படம் | இலங்கை அரசால் காடுகள் எனக் கூறப்படும் சம்பூர் மக்களின் நிலத்தில் காணப்படும் பொம்மை ஒன்று.

“இனி யாரையும் நம்பி எந்த நன்மையும் இல்ல, அரசியல்வாதிகள, அரச அதிகாரிகள நம்பினது போதும்… வீதியில் இறங்கி போராட மக்கள் தீர்மானித்துவிட்டாங்க. இது அனைத்து காம்ப்களையும் சேர்ந்தவர்கள்ன்ட முடிவு.”

“மோடி வருவதனால தொடர்ந்து மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறோம். சிலவேளை மோடி அடிக்கல் நாட்டுவதாக இருந்தால் அன்றைய தினம் பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் முடிவுசெய்திருக்கிறோம்.”

தாங்கள் வாக்களித்து தெரிவுசெய்த ‘மாற்றம்’ அரசின் மீதும், இதுவரை காலமும் வாக்களித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதும், இடையில் இருக்கும் அரச அதிகாரிகள் மீதும் உள்ள கோபத்தையும் போராடி போராடி இயலாமல் கலைத்துப் போயுள்ளதை வார்த்தைகளாலும் ரவீந்திரனிடம் காணமுடிகிறது.

நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையான ரவீந்திரன் தன்னுடைய சொந்தக் காணியில் வீடு கட்டி வாழ்ந்தவர்; தனக்குச் சொந்தமான வயல் நிலத்தில் விவசாயம் செய்தவர்; தன்னிடம் இருந்த 20 ஏக்கர் காணிக்கும் உரித்து பத்திரம் வைத்திருப்பவர். நூற்றுக்கணக்கான மாடுகளுக்குச் சொந்தக்காரராக இருந்தவர். கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்தவர். சந்தோஷமாக வாழ்ந்தவர்.

இவையனைத்தும் இப்போது இவர் வசம் இல்லை. 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 25 திகதியோடு இவரைப் போலவே ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த பூர்வீக இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தனர். அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து சம்பூர் மீது குண்டு மழை பொழிந்து அனைவரையும் அப்படியே அகற்றியது இலங்கை இராணுவம். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தோடு அந்த அழிவு இடம்பெற்று 10 வருடங்கள் ஆகப்போகிறது.

மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் தங்களுக்கும் அந்த மாற்றத்தை அனுபவிக்க முடியும் என எதிர்பாத்திருந்த மக்களுக்கு எதுவும் வந்துசேரவில்லை. வடக்கில் வலிகாமத்திலும் கிழக்கில் பாணம பகுதியிலும்தான் மீள்குடியேற்றம் செய்யப்போவதாக ‘மாற்றம்’ அரசு அறிவித்திருப்பது சம்பூர் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

அத்தோடு, அடுத்த மாதம் இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதமர் தங்களுடைய பிரதேசத்தில் அனல்மின் நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டப்போகிறார் என்ற செய்தியும் வந்துசேர்ந்திருப்பதால், பூர்வீக நிலத்தை மீட்க இனி எவரையும் நம்பிப் பயனில்லை, தாங்களே போராட்டத்தை கையிலெடுத்து எதிர்ப்பை காட்ட சம்பூர் மக்கள் துணிந்துவிட்டனர்.

எனவேதான் சம்பூருக்குச் சென்று அவர்களது உணர்வை பதிவுசெய்து எம்மால் முடிந்ததை செய்வதற்கு முடிவு செய்தேன். கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமுக்குச் சென்று யாருடன் பேசுவோம் என முகங்களைத் தேடிக்கொண்டிருந்த போது ரவீந்திரனைக் கண்டேன். சம்பூர் பற்றி பலரிடமும் பேசி அலுத்துப் போய், நம்பிக்கையிழந்து இருந்த அவர், மனம் திறந்து நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்க அக்கறை காட்டமாட்டார் என்ற நம்பிக்கையுடன், “சம்பூர் பற்றி கொஞ்சம் பேச முடியுமா? என கேட்டேன். எனது நம்பிக்கையை பொய்யாக்கினார் அவர், வாங்க தம்பி, வீட்டுக்குப் போய் பேசுவோம் என்றார். வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பேசலானோம்.

“கட்டப்பரிச்சான் – 358, கிளிவெட்டி – 210, பட்டித்திடல் – 65, மணற்சேனை – 130, உறவினர் வீடுகள் என மொத்தமா 825 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற முடியாம முகாம்ல இருங்காங்க. இது போன வாரம் எடுத்த தகவல்.”

360 டிகிரி கோணத்தில் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாம் (View on Google Maps க்ளிக் செய்வதன் மூலம் முழுமையான திரையில் பாரக்கலாம்)

(ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். இந்தப் பகுதியில் நீங்கள் பார்க்கும் ‌காட்சியை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.)

“திருகோணமலை அரசாங்க அதிபரோட 15 தடவைகள் சந்திச்சி சம்பூர் நிலங்கள்ல குடியமர்த்தும்படி கேட்டிருக்கோம். அவரும் இந்தா தாரோம்… அந்தா தாரோம்னு சொல்லிக்கிட்டு இருந்தார், இலெக்‌ஷன் முடிஞ்சத்துக்கு பிறகு அத பற்றி பேசுறதே இல்ல. முதல் இருந்த ஆளுநர்கிட்ட ரெண்டு தடவ போயிருக்கோம். அவரும் செய்றதாதான் சொன்னார். பிறகு கைகழுவி விட்டார். அதோட, இப்போ இருக்கிற ஆளுநர் பதவியேற்று 3 நாட்களில் போய் பார்த்தோம். அவரும் இங்க வந்தார்; சம்பூருக்குப் போய் பார்த்தார்; முகாமையும் வந்து பார்த்தார். சனம் தாங்க அனுபவிக்கிற கஷ்டத்த பற்றி அவரிடம் சொன்னாங்க. மேலிடத்தில கதைச்சிப் போட்டு முடிவு சொல்றன் என்று சொன்னவர், அதுக்குப் பிறகு இற்றை வரை நடக்குமா நடக்காதா என்று கூட அவர் சொல்லல.”

வீட்டைச் சுற்றி கட்டப்பட்டிருந்த ‘படங்கு’ தொடர்ந்து வீசிய பலத்த காற்றால் சத்தத்தை எழுப்பிக் கொண்டே இருந்தது. அவர் பேசுவதை தெளிவாக கேட்க முடியவில்லை. திரும்பவும் சொல்ல முடியுமா என கேட்கவும் தயக்கம். கேட்காமலும் இருக்க முடியாது, காற்று வீசி ஓய்ந்த பிறகு, தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவரை நிறுத்தி, நீங்க பேசியதை திரும்ப சொல்ல முடியுமா? காற்று பலமாக வீசியதால் கேட்க முடியவில்லை என அவரிடம் கூறினேன். சரி என அவர் பேசத் தொடங்க, டீயுடன் அவரது மனைவி வர மீண்டும் அவர் பேசுவதை நிறுத்தினார். உச்சி வெயில், பகல் ஒரு மணியிருக்கும், வியர்த்து கொட்டுகிறது. புன்முறுவலுடன் கொடுத்தார் ரவீந்திரனின் மனைவி. வாங்கிய பிறகு பேச ஆரம்பித்தார்.

“520 ஏக்கர் நிலத்த துப்பரவாக்கி லெவல் ஆக்கி வச்சிருக்காங்க. டி.எஸ்ஸுக்கு அடுத்தாப்ல உள்ள அதிகாரி ஒருவர் வந்தார். அனல்மின் நிலையம் அமைப்பது உறுதின்னு அவர்தான் சொன்னார். என்ன காரணமென்டா, கடற்கரைச் சேனையில அவங்க ஒரு துறைமுகம் அமைக்கிறதாகவும், துறைமுகத்தில இருந்து அனல்மின் நிலையம் இருக்கிற பகுதி வரைக்கும் 100 மீற்றர் அகலத்தில ஒரு வீதி அமைக்கிறதாகவும் ஒரு தீர்மானம் இருக்கறதா அவர் சொன்னார். அதனால நாங்களே வீதியில இறங்கி எதிர்ப்ப காட்ட தீர்மானித்திருக்கிறோம்.”

ஒரு பக்கம் விவசாயத்துக்கு அனுமதித்திருக்கும் அரசு, மறுபக்கம் அனல்மின்னிலையத்திற்காக சம்பூர் மக்களின் வயல் காணிகளை முற்கம்பி வேலியிட்டு அபகரித்திருப்பதை 360 டிகிரி கோணத்தில் காணலாம்.

“அதுமட்டுமல்ல, பொலிஸ், அரசாங்க அதிகாரி, நேவின்ட உதவியோட சம்பூர்ல உள்ள பெறுமதியான மரங்கள மூதுரைச் சேர்ந்தவங்க கொண்டு போராங்க. ஆனா எங்களால அங்க போக கூட முடியாது.

பேசுவதை இடை இடையே நிறுத்தி மீண்டும் பேசுவதற்கு நீண்டநேரம் எடுத்துக் கொண்டார் ரவீந்திரன். “அவ்வளவுதான் என்னால் பேச முடியும். இனிமேல் முடியாது” என்று சொல்வது போல் இருந்தது அவரது பார்வை. அந்த நேரம் பார்த்து, ரவீந்திரனின் இளைய மகள் பாடசாலை விட்டு வந்தார். “இவள் யார்? உங்கள் மகளா?” என அப்படியே விடயத்தை மாற்றிப் பேசினேன். மகளுடன் சேர்ந்து மூன்று பேரையும் படம் பிடித்தேன், தபாலில் அனுப்பிவைப்பதாக உறுதிகூறி, மகளின் ‘பாய்’ என்ற வழியனுப்பலுடன் அவர்களிடமிருந்து விடைப் பெற்றேன்.

சம்பூர் மக்களின் காணி உறுதிப் பத்திரங்கள்.

அடுத்து, சம்பூர் மக்களில் ஒரு பிரிவினர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இறால்குழிப் பகுதிக்குச் சென்று அவர்களிடம் பேசிப் பார்ப்போம் என த்ரீவீலர் ஒன்றை நிறுத்தி மீள்குடியேற்ற கிராமத்தை நோக்கிச் சென்றேன். குடியேற்ற கிராமத்தின் நுழைவாயிலில் மீள்குடியேற்ற கிராமத்தின் பெயர்ப்பலகை. பிரதான பாதையிலிருந்து த்ரீவீலர் அப்படியே முன் பக்கம் சாய்வது போல் ஓர் உணர்வு. குடியேற்ற கிராமம் பிரதான பாதையிலிருந்து கீழ் அமைந்திருந்தது. அது சதுப்பு நிலப்பகுதி. இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை தண்ணீர், குளம் போன்று தேங்கியிருந்ததைக் காண முடிந்தது. த்ரீவீலரை நிறுத்திவிட்டு கிராமத்தினுள் நடக்கத் தொடங்கினேன். தொலைவில் இருந்த வீட்டு முற்றத்தில் தாயொருவர் உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேசலாம் என முடிவெடுத்து அருகில் சென்றேன்.

சம்பூர் சேர்ந்தவங்களா நீங்க? இது மீள்குடியேற்ற கிராமமா? எனக் கேட்க, “இது மீள்குடியேற்ற கிராமம்தான். ஆனா, குடியிருக்க உகந்த கிராமமில்ல தம்பி…” என உடனே பதில் அளித்தார் அந்தத் தாய். “ஏன் அம்மா அப்படிச் சொல்றீங்க?” என நான் கேட்டேன்.

“இது சதுப்பு நிலம் தம்பி… மழை வந்தா வீட்டுக்குள்ள தண்ணி வந்துரும். நேற்று முந்தநாள் பெய்த மழையால இந்தா இந்த அளவுக்கு தண்ணி நிறைஞ்சிடும்” என வாசல்படிக்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்த அடையாளத்தைக் காட்டினார்.

“நாங்க இங்க விரும்பி வரல்ல தம்பி… முகாம்ல தண்ணிக்கு போலீன், டொய்லட்டுக்கு போலீன், சாமானும் தாரதில்ல, சைன் பண்ணிட்டு வெளியில போகனும். புள்ளகளுக்கு படிக்க முடியாது. டிஎஸ் ஒபிஸால சொன்னவங்க. சம்பூர் தரமாட்டாங்க. ரெண்டு வீடு கட்டிருக்கோம். போய் பாருங்க. அதே மாதிரி வீடு கட்டித்தருவோம். நீங்க அங்க போங்க என்றுதான் சொன்னவங்க. இங்க வந்த பிறகு அவங்க வீடு கட்டித்தரவேயில்ல. வாரவங்க போரவங்க கைய கால பிடிச்சி ஒரு மாதிரி வீட கட்டிக்கிட்டோம். இந்தா பாருங்க இவங்கதான் கட்டிக் கொடுத்தாங்க” என ஒரு போர்டை காட்டினார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடு அது.

இப்போ என்ன வருமானம் அம்மா? எனக் கேட்கும்போது அவரது கணவர் வீட்டினுள் இருந்து வெளியில் வந்தார்.

“இப்ப என்ன தம்பி வருமானம்… இவரு ஒரு நாள் கடலுக்கு போனா ஒன்பது நாளைக்கு போறதில்ல. ஒரு தடவ கடலுக்கு போனா அதுல வார வருமானம் முடிஞ்ச பிறகு கடன்தான், அத கட்ட பிறகு வேலைக்கு போக வேண்டியிருக்கு. இந்த காணிக்கு உறுதி கூட இல்ல. சொந்தகாரன் எழும்பச் சொன்னா எல்லாத்தயும் தூக்கிக்கிட்டு போகவேண்டியதுதான்.”

“சம்பூர்ல இருக்கும்போது 2 கட்டுவல், ஒரு போட் இன்ஜின், வள்ளம், வயல் காணி 2 ஏக்கர், பசு மாடு, 50 கோழி, குடியிருப்பு காணி முக்கால் ஏக்கர், தோட்டக் காணி 3 ஏக்கர் இருந்தது. இப்ப ஒன்றுமே இல்ல. 20 பேர்ச் காணியில என்னத்த செய்ய. கோழிகூட வளர்க்க முடியாம இருக்கோம். அடுத்தவன் வீட்டுக்குப் போனா அது பெரிய பிரச்சின. எங்கட நிலத்துக்கு அனுப்பினா எந்த கஷ்டமும் இல்லாம பிள்ளகளோட சந்தோஷமா வாழலாம்.”

“உங்களுக்கு எத்தன பிள்ளைகள் அம்மா?” என கேட்க மளமளவென அவரின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது. பெரும்பாலான வடக்கு – கிழக்குப் பெண்களிடம் இந்தக் கேள்வியை கேட்டவுடன் உடனடியாக வரும் பதில் கண்ணீர்… ஆக, நிச்சயமாக இவரது பிள்ளை காணாமல் போயிருக்கலாம் என ஊகித்துக்கொண்டேன்.

“மல்ரி தாக்குதல்னால கிராமத்துல இருக்க முடியாம போயிடுச்சி, சம்பூர விட்டு வெளியேற முடிவு செய்தோம். இரவிரவா காடு வழியா வந்துகொண்டிந்தனாங்க. அப்போதான் மகன் காணாமல் போயிருக்கனும். அப்போ இயக்கம் புல் பவர்ல நிண்டு, பிள்ளைகள விடல்ல, நிறைய பேர புடிச்சி எடுத்திருந்தாங்க. எங்கட பிள்ளைய புடிச்சாங்களா, இல்லையானு தெரிஞ்சிக்க முடியல. எல்லா முகாம்லயும் போய் பார்த்திட்டன். எங்கேயும் மகன் இல்ல…”

அவருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. அமைதியாக இருந்துவிட்டு, சம்பூர் நிச்சயமாக கிடைக்கும், மகன் கட்டாயம் உங்களிடம் வந்துசேருவார் என எந்த வாக்குறுதியும் வழங்காமல், நம்பிக்கையும் அளிக்காமல் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

சம்பூரில் கடற்படை முகாம் அமைந்திருக்கும் 236 ஏக்கர் காணிப்பகுதியில் சம்பூர் வித்தியாலயமும் உள்ளடங்குகிறது. அதனையும் சுற்றிவளைத்தே கடற்படை, முகாமை அமைத்திருக்கிறது. சம்பூர் பாடசாலையில் படித்த பெரும்பாலான பிள்ளைகள் சேனையூர் பாடசாலையில் கல்வி கற்பதாக அறிந்தேன். அதனால் சேனையூர் பாடசாலை அதிபரைச் சந்திக்கத் தீர்மானித்தபோது மாலை 6.00 மணியிருக்கும். அவரை தொடர்புகொண்ட போது பாடசாலையில்தான் அதிபர் இருந்தார். என்னை அறிமுகம் செய்துகொண்டு சம்பூர் பிள்ளைகள் தொடர்பாக கேட்டேன்.

“சம்பூர் ஸ்கூலைச் சேர்ந்த 304 பிள்ளைகளும், சம்பூர் ஶ்ரீமுருகன் ஸ்கூலைச் சேர்ந்த 48 பிள்ளைகளும் இங்கதான் படிக்கிறாங்க. இடவசதி இல்ல, போதியளவு தளபாடங்கள் இல்ல…”

“சம்பூரில் வேறொரு இடத்தில் ஸ்கூல் அமைக்க இடம் பார்ப்பதற்காக டிபார்ட்மன்டால வந்தவங்க. அங்க மக்கள குடியமர்த்தாம ஸ்கூலுக்கான இடத்த பார்ப்பது பொருத்தமா இருக்காதுனு நான் நினைக்கிறேன். சம்பூர் ஸ்கூல் இப்போதைக்கு கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறு இல்ல. இபோதைக்கு ஸ்கூல் முக்கியமல்ல, முதல்ல மக்கள் குடியமரனும்.

இரவு 7.30 மணியாகிவிட்டதால் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

மேல் நான் சந்தித்த மூன்று பிரிவினரும் சம்பூரில் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றே வலியுறுத்திக் கூறினர். அங்கு மக்கள் குடியேற்றப்பட வேண்டுமானால் இலங்கை அரசால் மாத்திரம் முடியாது, இந்தியாவிடம் உண்மையை எடுத்துச் சொல்லவேண்டும், இந்தியா தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு நான் சந்தித்த ஒரு சில மக்களால், சிவில் சமூக ஆர்வலர்களால், அரசியல்வாதிகளால் கூறப்பட்டது. இது தொடர்பாக தெளிவாக தெரிந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது சந்திக்க வருமாறு கூறினார். மறுநாள் காலை அவரைச் சந்திக்கச் சென்றேன்.

“சம்பூரில் இந்தியா முதலீடு செய்வதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கல, ஆனா அதுக்காக மக்களது இடம் பறிக்கப்படுறது நியாயம் இல்லதானே… கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் விட்டுக்கொடுக்கலாம், போதாதென்றா இன்னும் 500 ஏக்கர் கூட விட்டுக் கொடுக்கலாம். ஆனா, மக்கள்ட நிலம் கொடுக்கப்படனும்.”

“சம்பூர் காணி தொடர்பா இந்தியாவ இலங்கை அரசு தவறா வழிநடத்துது. அனல்மின் நிலையம் அமைக்கப்படுற இடம் மக்களுக்கு சொந்தமில்ல, அது காட்டுப் பகுதி, மற்ற இடங்கள்லயும் பலவந்தமாகத்தான் மக்கள் குடியேறி இருந்தாங்கனு இந்தியாவுக்கு சொல்லப்பட்டிருக்கு. சம்பூர்ல இருந்து 2006ஆம் ஆண்டு மக்கள் விரட்டியடிக்கப்பட்டதும் அவர்களது வீடுகள அப்பவே தரைமட்டமாக்கிட்டாங்க. கிட்டத்தட்ட 10 வருஷமாகப் போகுது. இந்த பத்து வருஷத்துல அந்தப் பகுதி காடாத்தானே இருக்கும்.”

“அங்கிருந்த வீடுகளின்ட அத்திவாரங்கள, கிணறுகள, டொய்லட்டுகள இப்போ போனாலும் பார்க்கலாம். காட்டுக்குள்ள போய் பாருங்க, அப்ப தெரியும், காடா இல்ல மக்கள் இருந்த இடமானு. அங்க யாருமே இருக்கலனு சொல்ல முடியாது.”

இப்படி இவர் சொன்னவுடன் அந்த இடத்தை போய் பார்த்து சில படங்களைப் செய்யலாம் எனத் தீர்மானித்துக் கொண்டேன். தெரிந்தவர்களின் உதவியுடன் த்ரீவீலர் ஒன்றை வரவழைத்துக் கொண்டு மக்கள் குடியிருந்த அந்தக் காட்டுப் பகுதியை நோக்கி பயணமானேன். கடற்படைக் காவலரன் புள்ளியாகத் தெரிய, கொஞ்சம் நிறுத்துங்கள், சிறுநீர் கழிப்பது போன்று காட்டுக்குள் போவோம் என சாரதி அண்ணனிடம் கூறினேன். அவரும் த்ரீவீலரை தூரத்தில் இருந்த காவலரணுக்குத் தெரியாதவாறு பாதையை விட்டு விலக்கி நிறுத்தினார்.

உள்ளே நுழைந்து பார்த்தால் 10 அடி, 20 அடிகளுக்கு இடையில் அநேகமான கிணறுகளைக் காண முடிந்தது. அவை அனைத்தும் கற்கள் கொண்டு, சீமேந்து பூசி, முழுமையான வகையில் கட்டி முடிக்கப்பட்டவை. ஒரு சில வீடுகளின் அத்திவாரங்களையே காணமுடிந்தது. அவை அனைத்தையும் பெயர்த்தெடுத்து தூரக்கொண்டு போகத் தெரிந்தவர்களுக்கு கிணறுகளை அழிக்க முடியாமல் போய்விட்டது. அவற்றை கமராவில் பதிவுசெய்து கொண்டிருக்க வாகனம் போகும் சத்தம் கேட்டது. பதிவுசெய்தது போதும் எனத் தீர்மானித்து காற்சட்டையை சரிசெய்தவாறு த்ரீவீலரை நோக்கி சாரதி அண்ணனுடன் போனேன்.

360 டிகிரி கோணத்தில் காடாக காட்சியளிக்கும் மக்கள் வாழ்ந்த பூர்வீக சம்பூர் நிலப்பகுதி. இங்கு மக்கள் வாழ்ந்தமைக்கு சாட்சியம் கூற கிணறுகள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில், உறவினர் வீடுகளில், வசதியற்ற மீள்குடியேற்ற கிராமங்களில் வாழும் மக்கள் மீண்டும் தங்களது சொந்த பூர்வீக நிலத்துக்குச் சென்று தொழில் செய்து வாழ்வதற்கு நம்பிக்கை இழக்காமல் 10 வருடங்களாக காத்திருக்கின்றனர். இலங்கைத் தமிழர் நலனில் அதிக அக்கறை கொண்டிருக்கும் இந்தியா சம்பூர் விடயத்தில் கண்திறந்து பார்ப்பது அவசியமானது. தமிழர் பிரதிநிதிகள் இந்தியாவிடம் சம்பூர் தொடர்பாக எடுத்துக் கூறுவது கட்டாயமானது. தமிழர் பிரதிநிதிகளுக்கும், இந்தியாவுக்கும், ‘மாற்றம்’ அரசுக்கும் எதிராக தொடர் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கும் முன் ஏதாவது செய்தால் நல்லது.