யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சீரான வெள்ளுடையில் உயர்ந்த, கம்பீரமான மாணவனாக, மலையகத்திலிருந்து தெரிவான ஒருவராக எனக்கு அறிமுகமானவர் வ.செல்வராஜா.

மாணவர் சங்கத் தேர்தலின்போது, மலையக மாணவர்கள் தாக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக நாங்கள் தீரத்துடன் போராடிய நேரம் அது. அப்போது செயலூக்கம் நிறைந்த பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மலையக மாணவர் அணியில் செல்வராஜாவும் இணைகிறார்.

பல்கலைக்கழகத்தில் அவர் வரலாற்றைச் சிறப்புக் கற்கைநெறியாகக் கொண்டிருந்தார். பேராசிரியர் கா.இந்திரபாலா, பொ.ரகுபதி, ச.சத்தியசீலன், சீலன் கதிர்காமர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் வழிகாட்டலில் வரலாற்றுத்துறை இயங்கிய காலம். ஆனைக்கோட்டை அகழாய்வுகளில் அக்கறையோடு செயற்பட்ட வரலாற்று மாணவர்களில் வி.தேவராஜா, வ.செல்வராஜா ஆகியோர் குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியவர்கள். வ.செல்வராஜாவின் மறைவையொட்டி நிகழ்த்தப்பட்ட இரங்கலுரையில், செல்வராஜா வரலாற்றுத்துறையில் உள்வாங்கப்படாமைக்கு அங்கு நிலவிய பிரதேசப் புறக்கணிப்பே காரணம்  என்று கூறப்பட்டது. அதில் என்னால் கருத்துக்கூற இயலவில்லை. ஆனால், நான் சார்ந்திருந்த பொருளியல் துறையில் கல்வி நியமனங்கள் என் காலத்தில் மிக நேர்மையாகவே நடந்தேறின. பிற துறைகளில் என்ன நடந்திருக்கும் என்று எனக்கு எதுவும் கூறத் தோன்றவில்லை.

மலையகத்திலிருந்து பல்கலைக்கழகத்தில் பிரவேசிக்கும் எந்த மாணவனுக்கும் இருக்கும் சமூகநோக்கு செல்வராஜாவிடம் மிகக் கூர்மைப்பட்டிருந்தது என்று கூறவேண்டும். பல்கலைக்கழகத்தில் மேடையேறிய அரசியல் நாடகமொன்றில் செல்வராஜா, சோல்பரி பிரபுவாகப் பாத்திரமேற்று நடித்தது மங்கலாக என் நினைவில் எழுகிறது.

வரலாற்றுப் பட்டதாரியாக வெளியேறிய செல்வராஜா பூண்டுலோயா தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்து, மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக இளைப்பாறும்வரை அப்பணியைத் தூய்மை வாய்ந்த பணியாகப்போற்றிக் காத்திருக்கிறார். பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளராகி, கணிசமான ஆசிரியப் பயிலுனர்களைத் தேர்ந்த ஆசிரியர்களாக உருவாக்கி அனுப்பியிருக்கிறார். ஆளுமைமிக்க தமிழ் ஆசிரியராக அர்ப்பணிப்போடு கற்பித்திருக்கிறார்.

இன்று பதினையாயிரம் பேருக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பெருந்தோட்டங்களில் மலையக ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். இந்தப் பெரும் படையைச் செதுக்கி அனுப்பிய ஆசானாக செல்வராஜா திகழ்ந்திருக்கிறார்.

‘பலாத்காரம், அடக்குமுறை என்ற பல்வேறு கொடுமைகளை எமது சமூகம் அனுபவித்து வருகிறது. இதனோடுதான் வாழ்க்கையும் போராட்டமாகிவருகிறது. இவற்றின் மத்தியில் ‘ஆசிரியர் சமூகம்’ ஆற்ற வேண்டிய பணிகளும் முன்னே விரிந்து கிடக்கிறது’ என்று வ.செல்வராஜா அவர்கள் ஒரு சந்தர்ப்பத்திலே குறிப்பிட்டிருக்கிறார்.

மலையக சமூகம் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகள் அவர் நெஞ்சில் எப்போதுமே குமிழ் விட்டிருக்கின்றன.

மிகப்பெரும் இடைவெளிக்குப்பின், 2015ஆம் ஆண்டு நான் மலையகம் சென்றிருந்தபோது, பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியில் சொற்பொழிவாற்றுமாறு கேட்டிருந்தார். மிக நேர்த்தியாக அக்கூட்டத்தினை ஒழுங்குபடுத்தியிருந்தார். பின்னர், பதுளையில் நிகழ்ந்த எனது ‘கூலித்தமிழ்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் செல்வராஜா ஆற்றிய உரையில், அவர் தன்னைத் தேர்ந்த இலக்கிய விமர்சகனாகச் செதுக்கிக்கொண்டிருக்கும் புலமை வெளிப்பட்டது.

தேடலுடன் கூடிய நுண்ணறிவும், அதனைத் தங்குதடையின்றி, கேட்போரைப் பிணிக்கும் வல்லவனாய் உரையாற்றும் லாவகமும் மலையக சமூகத்தை விழிப்புறச் செய்யும் இலட்சியமும் இணைந்த பெருமகனாக செல்வராஜா துலங்கியிருக்கிறார். ‘வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற மகாகவி பாரதியின் வரிகள் செல்வராஜாவின் இரத்த நாளங்களில் செறிந்திருக்கின்றன.

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், மிகச் சாதாரண ஜனநாயக உரிமைகளே நிராகரிக்கப்பட்ட சூழலில், வறுமையும் அடக்குமுறையும் அறியாமையும் மலிந்த சமூக யதார்த்தத்தில், செல்வராஜா போன்ற புத்திஜீவிகளின் சமூகப் பணி பெறுமதிமிக்கது.

‘வளைந்து கொடுக்கின்ற, இணக்கமாகப் போகின்ற, சமரசம் செய்து கொள்கின்ற நிலையிலிருந்து விடுபட்டு, தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டிலிருந்து தொழிலாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையை வளர்த்தெடுப்பது அவசியமானது. அரசியல் உரிமைகள், பாதுகாப்பு, பொருளாதாரம். கல்வி – உயர்கல்வி, சுகாதாரம், வீட்டுரிமை, தோட்டக்குடியிருப்பு சீரமைப்பு, தொழிற் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகள், தொழில் வாய்ப்புகள், நிலம், குடியேற்றம், கலை இலக்கியம், கலாசாரம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்’ என்று மலையகம் எதிர்நோக்கும் பிரச்னைகளை ‘மலையக மக்களும் புத்திஜீவிகளும்’ என்ற பொருளில் 2004ஆம் ஆண்டு வ.செல்வராஜா ஆற்றிய இரா.சிவலிங்கம் நினைவுப்பேருரையில் பட்டியலிடுகிறார். மலையக மக்கள் சமூகம் எதிர்நோக்கும் அனைத்துப்பிரச்னைகளும் செல்வராஜாவின் சிந்தனையில் கோலமிடுகின்றன

செல்வராஜா வெற்றுப் பிரசாரகன் அல்ல. தான் வரித்த கோட்பாட்டிற்காகப் போராடும் வல்லமை கொண்டவன். அவன் இயல்பில் ஒரு போராளி.

1986 ஜனவரி 26, 27ஆம் திகதிகளில் தலவாக்கலையில் ஆரம்பமான சிங்களக்காடையாளர்களின் வன்முறைத் தாக்குதலுக்கெதிராக, தலவாக்கலை போர்க்கோலம் பூண்டது. சிங்களவர்கள் மீதான மலையக மக்களின் எதிர்த்தாக்குதலில் அரசு அதிர்ந்தது. பெரியசாமி சந்திரசேகரன், ஜெகநாதன், தீனதயாளன் ஆகியோர் பங்குகொண்டு நடந்த இந்த வீரப்போராட்டத்தில் செல்வராஜாவின் பங்கு மகத்தானது. அவர் சில காலம் தலைமறைவாகவும் நேர்ந்தது. மக்கள் அவரைப் பாதுகாத்து நின்றிருக்கிறார்கள். செல்வராஜா சரித்திர நாயகன். போராட்ட உணர்வு அவர் ரத்த நாளங்களில் என்றும் சுரந்து கொண்டிருந்தது.

ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் உரிமைகளுக்காக ஓயாது குரல் தந்த பெருமகன் செல்வராஜா. விளம்பரங்களின் வெளிச்சத்தில் கூசிப்போகும் பண்பாளன். அறிவையும் செயலையும் இணைத்து நடந்தவன். செல்வராஜின் வாழ்க்கை திறந்த புத்தகம் போன்றது. எளிய பண்பினாலும் அறிவாற்றலாலும் நேர்மையாலும் அவர் அறியப்பட்டிருக்கிறார்; கனம் பண்ணப்பட்டிருக்கிறார்.

அவரின் தலைமையை, ஆற்றலை, பங்களிப்பை மலையக சமூகம் தேடிநின்ற வேளையில், அப்பெருமகன் மரணித்தது மலையகத்தின் பெருஞ் சோகம். ஆனாலும் நீங்கள் விதைத்து விட்டுச்சென்ற விதைகள் விருட்சமாகும்; கிளை பரப்பும்; நிழல் தரும்.

சென்று வாருங்கள், செல்வராஜா!

மு.நித்தியானந்தன்