தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பது குறித்து தேசிய மட்ட பிரதான அரசியல் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, தினேஷ் குணவர்தன, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்‌ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திசாநாயக ஆகிய ஒவ்வொருவர் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் அளவு தொடர்பில் ஆராயப்பட்டபோது அநுரகுமார திசாநாயக மீதே அதிகளவான மக்கள் (48.5%) நம்பிக்கை கொண்டுள்ளமை சோஷல் இன்டிகேட்டரினால் சமீபத்தில் நடாத்தப்பட்ட அபிப்பிராய ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பது குறித்து ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த மக்கள் முறையே 36.6% மற்றும் 29.1% ஆகும். டலஸ் அழகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் மீது நம்பிக்கை தெரிவித்தவர்கள் முறையே 23.7% மற்றும் 18.3% ஆகும். இத்தலைவர்களில் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சரியான தீர்மானங்களை எடுபது குறித்து ஆகக்குறைந்தளவு (11.9%) மக்கள் நப்பிக்கையைப் பெற்றவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆவார்.

சோஷல் இன்டிகேட்டரானது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணிப்பீட்டாய்வுப் பிரிவாகும். சோஷல் இன்டிகேட்டரால் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச் சுட்டி (3ஆவது அலை) ஆய்வினது முடிவு அறிக்கையிலேயே மேற்படி முடிவுகள் வெளிவந்துள்ளன. வெளிக்களப்பணிகள் 2022, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட  இவ் ஆய்வானது இலங்கை தற்போது முகம்கொடுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் பொதுமக்களின் அனுபவங்களையும், ஆர்ப்பாட்டம் மற்றும் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பான பல்வேறுபட்ட அம்சங்கள் பற்றிய அபிப்பிராயங்களையும் அறிந்துகொள்ளும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. ஆய்வின் முழுமையான அறிக்கையை இங்கே பார்வையிடலாம்.