Photo, MAWRATANEWS

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீண்டும் வெளிக்கிளம்புவது மாற்றம் நிரந்தரமானதல்ல என்பதை நினைவூட்டுகிறது. பொருளாதார இடர்பாடுகளின் விளைவான அமெரிக்க வெள்ளையர் சனத்தொகையின் மனக்குறைகளை ட்ரம்ப் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றார். சமுதாயத்தில் தங்களின் இருப்புநிலையை அவர்கள் பேணிக்காப்பதற்கு ஐக்கியப்படவேண்டியது அவசியம் என்று என்று அவர் வாதம் செய்கிறார். அவர்களுக்காக குரல்கொடுப்பவராக தன்னை ட்ரம்ப் முன்னிலைப்படுத்துகிறார்.

நிலையான விழிப்புணர்வே சுதந்திரத்துக்காகச் செலுத்துகின்ற விலையாகும் (Eternal vigilance is the price of liberty) என்ற சொற்றொடர் 1970ஆம் ஆண்டில் ஐரிஷ் பேச்சாளர் ஜோன் பில்பொட் குறானின் கூற்று ஒன்றிலேயே அதன் தோற்றுவாயைக் கொண்டிருந்தது என்று டென்னிங் பிரபு தனது நீதிக்கான பாதை (The Road to Justice – 1988) என்ற நூலில் கூறியிருக்கின்ற போதிலும் அதை அமெரிக்காவின் ஸ்தாபகர்களான தோமஸ் ஜெபர்சன் தோமஸ் பெய்ன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் ஆகியோரிடமிருந்து வெளிப்பட்டதாக அனேகமாக கூறப்படுகிறது. எமது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கு நாம் விழிப்பாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கு இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

உலகம் பூராவும் மக்களை அணிதிரட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடிய சக்திமிகு இரு கோட்பாடுகளாக இன அடைாளமும் மத அடையாளமும் விளங்குகின்றன. இந்த நிலைமை அல்லது தோற்றப்பாடு பல நூற்றாண்டு கால மதசார்பற்ற நடைமுறைகள் காரணமாக மேற்கு ஐரோப்பாவில் தணிந்துவிட்டது போல தோன்றியது. அந்த மதசார்பற்ற நடைமுறைகளில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் அரசு மதசார்பற்றதாகவும் நடுநிலையானதாகவும் செயற்படவைக்கப்பட்டது.

கடந்த வருடத்தைய அறகலய மக்கள் கிளர்ச்சியின்போது ஒரு குறுகிய காலத்துக்கு எமது சனத்தொகையில் பெருமளவு பிரிவினரை வறுமைக்குள் தள்ளிய எதிர்பாராத பொருளாதார பேரிடருக்கு மத்தியில் இலங்கை அதன் இன, மத பிளவுகளைக் கடந்து நின்றதாக தோன்றியது. நாட்டை அவலநிலைக்கு கொண்டுவந்த அரசாங்கம் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று கோரி வீதிகளில் இறங்கிப்போராடிய மக்கள் மத்தியில் முன்னென்றும் இல்லாத ஐக்கியம் காணப்பட்டது. மக்கள் சக்தியின் வல்லமை அந்த அரசாங்கத்தின் தலைவர்களை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதில் வெற்றிகண்டது. மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய சந்ததியினர் மத்தியில் ஐக்கியத்தையும் பரஸ்பர மதிப்பையும் கொண்டுவரக்கூடிய அரசாங்கம் ஒன்று எதிர்காலத்தில் தோன்றும் என்று நம்பிக்கை பிறந்தது.

ஆனால், ஊக்கமும் உறுதியும் கொண்ட டொனால்ட் ட்ரம்பைப் போன்று பழைய ஒழுங்கு மீண்டும் அரங்கிற்று வருவதற்கு மல்லுக்கட்டுகிறது. இனமும் மதமும் ஆபத்துகுள்ளாகின்றன என்ற பேச்சுக்கள் மீண்டும் வெளிக்கிளம்புகின்றன. தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாகாணங்கள் உட்ட சகல மாகாணங்களிலும் அதிகாரப் பரவலாக்கத்தை மக்கள் அனுபவிக்கக்கூடியதாக அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக கடந்த வருடம் உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த உறுதிமொழி தொடர்பில் இப்போது மௌனம் சாதிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதியினால் புதிய பொருளாதார நோக்கு ஒன்றுக்கு வழிகாட்டப்படுகின்ற பழைய ஒழுங்கு இன – மத விவகாரங்களில் விட்டுக் கொடுக்கத்தயாரில்லாததாக இருக்கிறது. அதன் விளைவாக போர்க்கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு 2015ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்துக்கு உறுதியளித்ததன் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் துணிச்சலான திட்டம் நெருக்கடியை எதிர்நோக்குகிறது. மெய்யான அதிகாரப்பரவலாக்கம் இல்லாத நிலையில் அத்தகைய பொறிமுறை ஒன்றை நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ தயாரில்லை என்று  பிரதான தமிழ்க்கட்சிகள் அறிவித்திருக்கின்றன.

புண்படுத்தப்படும் உணர்வுகள்

பல்வகைமையும் பன்முகத்தன்மையும் கொண்ட இலங்கை தேசத்தை உருவகித்துநிற்கும் வேறுபட்ட சமூகங்களுக்கு இடையிலான முரண்நிலைத் தீர்வு முயற்சிகளின் முன்னோக்கிய நகர்வுக்கு குறுக்கே வந்து இனமும் மதமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்ற உணர்வு மீண்டும் அச்சுறுத்துகிறது. உணர்ச்சிக்குமுறல் நிறைந்த இன, மதப்  புயலின் மத்தியில் எதிர்பாராத வகையில் இரு நபர்கள் இப்போது அகப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் நகைச்சுவை பேச்சாளர், மற்றவர் மதப் போதகர். இருவரும் சிங்கள பௌத்த பெரும்பான்மைச் சமூகத்தில் பலரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறார்கள்.

இருவருமே தங்களது பேச்சுக்களை சிறியதொரு சபையினர் மத்தியிலேயே நிகழ்த்தினர். ஆனால், அந்த பேச்சுக்கள் சமூக ஊடகங்கள் ஊடாக பரந்துபட்ட அளவில் பெரியளவு சபையினரை இப்போது எட்டிவிட்டன. மதவெறுப்பையும் வன்முறையையும் கிளறிவிடுவதற்கு இந்தப் பேச்சுக்களை அவர்கள் நிகழ்த்தினார்களா என்பதே இப்போதுள்ள கேள்வி. இன, மத மற்றும் அரசியல் தரப்பினர் என்று சகல தரப்புகளில் இருந்தும் இருவரினதும் பேச்சுகளுக்கு பெருவாரியான கண்டனங்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது.

பௌத்த சனத்தொகையின் மத உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கக்கூடிய தங்களது பேச்சுக்களுக்காக நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். தங்களின் பேச்சுக்களின் விளைவான பாதிப்பையும் கோபத்தையும் உணர்ந்துகொண்டபோது அவர்கள் பதற்றத்தைத் தணிக்க முயற்சியை மேற்கொண்டார்கள். ஒரு இன – மத சமூகத்தின் உறுப்பினர்களினால் இன்னொரு இன – மத சமூகத்துக்கு எதிராக உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை அல்ல.

தற்போதைய நிலைவரத்தை அனுகூலமாக எடுத்துக்கொண்டு அரசாங்கம் சமூக ஊடகங்களையும் பிரதான ஊடகங்களையும் கட்டுப்படுத்துவதற்கான அவசியம் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறது. ஒலிபரப்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராகிறது. தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய வகையில் எதிர்மறையாக நடந்துகொண்டால் அல்லது இனங்கள், மதங்கள் மத்தியில் முரண்நிலையை உருவாக்கினால் இலத்திரனியல் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை ரத்துச்செய்வதற்கும் ஊடகவியலாளர்களைச் சிறையில் அடைப்பதற்கும் வழிவகுக்கக்கூடியதாக இந்த உத்தேச சட்டமூலம் அமையும்.

சுதந்திர சமுதாயம் ஒன்றில் மக்கள் தங்களது சிந்தனைகளை ஹைட் பார்க்கிலோ அல்லது நாடாளுமன்றத்தில் தங்களது பிரதிநிதிகள் ஊடாகவோ வெளிப்படுத்தக்கூடியதாக வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் புதிய சட்டத்தின் ஊடாக பேச்சுச் சுதந்திரத்துக்கும் ஊடகங்களுக்கும் வரக்கூடிய அச்சுறுத்தலை, குடியியல் உரிமைகள், அரசியல் உரிமைகள் தொடர்பில் உலகின் ஒரு தரநிலையான வழிகாட்டியாக விளங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தம் (International Covenant  on Civil and Political Rights – ICCPR) இலங்கையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்திருக்கின்ற பின்புலத்திலேயே நோக்க முடியும். அரசாங்கங்கள் தவறாக பயன்படுத்தக்கூடிய முறையில் இந்த சர்வதேச ஒப்பந்தம் இலங்கைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஒலிபரப்பு  ஒழுங்கமைப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் இதே போன்ற விளைவுகளைக் கொண்டுவரக்கூடியது சாத்தியம். அரசாங்கங்கத்தினால் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கென்று கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்ட இன்னொரு துரதிர்ஷ்டவசமான உதாரணமாக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தச் சட்டத்தின் கீழான நடாஷா எதிரிசூரியவின் கைதும் தடுப்புக்காவலும் அமைந்திருக்கிறது. தனக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேறி தற்போது வெளிநாட்டில் இருப்பதால் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிறையில் அடைக்கப்படவில்லை.

தெரிவுசெய்து இலக்குவைத்தல்

நடாஷா எதிரிசூரிய அறகலய போராட்டத்தில் பங்கேற்ற ஒருவராக இருப்பதால் அவரின் விவகாரத்தை தாங்கள் விசேட கவனத்துடன் நோக்குவதாக பொலிஸ் அதிகாரி கூறியதாக அரசாங்க ஊடகம் செய்தி வெளியிட்டது. இது அவரது கைதுக்கான காரணம் அரசியல் நோக்குடனானது என்ற அனுமானிக்க வைக்கிறது. வெறுப்புப்பேச்சை தடைசெய்யும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தச் சட்டத்தின்  3(1) பிரிவை மீறியதாகவே நடாஷா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. பாரபட்சம், வன்முறை மற்றும் பகைமையை தூண்டுவதாக அமையக்கூடிய வெறுப்புணர்வை ஆதரித்துப் பேசுவதை பிரிவு 3(1) தடைசெய்கிறது.

நடாஷாவின் விவகாரத்தில் அவரது பேச்சு வெறுப்புப்பேச்சாக இருப்பதால் சட்டவிரோதமானது என்று கூறுவதனால் சம்பந்தப்பட்ட குழுவுக்கு எதிராக பாரபட்சம் காட்டுமாறு அல்லது வன்முறையில் ஈடுபடுமாறு மற்றவர்களைத் தூண்டிவிடும் நோக்கம் அவருக்கு இருந்தது என்பதை தெளிவாகக் காண்பிக்கவேண்டியது அவசியமாகும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை  சுட்டிக்காட்டியிருக்கிறது.  இந்த பிரமாணத்தின் அடிப்படைக்கு நடாஷாவின் கருத்துவெளிப்பாடு பொருந்தவில்லையானால் அது அதிர்ச்சிதருவதாக, மனதைப் புண்படுத்துவதாக அல்லது வருத்தந்தருவதாக இருந்தாலும் அது அரசினால் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் மன்னிப்புச்சபை குறிப்பிடுகிறது.

கடந்த காலத்தில் வெறுப்புப்பேச்சுக்களின் இலக்காக சிறுபான்மை இனத்தவர்களும் சிறுபான்மை மதத்தவர்களும் விளங்கிய பல சம்பவங்களைக் கூறமுடியும். ஆனால், அவர்களைப் பாதுகாப்பதில் அல்லது அத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கங்கள் அசமந்தமாகவே இருந்துவந்திருக்கின்றன. இத்தகைய இலக்குவைப்புக்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. குறிப்பாக தேர்தல் காலங்களில் குறுகிய தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிடுவதன் மூலமும் ‘ மற்றவர்கள் ‘ பீதியூட்டுவதன் மூலமும் மக்கள் பிரிவுகளை அணிதிரட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெறுப்புப்பேச்சு வீச்செல்லைக்கு வெளியிலான சமூக மற்றும் அரசியல் விமர்சனங்களைச் செய்பவர்களுக்கு எதிராக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தச் சட்டத்தை பயன்படுத்துவதை நாட்டின் அரசியல் தலைவர்களும் அரசாங்கத் தலைவர்களும் தவிர்க்கவேண்டும். சமூக ஊடகத்தளமான எஸ்எல் – விலொக்ஸின் உரிமையாளர் பரூனோ திவாகரவின் கைது ஒலிபரப்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு சட்டமூலம் கொண்டுவரக்கூடிய பாதகமான நிலைவரத்துக்கான மிகவும் வேதனை தருகின்ற ஒரு அறிகுறியாகும்.

சுதந்திரமாக கருத்தை வெளியிடுவதற்கும் விமர்சன ரீதியாக கருத்துக்களை கூறுவதற்குமான இடப்பரப்புக்கு எதிரான நடவடிக்கை ஜனநாயக அரசியல் சமுதாயம் ஒன்றில் அதுவும் குறிப்பாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மக்களுக்கு பெரும் துன்பம் நேர்ந்த சூழலில் இருக்கின்றதும் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றதுமான இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. கைது மற்றும் அதற்கான காரணகாரிய அடிப்படை குறித்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மாஅதிபரிடம் கேட்டதன் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செய்திருக்கும் தலையீடு அதிகாரங்கள் செயற்படுத்தப்படுகின்ற முறைகள் மீது தடுப்புக்களையும் சமப்படுத்தல்களையும் பிரயோகிக்கும் நோக்குடனான நிறுவனங்களின் சுயாதீனம் நடப்பில் இருக்கிறது என்பதற்கான நம்பிக்கை தரும் ஒரு அறிகுறியாகும்.

முரண்படுகின்ற இன, மத மற்றும் ஒருதலைச்சார்பான கருத்துக்கள் மற்றும் நோக்குகளுக்கு இடையில் பிணக்குகளைத் தீர்க்கும் நடுநிலையான மத்தியஸ்தராக இலங்கை அரசு மாறவேண்டும். பல்வேறு வழிகளிலும் குறுகிய கால இடைவெளியிலும் ஜனநாயக விரோதமான அதிகாரங்களைக் கையில் எடுத்துக்கொள்வது நாடு எதிர்பார்த்துநிற்கும் பொருளாதார மீளெழுச்சியையும் ஜனநாயக ஆட்சிமுறையையும் காண்பதற்கு உதவுவது சாத்தியமில்லை. சுதந்திரம், நீதி மற்றும் நேர்மையான செயற்பாடு இல்லாமல் ஜனாதிபதி விக்கிரமசிங்க விரும்புகின்ற பொருளாதார அபிவிருத்தியை காணமுடியும் என்று நம்பிக்கையை வளர்க்கமுடியாது.

கலாநிதி ஜெகான் பெரேரா