Photo, NEWEUROPE

இலங்கையில் அண்மைக்காலமாக மதநிந்தனைப் பேச்சுக்கள் தொடர்பில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புகின்றன.

முதலாவதாக, கடந்த டிசம்பரில் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க என்பவர் யூரியுப் மூலமான தனது கிரமமான நிகழ்ச்சிகளில் ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் தலதா மாளிகையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். அதற்குக் கிளம்பிய பாரிய எதிர்பபை அடுத்து அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பௌத்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய செயலுக்காக அமரசிங்க மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கேட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இரண்டாவதாக, கிறிஸ்தவ மதப் போதகரான ஜெரோம் பெர்னாண்டோ மே மாதம் பௌத்த மதத்தை மாத்திரமல்ல இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களையும் இழிவுபடுத்தும் வகையில்  கருத்துக்களை வெளியிட்டு செய்த பிரசங்கம் ஒன்றின் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பெருமளவில் பரவியதையடுத்து சர்ச்சை மூண்டது. துரித விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்த போதிலும், பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டே தான் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாகவும் சில தினங்களில் நாடு திரும்பவிருப்பதாகவும் சமூக ஊடகம் மூலமாக கூறிய அவர் இன்னமும் வெளிநாட்டிலேயே இருக்கிறார். தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகக் கூறப்படும் போதகர் தனது கருத்துக்கள் பௌத்த, இந்து, இஸ்லாமிய மதத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்பதாக சமூக ஊடகம் மூலம் அறிவித்தார்.

நாட்டுக்கு வெளியே இருந்தவாறே அவர் தனது சட்டத்தரணி ஊடாக தன்னை பொலிஸார் கைதுசெய்வதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதை ஜூலை 28 நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவிருக்கிறது. அவரது மனைவியும் பிள்ளைகளும் கடந்தவாரம் நாடுதிரும்பியதாக செய்திகள் வெளியாகின.

மூன்றாவதாக, கடந்த ஏப்ரில் முதலாம் திகதி கொழும்பின் பிரபலமான பெண்கள் கல்லூரியொன்றின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற ‘ஏப்ரில் முட்டாள்தின சவால்’ என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை மேடைப் பேச்சாளரான நடாஷா எதிரிசூரிய என்ற இளம்பெண் புத்தர் பெருமானின் குழந்தைப் பராயத்தை கிண்டல்செய்யும் வகையில் தெரிவித்த கருத்துக்களின் வீடியோ பதிவும் சில வாரங்கள் கழித்து சமூக ஊடகங்களில் பரவியது.

அது தொடர்பில் சர்ச்சை தோன்றியதற்கு மத்தியில் அவர் வெளிநாடு செல்வதற்கு விமானநிலையம் சென்றவேளை அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டார். முதலில் கடந்த 7ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு நீதிமன்றம் பிறகு அதை எதிர்வரும் 21ஆம் திகதிவரை நீடித்திருக்கிறது.

நான்காவதாக, சமூக ஊடகங்களில் பிரபலமானவர் என்றும் மிகவும் ஆவேசமாக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்துக்களை வெளியிடுபவர் என்றும் அறியப்பட்ட ராஜாங்கன சித்தார்த்தன தேரர் இனங்கள், மதங்களுக்கிடையில் அமைதியின்மையை தூண்டிவிடக்கூடிய முறையிலும் குறிப்பிட்ட சிலரை அச்சுறுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதாக அவருக்கு எதிராக இன்னொரு பிக்கு செய்த முறைப்பாட்டையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டார். அவரின் விளக்கமறியலை கொழும்பு நீதிமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடந்தவாரம் நீடித்தது.

சமூக ஊடகங்களின் செயற்பாடுகள்

மதங்களை நிந்தனை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு அவற்றைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியும் இனங்கள், மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருத்துக்களை வெளியிட்ட மேற்படி நால்வரையும் சில மாதங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு பெரிதாகத் தெரியாது. ஆனால், இப்போது முழு நாடும் மாத்திரமல்ல வெளியுலகமும் அறியும்.

இவர்களில் குறிப்பாக போதகர் பெர்னாண்டோவின் பிரசங்கத்தையும் நடாஷாவின் நகைச்சுவை பேச்சையும் முதலில் அந்த நிகழ்வுகளில் பங்கேற்ற குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் மாத்திரமே கேட்டனர். பிறகு சமூக ஊடகங்களே அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை பரந்தளவில் மக்கள் அறியக்கூடியதாக செய்தன. இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்படுவதைப் போன்று மதங்களுக்கிடையில் வெறுப்புணர்வை தூண்டிவிடுவதை அவர்கள் உண்மையில் நோக்கமாகக் கொண்டிருந்தார்களா என்பது முக்கியமான கேள்வி.

அமைதியின்மையை தோற்றுவிக்கக்கூடியவையாக பெர்னாண்டோவினதும் நடாஷாவினதும் கருத்துக்கள் அமைந்திருந்தன என்று அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதானால், அவற்றை ஊடகங்கள் குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலமாக பரந்தளவு மக்கள் மத்தியில் கொண்டுசென்றவர்களும் கூட ஒரு விதத்தில் குற்றம் செய்தவர்களாகிறார்கள். இருவருமே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்ட போதிலும், அத்துடன் சர்ச்சை முடிவுக்கு வருவதாக இல்லை.

மக்களின் இன, மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய வகையிலும் ஒரு சமூகத்துக்கு எதிராக இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களினால் வெறுப்பும் அவமதிப்பும் கொண்ட கருத்துக்கள் எமது நாட்டில் வெளியிடப்படுவது இது முதற்தடவை அல்ல. காலங்காலமாக இடம்பெற்று வந்திருக்கும் அத்தகைய சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவை பல கலவரங்களையும் மூளவைத்தன. அவற்றுக்கு முக்கிய பொறுப்பாக இருந்தவர்களை அடையாளப்படுத்தினால் அதுவும் கூட இன்றைய சூழ்நிலையில் மதவெறுப்பைத் தூண்டும் செயல் என்று குற்றஞ்சாட்டப்படவும் கூடும்.

வெறுப்புப் பேச்சுக்கு எதிராக இன்று பெரிதாக குரல் எழுப்பப்படுகிறது. சமூகங்களுக்கிடையில் பகைமையை தூண்டிவிட்ட இனவாத அரசியலின் விளைவாக இலங்கை பல தசாப்தங்களாக சின்னாபின்னப்பட்டதை மறந்தவர்களாக ஏதோ வெறுப்புப் பேச்சு நாட்டுக்கு புதிதாக வந்த ஒரு தோற்றப்பாடு போன்று இன்று அரசியல்வாதிகள் பேசும் விசித்திரத்தைக் காண்கிறோம்.

சதிக் கோட்பாட்டு புனைவுகள்

இலங்கை வரலாறு கண்டிராத பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த வருடம் மூண்ட மக்கள் கிளர்ச்சியின்போது மாதக்கணக்காக பொதுவெளிக்கு வராமல் பதுங்கியிருந்த கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் தற்போது தோன்றியிருக்கும் சர்ச்சைகளை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி மீண்டும் நச்சுத்தனமான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு கடுமையாக முயற்சிக்கின்றன. சதிக்கோட்பாடுகளை புனைவதை ஒரு கலையாகவே வளர்த்திருக்கும் இந்தச் சக்திகள் கற்பனாவாத எதிரிகளிடம் இருந்து இனத்தையும் மதத்தையும் காப்பாற்றுவதற்கு வெளியில் வருகிறார்கள். கிறிஸ்தவ போதகர் மற்றும் நகைச்சுவை பேச்சாளர் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளின் பின்னணியிலும் மேற்குலக சதி இருப்பதாக  சக்திகள் கூறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இனக்கலவரம் மூளும் என்று எச்சரிக்கையை விடுப்பதை விடவும் நாட்டு மக்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக இன்னொரு பிரிவினரை தூண்டிவிடும் செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயன்றால் நாடு இதுகால வரையில் காணாத பயங்கரமான இனக்கலவரம் வெடிக்கும் என்று முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்சவும் சரத் வீரசேகரவும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி கூறுகிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பிரசாரங்கள் மூலமாக பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலைச் செய்து அதன் மூலமாக உச்சபட்ச அரசியல் ஆதாயத்தைப் பெற்ற முன்னாள் ஆட்சியாளர்கள் மீண்டும் தென்னிலங்கையில் ஆதரவைக் கட்டியெழுப்புவதற்கு இனமும் மதமும் ஆபத்துக்குள்ளாவதாக பீதியை சிங்கள மக்கள் மத்தியில் கிளப்பவேண்டிய தேவை இருக்கிறது. மதநிந்தனை செய்யும் வகையில் அமைந்த கருத்துக்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடும் ஆரவாரம் செய்யும் சக்திகள் அந்தத் தேவைக்கு வசதியான நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கத்தொடங்கியிருக்கின்றன என்ற வலுவான சந்தேகமும் எழுகிறது.

இதனிடையே, வெறுப்புப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும்  மனித உரிமைகள் அமைப்புக்களிடமிருந்து விமர்சனங்கள் வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

சந்திரிகாவின் கேள்வி

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் வேற பலரும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பிய வெறுப்புணர்வு புத்தபெருமானை அவமதித்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நடாஷாவின் பேச்சை விடவும் மோசமானவை என்று ருவிட்டர் தளத்தில் கடந்த வாரம் பதிவிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வியெழுப்பினார்.

“இஸ்லாமிய மதத்தை நிந்தனை செய்து பள்ளிவாசல்களுக்கும் தேவாலயங்களுக்கும் தீவைத்த ஞானசாரவுக்கும் ஏனையோருக்கும் என்ன நடந்தது? நடாஷாவின் பேச்சை விடவும் நச்சுத்தனமானவை, இவர்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பரப்பிய வெறுப்புப் பேச்சுக்கள்.

“டாக்டர் ஷாபி சிகாப்தீன் மீது குற்றஞ்சுமத்தி அவரை அவதூறு செய்தவர்களுக்கு எதிராக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. அவ்வாறு செய்வதே உண்மையான ஜனநாயக ஆட்சிமுறையாக இருக்கும்.

“உண்மையான பௌத்த கோட்பாடுகளை இலங்கை பின்பற்றியிருந்தால், இன்றைய நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கவேண்டி வந்திருக்காது. உண்மையில் பௌத்த மதத்துக்கு அதியுயர் மதிப்புக் கொடுக்கப்படவேண்டும். ஆனால், ஏனைய மதங்களுக்கும் சமமான மதிப்பை அளிக்கவேண்டும். விரும்புகின்ற மதத்தைப் பின்பற்றுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் புனித உரிமை இருக்கிறது. மற்றவர்களுடைய நம்பிக்கைகளை மதித்து நடக்கவேண்டும் என்பது பௌத்த கோட்பாடாகும்” என்று திருமதி குமாரதுங்க கூறியிருக்கிறார். இன்று இருக்கும் சிங்கள அரசியல் தலைவர்களில் அவராவது இவ்வாறு கருத்துவெளியிட்டிருக்கிறார் என்பது ஒருவித திருப்தியைத் தருகிறது.

அதேவேளை, இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா கடந்தவாரம் எழுதிய ‘குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து நடவடிக்கை எடுப்பது  சட்டத்தின் நோக்கம் அல்ல’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையொன்றில், “நடாஷா அறகலய போராட்டத்தில் கலந்துகொண்டவர் என்று தகவல் இருப்பதால் அவரது பிரச்சினையை விசேட கவனத்துடன் நோக்குவதாக பொலிஸார் கூறியதாக அரசாங்க ஊடகங்களில் வெளியான செய்தி அவருக்கு எதிரான நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தை (International Convention on Civil and Political Rights – ICCPR) இலங்கை அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்வதாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றஞ்சாட்டியிருக்கிறது.

அந்த சர்வதேச உடன்படிக்கையை இலங்கை 1980 ஆண்டில் ஏற்றுக்கொண்டது. அது தொடர்பிலான சட்டம் 2007ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் என்று அழைக்கப்படும் அந்தச் சட்டம் பாரபட்சத்தை, பகைமையை அல்லது வன்முறையை தூண்டிவிடும் வகையில் அமையக்கூடியதாக போர் அல்லது தேசிய, இன,மத வெறுப்புணர்வை பிரசாரப்படுத்துவதை குற்றச்செயலாகக் கருதுகிறது. அத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படக்கூடிய எவரையும் மேல் நீதிமன்றத்தைத் தவிர அதற்கு கீழ்நிலையில் உள்ள எந்த நீதிமன்றமும் பிணையில் விடுவிக்கமுடியாது.

ஆனால், அந்தச் சட்டம் வியாக்கியானப்படுத்தப்படுகின்ற அல்லது பிரயோகிக்கப்படுகின்ற எதேச்சையான விதம் அரசாங்கங்கள் அதை எதிர்க்கருத்துக்களை கொண்டவர்களை அடக்குவதற்கும் சிறுபான்மை இனத்தவர்களை கொடுமைப்படுத்துவதற்கும் தவறாக பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கிறது.

நடாஷாவின் பேச்சு வெறுப்புப் பேச்சாக அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அதை சட்டவிரோதமானதாகக் கருதுவதானால் குறிப்பிட்ட ஒரு மதக்குழுவுக்கு எதிராக பாரபட்சத்தையும் பகைமையையும் காட்டுமாறும் வன்முறையில் இறங்குமாறும் மற்றவர்களைத் தூண்டிவிடும் நோக்கில் அவர் செயற்பட்டார் என்பதை தெளிவாகக் காண்பிக்கவேண்டியது அவசியமாகும் என்று மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கிறது.

சுதந்திரத்தின் எல்லை

தற்போதைய சர்ச்சை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் வாதப்பிரதிவாதங்களை கிளப்பியிருக்கிறது.

பேச்சுச் சுதந்திரமும் சிந்தனைச் சுதந்திரமும் உலகளாவ அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள். எமது ஏனைய சுதந்திரங்களுக்கான முன்தேவையாக சுதந்திரமாக பேசுவதற்கான உரிமை இருக்கிறது. ஆனால், உரிமைகள் எப்போதுமே பொறுப்புணர்வுடனேயே அனுபவிக்கவேண்டியவையாகும். பொறுப்புணர்வுடன் ஒரு உரிமையை நாம் பயன்படுத்தவில்லையானால் அந்த உரிமைக்கு உண்மையில் நாம் அருகதை உடையவர்களா என்ற கேள்வி நிச்சயமாக எழுவே செய்யும்.

சுதந்திரங்களை விரும்புவது மனித இயல்பு. தலையீடின்றி அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அதே உரிமையை சமூகத்தில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடிய முறையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு எவரும் பயன்படுத்துவதை ஒருபோதும் நியாயப்படுத்தவோ அனுமதிக்கவோ முடியாது. அது அடிப்படையில் வெறுப்புப்பேச்சாகவே கருதப்படும்.

கையை நீட்டுவதற்கு எமக்கு இருக்கும் சுதந்திரம் மற்றவர்களின் மூக்கு நுனியின் முன்னால் முடிவடைகிறது என்று சுதந்திரம் பற்றி கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மூன்று தசாப்தங்களாக அமெரிக்க உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்த ஒலிவர் வென்டெல் ஹோம்ஸ் ஜூனியர் கூறியதை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரையிலும் கூட அதைக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக கருதமுடியாது. சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத முறையில் அந்தச் சுதந்திரத்தை ஊடகங்கள் நிதானமாக – பொறுப்புணர்வுடன் பயன்படுத்தவேண்டும். ஊடக சுதந்திரம் என்பது காட்டுக்கழுதையின் சுதந்திரம் அல்ல.

சமூக உடன்பாடு

கட்டுப்பாடின்றிய முற்றுமுழுதான சுதந்திரம் சமூகத்தில் அராஜகத்தைத் தோற்றுவிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது. அத்தகைய அராஜக நிலை உருவாவதை தடுப்பதற்கே சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான சமூக உடன்பாடு (Social Contract) என்ற கோட்பாடு மேற்குலகில் வகுக்கப்பட்டது.

சமூக உடன்பாட்டின் ஜனநாயக அடிப்படையிலான வியாக்கியானத்தின் பிரகாரம் சமூகத்தில் பொது ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக மக்கள் தங்களின் உரிமைகளில் சிலவற்றை தங்களால் தெரிவுசெய்யப்படும் அரசிடம் ஒப்படைக்கிறார்கள். அரசு அரசியலமைப்பு ரீதியான தடுப்புகளுக்கும் சமப்படுத்தல்களுக்கும் (Checks and Balances) கட்டுப்பட்டதாக இருக்கும் அதேவேளை, மக்கள் சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் நோக்கும்போது சுதந்திரமாகப் பேசுவதற்கான உரிமை பொது அமைதியைப் பேணுவதற்கு இயற்றப்பட்ட சட்டங்களினால் நெறிப்படுத்தப்படுவதாக அமைகிறது. இது தனி மனிதர்களின் உரிமைகளை விடவும் சமூகத்தின் கூட்டு நல்வாழ்வு முக்கியமானது என்ற கோட்பாட்டின் வழியிலானதாகும்.

இதை மதங்களை விமர்சிக்கமுடியாது என்று அர்த்தப்படுத்தலாகாது என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகிறார்கள். சுதந்திரமான ஜனநாயக சமூகமொன்றில் மதங்கள் மீதான விமர்சனங்கள் கல்விப்புலம் சார்ந்த அல்லது அறிவுஜீவித்துவ செயற்பாடு என்பதால், மதங்களைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் அவமதிக்காமல் அமையும் பட்சத்தில் அவற்றை சகித்துக்கொள்ளவேண்டும் என்பது மாத்திரமல்ல உற்சாகப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அங்கதப்பேச்சு

இது இவ்வாறிருக்க, தற்போதைய சர்ச்சை கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தின் ஒரு அங்கமான அங்கதப் பேச்சுக்களுக்கு (Satire) அச்சுறுத்தலாக அமைவதாகவும் கவலை வெளியிடப்படுகிறது. ஊடகங்களில் வெளியாகும் கேலிச்சித்திரங்கள் மீது குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைச் சட்டம் பாயக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அங்கதப் பேச்சுகள் எப்போதுமே ஒரு சிக்கலான விடயத்தை நகைச்சுவை உணர்வுடன் சுலபமாக விளங்கவைப்பவையாகும்.

எமது இளமைக்காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் காலஞ்சென்ற என் .சண்முகதாசனின் அரசியல் வகுப்புக்களுக்கும் கூட்டங்களுக்கும் நாம் செல்வது வழக்கம். ஆயுதப்போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு அவர், “காளிதேவி என்ன கத்தரிக்காய் வெட்டுவதற்கா கத்தி வைத்திருக்கிறா? முருகனின் கையில் வேல் எதற்கு? சிவபெருமான் கையில் எதற்கு திரிசூலம்?” என்று தனது பேச்சில் கூறுவார்.

அவ்வாறான அங்கதப் பேச்சுக்களை மக்கள் அன்று ரசித்தார்கள். அவர் இந்துக் கடவுளரை இழிவுபடுத்தினார் என்று எவரும் குற்றஞ்சாட்டியதாக நாம் அறியவில்லை.

அரசியல் பின்னணி

இன்று மதங்கள் தொடர்பிலான அறிவுபூர்வமான அல்லது அங்கதத் தன்மையான விமர்சனங்கள் தொடர்பில் அளவுக்கு அதிகமான எதிர்ப்பு வெளிப்படுத்தப்படுவதன் பின்னணியில் ஒரு அரசியலும் இருக்கவே செய்கிறது. அதற்காக மதங்களை இழிவுபடுத்தும் பேச்சுக்களை அனுமதிக்கவேண்டும் என்று இங்கு வாதிடுவதாக அர்த்தப்படுத்தலாகாது.

இறுதியாக இன்றைய நிலைவரத்துக்கு மத்தியில் உகண்டாவின் முன்னாள் ஜனாதிபதி இடி அமீன் தனது ஆட்சிக்காலத்தில் பேச்சுச் சுதந்திரம் குறித்து ஒரு தடவை தெரிவித்த கருத்தை நினைவுபடுத்துவது சுவாரஸ்யமாக இருக்கும்.

“உகண்டாவில் பேச்சுச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், பேச்சுக்குப் பிறகு அந்த சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தமுடியும் என்று உறுதியாகக் கூமுடியாது.

வீரகத்தி தனபாலசிங்கம்