Photo, SELVARAJA RAJASEGAR

‘கோட்டா வீட்டுக்கு போ’ என்பதே கடந்த வருடம் இலங்கை கண்ட மக்கள் போராட்டத்தின் (ஜனதா அறகலய) பிரதான முழக்கமாகும். அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலவிய கடுமையான தட்டுப்பாடு மற்றும் நீண்டநேர மின்வெட்டு ஆகியவற்றுக்கு எதிராக வீதிகளுக்கு இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது துயரங்களுக்கெல்லாம் நாட்டின் மிகவும் பலம்பொருந்திய தலைவரையே முற்றுமுழுதாக குற்றஞ்சாட்டினர். ஆட்சி செய்வதற்கோ அல்லது நாட்டின் உயர்பதவியை வகிப்பதற்கோ முன்னாள் இராணுவ அதிகாரியை  தகுதியற்றவர் என்று கருதிய மக்கள் அவரை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதை காணக்கூடியதாக இருந்தது.

அதேவேளை, போராட்ட இயக்கத்தின் பகுதியாக விளங்கிய சிலர் இன்னொரு கேள்வியை எதிர்கொண்டனர். தோல்வி கண்ட ஜனாதிபதியொருவரை வெளியேற்றுவது மாத்திரம் நாட்டுக்கு தேவைப்படுகின்ற ‘முறைமை மாற்றத்தை’ கொண்டுவருமா? கோட்டபாய ராஜபக்‌ஷ 2021ஆம் ஆண்டில் இரவோடிரவாகக் கொண்டுவந்து இன்னமும் கூட விவசாயிகளையும் வருடாந்த  பயிர் விளைச்சலையும் பாதித்துக்கொண்டிருக்கின்ற இரசாயனப்பசளை தடை போன்ற நாசகாரத்தனமான கொள்கைத் தெரிவுகளை அவரின் இடத்தில் இருக்கக்கூடிய இன்னொரு தலைவர் நாடினால் என்ன ஆகும்? சிந்திக்காமல் செயற்பட்ட ஒரு தலைவர் மாத்திரமல்ல பிரச்சினை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். ஒரு தனிநபர் மீது தங்குதடையற்ற அதிகாரங்களை குவிக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியே உண்மையில் பெரிய பிரச்சினை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை மீது கவனம் திரும்பியது. அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை உரத்து ஒலிக்கத்தொடங்கி சிறிதுகாலம் பொதுவிவாதத்தை ஆக்கிரமித்தது.

மட்டுமீறிய அதிகாரங்களின் மூலங்கள்

ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை இலங்கைக்கு வழக்கம்மீறிய அல்லது பழக்கமற்ற ஒன்றாக இருக்கவில்லை. அது புதிதானதாகவும் இருக்கவில்லை. 1978ஆம் ஆண்டில் அந்த ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு பதவிக்கு வந்த ஒவ்வொரு ஜனாதிபதியும் அதை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தாலும், பதவியில் அமர்ந்ததும் அதன் அதிகாரங்களை அனுபவிப்பதில் இருந்து விடுபடமுடியாமல் உறுதிமொழியை வசதியாக மறந்துவிட்டனர்.

1948ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கை நாடாளுமன்ற ஜனநாயக நாடாக விளங்கியது. 1972ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பிலும் நாடாளுமன்ற ஜனநாயகமே தொடர்ந்தது. 1978 ஆண்டில் கொண்டுவரப்பட்ட  இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தி ஜனாதிபதிக்கு மிகவும் பேரளவான அதிகாரங்களை வழங்கியது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன எதிர்க்கட்சியில் இருந்தபோது 1970 களின் ஆரம்பத்திலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை கொண்டுவரவேண்டும் என்ற யோசனையைக் கொண்டிருந்தார். அந்த நாட்களில் இருந்தே அந்த யோசனைக்கான எதிர்ப்பு இலங்கையின் அரசியல் சமுதாயத்திற்குள்ளும் சிவில் சமுதாயத்திற்குள்ளும் இருந்தது. இதில் விசேடமாக இடதுசாரிகள் பிரதான பங்கை வகித்தார்கள். அது தொடர்பிலான முக்கிய விவாதங்களை மூத்த அரசியலமைப்பு சட்டவாதியான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன சில வருடங்களுக்கு முன்னர் ஊடக கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ரொட்ஸ்கியவாத லங்கா சமசமாஜ கட்சியின் தாபக தலைவர்களில் ஒருவரும் எமது பிராந்தியத்திலேயே மிகவும் சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவருமான கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் ஆபத்துக்களை 1971ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணயசபையில் மணிச்சுருக்கமாக விளக்கினார்.

அந்த நேரத்தில் அரசியலமைப்பு விவகார அமைச்சராக இருந்த அவர், “நாடாளுமன்ற ஆட்சிமுறைமையில் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு நன்மை இருக்கிறது. நிறைவேற்று அதிகார பதவியில் இருக்கின்ற பிரதமர் மக்களின் பிரதிநிதிகளுக்கு நேரடியாக பொறுப்புக்கூறவேண்டியவராக இருக்கிறார். நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை கொண்டிருக்கும் வரையில்தான் அவர் பிரதமர் பதவியில் தொடரமுடியும். ஜனாதிபதிகளோ அல்லது பிரதமர்களோ மக்களினதும் எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் பிரதிநிதிகளினதும் விருப்பங்களுக்கும் கருத்துக்களுக்கும் முரணாக தங்களது சொந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நாம் விரும்பவில்லை. மக்களுக்கு எதிராக பலம்பொருந்திய ஒரு தலைவர் இருப்பதில் எந்த நன்மையும் இல்லை” என்று வாதிட்டார்.

திறந்த பொருளாதார சீர்திருத்தங்களுடன் கூடிய பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவருவதாக  மக்களுக்கு வாக்குறுதி அளித்த ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 1977 பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றபோது இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டனர். இருந்தாலும் இடதுசாரி அரசில்வாதிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக தொடர்ந்து இயக்கத்தை முன்னெடுத்தனர். சமசமாஜ கட்சியின் தலைவரான என்.எம். பெரேரா 1978 அரசியலமைப்பை கடுமையாக கண்டித்து கட்டுரைகளை எழுதினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் ஆட்சி

எவ்வாறெனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஜெயவர்தன ஆட்சியின் கட்டமைப்பில் விரைவாகவே வலுவூன்றியது. தனது குறிக்கோள்களுக்குத் தேவையான சகல அதிகாரங்களையும் புதிய ஜனாதிபதி அந்த முறைமையில் கண்டுகொண்டார். பதவியேற்று இரு வருடங்களில் ஜெயவர்தன 1980 பொதுவேலைநிறுத்தத்தை அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொடூரமாக அடக்கி அரசாங்க சேவையைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ஊழியர்களை பதவிநீக்கினார். அதே அதிகாரங்களுடன் ஜனாதிபதி ஜெயவர்தன மூன்று வருடங்கள் கழித்து 1983 ஜூலையில் நாடு பூராவும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள குண்டர்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான இனவன்செயலை அடக்குவதற்கு எதையும் செய்யவில்லை. அவர் ஆதரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அந்த வன்செயல் நாட்டை மூன்று தசாப்த காலம் சின்னாபின்னப்படுத்திய உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. அதில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து வந்த தசாப்தங்களில் ஆறு ஜனாதிபதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவருமே  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தே தேர்தல்களில் வெற்றிபெற்றனர். அந்தப் பதவியை ஒழிப்பதாக யோசனை முன்வைத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால், இறுதியில் அவர் அதை ஒழிக்கவில்லை.

மேலும், தேர்தல் வாக்குறுதியை மீறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததற்கு அப்பால் ஜனாதிபதி பதவிக்கு வந்த தலைவர்கள் தங்களுக்கு இருந்த மட்டுமீறிய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது. உண்மையில் அந்தப் பதவியை மேலும் கூடுதலான அதிகாரங்கள் கொண்டதாக வலுப்படுத்துவதற்கே அவர்கள் நாட்டம் கொண்டு செயற்பட்டார்கள்.

உள்நாட்டுப் போரில் விடுதலை புலிகளை இராணுவரீதியாக தோற்கடித்த பிறகு அந்த ‘போர் வெற்றியை ‘ பிரதான பிரசாரமாக சிங்கள வாக்காளர்கள் முன்னிலையில் வைத்து 2010 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கு தெரிவான மஹிந்த ராஜபக்‌ஷ சில மாதங்களில் அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தார். அந்தத் திருத்தம் அதுகாலவரையில் ஜனாதிபதிகளுக்கு இருந்த இரு பதவிக்கால மட்டுப்பாட்டையும் நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகிப்பதற்கு இருந்திருக்கக்கூடிய தடுப்புக்களையும் சமப்படுத்தல்களையும் (Checks and balances )  நீக்கியதன் மூலம் ஜனாதிபதி பதவியை மேலும் பலம்கொண்டதாக்கியது.

நாடாளுமன்றத்துக்கு அதிகாரமளித்தல்

ஆனால், இந்தப் போக்குகளில் இருந்து ஒரு வரவேற்கக்கூடிய அரிதான விலகலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தால் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்ட அரசாங்கம் அரசிலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது.

அதுவே ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தை வலுப்படுத்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். அவ்வாறு இருந்தபோதிலும் ஜனாதிபதியிடம் எஞ்சியிருந்த அதிகாரங்கள் 2018 பிற்பகுதியில் பிரதமர் பதவியில் இருந்து விக்கிரமசிங்கவை திடீரென்று  நீக்கி ஒரு ஐம்பது நாட்களுக்கும் அதிகமான அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கக்கூடிய அளவுக்கு சிறிசேனவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தன.

ஜனாதிபதியின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. அந்த வழக்கில் சட்டத்தரணிகள் தங்களது வாதத்தை பிரதானமாக 19ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்‌ஷ பெருவெற்றி பெற்றார். ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்குள் அவரது அரசாங்கம்  19ஆவது திருத்தத்தை ரத்துச் செய்து 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து முன்னர் குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீட்டெடுத்தார்.

2022 செப்டெம்பரில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் நிர்வாகம் 19ஆவது திருத்தத்தில் இருந்த ஏற்பாடுகளை மீளக்கொண்டவருவதாகக் கூறிக்கொண்டு 21ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், அதை ஒரு ‘கண்துடைப்பு’ என்று விமர்சகர்கள் நிராகரித்தார்கள். ஜனாதிபதி பதவியை ‘கட்டுக்குள்’ கொண்டுவருவதற்கான முயற்சிகள் அவர்களின் அனுபவத்தில் பயனற்றவையாகவே போயிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. ஜனாதிபதியிடம் அளவுக்கும் அதிகமான அதிகாரங்கள் குவிக்கப்படுவதை அனுமதிக்கின்ற இந்த ஆட்சிமுறை மறுசீரமைப்புகளுக்கு இடந்தராது என்பதால் அதை முற்றுமுழுதாக மாற்றியமைக்கவேண்டியது அவசியமாகும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

இப்போதும் கூட ஜனாதிபதி எத்தனை அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்வசம் வைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வதை மட்டுப்படுத்துவதற்கு 19ஆவது திருத்தம் முயற்சித்தது. அமைச்சுக்களினதும் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கான அதிகாரங்களை இன்னமும் ஜனாதிபதி கொண்டிருக்கிறார்.அமைச்சர்களுக்கான பொறுப்புக்களையும் கடமைகளையும் தீர்மானிக்கக்கூடியவராக இருக்கிறார். அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதற்கு தனது தற்துணிபு அதிகாரத்தை அவரால் பயன்படுத்தமுடியும். சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்து அவற்றை கண்காணிக்கும் அரசியலமைப்பு பேரவையின் சுயாதீனம் இங்கு கேள்விக்குள்ளாகிறது.

மத்தியில் சகல அதிகாரங்களையும் அதுவும் ஒரு பதவியில் குவிப்பதன் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை மாகாண மட்டத்தில் ஆட்சிமுறையின் வீச்செல்லையை கடுமையாக மட்டுப்படுத்துகிறது. மாகாண நிருவாகங்களின் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள் கூட ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரே கணிசமான அதிகாரங்களைக் கொண்டவராக இருக்கிறார். இலங்கையின் 1978 அரசியலமைப்பின் கீழான அரசாங்க முறைமை ‘நாடாளுமன்ற  ஜனநாயகம் என்ற போர்வையில் அரசியலமைப்பு ரீதியான ஜனாதிபதியின் சர்வாதிகாரம்’ என்று கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா வர்ணித்தார்.

இடையறாத பொருளாதார இடர்பாடுகளுக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அடிக்கடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்ப்பீரங்கி தாக்குதல்களை நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கிறார்கள். ஜனாதிபதி விக்கிரமசிங்கவை விமர்சகர்கள் ஏற்கெனவே அவரின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்தனவுடன் ஒப்பிட்டிருக்கிறார்கள்.

இலங்கை பலாதசாப்தங்களாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டிய தேவை குறித்து விவாதித்து வந்திருக்கிறது. கடந்த வருடத்தைய நெருக்கடியும் இந்த ஆட்சிமுறை மீது மீண்டும் கவனத்தைக் குவித்தது. ஆனால், ஜனாதிபதி பதவிக்கு வந்து பிறகு தனது சொந்த அதிகாரங்களை துறந்துவிடுவதற்கு இணங்கக்கூடிய ஒரு தலைவரை இலங்கை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.

மீரா ஸ்ரீனிவாசன்

“The all-powerful Sri Lankan Presidency” என்ற தலைப்பில் ‘தி இந்து’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.