படம் | Colombogazette

வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். இத்தேர்தல் பிரகடனத்துடன் நாம் எதிர்பாராதவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் சீட்டுக் கட்டு வீடு போல பொலபொலவெனச் சரிய ஆரம்பித்திருக்கின்றது.

முன்பெல்லாம் இந்த அரசு ஒவ்வொரு விடயத்தையும் கையாளும் விதத்தை விந்தையுடன் பார்த்திருக்கின்றோம். ஒரு பிரதேச சபைத் தேர்தலேனும் தோற்பதை அது ஏற்க மாட்டாது. எங்காவதொரு மூலையில் அதற்கு எதிரான சிறிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் என்றாலும்கூட அதனை ஆயுதப்படைகள் கொண்டு மூர்க்கத்தனமாக அடக்கப் பார்க்கும்; கையாளப்படும் பிரச்சினையை விடவும் அதீதமான நடவடிக்கை எடுக்கும். அதன் நடத்தையின் உளவியலை இப்பொழுதுதான் முழுமையாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சர்வாதிகாரம் பொருந்திய ஒரு அரசில், அதிலும் ஒரு தனிக்குடும்பம் ஆட்சி செய்யும் அரசில் இணைந்திருப்பவர்கள், வெற்றியின் அடிப்படையிலே மட்டுமே அந்த இடத்தில் இருக்கிறார்கள். இந்தக் கட்சிதான் வெல்லும், வேறு வழியில்லை என்றால் மட்டுமே வாலைப் பிடிப்பார்கள். இதில் எங்காவது தோல்வியின் மணம் வந்தால் போதும், தாழும் கப்பலை கடகடவென விட்டோடும் மாலுமிகளாவார்கள். இதனால்தான் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு இதுவரை ஒரு நிலையிலும் சிறிய தோல்வியையேனும் அனுமதிக்க முடியவில்லை. ஆனால், அவருக்கு பெரும் சவாலாக வந்தது ஊவா மாகாணசபைத் தேர்தல்; அது தோல்வியின் மணத்தைக் கிளப்பி விட்டது.

இன்று ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசிலிருந்து வெளியியேறிவிட்டது. வாக்காளர் தளத்தை நோக்கினால், அது மிகச் சிறியதொரு கட்சிதான். ஆனால், இந்த அரசின் அதே பௌத்த சிங்கள கருத்தியல் தளத்தில் இயங்கிய கட்சி அது. 2013ஆம் ஆண்டு நடந்த மேல் மாகாண சபைத் தேர்தலிலும்கூட அதன் உறுப்பினர் உதய கம்மன்பில கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் ஒரே மேடையில் தோன்றித்தான் தனது தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்து வைத்தார். இந்த ஒரு காரணியின் நிமித்தம் இவர்களுடைய வெளியேற்றம் அரசிற்குக் காத்திரமான அடியாக இருக்கும். மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மீரிகம தொகுதியின் ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சேனாநாயக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார். இந்த வெளியேற்றங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் நவம்பர் 21ஆம் திகதி இன்னுமொரு குறிப்பிடத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன வெளியேறியிருக்கின்றார். வெளியேறிய கையுடனேயே அவரே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் என்கின்ற அறிவிப்பினை ரணில் விக்கிரமசிங்க உட்பட எதிர்க்கட்சிகள் வெளியிட்டிருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் பாருங்கள் நடக்கப் போவதை என சூசகமாக அதுரலிய ரதன தேரர் அன்று தனது பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். அது இன்று நிரூபணமாயிருக்கின்றது. எதிர்க்கட்சிகளில் வெளியேற்றங்கள், உட்கட்சிப்பூசல்கள் நிகழ்வது சகஜம், சகலரையும் இணைத்துக் கட்ட அங்கு அதிகார இனிப்புக்கள் இல்லையல்லவா? ஆனால், அதுவே ஆளுங்கட்சியில் நிகழ்கின்றதாயின் அது அவதானிக்க வேண்டியதொன்றாகின்றது. திடீரென மஹிந்த ராஜபக்‌ஷவின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமானதாகத் தெரியவில்லை.

இப்பொழுது எல்லோரின் கண்களும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன மீது மொய்க்க ஆரம்பித்திருக்கின்றன. இவர் மஹிந்த ராஜபக்‌ஷவினை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லக் கூடியவராகவும் இருக்க வேண்டும். தான் வென்று அதிகாரத்திற்கு வந்தவுடனேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றத் தயாரானவராகவும் இருக்க வேண்டும். முடியுமா? கடந்த பல மாதங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் ஒரு தனி விடயப் பிரச்சினையைக் கொண்டு எதிர்க்கட்சிகள் தமது பிரசாரத்தைத் தொடரும் உபாயத்தைக் கையெடுத்திருக்கின்றன. இந்த மூலோபாயத்தில் நிறைய ஓட்டைகள் காணப்படுகின்றன. எங்களது நாட்டில் நிலவும் பிரச்சினைகள் நிறைவேற்று ஜனாதிபதி முறையினால் மட்டுமா ஏற்பட்டது? தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டதற்கு பல வருடங்களுக்கு முன்னரேயே ஏற்பட்டு விட்டது. குடும்பங்களின் செல்வாக்குடன் கட்சிகள் இயங்கும் பாரம்பரியம் எப்பொழுதோ ஏற்பட்டு விட்டது. அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் யாருக்கு வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்? 1948ஆம் ஆண்டு தொடங்கியே ஜனநாயக விரோதமான சட்டங்களை இயற்றுவதையே எமது நாடாளுமன்றம் வழக்காகக் கொண்டுவிட்டது. அது தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்ததை மட்டும் சொல்லவில்லை. இன்னும் பட்டியலிட்டுக் காட்டக்கூடிய பல சட்டங்கள் உண்டு. எங்களது நீதித்துறை தனது நடுநிலையை இழந்து ஐந்து தசாப்தங்களாகின்றன. 1960களில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சொல்லப்பட்ட முறைகள் இதனைப் பறைசாற்றும். பொதுச்சேவை எப்போதோ 1960களிலேயே அரசியல் மயப்படுத்தப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகள் வன்முறையில் ஈடுபடுவதும் அப்போதே ஆரம்பித்து விட்டது. உண்மையில், சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு எமது நாட்டில் ஜனநாயகப் பாரம்பரியங்கள் மெல்ல மெல்ல அருகி வந்ததன் அடையாளச் சின்னமே 1978ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாகும். அந்தச் சட்டத்தில் ஒரு சிறிய உதாரணம், அதன் உறுப்புரை 12 தொடங்கி அடிப்படை உரிமைகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே கையோடு, உறுப்புரை 16இல் முன்னைய சட்டங்கள் எதுவும் இந்த அடிப்படை உரிமைகள் சட்டத்திற்கு முரணாக இருப்பின் அவையே செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்படி அடிப்படை உரிமைகள் இருந்தும் இல்லாத நாடாக எங்கள் எல்லோருக்கும் முட்டாள் பட்டம் கட்டிய சட்டமல்லவா அது? இப்படி பிரச்சினை ஆழத்தில் வேரோடியிருக்க மேலோட்டமாகத் தனியே ஜனாதிபதி முறைமையை மாற்றினால் போதுமா? அதே பிரச்சினைகள் பிரதமர் வாயிலாகத் தொடரப் போகின்றன.

ஜனாதிபதி முறைமையைக்கூட இப்படி மாற்ற முடியாது என நான் கூறுவேன். யாராவது கோடிக்கணக்கில் செலவழித்து இந்த நாட்டின் உச்ச அதிகாரத்தைக் கொண்டுள்ள அதியுயர் பதவியைக் கைப்பற்றிய பின்னர் அதனை விட்டுக்கொடுக்க முன்வருவார்களா? எல்லாக் கட்சிகளும் சேர்ந்து குறிப்பிட்ட வேட்பாளரின் முழு தேர்தல் செலவுகளையும் பொறுப்பெடுத்தால் இந்தப் பிரச்சினையை அவரைத் தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து பிரச்சினையை ஓரளவு தீர்க்கலாம். ஆனால், இன்னொருவர் ஜனாதிபதியாக வருவதற்கு மற்றவர்கள் நிதிகளை வழங்குவார்களா? ஜனாதிபதி முறைமையை மாற்றும் ஜனாதிபதி தோன்ற முடியுமா என்கின்ற கேள்விக்குப் பதிலாக இன்னுமொரு உதாரணத்தினைக் காட்டலாம். ஆறு மாதங்களில் ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று வாக்குறுதியளித்தே 1994ஆம் ஆண்டு சந்திரிகா பதவிக்கு வந்தார். ஜனாதிபதி முறைமையை அகற்றாதது மட்டுமல்ல இரண்டாம் முறையும் போட்டியிட்டு வென்றார். அதெல்லாம் சரி, ஆனால், தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடையும்பொழுது இனித் தான் ஜனாதிபதியாக வரமுடியாது என்பது தெளிவாகி விட்டது. தனக்கு அடுத்ததாக இந்தப் பதவியை எடுப்பதற்கு தனது குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரும் இல்லை. அடுத்து இப்பதவிக்குப் போட்டியிடுவதற்கு தனது கட்சியிலிருந்து தெரிவானவரோ தனக்குப் பிடிக்காத ஒரு கட்சி அங்கத்தவர். இவ்வகையில் ஜனாதிபதி முறைமையை இன்னமும் தக்க வைத்துக்கொள்ள ஒரு நலனோ காரணமோ அவருக்கு இருக்கவில்லை. அந்த நிலையிலாவது தான் முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றவேனும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற முயற்சி செய்தாரா? ஏன் அவர் அன்று செய்யவில்லை என்பதைக் கேட்டு ஆராய்ந்து பார்த்தால் இதிலுள்ள சிக்கல்கள் புரிய ஆரம்பிக்கும்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தினை முன்னெடுத்த முறையிலேயே எமது ஜனநாயகம் அதல பாதாளத்தைத் தொட்டு விட்டது. அதற்குப் பின்னரோ பாதாளத்தையும் தோண்ட ஆரம்பித்து விட்டது. இனியும் முகப்பூச்சுக்களில் பலனில்லை. ஒட்டு மொத்தமாக இந்த அரசியலமைப்புச் சட்டத்தினை நாம் மாற்றியேயாக வேண்டும். அந்த மாற்றத்தினைக் கொண்டு வரும் போராட்ட முறைவழி மூலமே எங்கள் மக்கள் மத்தியில் ஜனநாயகம் பற்றிய புதிய கண்ணோட்டங்களை உருவாக்கலாம். புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்கும் நடவடிக்கை ஜனநாயகப் பாரம்பரியங்களை, விழுமியங்களை, நடத்தை முறைகளைக் கொண்டு வரும் ஒரு மக்கள் இயக்கமாக உருமாற வேண்டும். ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்கள் குழுமங்கள் தமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளெடுக்கப்படவேண்டிய அம்சங்கள் யாவை என விவாதிக்கும் தளங்கள் உருவாக்கப்படவேண்டும். இந்தக் கருத்துக்கள் தேசிய அளவில் ஒன்றோடொன்று பொருதி சமநிலை காண வைக்கும் பொதுத் தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். எமது அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கத்தில் என்னுடைய கையும் இருக்கின்றது என ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் பெருமைப்படுகின்ற அளவுக்கு அது செயற்படுத்தப்பட்டால் மட்டுமே நாங்கள் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும். இல்லாவிடில் இப்படியே சிங்களம் – தமிழ் – முஸ்லிம், இந்தக் கட்சி அந்தக் கட்சி என அடிபட்டுக் கிடக்க வேண்டியதுதான்.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.