படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். கூட்டமைப்பின் மேற்படி முடிவு சிலருக்கு ஆச்சர்யத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கோ ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் சில கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், சம்பந்தனின் மேற்படி முடிவு தொடர்பில் அதிருப்திகள் இருக்கின்றபோதிலும் கூட, அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அமைதி காக்கின்றனர். பதவியா அல்லது தமிழ் மக்களின் எதிர்காலமா என்று வரும்போது பலரதும் அதிருப்திகள், ஏமாற்றங்கள் மற்றும் ஆதங்கங்கள் அனைத்தும் பஞ்சாய் பறந்துவிட்டது. ஆனாலும், கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு சிலர் துனிந்து, சம்பந்தனின் முடிவை எதிர்த்து பேசி வருகின்றனர். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற பின்னணியில், தமிழரசு கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சிவகரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கூட்டமைப்பின் மேற்படி முடிவை வன்மையாக எதிர்த்து நிற்பதுடன் சம்பந்தனின் முடிவுக்கு எதிராக பகிரங்கமாக பேசியும் வருகின்றனர்.

இது பற்றி சிவகரன் ஜ.பி.சி. வானொலிக்கு வழங்கிய நேர்காணலில், கூட்டமைப்பின் மேற்படி முடிவானது, ஒரு வரலாற்றுத் துரோகம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது தொடர்பில் சிவகரன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகள் எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களில் எங்களது பிரச்சினைகள் உள்ளடக்கப்படவில்லை. இருவருமே சிங்கள ஏகாதிபத்திய கொள்கையை முன்னெடுத்து வருபவர்கள். எனவே, இந்த நிலையில் மேற்படி இரு வேட்பாளர்களுக்கும் நாங்கள் பகிரங்க ஆதரவை வழங்க முடியாதென்று கட்சியின் மத்திய குழுவில் வாதிட்டிருந்தோம். ஆனால், எங்களது கருத்துக்கள் கட்சியின் தலைமையால் மதிக்கப்படவில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே முடிவை எடுத்துவிட்டனர். இன்று ஒரு சிலரது தனிப்பட்ட முடிவுகள் எங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. மைத்திரிபாலவிற்கு மக்களை வாக்களிக்குமாறு கோருவதன் வாயிலாக நாங்கள் எங்களுடைய மக்களை மைத்திபாலவின் ஒற்றையாட்சி கோட்பாட்டிற்கு வாக்களிக்குமாறு கோருகிறோம். நேற்றுவரை நாங்கள் மஹிந்தவுடன் இருந்த இனவாதிகளை கருத்தில் கொண்டு சர்வகட்சிக் குழுவில் பங்குகொள்வதை எதிர்த்து வந்தோம். ஆனால், இன்று மிகமோசமான இனவாதிகளுடன் கூட்டு வைத்திருக்கும் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதன் மூலம் கூட்டமைப்பின் தலைமை எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத் தரப்போகிறது. அவ்வாறாயின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன 146,692 பேரின் இழப்பிற்கு நாங்கள் கூறக்கூடிய பதில் என்ன? எல்லாவற்றுககும் மேலாக எத்தகை உத்தரவாதத்தின் அடிப்படையில் தற்போது பகிரங்க ஆதரவு தெரிவிக்கப்படுகிறது? இதற்கெல்லாம் கூட்டமைப்பின் தலைமையிடம் பதிலில்லை. இவ்வாறு தமிழரசு கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் குறித்த நேர்காணலில் தெரிவித்திருக்கின்றார்.

இதேபோன்று, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்று பி.பி.சி. தமிழோசையிடம் தெரிவித்திருக்கின்றார். அவர் இது தொடர்பில் குறிப்பிடும் போது இந்தத் தேர்தலில் வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்றும், ஏனெனில், வடக்கு மாகாண சபை தேர்தலின் போது தாயகம், தேசியம் என்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே தான் போட்டியிட்டதாகவும், அதற்காகவே மக்கள் தன்னை தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த அடிப்படையில் மேற்படி தமிழ் மக்களின் நிலைப்பாட்டிற்கு முரணான கொள்கை கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது? மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றார் அனந்தி.

மேற்படி இருவருமே கூட்டமைப்பிற்குள்ளிருந்து சம்பந்தனின் முடிவை எதிர்த்திருக்கின்றனர். ஆனால், கூட்டமைப்பின் சார்பில் இயங்கும் பலருக்கும் மைத்திரிபாலவை பகிரங்கமாக ஆதரித்தமை தொடர்பில் உடன்பாடில்லை. அவர்களில் பலர் தனிப்பட்ட ரீதியில் பேசும் போது தங்களின் அதிருப்திகளை தெரிவிக்கின்றனர். முக்கியமாக மைத்திரிபாலவை ஆதரித்து சம்பந்தன் பகிரங்கமாக அறிக்கை விட்டதை ஏற்றுக்கொள்பவர்கள் கூட மைத்திரிபாலவிற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாமல் அங்கலாய்க்கின்றனர். ஒரு உபாயமாக தெற்கின் தலைவர்களுடன் பணியாற்றுவது என்பது வேறு, அவர்களை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது என்பது வேறு என்பதே அவ்வாறானவர்களது நிலைப்பாடாக இருக்கிறது. மேலும், தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பெரியளவில் அக்கறையற்ற சூழலே காணப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வரை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் எதிர்த்து வந்த ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டு வைத்திருக்கும் மைத்திரிபாலவிற்காக எவ்வாறு நாங்கள் மக்களிடம் வாக்கு கேட்க முடியும்? இது சரியானதுதானா? மக்கள் காறியுமிழ மாட்டார்களா? இது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பலருக்கும் ஒரு குற்றவுணர்வு சார்ந்த பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.

இரா. சம்பந்தனது அறிக்கை வருவதற்கு முன்னர் பலரிடமும் ஒரு எதிர்பார்ப்பிருந்தது. அதாவது, 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய சரத்பொன்சேகாவிற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்ததைப் போன்று இம்முறை மைத்திரிபாலவிற்கு பகிரங்க ஆதரவை சம்பந்தன் வழங்க மாட்டார். நீண்டகால நோக்கில் நன்மைதரத் தக்கதொரு முடிவையே சம்பந்தன் எடுக்கக் கூடும். பெரும்பாலும் அந்த முடிவு தேர்தலின்போது அமைதி காப்பதாகவே இருக்கலாம். இப்படியெல்லாம் பலரும் எதிர்பார்த்திருந்தனர். தங்களுக்குள் எண்ணிக்கொண்டனர். ஆனால், 2010இல் மேற்கொண்ட முடிவின் விளைவுகள் குறித்து எந்தவொரு பரிசீலனையும் இன்றியே தற்போதும் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. துரதிஷ்டவசமாக பாடசாலையில் ஆசிரியர்கள் சொல்வதெல்லாம் சரியென்று எண்ணும் மாணவர்கள் போன்றே கூட்டமைப்பில் அல்லது அதற்குள் இடம்பெறும் கட்சிகளில் அங்கத்துவம் வகிப்போரும் இருக்கின்றனர். தங்களது தலைமை மேற்கொள்ளும் முடிவு தொடர்பில் எந்தவொரு கேள்வியையும் அவர்கள் எழுப்புவதில்லை. தங்களுக்கு வாக்களித்து, தங்களை மற்றவர்கள் மதிக்கும் நிலையை பரிசளித்த, மக்கள் குறித்து ஒரு இம்மியளவுகூட அவர்கள் சிந்திக்கும் நிலையிலில்லை. ஒரு அரசியல் முடிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பாமர மக்களால் அறிந்துகொள்ள முடியாது. அவர்களின் அறிவு மட்டம் அவ்வளவே. ஆனால், அவர்களுக்கு நல்வழியை காண்பிக்க வேண்டியது அவர்களது பிரதிநிதிகளையே சாரும். ஆனால், இங்கு மக்களது பிரதிநிதிகளே தெளிவற்றவர்களாக இருக்கும் போது வாக்களித்தவர்களின நிலைமை என்னவாகும்? வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலைமை அப்படியான ஒன்றாகவே இருக்கிறது.

2009இல் முப்பது வருடங்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் தியாகத்தால் பெருவிருட்சமாக நிமிர்ந்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முள்ளிவாய்க்காலில் மூச்சையிழந்துபோனது. இதன்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் யுத்தம் நடந்த பகுதியில் இருந்தனர் என்னும் ஒரேயொரு காரணத்தினாலேயே மாண்டுபோயினர். இறுதி யுத்தத்தை களத்தில் நின்று வழிநடத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அதுவரை தனது நண்பராகவிருந்த பாதுகாப்பு செயலர் கோட்டாபயவுடன் ஏற்பட்ட அதிகார முரண்பாடுகளைத் தொடர்ந்து ராஜபக்‌ஷவின் பரம வைரியானார். அவர் ராஜபக்‌ஷவுடன் முரண்பட்டதும் அதுவரை போர் குற்றவாளியாக இருந்த சரத் பொன்சேகா திடீரென்று தமிழர்கள் மத்தியில் நல்லவராக காட்டப்பட்டார். அவருக்கு வாக்களிக்குமாறு கூட்டமைப்பு தமிழ் மக்களை கோரியது. அது எப்படி பொன்சேகாவிற்கு வாக்களிக்கலாம்? கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் எவரும் அப்படி கேட்கவில்லை. தமிழ் மக்களும் சிந்திக்கவில்லை. எந்தவொரு குற்றவுணர்வும் இல்லாமல் தமிழ் மக்களில் பலர் வாக்குச் சாவடிக்கு சென்றனர். இப்போது மீண்டும் ராஜபக்‌ஷவின் நெருங்கிய நண்பரும், அவரது ஆட்சியில் இறுதிவரை அவருக்கு பக்கபலமாக இருந்தவருமான மைத்திரிபால ஒரு இரவில் திடீரென்று நல்லவராகி மாறிவிட்டார். கூடவே கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலரின் நண்பராகவும் மாறிவிட்டார். உலகிலேயே ஓரிரவில் நல்லவராகும் அதிசயங்கள் அனைத்தும் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமே நிகழ முடியும்.

இப்போது அந்த நல்லவருக்கு வாக்களிக்குமாறு கூட்டமைப்பு தமிழ் மக்களை கோருகிறது. ஆனால், இப்போதும் முன்னரைப் போன்று கேள்விகள் எதுவும் இல்லை. வழமைபோலமே தமிழ் மக்களின் குற்றவுணர்வும் மனச்சாட்சியும் ஏலமிடப்படுகின்றன. மீண்டும் தமிழ் மக்கள் வாக்களிக்கப் போகின்றனரா? ஒரு தலைவர் என்னிடம் சொன்னார், மைத்திரிபால மனச்சாட்சிக்கு முன்னுரிமையளிக்கும் ஒருவர். அவர் ராஜபக்‌ஷ போன்றில்லை. சந்திரிக்கா குமாரதுங்கவும் மனச்சாட்சியை சுமந்தவாறுதான் 1994இல் ஜனாதிபதியானார். தமிழ் மக்கள் அதீத நம்பிக்கையுடன் அவருக்கு வாக்களித்தனர். இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் பெற்றிராத விகிதாசாரத்தில் அவர் வெற்றியீட்டினார். விடுதலை புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கூட அவரை சமாதானப் புறா என்று சொல்லுமளவிற்கு, சந்திரிக்கா அனைவராலும் கவனிக்கப்பட்டார். ஆனால், இறுதியில் என்ன நிகழ்ந்தது என்பதை மக்கள் அறிவர். செம்மணி புதை குழயிலிருந்து எலுப்புக் கூடுகள் மீட்கப்பட்ட போது சந்திரிக்காவின் சார்பில் பேசவல்லவர்கள், அவை எலிகளின் எலும்புக் கூடு என்று வாதிட்டனர். அந்த எலுப்புக் கூடுகளில் உள்ளாடைகள் ஒட்டியிருந்தன. எலிகள் கூட இலங்கையில் ஜட்டி போடுகின்றனவா என என்னுமளவிற்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் எள்ளிநகையாடப்பட்டன. ராஜபக்‌ஷவும் 2005இல் வெற்றீயீட்டிய போது மனச்சாட்சிக்கு பெரிதும் மதிப்பளிக்கும் ஒருவராகத்தான் இருந்தார். மற்றவர்களை விடவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் உலகளாவிய ரீதியில் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பராகவும் இருந்தார். ஆனால், அதிகாரத்திற்கு வந்ததும் அவர் முகம் மாறியது. ஏனெனில், அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் நல்லவராக இருக்கலாம், அவர்களிடம் நல்ல பல திட்டங்களும் இருக்கலாம். ஆனால், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள கட்டமைப்பானது, அவர்களை ஒரு எல்லைக்கு மேல் அனுமதிக்கப் போவதில்லை. இந்த இடத்தில்தான் தமிழர்கள் உலகளாவிய ஆதரவை தேட வேண்டியேற்பட்டது. அதன் விளைவாக இன்று உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முன்னர் எப்போதும் இல்லாதளவிற்கு உற்று நோக்கப்படுகின்றது. இப்படியொரு சூழலில் மீண்டும் மைத்திரிபால என்னும் ஒருவரை நோக்கி விரல்நீட்டி, அவரொரு நல்லவர், மனசாட்சியுள்ளவர் என்றெல்லாம் கூறுவது தமிழ் மக்களை கோவில் மாடுகளாக எண்ணுவதன் வெளிப்பாடன்றி வேறென்ன? எனவே, இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிக்கப் போகின்றனர்? தமிழ் மக்கள் வாக்களிக்கலாமா?

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.