படம் | creces

இரண்டாம் உலகப் போரின்போது, 1945 ஆகஸ்ட் 6ஆம் திகதி ஜப்பான், ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்திய நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் – இன்றைய தினம் இந்தத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, இனிமேலும் அணுகுண்டுத் தாக்குதல் உலகின் எப்பகுதியிலும் நடத்தப்படக்கூடாது என எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது.

ஹிரோஷிமா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 2 நாட்களின் பின்னர் ஆகஸ்ட் 9ஆம் திகதி நாகஷாகி மீதும் அமெரிக்காவால் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்போது படுகாயமடைந்த சுமிதேரு தனிகுச்சி என்பவர் இதுவரை சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது உலகம் பூராகவும் சென்று அணுவாயுதத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்துவருகிறார். அணுகுண்டுத் தாக்குதலால் தான் அனுபவித்த கஷ்டங்களையும் சொல்லிவருகிறார்.

தனிகுச்சியின் அனுபவமே இங்கு தரப்பட்டுள்ளது.

###

சுமிதேரு தனிகுச்சிக்கு அப்போது 16 வயதுதான் இருக்கும். அவருடைய சகோதரி மற்றும் சகோதரன் பாடசாலை செல்வதை நிறுத்திக்கொண்டனர். அத்தோடு வீட்டிலிருந்து வெளியேறவும் செய்தனர். அந்த சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்கவேண்டிய நிலை தனிகுச்சிக்கு.

தனிகுச்சி தான் வசிக்கும் நிஷியுரா பகுதியில் உள்ள தபாலகம் ஒன்றில் தபால் விநியோகிக்கும் வேலைக்குச் சேர்ந்தார். தினமும் கடிதங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே அவரது பிரதான வேலையாக இருந்தது. அபூர்வமாகத்தான் மக்களுக்கு தந்திகள் விநியோகிக்ககூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

ஜப்பானின் ஹிரோஷிமா பகுதி மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 2 தினங்களுக்குப் பிறகு அதாவது, 1945 ஆகஸ்ட் 8ஆம் திகதி நாகஷாகியில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அன்றைய தினம் விமானம் மூலம் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களில் “நாகஷாகி இன்னும் சில தினங்களில் தூசாகப் போகிறது” என எழுதப்பட்டிருந்தது. மக்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். பொலிஸார், “இது எதிரியின் பரப்புரை. மக்கள் இதை நம்பவேண்டாம்” என அலட்சியப்படுத்தினர். இந்த நம்பிக்கையில் நாகஷாகி மக்கள் என்றும் போன்று இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

ஆகஸ்ட் 8ஆம் திகதி இரவு தபாலகத்துக்கு வருமாறு தனிகுச்சி மற்றும் ஏனைய தபால் விநியோகஸ்தர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அடுத்த நாள் 9ஆம் திகதி, விநியோகம் குறித்து கலந்துரையாடப்பட்டு அன்றைய இரவு அங்கேயே அனைவரும் தங்கினர். மறுநாள் பகல் வேளையே தனிகுச்சிக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவையடுத்து காலை 9 மணிக்கு தனது சைக்கிளின் மூலம் கடிதம் விநியோகிக்க தனிகுச்சி தபாலகத்திலிருந்து புறப்பட்டார்.

10 மணியளவில் தனிகுச்சி சைக்கிளின் மிதிக்கட்டையை வேகமாக அழுத்திக்கொண்டிருந்தபோது விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் விடப்படுவதை கேட்டார். அவர் அவ்வேளை கிராமப்புறத்தில் இருந்ததால் அந்த எச்சரிக்கையை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவ்வேளை அவரது சைக்கிள் டயரில் காற்று இறங்கியது. சைக்கிளை ஒரு ஓரமாக வைத்துவிட்டு நடை பயணமாக சில வீடுகளுக்கு கடிதங்களை விநியோகித்தார். பின் சைக்கிளை திருத்திக்கொண்ட தனிகுச்சி தபாலகம் நோக்கி புறப்படத்துவங்கினார். இப்போது தனிகுச்சிக்கு விமானத் தாக்குதல் எச்சரிக்கை தெளிவாக கேட்கத் தொடங்கியது.

தனிகுச்சியால் விமான சத்தத்தை நன்கு கேட்க முடிந்தது. விமானத் தாக்குதல் எச்சரிக்கையும் முடிவுற்றிருந்த வேளை அது. வான் மேகங்களை கிழித்துக்கொண்டு ‘பெட் மேன்’ (Fat Man) என்ற அணுக்குண்டை சுமந்தவாறு அமெரிக்க விமானம் நாகஷாகி நகரினுள் நுழைந்திருந்தது. தனிகுச்சி தனது சைக்கிளில் இருந்தவாறே பின்பக்கம் திரும்பிப் பார்க்க முயற்சித்தார். வானவில்லைப் போன்ற ஒன்றையே அவரால் காணமுடிந்துள்ளது. உலகப் போர் வரலாற்றில் இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. அந்த வெடிப்பினால் பல மில்லியன் டிகிரி வெப்பநிலை வெளியேறியது.

“அவ்வேளை நான் தூக்கியெறியப்பட்டேன். நான் தூக்கி எறியப்பட்ட தரைமட்டமான நிலப்பகுதி சிறிது நேரம் பூகம்பம் ஏற்பட்டது போல் அதிர்ந்துகொண்டே இருந்தது. நான் பறந்துவிடக்கூடாது என்பதற்காக ஏதோ ஒன்றை இறுகப் பிடித்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்திற்கு முன் நான் கடந்து வந்த வீடு தரைமட்டமாகியிருந்தது. கடைசியாக கடிதம் விநியோகித்த வீடு மட்டும் அப்படியே இருந்தது.

“நான் எழுந்து பார்த்தபோது, அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் உடல் தூசி போல் பறந்துகொண்டிருந்தது. பெரிய கற்களும் பறந்துகொண்டிருந்தன. அவற்றில் ஒன்று என்னையும் தாக்கிவிட்டு மீண்டும் பறக்கச் செய்தது. அருகில் மிகப்பெரிய குண்டொன்று வெடித்திருப்பதை உணர்ந்தேன். நான் இறக்கப்போகிறேன் என நினைத்தேன். இறக்கமாட்டேன் என என்னையே நான் உறுதியளித்துக்கொண்டேன். அதுவும் இந்த இடத்தில்” என தான் சந்தித்த அந்த சந்தர்ப்பத்தை தனிகுச்சி நினைவுபடுத்துகிறார்.

தட்டுத்தடுமாறி எழுந்த தனிகுச்சி தன்னுடைய சைக்கிள் வளைந்து கிடப்பதைக் கண்டார். முதுகுப்பகுதியில் ஏதோ நடந்திருப்பதை உணர்ந்த அவர், தனது கையால் முதுகுப் பகுதியை தடவிப்பார்த்துள்ளார். முதுகுப் பகுதியில் முற்றுமுழுதாக ஆடை காணாமல்போயிருந்தது. இடது கையில் தோள் பகுதியில் இருந்து விரல் வரை சதை கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது.

Sumiteru_Taniguchi_back
சுமிதேரு தனிகுச்சி, படம் | Wikipedia

சைக்கிளில் வைத்திருந்த பை கிழிந்து கடிதங்கள் சிதறிக்கிடப்பதை தனிகுச்சி அவதானித்தார். உடனே அவைகளை கேசரித்து சைக்களில் சொருகிய அவர், ஓர் இருப்பிடத்தை தேடலானார். உடலிலிருந்து ரத்தம் சிந்துவதையோ, உடல் வலியையோ அவரால் உணரமுடியவில்லை. உடலில் சக்தி குறைந்துகொண்டுபோவதை மட்டும் உணரமுடிந்தது. எப்படியாவது முன்னகர்ந்து ஒரு பாதுகாப்பான இருப்பிடத்தை அடையவேண்டும் என அவர் மனது சொல்லிக்கொண்டே இருந்தது.

சிறிய தூரத்தை கடந்த தனிகுச்சி மலைப்பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் தஞ்சம் புகுந்தார். அணுகுண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே அங்கு வந்து தங்கியிருந்தனர். “டொர்பெடோ” என்ற குண்டு தயாரிக்கும் இடமாக இந்த சுரங்கம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த இடம் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்டும் இருந்தது. அங்கிருந்த குண்டுகள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் வெளியேறவும் ஆரம்பித்திருந்தனர்.

தனிகுச்சி ஒருவாறு சிறிய மேசை ஒன்றில் உட்கார்ந்தார். தனது இடது கையில் தொங்கிக்கொண்டிருந்த சதைப் பகுதியை வெட்டி நீக்குமாறு அங்கிருந்த மக்களிடம் அவர் கேட்டார். சிலர் முன்வந்து சதையை வெட்டி நீக்கினர். அதற்குள் சுரங்கப்பகுதியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தகவல் பரவியது. 10 நிமிடங்களுக்குள் அங்கிருந்த அத்தனை மக்களுக்கும் தகவல் போய் சேர்ந்தது. உடனடியாக ஏனைய மக்களுடன் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தார் தனிகுச்சி. அவரால் எழுந்திருக்க முடியவில்லை. நடக்கவும் சக்தியில்லை. தனிகுச்சியின் நிலையை அவதானித்த ஒருவர் அவருக்கு உதவினார். புல் தரையில் சிறிது நேரம் தனிகுச்சியை படுக்கச் செய்தார்.

“அங்கிருந்த மக்களில் பெரும்பாலானோர் குடிப்பதற்கு தண்ணீர் தேடிக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் தங்களது உறவினர்களின் பெயர்களை கூவியவாறு அவர்களை தேடிக்கொண்டிருந்தனர். பகல் 2 மணியளவில் அனைவரும் ரயில் பாதை வழியாக பாதுகாப்பான இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டோம். ரயில் பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொருவரும் இறந்துவிழத்தொடங்கினர்.

“அன்று இரவுக்குள் ஒரு பாதுகாப்பான இடத்தை தேடிக்கொண்டோம். அந்த இருப்பிடமும் மலைப்பகுதியிலேயே அமைந்திருந்தது. அங்கிருந்த கட்டடங்களுடன் சேர்ந்து மலைப்பகுதியும் தீயில் எரிந்துகொண்டிருந்தது. அவ்வேளை, மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்காக அமெரிக்க விமானமொன்று மிகவும் தாழ்வாகப் பறந்துவருவதைக் கண்டேன். தாக்குதல் நடத்தியவாறே அது மேலெழும்பியது. உயிரை பறிக்க அது பிரயோகித்த துப்பாக்கி ரவைகள் நாங்கள் தங்கியிருந்த கட்டடத்தின் கூரைப் பகுதியையே தாக்கின” என தனிகுச்சி தான் சந்தித்த மரண வாழ்க்கையை நினைவுபடுத்துகிறார்.

ஒரு மாதம் கடந்த நிலையில் தனிகுச்சியின் காயங்கள் அழுகத் தொடங்கின. ஆடைகளும் ஒரு நாளைக்கு பல தடவைகள் மாற்றப்பட்டன. பல்கலைக்கழக மருத்துவக் குழுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை சிசிச்சை மட்டுமே வழங்கப்பட்டது. முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. குணப்படுத்தக்கூடிய அனைத்து மருந்து வகைகளையும் வழங்கத் தொடங்கினர். அணுகுண்டுத் தாக்குதலால் விஷம் உடலில் கலந்துள்ளது என மருத்துவக் குழு தெரிவித்தது. இதனால், ஒருவகையான மூலிகை சாறை அனைவருக்கும் வழங்கினர். ஒரு கட்டத்தில் சமைக்காத மாட்டின் ஈரல் பகுதியை சிறுதுண்டுகளாக்கி அதை உண்ணுமாறு அறிவுறுத்தினர்.

மறுநாள் விடியற்காலை மழை பெய்யத் துவங்கியுள்ளது. அவர்களுக்கு மழை இடையூராகத் தெரியவில்லை. காரணம், குடிப்பதற்கு தண்ணீர் கிடைத்ததை நினைத்து சந்தோஷமடைந்தனர். தனிகுச்சி மழைநீர் விழும் சிறு செடியொன்றின் அருகே சென்றார். இலைவழியாக வரும் மழைநீரை சிந்தாமல் குடித்தார்.

அன்றைய தினம் மீட்புக் குழு வந்துசேர்ந்தது. அதற்குள் பலர் இறந்துவிட்டனர். தனிகுச்சியும் இறந்துவிட்டார் என்றே அவர்கள் எண்ணினர். உதவிகேட்க முயற்சி செய்தும் தனிகுச்சியால் முடியவில்லை. அதனால், இரண்டு நாட்கள் அதே இடத்திலேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மூன்றாவது நாள் தனிகுச்சி மீட்கப்பட்டு நாகஷாகியிலிருந்து 18 மைல்கள் தொலைவிலுள்ள தற்காலிக மருத்துவமனையொன்றுக்கு அனுப்பப்பட்டார். பாலர் பாடசாலை ஒன்றிலேயே தற்காலிக மருத்துவமனை நடத்தப்பட்டு வந்தது. அங்கு நிலத்தில் தனிகுச்சி படுக்கவைக்கப்பட்டார். தனிகுச்சிக்கு மருந்து ஏதும் வழங்கப்படவில்லை. உணவு மட்டுமே பரிமாறப்பட்டது. மூன்று தினங்களுக்குப் பிறகு காயங்களிலிருந்து தண்ணீர் வழியத்தொடங்கியுள்ளது. அங்கிருந்து நாகஷாகியில் உள்ள மற்றொரு தற்காலிக மருத்துவமனைக்கு தனிகுச்சி மாற்றப்பட்டார். அங்கு அணுகுண்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்கலைக்கழக மருத்துவக்குழுவே சிகிச்சையளித்துக்கொண்டிருந்தது. அங்கு வைத்தே தனிகுச்சிக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டது. அவரின் உடலுக்கு இரத்தமும் ஏற்றப்பட்டது. ஆனால், தனிகுச்சியின் உடல் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டமையே அதற்குக் காரணமாகும். (இரத்தத்தில் உள்ள குருதிச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் ஏற்படுகின்ற குறைப்பாடு) அவரின் நரம்புத் தொகுதி அணு கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் இரத்தக் கசிவு ஏற்படவில்லை.

ஒரு மாதம் கடந்த நிலையில் தனிகுச்சியின் காயங்கள் அழுகத் தொடங்கின. ஆடைகளும் ஒரு நாளைக்கு பல தடவைகள் மாற்றப்பட்டன. பல்கலைக்கழக மருத்துவக் குழுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை சிசிச்சை மட்டுமே வழங்கப்பட்டது. முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. குணப்படுத்தக்கூடிய அனைத்து மருந்து வகைகளையும் வழங்கத் தொடங்கினர். அணுகுண்டுத் தாக்குதலால் விஷம் உடலில் கலந்துள்ளது என மருத்துவக் குழு தெரிவித்தது. இதனால், ஒருவகையான மூலிகை சாறை அனைவருக்கும் வழங்கினர். ஒரு கட்டத்தில் சமைக்காத மாட்டின் ஈரல் பகுதியை சிறுதுண்டுகளாக்கி அதை உண்ணுமாறு அறிவுறுத்தினர். புதிய இரத்தம் உற்பத்தியாவதற்கே இந்த செயன்முறை என அவர்கள் கூறினர்.

இவ்வாறானதொரு நிலையில், அமெரிக்காவால் பக்டீரீயாவிற்கு எதிரான மருந்து கொண்டுவரப்பட்டது. அது அணு கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்படவில்லை என தனிகுச்சிக்கு பிறகு தெரியவந்தது. பரீட்சார்த்த முயற்சிக்காகவே அமெரிக்க ஆய்வுக் குழுவொன்றினால் இது ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அறியமுடிந்தது. எனினும், இந்த மருந்துப் பாவனையால் எந்த பயனும் ஏற்படவில்லை.

ஒருநாள் அலுவலகத்தில் ஒரு கிழமை விடுமுறை கேட்டுவிட்டு அன்றைய தினமே யாருக்கும் சொல்லாமல் சிகாஹ் மலைப்பகுதியைக் கடந்து கடற்கரையைச் சென்றடைந்தேன். அங்கு வைத்து என்னுடன் இருந்து இறந்த அனைவரையும் நினைத்து அழுதேன். ஏன் நான் சாகவேண்டும் என என்னையே நான் கேள்விக்கேட்டுக்கொண்டேன். வாழ விருப்பம் இல்லாவிட்டாலும் உயிர் நீத்தவர்களுக்காக நான் வாழவேண்டும் என உறுதி பூண்டேன். எனக்கெதிராக குற்றத்தைப் புரிந்தவர்கள் யார்? நடந்தவற்றை நான் அனைவருக்கும் சொல்லியாகவேண்டும் என என்னுள் சபதம் எடுத்துக்கொண்டேன்.

அதன்பிறகு அவர்களது காயங்களுக்கு மருந்துக் களிப்பு பூசப்பட்டது. இதனால் அவர்கள் அணிந்திருந்த ஆடை உடலோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டது. ஆடையை உடலிலிருந்து பிரித்தெடுப்பதற்காகவும், தொற்று நீக்குவதற்காகவும் கொதிக்கவைக்கப்பட்ட உப்பு நீர் மருத்துவக் குழுவால் உபயோகப்படுத்தப்பட்டது. அது மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்படாமல் கொதிக்க மட்டுமே வைக்கப்பட்டது. இந்த உப்பு நீர் நாகஷாகி வளைகுடா பகுதியிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி நீர் அணுக் கதிர்வீச்சினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தாக்குதலின் பின்னர் மக்களுக்கு தாகம் ஏற்பட இந்தப் பகுதியிலேயே அவர்கள் தண்ணீர் அருந்தியுள்ளனர். அருந்திய சில மணிநேரங்களில் அவர்கள் அனைவரும் இறந்துள்ளனர். அந்த நீரே மருத்துவத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. கொதிக்க வைத்ததால் பெரிதாக எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை.

தனிகுச்சிக்கு நவம்பர் மாதம் வரைக்கும் முறையான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கவில்லை. நவம்பர் மாத இறுதியில் தனிகுச்சியோடு எல்லோருமாக நாகஷாகி விமான நிலையம் அருகில் உள்ள கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு வைத்து மிக முக்கிய மருந்து வகைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. மோசமாக கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு இந்த சிசிச்சை முறையால் பெரிதாக எந்த நன்மையும் ஏற்படவில்லை. அத்துடன், மருத்துவத் துறைக்கே இந்த கதிரியக்கத் தாக்கம் புதிய அனுபவமென்பதால் சிகிச்சையளிப்பதிலும் பல சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது.

taniguchiscans-004

1949 மே மாதமே தனிகுச்சியால் எழுந்து நடக்கவும் உட்காரவும் முடிந்தது. சுமார் ஒரு வருடமும் 9 மாதங்களும் படுத்த படுக்கையிலேயே இருந்துள்ளார். 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கடற்படை முகாமிலிருந்து வெளியேறி தனிகுச்சி நாகஷாகிக்குச் சென்றார். அந்தத் தருணத்தை தனிகுச்சி இப்படி விவரிக்கிறார்.

“நான் மீண்டும் உயிருடன் வருவேன் என்று எவரும் நினைக்கவில்லை. நான் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. நாகஷாகி வந்தும் நான் சிகிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து வலி இருந்துகொண்டேதான் இருக்கிறது. சாகவேணும் போல் இருந்தது. ஒருநாள் அலுவலகத்தில் ஒரு கிழமை விடுமுறை கேட்டுவிட்டு அன்றைய தினமே யாருக்கும் சொல்லாமல் சிகாஹ் மலைப்பகுதியைக் கடந்து கடற்கரையைச் சென்றடைந்தேன். அங்கு வைத்து என்னுடன் இருந்து இறந்த அனைவரையும் நினைத்து அழுதேன். ஏன் நான் சாகவேண்டும் என என்னையே நான் கேள்விக்கேட்டுக்கொண்டேன். வாழ விருப்பம் இல்லாவிட்டாலும் உயிர் நீத்தவர்களுக்காக நான் வாழவேண்டும் என உறுதி பூண்டேன். எனக்கெதிராக குற்றத்தைப் புரிந்தவர்கள் யார்? நடந்தவற்றை நான் அனைவருக்கும் சொல்லியாகவேண்டும் என என்னுள் சபதம் எடுத்துக்கொண்டேன்.

“சிலவேளை வேதனை தாங்கமுடியாமல், குணமாகிவிடும் என்ற நப்பாசையில் நான் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று இடங்களில் சிகிச்சை எடுத்துக்கொண்ட சந்தர்ப்பமும் உண்டு. எனது காயங்கள் ஒருவாறு குணமடைய சுமார் 15 வருடங்கள் சென்றன. ஒரு கட்டத்தில் மருத்துவர்களால் எனக்கு புற்றுநோய் எச்சரிக்கையும் விடப்பட்டது.”

85 வயதாகும் தனிகுச்சி தற்போது அணு ஆயுதத்துக்கு எதிராக உலகம் பூராகவும் நடத்தப்படும் மாநாடுகளில் கலந்துகொண்டு தனது அனுபவத்தை தெரிவித்து வருகிறார். மாணவர்களை சந்தித்து தனது அனுபவத்தை தெரியப்படுத்துகிறார். அணுவை விடுத்து மனிதர்கள் வாழக்கூடிய உலகம் உருவாக்கப்படவேண்டும் என தனிகுச்சி விருப்பப்படுகிறார்.

20100510133433285_en_1
படம் | hiroshimapeacemedia

“அணு ஆயுதம் என்பது மனித வாழ்வுக்கு ஏற்றதாக இல்லை. அதை மொத்தமாக அழிக்க எவரும் முன்வருவாரில்லை. ஜப்பான் கூட அணு ஆயுதம் உருவாக்கும் சாத்தியம் பற்றி பேச்சு நடத்தியிருந்தது. அணு ஆயுதம் தயாரிக்கும் தருவாயில் தான் இருப்பதாக வட கொரியா தெரிவிக்கிறது. அணு ஆயுதத் தாக்குதலின் சாட்சிகளாக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.

“மனித அறிவு மற்றும் ஒற்றுமையைக் கொண்டு அணு ஆயுத பாவனை மற்றும் உற்பத்தியை நிறுத்த, கட்டுப்படுத்துவதற்கான ஒரு சூழலை நாம் உருவாக்க இருக்கிறோம். அணு ஆலை, அணு ஆயுதம் என்ற ஒன்றை நாம் நழுவவிடவேண்டும். செய்ய வேறொன்றும் இல்லை என்றோ, தவிர்க்க முடியாது என்றோ நினைத்து செயலில் இறங்குவது சரியல்ல. இதனை உருவாக்குவதன் மூலம் நம்மை நாமே வாழ அனுமதிக்க மறுக்கிறோம். அனைவரும் இதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

“உலகில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழக்கூடிய சூழலை குறிப்பதற்கு சமாதானம் என்ற சொல் பயன்படவேண்டும். இந்த சமாதான சூழல் நிரந்தரமாக இடம்பெற அணு ஆயுதம் என்ற ஒன்றை நாம் கைவிடவேண்டும்” என தனிகுச்சி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் புகுஷிமா அணு உலை வெடிப்புச் சம்பவம் ஆகியவற்றையும் தனிகுச்சி கண்டிருக்கிறார். அணு உற்பத்திக்கு எதிராக உலகம் பூராகவும் குரல்கொடுத்து வரும் நிலையில் தான் வாழும் நாட்டிலேயே, ஒருமுறை கடுமையாக அணு ஆயுதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அணுக்கசிவு ஏற்பட்டிருக்கின்றமை குறித்து தனிகுச்சி வெகுவாகக் கவலை கொண்டிருக்கிறார்.

அணுவாயுதத் தாக்குதலால் இன்னமும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிகிச்சை பெற்றுக்கொள்ளும் சுமிதேரு தனிகுச்சியின் பேச்சை கேட்பார் யாருமில்லை.

செல்வராஜா ராஜசேகர்