Photo, AP Photo/Eranga Jayawardena, HRW

தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுப்பது என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தற்போதைய சூழ்நிலையில் இயலாத ஒரு காரியமேயாகும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் ஒன்றுக்கான செலவு நாட்டுக்கு கட்டுப்படியாகாது என்ற வாதம் ஒரு புறமிருக்க, அரசாங்கத்தின் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். அண்மைக்காலமாக எடுத்த சில பொருளாதார நிவாரண நடவடிக்கைகள் மூலமாக தோன்றிய சூழ்நிலையை வழமைநிலை போன்று காண்பிக்க அரசாங்கம் முயற்சி செய்தாலும் அது ஒரு ஏமாற்று தோற்றப்பாடேயாகும்.

எரிபொருட்கள் உட்பட அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஒப்பீட்டளவில் தணிந்திருந்தாலும் கூட, அதிகப்பெரும்பான்மையான மக்களினால் வானளாவ உயர்ந்த விலையைச் செலுத்தி அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியும் இவ்வருடத்திற்குள் கிடைக்கக்கூடிய வாய்ப்பில்லை. அனேகமாக அடுத்த வருடம் மார்ச் இறுதியில்தான் அந்த உதவி கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம் மக்கள் முன் செல்வதற்கு தயங்கவே செய்யும். முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த எதிரணி கட்சிகள் இப்போது உள்ளூராட்சி தேர்தல்களில் கவனத்தைக் குவித்திருக்கின்றன. அடுத்த வருடம் மார்ச் மாத நடுப்பகுதியில் நடத்தப்படவேண்டியிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் இறங்கியிருப்பதாக அந்தக் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அந்தத் தேர்தல்களை ஒத்திவைக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சூளுரைக்கும் கட்சிகள் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால் இரத்தக்களரி ஏற்படும் என்று கூட எச்சரிக்கை செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால், உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைக்கும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்குக் கிடையாது என்று அரசாங்கத் தரப்பில் குறிப்பாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் இருந்தோ அல்லது பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்தோ எந்த உறுதிமொழியும் இதுவரை வரவில்லை. மாறாக, ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஏதோ ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் போன்று அண்மைய மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார்.

“நாட்டில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தேசியக் கொள்கை கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக பல தேர்தல்கள் நடத்தப்படும். இது தேர்தல்களை நடத்துவதற்கான நேரம் அல்ல. தேர்தல்களுக்காக கோரிக்கை விடுப்பவர்கள் நாட்டை சீர்குலைக்க விரும்புகிறார்கள். அந்த சக்திகள் விரைவில் அம்பலப்படுத்தப்பட்டு ஓரங்கட்டப்படுவார்கள் ” என்று அபேவர்தன கூறினார்.

இதனிடையே, நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் என்ற மூன்று மட்டங்களிலும் தேர்தல்முறை சீர்திருத்தங்களை ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் இரு வாரங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு ஒரிரு வாரங்கள் முன்னதாக துறைசார் நிபுணர்கள் குழுவொன்றுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க விரைவில் நியமிக்கப்படவிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அடுத்தவருடம் ஜூலை மாதமளவில் உறுதியான தீர்மானத்துக்கு வரத் தவறினால் நாடாளுமன்ற தேர்தல் முறை குறித்து தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கூறியிருந்தார்.

அதேவேளை, கடந்த வாரம் பிரதமர் குணவர்தன உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின்  முன்னாள்  தலைவரான மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஐவர் கொண்ட குழுவொன்றை நியமித்தார். உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரமாகக் குறைக்கும் நோக்குடன் உள்ளூராட்சி வட்டாரங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு இந்தக் குழுவுக்கு அடுத்தவருடம் பெப்ரவரி 28 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான அரசாங்கத்தின் ‘தந்திரோபாயமாகவே’ எதிரணி கட்சிகள் நோக்குகின்றன. ஆனால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரான எஸ்.ஜி.புஞ்சிஹேவாவும் உள்ளூராட்சி எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் தேசப்பிரியவும்  வெளியிட்ட கருத்துகள் தேர்தலை ஒத்திவைப்பதில் அரசாங்கம் எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை உணர்த்துபவையாக இருக்கின்றன.

நாட்டில் உள்ள 340 உள்ளூராட்சி சபைகளினதும் (275 பிரதேச சபைகள், 41 நகர சபைகள், 24 மாநகர சபைகள் ) பதவிக்காலத்தை 2023 மார்ச் 19 வரை ஒருவருட காலத்துக்கு அரசாங்கம் கடந்த ஜனவரியில் நீடித்தது. சட்டத்தின் பிரகாரம் 2023 மார்ச் 20 க்கு முன்னதாக சகல உள்ளூராட்சி சபைகளும் அமைக்கப்படவேண்டியவையாக இருக்கின்றன. அந்த திகதியில் அல்லது முன்னதாக சகல சபைகளையும் அமைப்பதற்கான ஆணை தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.

குறைந்தபட்சம் 2023 மார்ச் 20 க்கு இரு வாரங்கள் முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்திருக்கிறது. பெப்ரவரி இறுதியளவில் தேர்தல்களை நடத்தமுடியும். 2022 இடைக்கால பட்ஜெட்டில் அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 1000 கோடி ரூபாவை ஒதுக்கியிருப்பதால் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு நிதி ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை என்று புஞ்சிஹேவ ஊடகங்களுக்கு கூறினார்.

2022 க்கான தேர்தல் இடாப்பு கடந்த மாத முடிவில் பூர்த்தியாக்கப்பட்டிருக்கிறது. செப்டெம்பர் 30 அளவில் 18 வயதைப் பூர்த்திசெய்திருப்பவர்களின் பெயர்கள் அடங்கிய துணைப் பட்டியலை தயாரிக்கும் பணிகளில் ஆணைக்குழு இப்போது ஈடுபட்டிருக்கிறது. 2023 முற்பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தக்கூடியதாக நவம்பர் நடுப்பகுதியளவில் 2022 தேர்தல் இடாப்பு முழு நிறைவு செய்யப்பட்டுவிடும். புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கீழோ அல்லது தற்போதைய ஆணைக்குழுவின் கீழோ தேர்தல்கள் நடத்தப்பட்டு 2023 மார்ச் 20 அளவில் 340 உள்ளூராட்சி சபைகளையும் அமைக்கவேண்டியிருக்கிறது  என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, எல்லை நிர்ணயக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரியவும் தனது குழுவின் செயற்பாடுகள் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுவதை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தங்களுக்கு அடுத்தவருடம் பெப்ரவரி 28 வரை கால அவகாசம் இருப்பதால் அதற்குள் அல்லது அதற்கு முன்னதாக தங்களது பணியை நிறைவுசெய்ய இயன்றவரை முயற்சிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சி சபைகளின் வட்டாரங்களின்  தற்போதைய நடைமுறையில் உள்ள எல்லை நிர்ணயத்தின்படி அல்லது தனது தலைமையிலான குழு சமர்ப்பிக்கக்கூடிய புதிய எல்லை நிர்ணயத்தின் படி தேர்தல்களை நடத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் தேசப்பிரிய கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

புதிய எல்லை நிர்ணயக்குழு சமர்ப்பிக்கக்கூடிய அறிக்கையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கத் தவறினால் பிரச்சினை தோன்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்றம் அங்கீகரிக்கவில்லையானால் அறிக்கையை மீளாய்வுக்குழுவுக்கு அனுப்பவேண்டியிருக்கும். மீளாய்வுக்குழு அதன் அறிக்கையை இரு மாதங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கவேண்டும். ஆளும் பொதுஜன பெரமுன தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்கத் தயங்கி எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற்கு  இடையூறுகளைச் செய்யக்கூடிய சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்ற அபிப்பிராயமும் அரசியல் அவதானிகள் மத்தியில் இருக்கிறது.

இது இவ்வாறிருக்க, ஏற்கெனவே தேர்தல் முறை சீர்திருத்தங்கள் குறித்து பல வருடங்களாக தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பித்த போதிலும், எதற்காக புதியதொரு தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரை அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ கோருகிறார் என்ற கேள்வி எழுகிறது.

குணவர்தன தலைமையிலான தெரிவுக்குழு 2003ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. அதன் செயற்பாடுகள் சுமார் ஒரு தசாப்த காலம் நீடித்த போதிலும், இறுதியில் பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் கலந்த ஒரு முறையை கொண்டுவருவதற்கு பெரும்பாலும் சகல அரசியல் கட்சிகளும் இணங்கிக்கொண்டன.

ஆனால், சட்டத்தை குறைந்த பட்சம் உள்ளூராட்சித் தேர்தல்களுக்காவது மாற்றுவதற்கு ஒன்பது வருடங்கள் எடுத்த அதேவேளை அந்தத் தேர்தல்களை நடத்த 15 வருடங்கள் சென்றன. கலப்பு தேர்தல் முறைமூலம் நடத்தப்பட்ட 2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்கள் குளறுபடியாகவே அமைந்தன. அந்த தேர்தலில் பெருவெற்றி பெற்ற பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவே அந்தத் தேர்தல் முறையை மாற்றவேண்டும் என்று கோரினார். ஏனென்றால், அவரது கட்சி வெற்றிபெற்ற பல உள்ளூராட்சி சபைகளில் அவர்களுக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் இல்லாததால் தலைவர்களை நியமிக்கமுடியாமல் போனது.

மைத்திரி – ரணில் அரசாங்க காலத்தில் 2017 கலப்பு தேர்தல் முறையை மாகாண சபைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் கூட மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை வெளிவரவில்லை.

அதற்குப் பிறகு கோட்டபாய ராஜபக்‌ஷ அரசாங்க காலத்தில் 2021 ஏப்ரல் 5 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் மூலமாக மீண்டும் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் சீர்திருத்தங்களை அடையாளம் காண தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்தபோது கடந்த ஜூன் 22 அதன் இறுதி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கைக்கு என்ன நடந்தது? குணவர்தன தலைமையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய சுமார் 20 வருடங்களாக தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுக்காக எவ்வளவு நிதி விரயமாக்கப்பட்டிருக்கிறது பாருங்கள். இப்போது புதியதொரு தெரிவுக்குழு நியமிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. குணவர்தனவின் தெரிவுக்குழு இவ்வளவு காலமும் என்ன  ‘தேங்காயா துருவியது’ என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல கேட்டது சரியாகத்தான் இருக்கிறது.

இலங்கையில் அரசியலமைப்பு திருத்தங்கள் என்றாலென்ன தேர்தல் சீர்திருத்தங்கள் என்றாலென்ன நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு மேலாக அரசியல் கட்சிகளின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதே பிரச்சினையின் அடிப்படையாகும்.

வீரகத்தி தனபாலசிங்கம்