயத்தின் போது அவர் ஆற்றியிருந்த இரண்டு உரைகளையும் கூர்மையாக நோக்குகின்ற போது, அவர் எங்கும் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்களுக்கென பிரத்தியேக பிரச்சினைகள் இருப்பதை அங்கீரிக்கும் வகையில் எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லை. மோடியின் விஜயத்தின் போது ஆகக் குறைந்தது 13ஆவது திருத்தச் சட்டம் குறித்தாவது அவர் பேசியிருந்தார். ஆனால், கெரி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் எந்தவொரு சொல்லையும் உச்சரித்திருக்கவில்லை. இலங்கை வெளிவிவகார அமைச்சில் பேசுகின்றபோது கெரி கடுமையான விடயங்களை கையாளுவற்கு ஜனாதிபதியோ, பிரதமரோ மற்றும் வெளிவிவகார அமைச்சரோ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்னும் சாரப்பட உரையாற்றியிருந்தார். இதன் மூலம் கெரி மறைமுகமாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருக்கின்றார். அதாவது, முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எதனையும் எடுப்பது தொடர்பில் புதிய அரசு தயங்க வேண்டியதில்லை, அவ்வாறு நீங்கள் நடவடிக்கைகளை எடுக்கும் போது உங்களுக்குப் பக்கபலமாக அமெரிக்கா வரும் என்பதே கெரி மறைமுகமாக உணர்த்தியிருக்கும் விடயம்.

இதேபோன்று அவர் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஆற்றிய உரையிலும் தமிழ் மக்களின் பிரத்தியேக பிரச்சினைகள் தொடர்ப்பில் எந்தவொரு கருத்தையும் குறிப்பிடவில்லை. இந்த உரையை ஆழ்ந்து நோக்கும் போது, இலங்கையில் இடம்பெற்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் காரணமேயன்றி, இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்த சிங்கள அரசுகள் அல்ல என்று அமெரிக்கா புரிந்துகொள்வதாகவே அவரது பேச்சு அமைந்திருக்கிறது. விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட தவறுகள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால், விடுதலைப் புலிகள் போன்றதொரு அமைப்பு உருவாகி வளர்வதற்கான புறச் சூழல் எங்கிருந்து கிடைத்தது? ஏன் 95 வீதமான தமிழ் மக்கள் அவர்களை ஆதரிக்க நேர்ந்தது? இது தொடர்பில் கெரியிடம் எந்தவொரு அவதானமும் இல்லை. அதாவது, இலங்கை தொடர்பில் அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்கிவரும் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் எந்தவிதமான கரிசனையும் இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. இங்கு பேசிய கெரி குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் இலங்கை தொடர்பில் அமெரிக்க தலையீட்டின் எல்லையை மிகவும் துல்லியமாக படம்பிடித்து காட்டியிருக்கின்றது. “ஒரு விடயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். யுத்தம் வலிகளை கொண்டுவருவதாக இருப்பினும்கூட, சிலவேளைகளில் யுத்தத்திற்குச் செல்வது அவசியமானதாகவே இருக்கிறது. முன்னைய அரசு விடுதலைப் புலிகளுடன் எவ்வாறு சண்டையிட்டது என்பது தொடர்பில் என்னுடைய நாட்டிற்கு உடன்பாடின்மைகள் இருந்தது. ஆனால், கொலைகார பயங்கரவாத குழுவான (murderous terrorist group) தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களால் விதைக்கப்பட்ட அச்சமும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதில் என்னுடைய நாடு தெளிவான விளக்கத்தைக் கொண்டிருந்தது (Let me be very clear about this: It is sometimes necessary to go to war, despite the pain it brings. For all of my country’s disagreements with the previous government in Sri Lanka over how it fought the LTTE, we clearly understood the necessity of ridding this country of a murderous terrorist group and the fear that it sowed)

கெரி இவ்வாறு குறிப்பிடுவது தொடர்பில் இப்போதும் என்னுடைய தேசியத் தலைவர் பிரபாகரன்தான் என்று கூறித்திரிபவர்களின் நிலைப்பாடு என்ன? இப்படியானதொரு கருத்தை கூட்டமைப்பின் தமிழரசு கட்சி சார்பிலான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் ஏற்றுக் கொள்வதில் சிரமமிருக்காது. ஏனெனில், சுமந்திரனின் கருத்தும் அதுதான். ஆனால், என்னுடைய தேசிய தலைவர் பிரபாகரன்தான் என்று சொல்லிவரும் ஏனையோரின் கருத்து என்ன? அமெரிக்கா எப்போதுமே அமெரிக்காதான். உங்களுடைய விருப்பங்களுக்காக அமெரிக்கா தன்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. விடுதலைப் புலிகள் அழிவுற்று ஜந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்கூட, இன்றுவரை அமெரிக்கா புலிகளை தன்னுடைய சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலிலிருந்து நீக்கவில்லை. இது தொடர்பில் எவரும் வாய்திறப்பதுமில்லை. ஆனால், ஒருவேளை கெரியின் இடத்தில் மோடி இவ்வாறு கூறியிருந்தால் இன்று எவ்வாறான விவாதங்கள் எல்லாம் தோன்றியிருக்கும்? போலி தமிழ்த் தேசியவாதிகள் பலர் தனியிடமொதுக்கியல்லவா இது பற்றி விவாதித்திருப்பர். இன்று உலகத் தமிழர் பேரவையின் தலைவராக இருக்கின்ற மதகுரு இம்மானுவல், ஒரு காலத்தில் பிரபாகரனை ஜீஸஸ் என்று வர்ணித்தார். ஆனால், அந்த ஜீஸஸை ஒரு கொலைகார பயங்கரவாத குழுவின் தலைவர் என்கிறது அமெரிக்கா. ஆனால், இது பற்றி உலகத் தமிழர் பேரவையோ அல்லது பிரித்தானிய தமிழ் பேரவையோ இதுவரை ஏன் வாய்திறக்கவில்லை. நீங்கள் இப்போதும் பிரபாகரனின் விசுவாசிகளாக இருந்தால் மட்டும்தான் இது பற்றி பேச வேண்டும். இல்லாவிட்டால் இது ஒரு விடயமல்ல. இல்லாவிட்டால் பிரபாகரனை நீங்கள் உங்களின் அற்ப அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகின்றீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். புலிகளை முற்றிலுமாக கைவிட்டு புதிய சூழலுக்கு ஏற்றவகையில் இயங்கவுள்ளதாக பிரகடனம் செய்யுங்கள்.

இதேவேளை, புதிய அரசு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பத்தகுந்த ஒரு உள்ளக விசாரணை பொறிமுறையை ஒன்றை ஜக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து மேற்கொள்ளுமென்று தான் நம்புவதாகவும் கெரி தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அமெரிக்கா ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசால் மேற்கொள்வதாக வாக்குறுதியளிக்கப்படும் உள்ளக பொறிமுறை ஒன்றிற்கே ஆதரவாக இருக்கும். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய மேதின உரையில், சர்வதேச அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று குறிப்பிட்டிருப்பதையும் இதனையோடு இணைத்து வாசியுங்கள். இப்போது எங்களுக்கு சர்வதேச விசாரணைதான் வேண்டுமென்று சொல்பவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் எதிராக போராடப் போகின்றோம் என்று உரைக்கப் போகின்றார்களா? நான் ஏன் இந்த விடயங்களை சுட்டிக்காட்டுகின்றேன் என்றால், தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் அரசியலை கைவிட்டு, அவர்களுக்கு முடிந்தவரை நேர்மையாக இருப்பதே இன்று அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் செய்ய வேண்டிய வரலாற்று பணியாகும் என்பதை சுட்டிக்காட்டவே!

இப்படியான உரைகளுக்குப் பின்னர்தான் ஜோன் கெரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழுத் தலைவரான இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். இதில் மேலதிகமாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பங்குகொண்டிருந்தார். நான் மேலே குறிப்பிட்டவாறுதான் பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட கூட்டமைப்பின் தலைவர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். விக்னேஸ்வரன் வரிசையின் தொங்கலில் அமர்த்தப்பட்டிருக்கிறார். இராஜதந்திர நடைமுறைகளுக்கு அமைவாக ஒரு முதலமைச்சர் என்னும் வகையில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் அவர் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். அனுபவம் என்னும் அடிப்படையில் பார்த்தால் சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அடுத்து சுரேஸ் பிரேமச்சந்திரன் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், சம்பந்தனுக்கு அடுத்து நாடாளுமன்ற அனுபவத்தில் மூத்தவர் சுரேஸ்தானேயன்றி மாவையல்ல. அதேவேளை, சுமார் 25 நிமிடங்கள் வரையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் விக்னேஸ்வரனுக்கு ஒரு நிமிடம் கூட பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. அனைத்தையுமே வழமைபோல் சம்பந்தனே ஒப்புவித்திருக்கின்றார். ஆனால், பொறுமையிழந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் நல்லிணக்கம் தொடர்ப்பான கெரியின் கருத்தில் குறிக்கிட்டு, அதற்கு முன்னர் அரசியல் தீர்வு ஒன்று அவசியம், தீர்வு ஒன்றை காணாதவரையில் தமிழ் மக்கள் நல்லிணக்கத்தில் நம்பிக்கை வைப்பார்களென்று எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கின்றார். ஆனால், சுரேஸை தொடர்ந்து பேச சம்பந்தன் அனுமதித்திருக்கவில்லை. ஆனால், நிலைமைகளை முன்கூட்டியே ஊகித்தோ என்வோ, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் சில ஆவணங்களை கைவசம் கொண்டுவந்திருக்கின்றார். கிடைக்கும் தகவல்களின்படி விக்னேஸ்வரன் தன்னுடைய நீண்ட கடிதம் ஒன்றுடன் இணைத்து இரண்டு ஆவணங்களை கெரியிடம் ஒப்படைத்திருக்கின்றார். பொதுவாக வடக்கு மக்கள், ஆட்சி மாற்றத்திற்கு முன்னரும், பின்னரும் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த கடிதத்தில் விக்கி விபரித்திருப்பதாகவே அறிய முடிகிறது.

மேற்படி சம்பவங்களை தொகுத்து நோக்கும் போது, மேற்படி கெரி – கூட்டமைப்பு சந்திப்பின் போது அமெரிக்க தூதரகம் இராஜதந்திர நடைமுறைகளை உதாசீனம் செய்து வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை இழிவுபடுத்தியதா என்னும் கேள்வி எழுகிறது. அமெரிக்க தூதரகம் பொதுவாக ஒவ்வொரு விடயங்களையும் நோத்தியாக மேற்கொள்ளும் என்பது பொதுவான அபிப்பிராயம். அவ்வாறிருக்க ஏன் விக்கினேஸ்வரனை புறக்கணிக்கும் வகையில் நிகழ்வு இடம்பெற்றிருந்தது? சிலரது அபிப்பிராயத்தின்படி விக்னேஸ்வரனுக்கு ஒரு செய்தியை சொல்லும் வகையில்தான் மேற்படி நிகழ்வு ஒழுங்குகள் அமைந்திருந்தனவா? இவ்வாறானதொரு சந்தேகத்தை நியாயப்படுத்துவதற்கும் சில காரணங்கள் உண்டு. அண்மைக்காலமாக குறிப்பாக ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து விக்னேஸ்வரால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் இராஜதந்திர வட்டாரங்களில் குறிப்பாக அமெரிக்க மற்றும் இந்திய வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் உண்டு. விக்னேஸ்வரன் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியமை, ஆட்சி மாற்றத்தின் மீது தொடர்ந்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை, ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்டு நிற்கின்றமை போன்ற விடயங்களில் தங்களுக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு மேற்படி நிகழ்வை அமெரிக்கத் தூதரகம் பய்படுத்தியிருந்ததா என்னும் கேள்வியை ஒருவர் எழுப்பினால் அது இலகுவில் நிராகரிக்க முடியாத ஒன்றாகவே இருக்கலாம். அல்லது இது எதேச்சையாக நடந்ததா? இராஜதந்திர நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருப்பின் சம்பந்தனுக்கு அடுத்து வடக்கு மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தலைவர் என்னும் வகையில் விக்னேஸ்வரனின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு சில நிமிடங்களையாவது ஒதுக்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை குறித்த குழுவில் இடம்பெறுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். இதில் அமெரிக்கத் தூதரகம் மற்றும் கூட்டமைப்பு ஆகிய இரு தரப்பினருக்கும் பொறுப்புண்டு. மேலும், கூட்டமைப்பிற்குள் நிலவும் உள் முரண்பாடுகள் முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை அமெரிக்கத் தூதரகம் அறியாமலும் இல்லை. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், கூட்டமைப்பின் ஒற்றுமை குறித்து சம்பந்தனுக்கு வகுப்பெடுத்துச் சென்றதைக் கூடவா அமெரிக்க தூதரகம் அறியாமல் இருக்கும்.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.