படம் | FCAS

ஜனவரி 9, 2015

நாம் இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், நீங்கள் இலங்கையின் 6ஆம் நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். சவால்கள் நிறைந்த பாதையில் நடைபோடத் தொடங்கும் இந்தக் கணத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.

“100 நாட்களில் முடிக்க வேண்டிய நிகழ்ச்சி நிரல்” என வழிகாட்டிப் பலகை நாட்டியிருக்கும் உங்கள் சவால் மிகுந்த பாதையானது பல முக்கியமான நடவடிக்கைகள் கொண்டதாக உள்ளது. 18ஆம் திருத்தச் சட்டத்தினை அகற்றுதல், நிறைவேற்று ஜனாதிபதிப் பதவிக்குண்டான அதிகாரங்களையும், அது சட்டத்திற்கு முன் அனுபவிக்கும் பாதுகாப்பினையும் மட்டுப்படுத்தல். அத்துடன், காவல் துறை, அரசியலமைப்புச் சட்டம், ஊழல், தேர்தல்கள், நீதித்துறை ஆகியவற்றுக்கான சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் போன்ற நல்லாட்சிக்கான பொறி முறைகளை இடுதல் ஆகியவைதான் இவற்றில் சில.

“உறுதியான நாட்டுக்கான கருணையான ஆட்சி” எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்நாட்டின் பெண்கள், குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் பெண்கள் ஆகியோர் இதுவரை வன்முறை, பாகுபாடுகள் ஆகிய காரணிகளினால் குரூரமாக நடத்தப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கருணை தேவையாக இருக்கின்றது. உங்களுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி நாம் வாசித்திருக்கின்றோம். நீங்கள் ஒரு பாசமுள்ள தந்தையாகவும் அன்புள்ள கணவனாகவும் இருக்கின்றீர்கள். உங்கள் ஆட்சியிலும் இதே தன்மைகளை நாம் பார்க்க விரும்புகின்றோம். வஞ்சிக்கப்பட்ட இந்த மக்களின் வாழ்வில் ஒளி தோன்றக்கூடியதான நல்ல கொள்கைத் திட்டங்களின் பயன்களைக் காண நாம் விரும்புகின்றோம். கல்வி, சுகாதாரம், சத்துணவ, உணவுப் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி போன்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் பல கொள்கைத் திட்டங்களை நீங்கள் வரைந்திருக்கிறீர்கள். பெண்கள் சிறுவர்கள் மீதான வன்முறையினை இல்லாதொழிப்பதற்கான விழுமியங்களையும் கட்டமைப்புக்களையும் மீண்டும் நிலைநாட்டுதலுடன், அவற்றைச் செயற்படுவதற்கான நிதி வளங்களை ஒதுக்குதலையும் நீங்கள் செய்வதை நாம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றோம். மிக முக்கியமாக, சூழல் பாதுகாப்பிற்கும் உங்கள் விஞ்ஞாபனத்தில் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு வீதங்களைப் பற்றி சற்றே நினைவுகூர விரும்புகின்றோம். மொத்தமாக, உங்கள் பிரதான எதிரணி வேட்பாளரைவிட நீங்கள் 449, 072 அதிகப்படியான வாக்குகள் எடுத்திருக்கிறீர்கள். அம்பாறை சேருவில தொகுதிகள் தவிர்ந்த (அங்கு உங்கள் எதிரணி வேட்பாளரே வென்றிருக்கின்றார்) தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் சகல வடக்கு – கிழக்கு மாகாணத் தேர்தல் தொகுதிகளிலும் நீங்கள் 740, 251 மேலதிக வாக்குகளினால் வென்றிருக்கிறீர்கள். அவர்களுடைய வாக்குகள் இருந்திருக்காவிடில் 29, 179 வாக்குகளினால் நீங்கள் தோல்வியடைந்திருப்பீர்கள். இதில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே ஏனைய தொகுதிகளில் வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள்கூட சேர்க்கப்படவில்லை. உண்மையில், எங்கெங்கு அவர்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனரோ அங்கெல்லாம் பெரிய வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வென்றிருக்கிறீர்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்கின்ற அடிப்படையில், இது உங்கள் தோள்களில் ஒரு பாரிய பொறுப்பினை சுமத்தியிருக்கின்றது. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தலைவர்களைத் தெரிவு செய்வதுடன் சரி என்பது போன்ற எங்களுடைய முன்னைய ஜனாதிபதிகளின் துரதிர்ஷ்டவசமான மனப்பாங்குடன் நீங்களும் நடக்க மாட்டீர்கள் என்பதனை நாம் நம்புகின்றோம்.

கடந்த தேர்தலின்போது தென்னிலங்கையின் பௌத்த – சிங்கள வாக்குகள் கிடைக்காமற்போகுமோ என்கின்ற பயத்தின் காரணமாக தமது அபிலாசைகள், தேவைகள் ஒன்றுமே பிரதான வேட்பாளர்களினால் பேசப்படவில்லை என்பதை தமிழ் – முஸ்லிம் மக்கள் அவதானித்துதான் இருந்தனர். இந்த நாட்டில் சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படாத வெளிநாட்டவர் அல்லது எதிரிகள் போன்று அவர்கள் நடத்தப்பட்டாலும்கூட, உங்களுக்கு அவர்கள் அமோகமாக தங்கள் வாக்குகளைக் கொடுத்தனர். தங்களுடைய அபிலாசைகளானவை ஜனநாயகத்தினை நிலைநாட்டும் முறைவழியுடனேயே தொடர்புடையது என அவர்கள் உணர்ந்ததனாலேயே அவ்வாறு வாக்களித்தனர். அவர்களுடைய வாக்குகள் ஜனநாயகத்திற்கான வாக்குகளாகும்.

இத்தகைய தெளிவானதொரு பணிப்பாணைக்கு உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கப் போகின்றது என்பதுதான் கேள்வி.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொட்டுத் தொட்டுச் செய்வதனால் ஜனநாயகத்தினை உருவாக்க முடியாது. நல்லாட்சி என்பது சகலருக்குமான அரசியல் அதிகாரப் பகிர்வு என்பது தவிர வேறில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவதனால் மட்டும் சகல இனங்களும் சமத்துவத்துடனும் ஜனநாயகத்துடனும் வாழும் நாட்டை உருவாக்க முடியாது. இந்த அணுகுமுறையினை நீங்கள் கைக்கொள்ளத் தவறினீர்களானால் உங்களது தலைமைத்துவம் பௌத்த சிங்களவர் அல்லாதோருக்கான வல்லாட்சியாக இப்பொழுதே மாறிவிடும் என்பது மட்டுமன்றி நீண்ட காலப்பொழுதில் அதுவே பௌத்த சிங்களவர்களுக்கு எதிரான ஏகாதிபத்தியமாகவும் மாறிவிடும். இதனைத்தான் கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் கண்டோம்.

இதனை நிவர்த்தி செய்வதற்கு நீங்கள் வெகு தூரம் நோக்கத் தேவையில்லை. கடந்த 6 தசாப்தங்களாக இதனைப் பற்றி எண்ணிறந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு விட்டன. 2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவர்கள் நாடாளுமன்றில் சமர்ப்பித்த அரசியலமைப்புச் சட்டத்தினையே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை சகல இனங்களும் சமத்துவமாக அரசியல் அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்ளும் அரசினை உருவாக்குவதற்கான அடித்தளமாக நீங்கள் உபயோகிக்காவிட்டால், உங்கள் விஞ்ஞாபனத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களெல்லாம் ஏட்டுச் சுரைக்காயின் கதையாகி விடும். மிகுந்த சவால்கள்தாம். ஆனால், இராணுவமயமாக்கலை நீங்கள் மட்டுப்படுத்தியேயாகவேண்டும். சட்டபூர்வமற்ற காணிச் சுவீகரிப்புக்களை உடனடியாக பின்னெடுக்க வேண்டும். இவற்றை வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பிரச்சினைக்குரிய பிரதேசங்களில் நீங்கள் செயற்படுத்த வேண்டும்.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாவதாக, இந்நாட்டின் பௌத்த சிங்கள மக்களை துட்டகைமுனுவின் காலத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டு வரும் பாரிய கடமை உங்களுக்குண்டு. அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் கட்டமைப்புக்களே இக் காலத்தின் சாதாரண வழக்கம் என்பதும், அது ஒரு நவீன நாடாக இலங்கையை அபிவிருத்தி செய்ய உதவும் என்பதையும் அவர்களை உணரச் செய்ய வேண்டும். இந்நாட்டின் பௌத்த சிங்கள மக்கள் ஜனநாயகத்தை நோக்கியதொரு பொதுப் பாதையில் ஏனையோருடன் நடைபோடச் செய்ய வேண்டும். ஜனநாயகம் பௌத்த சமயத்துக்கு எதிரானதல்ல என்னும் உண்மையை அவர்களுக்கு விளக்க வேண்டும். இந்த பொதுப் பாதையொன்றே சகல மதங்களையும் பாதுகாப்பதும் அவற்றினிடையே புரிந்துணர்வினைக் கொண்டு வருவதுமான பாதையாகும். இந்த எதிர்பார்ப்புடன்தான் பௌத்த இனவாதக் குழுக்களினால் திரும்பத் திரும்ப தாக்கப்பட்ட முஸ்லிம் மற்றும் சிறிஸ்தவ மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்.

இந்தச் சவால்களுக்கு நீங்கள் முகம் கொடுக்கும்போது உங்கள் தலைமைத்துவத்தின் தரம் மிக முக்கியமானது. உங்களுடைய சொந்த நடத்தை இந்நாட்டு மக்களினால் மிகக் கூர்ந்து அவதானிக்கப்படும். நீங்கள் உறவினர்களுக்குத் தனிச்சலுகை காட்டுதல், ஊழல் போன்ற நடத்தைகளின்றிய ஆட்சியினைப் புரிவீர்கள் என்பதே எமது அவாவாகும். ஒரு சர்வாதிகாரப்போக்கின்றி சகலரையும் பங்குகொள்ள வைக்கும் கருத்தொருமைப்பாடு மிக்க நடைமுறையைக் கைக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இனிவருங்காலங்களில் நீங்கள் மேற்கொள்ளப்போகும் ஆலோசனைக் கலந்துரையாடல்களில் சகல இனங்களின் மத்தியிலிருந்தும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உட்படுத்துவீர்கள் எனவும் நம்புகின்றோம்.

ஜனாதிபதி அவர்களே, அதிகாரத்தின் படாடோபங்கள் உங்களைச் சூழும் இவ்வேளையில் உங்களைச் சுற்றி ஏமாற்றுப் பேர்வழிகளும் ஊழல் மன்னர்களுமே இருக்கக் காண்பீர்கள். இவர்களின் பிடிகளில் அகப்படாது உங்கள் கடமையைச் செய்வீர்கள் என நம்புகின்றோம். அத்துடன், உங்கள் மக்களுடனும் உங்களுக்கு வாக்களித்தவர்களுடனும் தொடர்ந்த தொடர்புகளைப் பேணுவதற்கு விசேட முயற்சிகள் எடுப்பீர்கள் என்பதையும் நம்புகின்றோம். இன்றிலிருந்து உங்கள், ஒவ்வொரு அடிகளையும் அவதானித்து உங்களை ஆக்கபூர்வமான முறையில் விமர்சிப்பவர்களாக நாம் இருப்போம்.

இங்ஙனம் பணிவுள்ள,

ஜானகி அபேவர்தன

சாந்தி சச்சிதானந்தம்

பிரேமா கமகே

கிறிஸ்டீன் பெரேரா

விசாகா திலகனரத்ன