Photo, DNAINDIA

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்தவாரம் இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்தது. ஆனால், அது சாத்தியமாகவில்லை. இப்போது அக்டோபர் 20,21 திகதிகளில் அந்த விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானித்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை வலுப்படுத்தும் நோக்கிலான இந்தத் திருத்தச் சட்டமூல வரைவை (நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இது அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தமாகவே அமையும்) ஆகஸ்ட் முதலாம் திகதி அமைச்சரவை அங்கீகரித்திருந்தது. ஆனால், இரு மாதங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட நிலையிலும் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற கட்சிகள் மத்தியில் விரிவான கலந்தாலோசனை நடத்தப்படவில்லை. விவாதம் குறித்து தீர்மானிக்கும் முன்னதாக கருத்தொருமிப்பை ஏற்படுத்தவேண்டும் என்று அரசாங்கம் அக்கறைப்படவில்லைப் போலும். எதிர்க்கட்சிகள் மாத்திரமல்ல, ஆளும் பொதுஜன பெரமுனவும் கூட மாறுபட்ட கருத்துக்களையே சட்டமூலம் தொடர்பில் அடிக்கடி வெளியிட்டுவந்தததைக் காணக்கூடியதாக இருந்தது.

மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்திருந்த வேளையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவும் மீண்டும் 19ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகக்  கூறினார். அது மாத்திரமல்ல, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு  முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் கூட ஆதரிக்கத்தயாராயிருப்பதாகவும் அவர் கூறினார் என்பதையும் நாம் மறந்துவிடவில்லை.

அந்த வேளையில் 22ஆவது திருத்தத்தை வரைந்த அதே  நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவே இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் 22ஆவது திருத்தத்தை வரைந்திருக்கிறார். முன்னைய வரைவைப் போன்று தற்போதைய வரைவு இல்லை என்று கூறப்பட்டது. அந்த வரைவை நியாயப்படுத்திப் பேசிய விஜேதாசவே இந்த வரைவு குறித்து விளக்கங்களை அளித்ததையும்  காணக்கூடியதாக இருந்தது.

அக்டோபர் 6,7 திகதிகளில் இந்தத் திருத்தச்சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அரசியல் சீர்திருத்த செயன்முறைகளுக்குப் பெரிதாக ஒத்துழைப்பை வழங்குவதில் நாட்டமில்லாத அணுகுமுறையை எதிர்க்கட்சிகள் கடைப்பிடித்துவரும் நிலையில், ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை நாடாளுமன்றத்தில் பெறுவது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும் கூட  விவாதத்தை நடத்த ஏன் அரசாங்கம் முன்வந்தது என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தது.

கடந்த வார தொடக்கத்தில் 22ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு புதிய முட்டுக்கட்டைகள் வெளிப்பட ஆரம்பித்தன. இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பவர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு வந்து அரசியல் பதவிகளை வகிப்பதை மீண்டும் தடை செய்யும் ஏற்பாடு அடங்கிய எந்தவொரு திருத்தத்தையும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கமாட்டார்கள். ஏனென்றால், அந்தக் கட்சியை இயக்கிக்கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இலங்கை குடியுரிமையையும் அமெரிக்க குடியுரிமையையும் கொண்டவர். தங்கள் தலைவருக்கு பாதகமாக அமையக்கூடிய எந்த ஏற்பாட்டையும் அவர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பதால்தான் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை வெறுக்கிறார்கள் என்று பார்த்தால் இப்போது அவர்கள் வேறு காரணங்களையும் முன்வைக்கிறார்கள்.

கடந்த திங்கட்கிழமை அரசாங்க நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் திருத்தச்சட்டமூலம் கலந்தாலோசனைக்கு எடுக்கப்பட்டபோது அதை தற்போதைய வடிவில் ஏற்கத்தயாரில்லை என்று பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

அரசியலமைப்பின் ஒற்றையாட்சி குணாம்சத்தை பாதுகாக்கக்கூடிய முறையில்தான் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று மாறாத ஒரு நிலைப்பாட்டை தங்கள் கட்சி கொண்டிருப்பதாக ஊடகங்களுக்கு கூறிய பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் இடைக்கால ஏற்பாடுகளாக அரசியலமைப்புக்கு  திருத்தங்கள் கொண்டுவரப்படக் கூடாது என்றும் சொன்னார்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு  முழு அதிகாரத்துடனான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி காரணமாகவே நாட்டின் ஒற்றையாட்சித்தன்மை பாதுகாக்கப்படுகிறது. அதனால் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எந்தவொரு திருத்தமும் ஒற்றையாட்சி தன்மை மீது தாக்கத்தைக் கொண்டிருக்கும். துண்டு துண்டாக அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டுவருவதை விடவும் அரசியலமைப்பை முழுமையாக மாற்றுவதில்தான் கவனம் செலுத்தவேண்டும் என்று காரியவாசம் ஒரு விளக்கம் கூறினார்.

இதனிடையே, பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்க நாட்டில் உறுதிப்பாட்டைப்  பேணவும் தற்போதைய கட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் அவசியம் என்று கூறினார்.

1988/89 ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆயுதக்கிளர்ச்சியை ஜனாதிபதி பிரேமதாசவும் விடுதலை புலிகளுடனான போரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவர்களிடம் இருந்த நிறைவேற்று அதிகாரங்களே காரணம். ஜே.வி.பி.மற்றும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி போன்றவை மீண்டும் நாட்டில் அராஜகத்தை தோற்றுவிக்கும் ஆபத்து இருப்பதால் அதைத் தடுக்க நிறைவேற்று அதிகாரங்கள் தேவை என்றும் அண்மைக்கால சரித்திரத்தில் எதேச்சாதிகார ஆட்சியாளர்களே நாடுகளை அபிவிருத்தி செய்திருக்கிறார்கள்; அதற்கு சிங்கப்பூர் ,சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் சிறந்த உதாரணம் என்றும் கேட்டுக்கேட்டு சலித்துப்போன வாதங்களையும் திசாநாயக்க கடந்தவாரம் முன்வைத்தார்.

60,000 க்கும் அதிகமான கிளர்ச்சியாளர்களைக் கொலைசெய்து ஜனாதிபதி பிரேமதாச கிளர்ச்சியை ஒடுக்கியதை இன்று வரவேற்றுப் பேசும் திசாநாயக்க 1989ஆம் ஆண்டில் முதற்தடவையாக நாடாளுமன்றத்துக்கு வந்தபோது அன்றைய அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளை எந்தளவுக்கு கர்ணகடூரமாக சபையில் கண்டனம் செய்தார் என்பதை ஹன்சார்ட்டை புரட்டிப்பார்த்தால் புரிந்துகொள்ளமுடியும். இது அவரது சந்தர்ப்பவாத அரசியல் வாழ்க்கையின் இன்னொரு பக்கம்.

எதேச்சாதிகார ஆட்சியாளர்கள்தான் நாடுகளை முன்னேற்றினார்கள் என்றால் ஜனாதிபதி கோட்டபாய ஏன் தோல்வி கண்டார் ? அவர் குறைந்தளவு எதேச்சாதிகாரம் கொண்டவராகவா இருந்தார்? திசாநாயக்கவிடம் விடை வேண்டி நிற்கும் கேள்வி இது.

பொதுஜன பெரமுனவிடமிருந்து வருகின்ற இத்தகைய கருத்துக்கள் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அவர்களிடமிருந்து தொடர்ந்து முட்டுக்கட்டைகள் வரும் என்பதை வெளிக்காட்டுகின்றன. அடிப்படையில் அவர்கள் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதை விரும்பவில்லை. அத்துடன், பொதுஜன பெரமுன உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தில் நான்கு வருடங்கள் கடந்த பின்னரே அதைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருக்கக்கூடிய வகையில் புதிய திருத்தத்தில் ஏற்பாடு புகுத்தப்படவேண்டும் என்று கோருகிறார்கள்.

தற்போதைய ஏற்பாட்டின் படி இரண்டரை வருடங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியும். அதன் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தங்களில் பலருக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இவர்களில் பலர் முதற்தடவையாக நாடாளுமன்றம் வந்திருக்கிறார்கள். முழுமையாக ஐந்து வருடங்களை பூர்த்திசெய்தால் மாத்திரமே அவர்களுக்கு ஒய்வூதியம் கிடைக்கும்.

ஏற்கெனவே 19ஆவது திருத்தத்தில் நான்கரை வருடங்களுக்குப் பிறகே ஜனாதிபதி நாடாமன்றத்தைக் கலைக்கமுடியும் என்ற ஏற்பாடு இருந்தது. அதை இரண்டரை வருடங்களாக இவர்களின் தலைவர்களான ராஜபக்‌ஷர்கள்தான் 20ஆவது திருத்தத்தில் குறைத்தார்கள். அப்போது அதை ஆதரித்துக் கைதூக்கியவர்கள் தான் இவர்கள் எல்லோரும்.

ஜனாதிபதியாக  இன்னொரு ராஜபக்‌ஷ தலைமையில் ஆட்சியதிகாரத்துக்கு மீண்டும் வருவது குறித்தும் இவர்கள் கனவு காண்கிறார்கள்.

அதேவேளை, எதிரணி கட்சிகளிடம் இருந்தும் அடிக்கடி மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருப்பதால் திருத்தச்சட்டமூலம் தொடர்பில் அவர்களது இறுதி நிலைப்பாட்டை அறிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி விக்கிரமசங்க பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் புதனன்று கேட்டிருந்தார்.  ஆனால், பிரதமர் அந்தக் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினாரா இல்லையா என்பதை பற்றி செய்தி எதுவும் வரவில்லை.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவும் இந்த விடயத்தில் ஆரம்பத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து விலகிவிட்டதாக ஜனாதிபதி உணர்கின்ற அதேவேளை ஜே. வி.பியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க தங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் சேர்க்கப்படாவிட்டால் திருத்தச்சட்ட மூலத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடைசெய்வதற்கும் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கும் பதில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 மாதங்களாக வரையறை செய்வதற்குமான ஏற்பாடுகள் திருத்தச்சட்டமூலத்தில் சேர்க்கப்படவேண்டும் என்ற யோசனைகளை தாங்கள் முன்வைத்ததாக திசாநாயக்க தனது கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார்.

ஜனாதிபதியை நியமிப்பதற்கு நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடு திருத்தப்படவேண்டும். இந்த ஏற்பாடு நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்படும் ஒருவர் சில வருடங்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியில் தொடருவதற்கு வழிவகுக்கிறது. இது மக்களின் இறைமையை பிரதிபலிப்பதாக இல்லை. அதனால் ஜனாதிபதி பதவி காலியாகும் பட்சத்தில் தற்காலிக ஜனாதிபதியாக ஒருவரை 6 மாதங்களுக்கு நியமித்துவிட்டு புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கு தேர்தல் நடத்தப்படக்கூடியதாக ஏற்பாடு அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் சேர்க்கப்படவேண்டும் என்று தாங்கள் யோசனையை முன்வைத்திருப்பதாக ஜே.வி.பி. தலைவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, இன்னொரு புறத்தில் 22ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும்போது நாட்டுப்பிரிவினைக்கு எதிராக தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு அடிப்படையிலான பாதுகாப்பு உத்தரவாதங்களை பலவீனப்படுத்தக்கூடிய திருத்தங்களை குழுநிலையில் (நீதித்துறையின் ஒப்புதலின்றி) அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக கிளம்பியிருக்கும் அச்சம் இந்த திருத்தச்சட்டமூலத்துக்கு வெளிக்காட்டப்படும் பெருமளவு எதிர்ப்புக்கு காரணம் என்று சிங்கள தேசியவாத சக்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் எழுதுவதை அவதானிக்கக்கூடியதாக  இருக்கிறது.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி சமஷ்டி முறைக்கு வழி திறந்துவிடுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக வல்லாதிக்க நாடுகளிடம் இருந்து ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு நெருக்குதல் கொடுக்கப்படுவதாக எதிர்ப்பாளர்கள் வாதிடுவதாகவும் அந்த வாதம் ஆதார அடிப்படை அற்றது அல்ல என்றும் அந்தப் பத்திரிகைகள் கூறுகின்றன. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் சட்டமூலங்களைக் கொண்டுவந்தபோது நாடாளுமன்றத்தில் குழு நிலையில் கேள்விக்கிடமான பிரிவுகளை புகுத்தி தங்களது நோக்கங்களை  நிறைவேற்றிக்கொண்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு என்றும் அவை குறிப்பிட்டிருக்கின்றன.

இத்தகைய பின்புலத்தில், கடும்போக்கு சிங்கள தேசியவாத முக்கியஸ்தர்களில் ஒருவரான பேராசிரியர் நளின் டி சில்வா கடந்தவாரம் தெரிவித்த கருத்துக்களை நோக்கவேண்டியிருக்கிறது.

குறிப்பிட்ட எந்தவொரு சட்டமூலத்துக்கும் நாடாளுமன்றத்தில் குழுநிலையில் அறிமுகப்படுத்தப்படக்கூடிய திருத்தங்களுக்கும் நிச்சயமாக உயர்நீதிமன்றத்தின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

தற்போது எந்தவொரு சட்டமூலமும் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெற்றதும் அது அரசியலமைப்புக்கு இசைவானதாக இருக்கிறதா இல்லையா என்று உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்துக்காக அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட சட்ட மூலத்தின் ஏதாவது ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு  முரணாக இருந்தால் அதை எவ்வாறு நிறைவேற்றவேண்டும் என்ற விதப்புரைகளை உயர்நீதிமன்றம் செய்கிறது. அதன் பிரகாரம் அரசியலமைப்புக்கு இசைவான முறையில் அந்த ஏற்பாடுகளில் குழுநிலையின்போது அரசாங்கம் மாற்றங்களை செய்து நிறைவேற்றுவதே வழமையான நடைமுறையாக  இருந்துவருகிறது.

அவ்வாறு செய்யும்போது சில அரசாங்கங்கள் அவற்றின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்புக்கு முரணானவையாக அமையக்கூடிய சில ஏற்பாடுகளை சட்டமூலங்களுக்குள் ஒளிவுமறைவாக புகுத்தியதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக நீதித்துறையின் அபிப்பிராயத்தைப் பெறுவதற்காக அனுப்பப்படுகிறதே தவிர, அது சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு நீதித்துறை மீளாய்வுக்கு அரசியலமைப்பில் எந்த ஏற்பாடும் இல்லை.

22ஆவது அரசியலமைப்பத் திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் கிளப்பப்படுகின்ற அச்சத்தின் பின்னணியில் பேராசிரியர் நளின் டி சில்வா குழு நிலையில் திருத்தியமைக்கப்பட்ட சட்டங்களும் நீதித்துறையின் மீளாய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் ஒப்புதல் கிடைத்த பின்னரே சபாநாயகர் கையெழுத்திட்டு அதை சட்டமாக பிரகடனம் செய்யவேண்டும்; உயர்நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கும் வரை  திருத்தியமைக்கப்பட்ட சட்டமூலத்தில் சபாநாயகர் கையழுத்திடுவதை தடுக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்று கொண்டுவரப்படவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கிறார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு கோரிக்கை மும்முரமாக எழுப்பப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இலங்கையின் ஐக்கியம், சுயாதிபத்தியம், ஒற்றையாட்சித்தன்மை ஆகியவற்றுடன் ஜனாதிபதியின் அதிகாரங்களை இன்றியமையாதவையாக தொடர்புபடுத்துவது  சிங்கள தேசியவாத சக்திகளின் சுபாவமாகும்.

அத்துடன், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதானால் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குகின்ற ஏற்பாடுகளைக்கொண்ட 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையும் இல்லாமல் செய்யவேண்டும். ஏனென்றால், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் அவரால் நேரடியாக நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களூடாகவே மாகாணங்களில் செயற்படுத்தப்படுகிறது. மாகாணங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒற்றையாட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற வாதத்தை முன்வைப்பதையும் அந்த சக்திகள் வழக்கமாக கொண்டுள்ளன. ஏதோ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இல்லையென்றால் மாகாணங்களை நிருவகிக்க நாடாளுமன்ற ஆட்சிமுறையினால் ஆளுநர்களை நியமிக்கமுடியாது என்பது போல.

இந்த வாதத்தைப் பொறுத்தவரை விசித்திரம் என்னவென்றால் இவ்வாறாக ஜனாதிபதி ஆட்சிமுறைக்கும் 13ஆவது திருத்தத்துக்கும் இடையே ஒரு முடிச்சைப்போட்டு அந்த ஆட்சிமுறையை ஒழிப்பதை கடுமையாக எதிர்ப்பதில் முன்னணியில் நின்றுவரும் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ வரைந்த 22ஆவது திருத்தச் சட்டமுலத்தை எதிர்ப்பதற்கு அவர் முன்வைத்த வாதமே பயன்படுத்தப்படுகிறது. அவர் நிச்சயமாக சிங்கள தேசியவாத சக்திகளை ஏமாற்றமாட்டார்.  அதனால் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளை எதிர்ப்பதை – அதுவும் நாட்டு மக்கள் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்று கிளர்ச்சி செய்த பின்புலத்தில் – சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்த இனவாத நோக்குடன் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சிங்கள தேசியவாத சக்திகள் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு மாத்திரம் எதிரானவர்கள் அல்ல, அடிப்படையில் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் முற்போக்கான அரசியல் அபிலாசைகளுக்கும் விரோதமானவர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதிகள் மீறப்பட்டதற்கு ஒரு வரலாறு இருப்பதைப் போன்றே ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்புச் செய்வதற்கான அரசியலமைப்புத்திருத்த செயன்முறைகளுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 2001ஆம் ஆண்டில்  நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 17ஆவது அரசியலமைப்பு திருத்தமே ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்புச் செய்வதற்கு  முன்னெடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகும் .முக்கியமான அரச நிறுவனங்களை அரசியல்மய நீக்கம் செய்வதற்கு அரசியலமைப்பு பேரவையும் சுயாதீன ஆணைக்குழுக்களும் நிறுவப்படுவதற்கு அது வழிவகுத்தது. ஆனால், அந்த பேரவையோ அல்லது ஆணைக்குழுக்களோ உகந்த முறையில் செயற்பட நிறைவேற்று அதிகாரம் அன்று ஒழுங்காக ஒத்துழைத்தது என்று கூறிவிடமுடியாது.

ஒன்பது வருடங்களுக்கு பிறகு அந்த அரசியலமைப்புத் திருத்தம் ரத்துச்செய்யப்பட்டு மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின்போது 2010ஆம் ஆண்டு ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளநிலைநிறுத்த 18ஆவது  திருத்தம் கொண்டுவரப்பட்டது.

மீண்டும் மைத்திரி – ரணில் அரசாங்க காலத்தில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலமாக பிரதமரினதும் நாடாளுமன்றத்தினதும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களது  அரசியல் நலன்களுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக இரு அதிகார மையங்களாக செயற்பட்டதனால் அரச நிருவாகம் சீர்குலைவுக்குள்ளானது.

பிறகு மீண்டும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ ஆட்சியில் 2020 பிற்பகுதியில் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்க 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலமாக முன்னைய ஜனாதிபதிகள் சகலரையும் விட அதிகூடுதல் அதிகாரங்களை தன்வசம் கொண்டவராக கோட்டபாய விளங்கினார். ஆனால்,அவரே படுமோசமாக தோல்வி கண்ட இலங்கை ஜனாதிபதியாக இன்று அபகீர்த்திக்குள்ளாகி நிற்கிறார். முன்னைய எந்த இலங்கை ஜனாதிபதியும் பதவிக்காலத்தின் இடைநடுவில் பதவியில் இருந்து அதுவும் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறி பதவி துறந்ததில்லை.

மேற்கூறப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தை திரும்பிப்பார்க்கும்போது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் நகைப்புக்கிடமான  ஒரு தொடர்  நடத்தையை அவதானிக்கமுடியும். அதாவது 17,18,19,20 என்று இந்த நான்கு திருத்தங்களும் மாறிமாறி முரண்பட்டவையாக இருந்தபோதிலும் இவற்றை எந்த அசௌகரியமும் இல்லாமல் ஆதரித்த பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் தற்போதைய நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கிறார்கள். தற்போதைய அரசியலமைப்புத் திருத்தம் சபையில் வாக்கெடுப்புக்கு வருமானால் இவர்களின் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை மீண்டும் ஒரு தடவை எம்மால் காணக்கூடியதாக இருக்கும்.

22ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட முடியாமல் போனால் அதனால் உடனடியாக பயனடையப்போகிறவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான். முழு அதிகாரங்களுடன் அவர் ஜனாதிபதியாக அடுத்த இரு வருடங்களுக்கு இருப்பார்.

மக்கள் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர் அரசியல் வர்க்கம் அதன் வழமை நிலைக்கு திரும்பிவிட்டது என்பதையே இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாம் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.

வீரகத்தி தனபாலசிங்கம்