படம் | Eranga Jayawardena/AP, Theguardian

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசும் சிங்கள கட்சிகளும் சிங்கள பௌத்த தேசியவாதம் பேசுகின்றனர் என்பது வெளிப்படை. அவ்வாறே தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய இனவாதம் பேசி வாக்குகளை பெறுகின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதே நிலையில் தான் உள்ளன. ஆனால், சிங்கள கட்சிகளை பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் பேசி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்ததும் குறைந்தபட்சம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றனர். ஏனெனில், அரசு அவர்களுடையது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அரசுடன் இணைந்து இருப்பதால் முஸ்லிம் பிரேதேசங்களை குறைந்தபட்சமேனும் அபிவிருத்தி செய்ய முடிகின்றது. முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு அரச நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுக்க முடிகின்றது.

சுயமரியாதை அரசியல்

ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எதிர்ப்பு அரசியல் ஈடுபடுகின்றமையினால் வாக்கறுதிகளை நிறைவேற்றவோ வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவோ முடியாது. முஸ்லிம், மலையக அரசியல் கட்சிகளை போன்று அரசுடன் பேரம் பேசக்கூடிய கட்சி அரசியல் செயற்பாட்டு முறைகளை இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அதன் பின்னர் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் செய்யவில்லை. வடக்கு – கிழக்கு மக்களின் சுயமரியாதையை காப்பாற்றக் கூடிய அரசியல் தீர்வை நோக்கி செயற்பட்டமையினால் அவ்வாறான பேரம் பேசும் அரசியல் அல்லது இணக்க அரசியலில் அவர்களால் ஈடுபட முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியின் பின்னரான அரசியல் சூழலில் அந்த சுயமரியாதையை காப்பாற்றக் கூடிய அரசியல் செயன்முறைகளை நான்கு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக பொறுப்பேற்க வேண்டிய கட்டாயச் சூழல் எற்பட்டது. அழிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் வடக்கு – கிழக்கு மக்களின் இறைமை அதிகாரம் என்ற சுயமரியாதையை உறுதிப்படுத்தக் கூடிய தீர்வு ஒன்றை நோக்கி ஜனநாயக முறையில் பயணிக்க வேண்டிய பொறுப்பை ஏற்ற பின்னரும் உசுப்பேத்துகின்ற பேச்சுகளை தொடர்ந்தும் வெளியிடுவதுதான் இங்கு வேடிக்கையாகின்றது.

மக்களுக்கு நன்கு தெரியும்

வெற்றி பெறுவதற்காக மட்டும் விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதும், பின்னர் அரசை சமாளிக்கின்ற நடைமுறைகளை கையாள்வதும் ஏமாற்று அரசியல் என்பதை இவர்கள் அறியாதவர்கள் அல்ல. எதிர்ப்பு அரசியல் செயற்பாட்டில் கொள்கை ரீதியான விளக்கங்களை மாத்திரமே மக்களுக்கு முன்வைக்க முடியும். ஆனாலும், வடக்கு – கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வுதான் பொருத்தமானது என மக்களுக்கு நன்றாகத் தெரியும். மக்கள் அந்த கொள்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதனால்தான் ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அவர்கள் வாக்களிக்கின்றனர். ஆகவே, உணர்ச்சிகளை கிளப்புகின்ற பொய்யான கதைகள் கூறுவதை கூட்டமைப்பு தவிர்க்க வேண்டும்.

எதிர்ப்பு அரசியலில் இருந்து கொண்டு அறிவுசார்ந்த கொள்கை ரீதியான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மாத்திரமே மக்களின் ஆதரவை பெற முடியும். விடுதலை வேண்டி நிற்கின்ற தேசிய இனம் ஒன்றின் பிரதிநிதிகள் இனவாத பேச்சுகளை தொடர்வது அந்த இனத்தின் நேர்மையான அரசியல் தீர்வுக்கான வழியாக அமையாது. “அடக்குமுறை அரசு ஒன்றிடம் இருந்து அடக்கப்படுகின்ற மக்களின் இறைமையை உறுதிப்படுத்த அரசியல் உணர்ச்சிகளை தூண்டும் கருத்துக்களை தவிர்க்க வேண்டும்” என சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் தந்தை ரூசோ கூறுகின்றார். தமது அரசியல் உரிமைகள் தொடர்பான அறிவுபூர்மான கருத்துக்களை மாத்திரமே மக்களுக்கு கூற வேண்டும். இதுதான் விடுதலை வேண்டி நிற்கின்ற தேசிய இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய கடமை. மாறாக உசுப்பேத்தும் கருத்துக்கள் மக்கள் இறைமையை சிதைத்து விடும்.

இரட்டைவேடம் கூடாது

ஆகவே, வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் உரிமைகள் தொடர்பான அறிவுபூர்வமான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டியது கூட்டமைப்பின் பிரதான பொறுப்பு. கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து உரையாடும்போது பிரபாகரன் மாவீரன் என்றும் – போராளிகள் தியாகிகள் என்றும் – பேசிவிட்டு பின்னர் ஆயுதம் ஏந்திய இயக்கங்களை கொச்சைப்படுத்தி, ஆயுதப் போராட்டத்தையும் மலினப்படுத்தி மிதவாத தலைவர்கள் என்ற போர்வையில் 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேவையில்லை. அதற்கு அரசின் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் சில தமிழ் உறுப்பினர் போதும் என மக்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். வட மாகாண பிரதம செயலாளர் முதலமைச்சரின் சில அதிகாரங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பை சமரசமாக கொண்டு வந்தமைக்கு கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு.

அரசியல் யாப்பு ரீதியாகவும் சட்டத்திற்கு ஏற்பவும் அரசை காப்பாற்றும் பல வேலைத் திட்டங்களில் பச்சையாக தமிழ்த் தேசியம் பேசும் சில உறுப்பினர்கள் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வேறு சில உறுப்பினர்கள் முன்வைக்கின்றனர். மக்களிடம் விடுதலைப் புலிகளை பற்றி பெருமையாக பேசுவது அமைச்சர்களை அல்லது ஜனாதிபதியை சந்திக்கும்போது அரசியல் அமைப்புக்கு அமைவாக பேசி சமாளிப்பது போன்ற இரட்டைவேட அரசியல் தமிழ் மக்களிடம் தொடர்ச்சியாக இருக்கும் உறுதியான கொள்கையை காட்டிக் கொடுப்பதாக அமைந்து விட்டது என்றும், இது சரணாகதி அரசியலையும் விட மிகவும் மோசமான அடிமை விசுவாசமாக மாறிவிடும் எனவும் அரசியல் விமர்சகர் ஒருவர் கூறினார்.

வேலைத் திட்டங்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்ய வேண்டிய மூன்று வேலைத்திட்டங்கள் உண்டு. ஒன்று, வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள உள்ளூராட்சி சபைகள் மற்றும் வட மாகாண சபையின் ஆட்சி, கிழக்கு மாகாண சபையின் 14 உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு அரசின் நிதியை எதிர்ப்பார்க்காமல் அங்கு இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி குறைந்தபட்ச அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது, அதற்கான நிதிகளை கையாளும் குழு ஒன்றை அமைப்பது. இண்டாவது, உணர்ச்சிவசப்படாமல் தமிழ்த் தேசியம் பற்றிய அறிவுபூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது. மூன்றாவது, வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்து பேசுவதற்குரிய கொள்கை முன்னெடுப்புகள். அதாவது, சுய ஆட்சி உள்ள மாநில அரசு ஒன்றுக்குரிய அரசியல் பொருளாதார கொள்கைகளை அறிவுசார்ந்து வகுப்பது.

இதன் மூலமே தமிழ்த் தேசியம் என்ற எண்ணக் கருத்தை உயிர்ப்பிக்க முடியும். வெறுமனே மேடைகளிலும், மாகாண சபைகளிலும், நாடாளுமன்றத்திலும் வாய்கிழிய பேசுவதாலும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதாலும் எதையும் சாதிக்க முடியாது. ஆகவே, பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாத்திரமல்ல தமிழ் ஊடகங்களுக்கும் உண்டு.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.