Photo, Selvaraja Rajasegar

புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துள்ள ரணில் ஊடகங்களுக்கு வழங்கிய முதலாவது செவ்வியில் தான் கோகோட்டாகமவினை பாதுகாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் இப்போராட்டம் வன்முறையாக இல்லாதவிடத்து அவர்களால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். ராஜபக்‌ஷ அரசாங்கம் எவ்வழியிலாவது இப்போராட்டத்தை செயலிழக்க செய்ய இவ்வளவு காலமும் தம்மால் இயன்றளவு முயற்சித்த நிலையிலேயே இவர்களின் கூற்றுக்கள் வெளியாகியுள்ளன. இப்போராட்டத்தை செயலிழக்க வைக்க அரசாங்கம் பல்வேறுபட்ட மூலோபாயங்களை பயன்படுத்தியது. அத்துடன், இறுதியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அரச முக்கியஸ்தர்கள் தம்மைப் பாதுகாக்க ஓடி ஒளிந்து கொண்ட நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தும் அளவுக்கு தோல்வியில் முடிந்தது. தமிழ் மக்களை தமது எதிரிகள் என வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட இவர்கள் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து காணாமல் ஆக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். அவ்வாறான இளைஞர்களை சித்தரவதை செய்து கொல்வதற்குப் பயன்படுத்திய இடமொன்றிலேயே இறுதியில் தமது உயிரைப் பாதுகாக்க ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட ஒரு நபரின் மனைவி இது தொடர்பில் தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிபடுத்தினார்: “அவர்களின் கட்டளைப் பிரகாரம் எனது கணவன் கொல்லப்பட்டதைப் போன்று அவர்களும் மூச்சடைத்து இறக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.”

மஹிந்த ராஜபக்‌ஷ பங்கருக்குள் ஒளிந்து கொண்டது இறுதி யுத்தத்தில் அட்டூழியங்களை மேற்கொண்டு சரியாக 13 வருடங்கள் கடந்த பின்னர் வந்த தினமொன்றில் ஆகும். யுத்தத்தின் இறுதித் தருணங்களில் பலர், குறிப்பாக தீவிர காயங்களுக்கு உள்ளானோர், பங்கர்களுக்குள் தமது உயிர்களையாவது காப்பாற்றும் நோக்கில் தஞ்சமடைந்தனர். இந்த பங்கர்கள் அனைத்தும் யுத்தக் குற்றங்களுக்கான சான்றுகளை அழிக்கும் நோக்கில் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளிருந்தோர் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு கிட்டியது இயற்கை நீதி அல்லது கர்மாவாக இருக்கலாம். மக்கள் போராட்டம் ராஜபக்‌ஷர்களை இந்நாட்டுக்கு தேவையற்ற மிகவும் தீங்கான குடும்பமாக மாற்றியுள்ளதுடன் அவர்களுடன் இணைந்துள்ள சிலரை தமது உயிரைக் காப்பாற்றும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இலங்கைக்கு பிரச்சினையை ஏற்படுத்த மற்றும் நாட்டை துண்டாட முனைகின்றன என அண்மையில் அவர்களால் குறைகூறப்பட்ட நாடுகளிடமே அரசியல் தஞ்சம் கோரும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற இரவிலும் கோட்டாகோகம (GGG) இளைஞர்கள் தமது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காண்பிக்காமல் அதே உணர்வுடன் ‘கோட்டாவே வீட்டுக்கு போ’ மற்றும் ‘டீல் அரசியலுக்கு இடமில்லை’ என கோசமிட்டவாறு தமது முந்தைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்தினர். அண்மையில் அரசாங்கத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முன்னெடுத்த வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து மக்கள் அரச தரப்பு அரசியல்வாதிகள் மீது காண்பித்த எதிர் வன்முறை என்பன நாட்டில் மிக அதிகமாக வெறுக்கப்படும் நபரினால் வழங்கப்பட்ட பதவியை மறுக்கும் நிலைக்கு சஜித், அனுர மற்றும் சரத் பொன்சேகா போன்றோரை தள்ளியது. கோட்டாகோகம முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா நிலையில் அப்பதவியை பெறுவதற்கு ஏனையோர் விரும்பவில்லை. எனினும், ரணில் இதனை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் என்ன பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன மற்றும் ரணில் ஏன் இப்பதவியை உடனடியாக ஏற்கவேண்டும் என்பது தொடர்பில் மக்களுக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை. ரணில் மாத்திரமே பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் IMF இன் உதவியை விரைவுபடுத்தவும் பொருத்தமான அரசியல்வாதி என்ற விடயமா? அல்லது, சர்வதேச சமூகத்தால் விரும்பப்படும் நபராக அவர் உள்ளார் என்பதனாலா இந்நியமனம் இடம்பெற்றது? அல்லது தற்போது முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்தை வன்முறை அல்லது அழுத்தத்தை பிரயோகிக்காமல் அமைதியாக செயலிழக்க செய்யக்கூடியர் என்பது இந்நியமனத்துக்குக் காரணமாக அமைகின்றதா? ரணிலின் பிரித்தாளும் தந்திரம் பற்றி நன்கு அறிந்தவர்களாக ராஜபக்‌ஷர்கள் உள்ளனர். ஒற்றை நோக்குடன் ஒரே தலைமைத்துவத்துடன் பயணித்த மற்றும் அனைவரையும் அச்சத்துக்கு உள்ளாக்கிய உறுதியான கட்டமைப்பான LTTE அமைப்பினை பிளவுபடுத்திய நபராக ரணில் அறியப்படுகின்றார். LTTE அமைப்பின் கிழக்கு பிராந்திய கட்டமைப்பில் நிலவிய புதைந்து காணப்பட்ட மனக்குறைகளை அவ்வமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்க வெற்றிகரமாகப் பயன்படுத்திய ஒரு நபராக ரணில் அறியப்படுகின்றார். அதுவே LTTE இன் வீழ்ச்சிக்கு வித்திட்டது. அதன் பின்னர் ராஜபக்‌ஷர்கள் மிகவும் கொடூரமான முறையில் சர்வதேசத்தின் அதிருப்திக்கு மத்தியில் யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் அது தொடர்பான பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வைக்கும் மீட்பராக ரணில் மறு அவதாரம் எடுத்தார். சில தமிழ் பிரதிநிதிகள் கூட அவரை தமது மீட்பராக எண்ணும் அளவுக்கு அவரின் தந்திரமான செயற்பாடுகள் அமைந்திருந்தன. ராஜபக்‌ஷர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களில் இருந்து ரணில் தம்மை பாதுகாப்பார் என முஸ்லிம் சமூகமும் நம்பியிருந்த வேளை ரணிலின் நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்த காலத்திலேயே முஸ்லிம் சமூகத்தின் மீது மிக மோசமான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் இலங்கைக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை வழங்குவதில் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை மற்றும் கடப்பாடு என்பவற்றின் ஊடாக ராஜபக்‌ஷர்களின் சூழ்ச்சிகளை முறியடித்துள்ளனர். நாட்டின் வேறுபட்ட பாகங்களில் வேறுபட்ட வடிவங்களில் இந்த மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டிருந்த ராஜபக்‌ஷர்கள் இப்போராட்டம் காரணமாக எளிய பெரும்பான்மை பலத்தையும் இழந்து சரிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறுபட்ட போராட்டங்களை ஒன்றிணைத்த மற்றும் நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த எதிர்ப்பு இயக்கம் மே 09 அன்று இடம்பெற்ற குழப்பங்கள் காரணமாக மக்களின் அதிக கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் விடயமாக மாற்றமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முயற்சித்த ராஜபக்‌ஷர்கள் அதில் தோல்வியுற்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை ஒரு ஆழமான இருள் சூழ்ந்த குழிக்குள் தள்ளும் பணியை தமது சார்பில் முன்னெடுப்பதற்கு அவர்களின் விருப்பத்தை எப்போதும் பெற்றுள்ள ரணில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தொகுதி மக்களால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட நபர் ஒருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதில் காண்பிக்கப்பட்ட அவசரம் கோட்டா மற்றும் ஏனைய ராஜபக்‌ஷர்கள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக போராட்ட இயக்கத்தை நலிவு படுத்துவதற்காக எவ்வாறு காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் ரணில் கோட்டா வீட்டுக்கு போக வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் முதன்மையான கோரிக்கையை மறுத்துள்ளதுடன் இப்போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த நிலைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவித்துள்ளார்.

மிரிஹான பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது அரசாங்கத்தால் தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் (இஸ்லாமிய) தீவிரவாதிகள் எனச் சித்தரிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்து மற்றும் அங்கு வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சென்று பார்வையிட்ட சிலர் தற்போது போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் தீவிரவாதிகளா (இம்முறை சிங்கள தீவிரவாதிகள்) என்ற விவாதத்தை ஆரம்பித்துள்ளனர். இது மழுப்பலான மற்றும் தப்பிக்க முயற்சிக்கும் கூற்றாக அமைந்துள்ளது.

அமைதியான ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டிருந்த குழுக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேறுபட்ட கருத்துக்களையும் வெளியிட ஆரம்பித்துள்ளனர். வெளிப் பிராந்தியங்களில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளை எடுத்துரைக்க பலர் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட முயற்சிகளும் அங்கீகரிக்கப்படவில்லை. 8 அம்ச முன்மொழிவு ஒன்றை என்னால் காண முடிந்தது, அம்முன்மொழிவுகள் மற்றும் அவை முன்வைக்கப்பட்ட விதம் என்பன ஒரு மாத கால போராட்டத்தில் இப்போராட்டக்காரர்கள் அடைய முயற்சித்த விடயங்களுக்கு ஏற்புடையதாக அமையவில்லை என்பதே என் கருத்தாகும். மேலும், இப்போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளும் போராட்டத்தின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடும்  உள்ளது. இக்கோரிக்கைகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட தோற்றப்பாட்டை அவதானிக்க முடிகின்றது. நிச்சயமாக, இவ் அமைதியான போராட்டங்கள் நீர்த்துப் போவதையும் மீளப்பெறப்படுவதையும் மிகவும் விரும்பும் நபராகவே அவர் காணப்படுகின்றார். மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் இவ்வாறான முயற்சிகளை தயவு செய்து மேற்கொள்ளாதீர்கள். நீங்கள அனைவரும் சமுதாயத்தின் முக்கிய சின்னங்களாகவும் முறைசார் அரசியல் மாற்றம் ஒன்றுக்கான சிற்பிகளாகவும் அதற்கான கருவிகளாகவுமுள்ளீர்கள், உங்களை போன்ற இளைய சமுதாயம் ஒன்றை காண்பதற்காகவே நாம் பல வருடங்களாக காத்துக் கிடந்தோம். காலி முகத்திடல் போராட்டம் இந்த அரசியல் மாற்றத்தின் எதிர்பார்ப்பின் அடையாளமாக உள்ளது. பல்வேறுபட்ட போராட்டங்கள் இடம்பெற்ற வேளையிலும் காலி முகத்திடல் போராட்டத்தின் அதிர்வு மிகவும் பரந்ததாகவும் நீண்ட தூரங்களைச் சென்றடைவதாகவும் காணப்படுகின்றது. உங்களின் உண்மையான கொள்கைகள் மற்றும் இலக்குகள் என்பன எம்முடனும் பகிரப்பட்ட விடயங்களாக மற்றும் பற்றுறுதிமிக்கனவாக அமைகின்றன. இக்கொள்கைகள் மற்றும் இலக்குகளில் இருந்து நாம் விலகிச் செல்வது ஒரு தீய செய்தியையே இந்நாட்டுக்கு சொல்வதாக அமைந்துவிடும். இவ்வாறான நியமனங்களை நாம் ஆமோதிப்பதன் மூலம் எமது இலக்குகள் மற்றும் கொள்கைகளை விட்டுக்கொடுக்கின்றோம். நாம் தற்போதைய நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக மாத்திரம் போராடவில்லை, எமது மக்களையும் நாட்டையும் இந்த துயரத்துக்குள் தள்ளிய அதே நபர்கள் மாறி மாறி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக நாம் போராடவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிராந்தியங்கள் முக்கியமானவை. வெளிப் பிராந்தியங்களில் நிலவும் பிரச்சினைகள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அப்பிரச்சினைகள் எம் அனைவரையும் பாதிக்கும் தேசிய நெருக்கடி நிலையின் அடித்தளமாக அமைந்துள்ளன. கொழும்பு மாத்திரம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில்லை. தேர்தல் நடத்தப்பட வேண்டும் மற்றும் புதிய முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்றே நாம் வலியுறுத்தி வருகின்றோம். இந்நாட்டில் நடந்த விடயங்களுக்கு ஜனாதிபதியும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பொறுப்பு கூற வேண்டும். அதற்கு நீங்கள் எமது வாக்காளர்களைப் பொறுப்பு மிக்க குடிமக்களாக மாற்ற வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக மாறும் போட்டியில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும். வன்முறையற்ற மற்றும் இனவாதமற்ற உங்களின் நிலைப்பாடுகளே இந்நாட்டுக்கும் அதன் அரசியலுக்கும் தற்போது தேவையான விடயங்களாக அமைந்துள்ளன. உங்களுக்கு மிகவும் விருப்பமான மற்றும் உங்களை இரத்தம் சிந்த வைத்ததுமான நீங்கள் அடைய விரும்பும் விடயமான வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து வாழும் இலங்கையர் என்ற கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்கான முறைமை சார் மாற்றத்தை அடையும் வரை இந்தப் போராட்டத்தை எவ்வாறு முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான நீண்ட கால மூலோபாயம் ஒன்று உங்களுக்கு அவசியமாகின்றது. இது காலி முகத்திடலில் மாத்திரமல்ல, பிராந்தியங்களிலும் தொடர வேண்டியதுடன் ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்களுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டிய விடயமாகும். இந்நாட்டின் தலைவர்கள் புதிய பிரதமர் என்ற இந்த சதுரங்க நகர்வை மேற்கொண்டதன் மூலம் எவ்வாறு அவர்களால் வெற்றியடைய முடியாத தலைமுறை ஒன்றுடன் மோத முயற்சிக்கின்றனர் என்பதை தலைவர்களுக்கு காண்பிக்க வேண்டிய தருணமாக இது அமைந்துள்ளது.

ஷ்ரீன் சறூர்