Photo, CGTN

இனத்துவ சமூகங்களுக்கிடையிலான சர்ச்சைக்குரிய அதிகாரப்பரவலாக்கல் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக மாவட்ட சபைகளை பரிசீலிக்கலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தமிழ் சமூகத்தின் மத்தியில் கணிசமான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தேசிய நல்லிணக்கச் செயன்முறையை துரிதப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி பேசுகின்ற நிலையில் இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

செலவினங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக மாகாண சபைகளின் கீழ் மாவட்ட சபைகளை அமைப்பது குறித்து முனானாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் யோசனை கூறியபோது விக்கிரமசிங்க மாவட்ட சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார் என்று பதிலளித்தார். “முன்னாள் ஜனாதிபதி அவர்களே, மாவட்ட அபிவிருத்தி சபைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை கவனித்தேன். அதைச் செய்வதற்கு நான் தயார்” என்று ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாகாண சபைகளுக்குள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை அமைக்கலாம் என்ற அர்த்தத்திலேயே ஜனாதிபதி பேசினார் என்று பிறகு அவரின் ஊடகப் பிரிவு விளக்கமளித்தது.

சகல நிறைவேற்று தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வசதியாக அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கிடையில் ஒருங்கிணைப்புக்கான ஒரு களத்தை மாவட்ட அபிவிருத்தி சபைகள் வழங்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் கூறியது. மாகாணத்தை அதிகாரப்பரவலாக்கல் அலகாகக் கொண்ட கோட்பாடு ஜனாதிபதியின் மாமனார் காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் முன்னர் 1981ஆம் ஆண்டில் முயற்சித்துப் பார்க்கப்பட்டது. மோசமடைந்து கொண்டிருந்த இனநெருக்கடிக்கான தீர்வின் ஒரு பகுதியாக ஜெயவர்தன அரசாங்கம் மாகாண சபைகளை ஏற்படுத்தியது.

வளர்ந்துகொண்டிரு்த தமிழ்த் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டது. படைகளிடம் துப்பாக்கிகள் மாத்திரம் இருக்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டமும் இருந்தது. இன்று துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் போன்றே அன்றும் அந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. ஆனால், அன்று மிகவும் மோசமாக துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன.

தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, மாவட்ட அபிவிருத்தி சபைகளுடனான குறுகியகால அனுபவம் கசப்பானதாகவே இருந்தது. அந்த சபைகளுக்கான தேர்தல்களில் அன்றைய ஜனாதிபதி தலைமயிலான ஐக்கிய தேசிய கட்சியும் போட்டியிட்டது. மோசடிகளைச் செய்து எந்தவகையில் என்றாலும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி 1981ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் தீக்கிரையாக்கப்பட்ட அனர்த்தத்தில் முடிந்தது.

நாட்டின் ஏனைய பாகங்கள் பொறாமைப்படக்கூடியதாக அமைந்த வடக்கின் உயர்ந்த கல்வித்தரத்தை உருவகித்து நின்ற பெறுமதிமிக்க நிறுவனங்களில் ஒன்றாக விளங்கியது அந்த நூலகம். அதனால் ஜனாதிபதியின் பேச்சில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் பற்றிய குறிப்பை உடனடியாக அவரின் ஊடகப்பிரிவு மறுதலித்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

மாவட்ட சபைகள் முறைக்கு புத்துயிர் அளிப்பதற்கான தனது விருப்பம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த மறைபுதிரான கருத்தின் உண்மையான அர்த்தத்தைப் பொறுத்தவரை அவரின் ஊடகப்பிரிவு அளித்த விளக்கத்தை நம்பமுடியும். ஆனால், சகல நிறைவேற்று தீர்மானங்களுக்காகவும் மத்திய அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கிடையில் ஒருங்கிணைப்புக்கான ஒரு களமாக மாவட்ட சபைகளை உருவாக்கும் யோசனை மிகவும் சி்கலானதாகும். பல்வேறு கமிட்டிகள் ஊடாக தீர்மானம் மேற்கொள்ளும் எந்தவொரு சாத்தியத்தையும் அது இல்லாமல் செய்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

அரசாங்கத்தின் ஒரு மட்டத்திற்குள் ஒருங்கிணைப்பே போதுமானளவு சிக்கலாக இருக்கிறது. பல்வேறு மட்டங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மேலும் சிக்கலாக இருக்கும். சாரதி ஆசனத்தில் இருவர் இருந்தால் என்ன நடக்குமோ அது போன்ற பிரச்சினையே இது. மாவட்ட செயலாளராகவும் பணியாற்றும் அரசாங்க அதிபர் யாருக்கு பொறுப்புக்கூறுவது? மத்திய அரசாங்கத்தின் பிரதியமைச்சரும் மாகாண அமைச்சரும் ஒரு உத்தியோகபூர்வ கூட்டத்தில் பங்கேற்கும்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறை என்ன?

இந்தக் கேள்விகள் கடந்த காலத்தில் கிளப்பப்பட்டிருந்தன. பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. பல அதிகாரப்பரவலாக்கல் அலகுகள் மேலும் குழப்பத்தை உருவாக்கும். இனநெருக்கடிக்கான தீர்வாக மாவட்ட சபைகள் யோசனையின் பொருத்தமின்மையை இன்னொரு பிரச்சினையின் ஊடாகவும் விளங்கிக்கொள்ளமுடியும்.

இனநெருக்கடிக்கான தீர்வாகவும் ஒவ்வொரு மாகாணத்தினதும் மக்களின் விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகள் தற்போது எதையும் செய்யவில்லை. மங்கள் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை அவை செயற்பாடின்றி கிடக்கின்றன.

கடந்த நான்கு வருடங்களாக மாகாண சபைகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர்களினால் நிருவகிக்கப்படும் நிருவாக அமைப்புக்களாகவே இயங்கிவருகின்றன. மாகாண மக்களுடன் கலந்தாலோசிக்காமல் ஆளுநர் தன்னெண்ணப்படி செயற்படலாம். இந்த காலப்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் கொண்ட நிறுவனங்களாக அன்றி மாகாண சபைகள் இப்போது துரதிர்ஷ்டவசமாக அரசின் மத்திய அதிகாரத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளாகவே விளங்குகின்றன.

நான்கு வருடங்களாக தேர்தல்களை நடத்த அனுமதிக்காமல் ஜனநாயக விரோத வழிமுறைகள் மூலமாக மாகாண சபைகளை வலுவிழக்கச்செய்த அரசாங்கத்தின் செயல் அந்தச் சபைகளை தமிழ்ச் சமூகம் நிராகரிப்பதற்கே ஊக்கம் கொடுக்கிறது. இனநெருக்கடிக்கான தீர்வின் பிரதான ஜனநாயக அங்கமாக மாகாண சபைகள் 1987ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. உள்ளூர் மட்டத்தில் பொருத்தமான விவகாரங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு ஒவ்வொரு மாகாணத்தின் மக்களுக்கும் அதிகாரத்தை வழங்குவதே மாகாண சபைகளின் நோக்கம். ஆனால், அந்த உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

சமஷ்டி முறைக்கான கோரிக்கை மீண்டும் முன்னரங்கத்துக்கு வந்திருப்பதற்கு இதுவே பிரதான காரணம். “தற்போது நடைமுறையில் உள்ள அரசுக்குள் சமஷ்டி முறையிலான அரசாங்கம் ஒன்றுக்காக குரல்கொடுப்பதை பிரிவினைவாதத்துக்காக குரல்கொடுப்பதாக கருதமுடியாது” என்று 2017 ஆகஸ்டில் அன்றைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இலங்கை தமிழரசு கட்சி தனியரசு ஒன்றை தோற்றுவிப்பதை அதன் நோக்கமாக – இலக்காக கொண்டிருக்கிறது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நேர்மறையான பிரதிபலிப்பு

இலங்கையின 75ஆவது சுதந்திர தினம் அளவில் இனநெருக்கடிக்கு தீர்வொன்றைக்காண தான் நோக்கம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செய்த அறிவிப்புக்கு பெரிய தமிழ் அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு (தமிழரசு கட்சியை பிரதான அங்கத்துவ கட்சியாகக் கொண்டது) அனுகூலமான முறையில் பதிலளித்திருக்கிறது. சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்று காணப்படவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உலகின் சனத்தொகையில் 40 சதவீதத்துக்கும் அதிகமான மக்களைக்கொண்ட 25க்கும் அதிகமான நாடுகள் சமஷ்டி முறையைக் கொண்டிருப்பதாகவும் அவை ஐக்கியப்பட்டவையாக இருப்பதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து மற்றும் மலேசியா போன்றவை சமஷ்டி அரசுகளுக்கு உதாரணங்களாகும்.

ஒரு மாகாண சபை ஆட்சிசெய்யப்படுகின்ற வகைமுறையை மத்திய அரசாங்கத்தினால் மாற்றமுடியாமல் இருக்கும் என்பதே சமஷ்டி அரசின் முக்கிய அம்சமாகும். குறிப்பாக நான்கு வருடங்களுக்கு மாகாண சபை தேர்தலை நியாயமில்லாத வகையில் நடத்தாமல் தனது விருப்பத்தின் பேரில் ஆளுநர்களை வைத்து மாகாணங்களை அரசாங்கத்தினால் நிருவகிக்க முடியாமல் இருக்கும்.

மறுபுறத்தில், 1950களில் தொடங்கி தமிழ் அரசியல் சமுதாயம் சமஷ்டி முறைக்கான கோரிக்கையை முன்வைத்த நேரத்தில் இருந்து சிங்கள அரசியல் சமுதாயம் அது நாட்டின் தேசிய சுயாதிபத்தியத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தானது என்று கூறி நிராகரித்தே வந்திருக்கிறது. சமஷ்டி நாட்டுப் பிரிவினைக்கான முதற்படியாக இருக்கக்கூடும் என்ற தவறான பயம் இருக்கிறது. சமஷ்டி அரசுகள் அவற்றில் இருந்த சமஷ்டி அலகுகளின் வழியில் பல நாடுகளாக சிதறுண்டதற்கு உதாரணமாக முன்னாள் சோவியத் யூனியனும் யூகோஸ்லாவியாவும் காட்டப்படுகிறது. இதேபோன்று நாடு பிளவடையாமல் பாதுகாப்பாக இருப்பதை ஒற்றையாட்சி முறையே உறுதிப்படுத்தும் என்பது சிங்களவர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால், இனங்களுக்கு இடையிலான உறவுகளை ஆக்கபூர்வமான முறையில் கையாளாத காரணத்தால் ஒற்றையாட்சி அரசுகள் கூட பிளவடைந்திருக்கின்றன. இதற்கு உதாரணமாக சூடானையும் (தென்சூடானாக பிளவடைந்தது) சேர்பியாவையும் (கொசோவோ) குறிப்பிடலாம். 2017ஆம் ஆண்டில் இலங்கை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுத்தெளிவுடனான தீர்ப்பை அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கிக்கூற வேண்டியது அவசியமானதாகும்.

பல்வேறு இனங்கள், மதங்களைக்கொண்ட பெரிய நாடு ஐக்கியப்பட்டதாக இருப்பது மாத்திரமல்ல பொருளாதார வல்லமையிலும் சர்வதேச மதிப்பிலும் மேலும் மேலும் பலமடைந்து கொண்டிருப்பதற்கு இலங்கையின் அயல் நாடான இந்தியா சிறந்த உதாரணமாகும். இந்திய அரசாங்க வடிவம் முற்றுமுழுதாக சமஷ்டியும் அல்ல, முற்றுமுழுதாக ஒற்றையாட்சியும் அல்ல. நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கேற்ப இந்த இரு வடிவங்களில் ஏதாவது ஒன்றை அது எடுக்கலாம். சமாதான காலத்தில் சமஷ்டியாகவும் நெருக்கடி காலத்தில் ஒற்றையாட்சியாகவும் அது மாறலாம்.

இதுவே 1987  சமாதான உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் இணங்கிக்கொண்ட தீர்வாகும். ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் அது திரிபுபடுத்தப்பட்டுவிட்டது.

13 பிளஸ் அடிப்படையில் தீர்வு குறித்த பேச்சுவார்த்தையை தான் ஆதரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறினார். தற்போதைய பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கையின் சிறந்த ஆபத்பாந்தவனாக இந்தியா இருந்துவருகிறது. ஏனைய நாடுகளை விடவும் இந்தியா இலங்கைக்கு கூடுதல் உதவிகளை வழங்குகிறது. இந்தியாவின் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அதன் அரசியல் ஆதரவுடன் இலங்கை நடைமுறைச் சாத்தியமான தீர்வொன்றைக் காணமுடியும்;  உண்மையில் ஐக்கியப்பட்ட ஒரு நாடாக பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நடைபோடமுடியும்.

கலாநிதி ஜெகான் பெரேரா