படம் | Ap photo, DHAKA TRIBUNE

மைத்திரியை தெரிவுசெய்ததில் தமிழர்களுக்கு கணிசமான பங்கு இருக்கின்றது எனப் பலரும் எழுதி வருகின்றனர். அதிலும் போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் மிக உச்சத்தில் இருக்கின்றது. அவ்வாறு மைத்திரியை தெரிவு செய்ததில் கணிசமான பங்கைப் பெற்ற முல்லைத்தீவின் ரகசியம் என்ன?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தியை அண்மித்த பகுதி. அமைதியான அந்த சிறுநகரத்து இளைஞர்கள் சில பட்டாசுகளை வாங்கிக் கொழுத்திக் கொண்டிருக்கின்றனர். அதன் வெடிச்சத்தத்தை மீறி அங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் சந்தோசக் கோசம் கேட்டுக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் புலிகளின் கோட்டையாக இருந்த இந்த நகர இளைஞர்கள் நீண்ட இடைவெளியின் பின்னர் இப்படியொரு குதூகலத்தை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை இராணுவம் ஆக்கிரமித்திருந்த ஏதாவது ஒரு இடம் விடுதலைப் புலிகளால் மீட்கப்படுகையிலேயே இவ்வாறானவொரு குதூகலத்தை அந்த நகரத்து இளைஞர்கள் பகிர்ந்துகொள்வர். புலிகளற்ற ஐந்து வருட இடைவெளியில் இடமாற்றத்துடன் இளைஞர்களும் மாறியே போனார்கள் என்று பழையவர்கள் புறுபுறுத்துக் கொள்வர். ஆனால், அந்த இளைஞர்கள்தான் இன்று நகர வீதியில் வெற்றி பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

என்னடா விசேஷம் என்று நான் கேட்கவேயில்லை. அந்த இளைஞர் கூட்டத்துக்குள்ளிருந்து ஜனமேஜெயந் சொல்கிறான், “அண்ண மைத்திரி வெல்லவேணும் எண்டில்ல, மஹிந்த தோற்கோனும். எங்கள விரட்டினவன் தோற்கிறத பாக்கோணும் என்பதுதான் ஜெரா அண்ண காரணம். வேற ஒண்டுமில்ல. எங்களுக்கு மைத்திரியால ஒண்டும் கிடைக்கப் போறதில்ல. கோத்தாவின்ர டீஐடி எல்லாம் எடுக்கணும். இதுக்காகத்தான் நாங்கள் வாக்குப் போட்டம்” சந்தோச வெள்ளத்தில் தெளிவாக சொல்லிவிட்டு வெற்றிக் கொண்டாட்டங்களுக்குள் மூழ்கிக் கொள்கிறான் நகரின் துடிப்பானவன்.

அந்தக் கொண்டாட்டங்களை தூரத்தே இருந்து ஒருவர் அவதானித்துக் கொண்டிருக்கிறார். வேறு எங்கோ செல்வதற்குப் பேருந்துக்காகக் காத்திருப்பவராக இருக்க வேண்டும். உடை அரச உத்தியோகத்தர் என்பதைக் காட்டுகிறது, நடுத்தரவயதுக்காரர். ஆண். நெருங்குகின்றேன். “அப்ப நேற்று வாக்குப் போட்டதோ?”, “ஓம்” பதில் அழுத்தமாகக் கிடைத்தது. “இந்த வாக்களிப்பு பற்றி என்ன நினைக்கிறீங்கள்?”, “வட மாகாண சபைக்கு மக்கள் வாக்களித்ததுபோலத்தான் இந்த வாக்களிப்பும். மக்கள் மத்தியிலிருந்த மஹிந்த எதிர்ப்பின் வெளிப்பாடுதான். அதுக்காக மைத்திரி ஒண்டும் எங்கட ஆள் இல்ல. இப்ப இருக்கப் போற அரசும், மன்னராட்சி போலவே சர்வாதிகாரத் தன்மையுடன் இயங்கப்போகிறது. காரணம், இந்த அரசுக்கு எதிர்க்கட்சி இல்லை. இதிலும் தமிழ் மக்கள் மோசமான விளைவுகளை சந்திக்கப்போகின்றனர். தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக இருந்த கூட்டமைப்பும் கூட அரசில் இணையவுள்ளதால் அதிகம் பாதிக்கப்படப்போவது தமிழர்கள்தான். இதுவோரு குழாம்பாணி அரசாகவே 5 வருடத்தையும் கடத்தப்போகிறது – இப்படியொரு தெளிவுடன் கருத்தைச் சொன்னவர் சுமன். ஒட்டுச்சுட்டான் பக்கம் இருக்கின்ற அரச திணைக்களமொன்றில் பணியாற்றுகின்றார். அவர் சொல்லவந்த கருத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஒட்டுசுட்டான் பக்கம் போகும் பேரூந்தில் தொற்றிக் கொள்கிறார்.

இனி யாரைப் பிடிப்பம் என்று காத்திருக்கையில்தான், என் பாடசாலைக் கால நண்பன் தோளில் கைபோடுகிறான். தீபன், “முல்லைத்தீபன்” என்று பேஸ்புக்கில் எல்லாம் பிரபலம். கவிதைகள், கதைகள் எழுதிவருபவர். “என்னடா நம்ம ஏரியாதான் வாக்களிப்பில கூட போல” முதல் கேள்விக்கான பதிலையே, புதினமாக சொல்ல அவனும் வைத்திருந்திருக்கிறான்.

ஓம் மச்சான். சனம் போன அரசாங்கத்த பழிவாங்க சந்தர்ப்பம் பாத்திருந்த மாதிரிக் கிடக்கு. அதோட சனத்த நல்லா பேக்காட்டிப் போட்டாங்கள். அபிவிருத்தியப் பார், எல்லாம் போட்டுகளிலதான் கிடக்கு (பெயர்ப்பலகைகளை காட்டுகிறார்) மற்ற மாவட்டங்களோட முல்லைத்தீவ ஒப்பிடேக்க இங்க தான் குறைஞ்சளவு அபிவிருத்திகள் நடந்திருக்கு. கொக்கிளாய், வெலிஓயா பக்கம் வேற பிரச்சின. இப்பிடி முல்லைத்தீவு சனத்துக்கு திரும்புற பக்கமெல்லாம் பிரச்சினதான். போர்காலத்தில ஒரு பிரச்சினைதான். ஆனால், போருக்குப் பிறகு, தொடுறதெல்லாம் பிரச்சினை. எனவேதான் இப்பிடியொரு வாங்கு (வாங்கு என்றால் திருப்பியடித்தல் என்று பொருள்). அத்தோட இன்னொரு விசயமும் சொல்லவேணும். மாகாண சபை தேர்தல் அளவுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில இராணுவ கெடுபிடிகள் இந்த முறை இருக்கேல்ல. சனம் சுயாதீனமா வாக்களிச்சுது. கிடைச்ச சந்தர்ப்பத்த பயன்படுத்திக் கொண்டது”. “சரி அதைவிடு, எப்ப கலியாணம்?” டக்கென அரசியலிலிருந்து லௌகீகத்துக்குள் பாய்ந்தான் தீபன். நான் எஸ்கேப்.

பேருந்தில் யாரையாவது பிடிக்கலாம். ஏறிக்கொண்டேன். அவர் ஆசிரியை. பெயர் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், நல்ல கருத்தொன்றை சொன்னார்.

“ஆட்சிமாற்றம்தான் எங்களுக்கு உடனடியாகத் தேவைப்பட்டது. அத்துடன், இணைந்து குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கவே முடிவெடுத்தோம். எங்களுக்கு பிரபுக்கள் ஆட்சியோ, மன்னராட்சியோ வேண்டாம் என்பதை நிரூபித்திருக்கிறோம். சிறுபான்மையினத்தை மஹிந்த அரசு கையாண்ட விதம் தவறானது. கடந்தகால அரசியலில் இவர்கள் சொன்ன பயங்கரவாத அழிப்பு வேறுவிதங்களில்தான் நடைபெற்றது. மஹிந்த வந்தவுடன் எங்களை ஒரு கூண்டுக்குள் அடைத்து அழித்துவிட்டார். அதற்கான தீர்ப்பைக் காத்திருந்து வழங்கிவிட்டோம். அதற்குள் சர்வதேசம் தீர்ப்பு வழங்கும் என்றிருந்தோம். ஆனால், எங்கள் கையில் பூசப்பட்ட மையாலே அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது”.

“ஓம் டீச்சர், நீங்க சொல்றது சரி. இந்தமுறை முல்லைத்தீவு வாக்கு உரிமையை பயன்படுத்துவதில் அக்கறையாக இருந்தார்கள். நாட்டு மக்கள் விரும்பியதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொது அலையொன்றில் எல்லாரும் நாட்டம் கொண்டிருக்கிற மாதிரியும் தெரியுதென்ன”, இவ்வாறு இடைமறித்து மற்றைய ஆசிரியையின் கருத்துக்கு சப்போர்ட் பண்ணியவர் இன்னொரு ஆசிரியை. “ரீச்சர் உங்கட பேரை போட்டுக் கொள்ளலாமா? – இது நான். “ஏன் தம்பி நான் பென்சன் எடுக்கப் போறது உங்களுக்குப் பிடிக்கேல்லயோ? என்ன மாற்றம் நடந்தாலும் எங்கட தலைவிதி மாறப்போறதில்ல தம்பி”. அவர் சொல்வதில் உண்மையிருக்கிறதா இல்லையா என்பதை வாசிப்பவர்களின் தீர்ப்புக்கே விட்டுவிடலாம் என்று அந்தநொடியே யோசித்துவிட்டேன்.

விவசாயம் தான் சசிகரனின் தொழில். ஆனால், இப்போது கடை வைத்திருப்பதாகவும், உடையார்கட்டு செல்வதாகவும் அறிமுகமாகிக் கொள்கிறார். இந்தத் தேர்தலில் இவ்வளவு ஆர்வம் காட்டினதுக்கு என்ன காரணமா இருக்கும் என்று நினைக்கிறீங்க அண்ண கேட்கிறேன். “மக்கள் மாற்றத்தை விரும்புகின்றோம். போருக்குப் பின்னர் பூச்சியமாக்கப்பட்ட பொருளாதாரத்துடன் மீள்வாழ்வுக்கு திரும்யியவர்களில் முல்லை மக்களும் அடங்குவர். இதன்போது ஏதோ ஒரு உதவியை நாடி நிற்கவேண்டியது அவர்களது நிலைமையாகவிருந்தது.

வீடு, தொழில் எல்லாமே இன்னொருவரிடத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்டன. இதனை சாதகமாகப் பயன்படுத்திய அரச தரப்பு, எடுப்பார் கைப்பிள்ளைகளைப் போலவே மக்களைப் பயன்படுத்தியது. இவ்வாறான காரணங்களால் மக்கள் மனதில் எவரது வற்புறுத்தலுமின்றி அரசு மீதான வெறுப்பு தோற்றுவிக்கப்பட்டது.

இன்றும் வீடில்லை, தொழிலில்லை… என்று இல்லாமை மட்டும் மக்களிடம் மிஞ்சியிருக்க, அரசு மட்டும் ஆக்கிரமிப்பு, அரசியல் என்று கோலோச்சியது. இவ்வாறான மனதுக்கு விரும்பாத காரணங்களை மனதில் கொண்ட மக்கள் மாற்றம் கருதி வாக்களித்திருக்கின்றனர்.

அவர்களது ஆற்றாமை இப்போது விடையாக்கப்பட்டுள்ளது. எங்குமே பெரியளவு பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், மக்கள் வானொலி, பத்திரிகை மூலம் தம்மை அரசியலறிவாளிகளாக்கியுள்ளனர்”. – என்கிறார் அவர்.

எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டே நின்றான் இளைஞன் ஒருவன். அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவன் பல்கலைக்கழகமொன்றின் மாணவன். முல்லைத்தீவின் கிராமமொன்றிருந்து தெரிவாகியிருக்கிறான். வாக்களித்துவிட்டு பல்கலைக்கழகம் திரும்பிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இதுமாதிரியான தேர்தல்களில் தீர்வுவரும் என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் ஆர்வம்காட்டினான். “ஏன் தம்பி?”

சண்டை நடக்கும்போது சமாதானத்தை கேட்டதுபோல தமிழர்கள் இப்போது ஆட்சிமாற்றத்தைக் கேட்டிருக்கின்றனர். இது தமிழ் தேசியத்தின் நிரந்த அழிவாகவும் இருக்கலாம். அதேவேளை, கூட்டமைப்பு சொல்லித்தான் வாக்களிப்பு அதிகம் இடம்பெற்றது என்று சொல்ல முடியாது. கூட்டமைப்பு சொல்லாவிட்டாலும் தமிழ் மக்கள் மைத்திரிக்கே வாக்களித்திருப்பார்கள். கூட்டமைப்பு கேட்கவுள்ளதாக சொல்லப்படும் 3 அமைச்சுப் பதவிகளும் ஏற்கனவே ஏற்கப்பட்டுவிட்டது என்றே சொல்லத் தோன்றுகின்றது. தேர்தலுக்கான கூட்டமைப்பின் நாடகமாகவே இப்போதைய அறி்க்கைகள் தெரிகின்றன. ஆனாலும், நாங்கள் என்ன செய்யமுடியும்? எங்களின் கையில் எதுவுமில்லை. சொல்லிவிட்டு கண்ணாடிக்கு வெளியே பார்த்துக் கொள்கிறார். அவர் பார்க்க,

விசுவமடுவைத் தாண்டி பஸ் பறக்கிறது. போரின் காயங்களில் இருந்து மீளாத கட்டடங்கள், மரங்கள் மற்றும் மனிதர்கள் வேகமாகக் கடந்து போகின்றனர். இது முல்லைத்தீவின் ரகசியம்.

ஜெரா