படம் | Jera, Colombomirror

சிறீலங்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவு அலை மீண்டும் சிறீலங்காவை நோக்கி திரும்பியுள்ளது. தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள் இதனால் மீண்டும் பின்தள்ளப்படுகின்றன. இதன் ஒரு உச்சக்கட்டமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இருபத்தெட்டாவது கூட்டத் தொடரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தின் “21 பெப்ரவரி 2002 தொடக்கம் 15 நவம்பர் 2011 வரை இலங்கைத் தீவில் நிகழ்ந்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய குற்றங்கள்” தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் வரை பிற்போடப்பட்டமையாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இருபத்தெட்டாவது கூட்டத் தொடரை ஒழுங்குபடுத்துவதற்கான சந்திப்பு கடந்த 16ஆம் திகதி சுவிற்ஸர்லாந்து நேரம் பிற்பகல் 3 மணிக்கு ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பமானது. அதன் போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் விசாரணையை பிற்போடுவதற்கான வேண்டுகோளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர், பேரவை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தினார். இந்த வேண்டுகோள் எந்தவித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்க உதவும் என கூறப்படும் இந்தியாவும், இலங்கைத் தீவில் உண்மையும் நல்லிணக்கமும் ஏற்பட துணை புரியும் என காட்சிப்படுத்தப்படுகிற தென் ஆபிரிக்காவும், கட்டுமானங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என கூறப்படுகின்ற ஜப்பானும் விசாரணை அறிக்கையை பிற்போடுகின்ற நடவடிக்கைக்கு எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.

இதேவேளை, இந்த விசாரணைக் குழுவுக்கான சர்வதேச ஆலோசகர்கள் மூவரும் விசாரணை அறிக்கையை பிற்போடுகின்ற நடவடிக்கைக்கு தமது ஒப்புதல்களை வழங்கினார்கள். இதற்கான ஒப்புதலை வழங்குமாறு குறைந்தது ஒரு ஆலோசகர் மீது ஸ்கண்டிநேவிய நாடொன்றின் மூலம் கணிசமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அறியமுடிகிறது.

விசாரணை அறிக்கையின் வெளியீட்டை ‘ஒரு தடவை மட்டும்’ ஒத்திவைத்ததனூடாக புதிய முக்கியமான தகவல்கள் வெளிவரும். அது செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் அறிக்கையை வலுப்படுத்தும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் சையிட் ராட் சையிட் அல் ஹொசைன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைப்போம் என சிறீலங்கா அரசு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், தமிழர்களுக்கான நீதியை வழங்குவதற்கான ஒரு வழிமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று இனப் படுகொலைகளைத்தான் தடுத்த நிறுத்த முடியாமல் போய்விட்டது, இன்று படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும், இன அழிப்பிலிருந்து உயிர்தப்பி வாழ்பவர்களுக்குமான நீதியைத் தன்னிலும் பெற்றுக்கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் நீதிக்காக போராடுபவர்கள் மத்தியில் எழுகிறது.

விசாரணை அறிக்கை என்றைக்குமே வெளிவராத வகையில் தடுக்க வேண்டும் என்றே சிறீலங்கா அரசிலுள்ள பலர் எண்ணியிருந்தனர். இருப்பினும், அவர்களின் எண்ணம் ஒரே தடவையில் முழுமையாக சாத்தியப்படவில்லை. ஆயினும், இது சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிறீலங்கா ஈட்டிக்கொண்டுள்ள ஒரு குறிப்பிடக்கூடிய இராஜதந்திர வெற்றி. இதனை சிங்கள தேசம் காலத்திற்குப் பொருத்தமான வகையில் கொண்டாடுகிறது. ஆட்சியாளர்கள் மாறியிருந்தாலும், இந்த வெற்றிக்கும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னர் தெற்கில் கொண்டாடப்பட்ட வெற்றிக்கும் இடையில் கணிசமான தொடர்புள்ளது. ராஜபக்‌ஷக்களின் ஆட்சிபீடம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பை பெருவெற்றியாக கொண்டாடியது. மைத்திரி – ரணில் அரசு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு நீதியை அடைவதற்கான ஒரு மார்க்கமாக இருக்கக் கூடிய அறிக்கையை பிற்போட்டதனை ஒரு வெற்றியாகக் கருதுகிறது. இன்னொரு வகையில் கூறுவதனால், மஹிந்தவின் அரசு தமிழர்களை படுகொலை செய்ததை வெற்றியாகக் கொண்டாடியது. மைத்திரி – ரணில் அரசு மஹிந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு நீதி கிடைப்பதனை ஆறு மாதத்துக்கு பிற்போடப்பட்டதனை வெற்றியாகக் கருதுகிறது. இது ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு உள்ளிட்ட கொள்கைகளிலும் நோக்கங்களிலும் சிங்கள தேசத்தில் மனமாற்றம் நிகழவில்லை என்பதனை மீண்டும் ஒரு தடவை எடுத்துக்காட்டுகிறது.

தமிழர்களுக்கான நீதியை தாமதிக்கும் சிறீலங்கா அரசின் நிகழ்சி நிரலுக்கு, தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளுக்கின்ற கட்சியின் தீர்மானம் எடுக்கும் உறுப்பினர்கள் இருவர் பக்கத்துணையாக இருந்தமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதும் வேதனைக்குரியதுமாகும். அத்துடன், தமிழர் அரசியலில் நிகழ்த்தப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கான சிந்தனை மாற்றம் அவசரமாகவும் அவசியமாகவும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் பக்கத்துணையாக இருந்த செயற்பாடு சுட்டிக்காட்டி நிற்கிறது.

விசாரணை அறிக்கையை பிற்போடுவதென கடந்த திங்கட்கிழமை (16-02-2015) வந்த அறிவிப்பு, நீதிக்காக சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஏக்கத்தோடு காத்திருந்த தமிழர்களுக்கும், நீதியை பெற வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கும் பேரதிர்ச்சியையும் பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

அத்துடன், ஐ.நாவும் சர்வதேச சமூகமும் மீண்டும் ஒரு தடவை தமிழர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளதாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமன்றி, அது தொடர்பான செய்திகளை இருட்டடிப்புச் செய்ததன் ஊடாக பெரும் தவறிழைத்த ஐ.நா. மீண்டும் சிறீலங்காவை காப்பாற்ற முனைகிறதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுவதற்கு விசாரணை அறிக்கை பிற்போடப்பட்ட விவகாரம் வழிகோலியுள்ளது.

போரின் போது தமிழ் மக்களை பாதுகாக்க ஐ.நாவும் சர்வதேச சமூகமும் தவறிவிட்டது என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலே, தமிழர்களின் நீதிக்கான ஒரு மார்க்கம் தாமதிக்கப்பட்டுள்ளது. இது நீதி மறுப்புக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதோடு, ‘Never Again’ என்பது வெறும் சுலோகம் மட்டும்தான் என்ற சிந்தனையையும் தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் ஜயந்த தனபால ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்புடைய தரப்புகளை அண்மையில் ஜெனிவாவில் சந்தித்தமை, சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன், வாசிங்டனில் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உள்ளிட்ட அமெரிக்கத் தரப்புகளையும், நியுயோர்க்கில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனையும் சந்தித்திருந்தார். அத்துடன், பெப்ரவரி 13ஆம் திகதி சிறீலங்கா அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து, மங்கள சமரவீர ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மைத்திரிபால சிரிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தை மையப்படுத்தி எழுதியிருந்த இந்தக் கடிதத்தில் இலங்கைத் தீவிலுள்ள அனைவரதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய பின்னணியிலேயே விசாரணை அறிக்கை வெளிவருவதனை பிற்போடும் அறிவித்தல் வெளியாகியுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க விடயங்கள் வெறும் வாக்குறுதிகளாக போயிருக்கின்ற சூழலில், இலங்கைத் தீவிலுள்ள அனைவரதும் மனித உரிமை பாதுகாக்கப்படும் எனக் குறிப்பிட்டமை சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் செயலே. ஏனெனில், வடிவங்கள் மாறினாலும்இ வடகிழக்கில் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை உட்பட்ட கட்டமைப்புசார் இனஅழிப்பு தொடர்கிறது. காணாமல் போனோருக்காக குரல் கொடுப்பதில் முன்னின்ற ஒரு செயற்பாட்டாளரே கடந்த 17-02-2015 முதல் காணமல் போயிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதோடு, சிறீலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை யாழ். பல்கலைக் கழகம் உட்பட்ட பல பகுதிகளில் தீவிர கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளதையும் அறியமுடிகிறது.

குற்றம் செய்தவர்களை தண்டனைக்கு உட்படுத்தாத சூழலிலும், தமிழர்களுக்கு எதிரான அநியாயங்கள் தொடர்கின்ற சூழலிலும் வெறும் வாக்குறுதிகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இன அழிப்பிலிருந்து தப்பி உயிர் வாழ்பவர்களுக்கும் வழங்கப்படவில்லை. அத்துடன், உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கு சாட்சியங்களையும் ஆதாரங்களையும் வழங்கியவர்களின் எதிர்பார்ப்பையும் ஐ.நா. பூர்த்திசெய்ய தவறிவிட்டது.

எது எப்படி இருப்பினும், அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்ற அடிப்படையில், எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், எமக்கான சந்தர்பங்களை உருவாக்கலாம். அந்த வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலும், ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையிலும் கவனத்திற்கொள்ளப்பட்ட விடயங்களான, தமிழர்களுக்குரிய நிலங்களை மீளப்பெறுதல், தமிழர் தாயகத்தில் தொடரும் இராணுவமயமாக்கலை நிறுத்துதல், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீளப்பெறுதல், தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்தல் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குதல் போன்ற விடயங்களை கருத்தில்கொண்டு புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் அழுத்தங்களை வழங்கக்கூடிய வகையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் துறைசார் சிறப்பு நிபுணர்கள், விசாரணையாளர்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைத் தீவுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தகைய காலகட்டங்களில் கவனயீர்ப்புப் போரட்டங்கள் தீரத்துடனும் நேர்த்தியாகவும் வட கிழக்கிலும் தலைநகர் கொழும்பிலும் நடாத்தப்படுதல் நன்று. அதேவேளை, புலம்பெயர் தமிழ் அமைப்புகள், சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசியல்வாதிகள் மத்தியில் சிறீலங்கா அரசின் போலி வாக்குறுதிகளை வெளிப்படுத்துவதோடு, உள்நாட்டு பொறிமுறை மூலம் தமிழ் மக்களுக்கான நீதியை ஏன் வழங்காது என்ற காரணத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஏனெனில், உள்ளகப் பொறிமுறை ஊடாக உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவது சிறீலங்காவின் நோக்கமல்ல. மாறாக, சிறீலங்கா மீதான சர்வதேச அழுத்தத்தை திசை திருப்புவதோடு தமிழின அழிப்பை மேற்கொண்டவர்களை தண்டனைகளிலிருந்து தப்பிக்க வைப்பதே நோக்கம். தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் மாதிரி ஒன்றை உள்ளகப் பொறிமுறைக்கு சார்பாக இலங்கைத் தீவில் நடைமுறைப்படுத்துவதென்பது மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் கரிசனை கொண்ட சர்வதேச தரப்புகளை திருப்பதிப்படுத்துவதற்கும் திசைதிருப்புவதற்குமான ஒரு உத்தி.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் மாதிரியின் ஊடாக, உயர் மட்ட இனப் படுகொலையாளர்களான பலரும் காப்பாற்றப்படுவார்கள். கடந்த வருடம் நவம்பர் மாதம் அவிசாவளைப் பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில், கடந்த அரசிலும் தற்போதைய அரசிலும் முக்கியஸ்தராக உள்ள சம்பிக்க ரணவக்க ஆற்றிய உரையில், மஹிந்த ராஜபக்‌ஷவோ, கோட்டாபயவோ, சரத் பொன்சேகாவோ, வசந்த கரன்னாகொடவோ, சவேந்திர சில்வாவோ, பிரசன்ன சில்வாவோ அல்லது சிறீலங்காவின் ஆயுதப் படைகளின் உயர்மட்ட தளபதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சர்வதேச போர்க்குற்ற விசாரணை மூலம் தண்டிக்கப்படுவதையோ அல்லது சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதையோ கடுமையாக எதிர்போம் எனத் தெரிவித்ததோடு, இதற்கு மைத்திரிபால சிறிசேன உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனமும் உறுதிப்படுத்தியிருந்தது. இதேவேளை, சிறீலங்காவால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் எவையும் நீதியை வழங்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் அறிக்கையை சர்வதேச மன்னிப்புச் சபை 11 ஜூன் 2009 வெளியிட்டிருந்தது. இவை, சிறீலங்காவின் உள்ளகப் பொறிமுறை மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதை வெளிப்படுத்துவதற்கான சில உதாரணங்கள் மட்டுமே.

2014 ஆண்டு மார்ச் மாத ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் மீள்நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட வணக்கத்திற்குரிய பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்களே, சுதந்திரமான சர்வதேச விசாரணையே இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டு ஒரு மனுவை வெளியிட்டிருந்தார். அந்த மனுவில் அவரோடிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களும் கையொப்பமிட்டிருந்தார்.

சிறீலங்காவின் உள்ளகப் பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது என்பது வரலாற்று ரீதியாகவும் அண்மைக் காலத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ள சூழலில், சிறீலங்காவின் உள்ளகப் பொறிமுறையை ஆதரிப்பது என்பது தமிழர்களுக்கான நீதியை காலநீட்சியில் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையே. ஆதலால், சுதந்திரமான சர்வதேச விசாரணையை தமிழர் தரப்பு வலியுறுத்துவதோடு, எக்கால கட்டத்திலும் உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அத்துடன், உள்ளகப் பொறிமுறையை ஆதரிப்பவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.

ச.பா. நிர்மானுசன்