படம் | cfnhri

ஜெனீவா பிரகடனங்களில் உச்சக்கட்ட ஆபத்தை தமிழர்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். மறுவகையில், இதுபோன்ற சர்வதேச செயல்முறைகள் தற்காலிகமான நாடகங்கள் என்கிற அரசியல் தெளிவும் சந்திக்கு சந்தி முணுமுணுக்கும் நிலை இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. நம் ஊடகங்களும், ஊடக கர்த்தாக்களும் உலக உள்ளூர் அரசியல் போக்கு குறித்து சனங்களுக்கு ஓதும் மந்திரச் சொற்கள் மீதான அருவருப்புத்தனத்தை பொதுவெளி உணர்ந்திருக்கிறது. இந்த நிலை மக்களின் அரசியல்தளத்தில் சரியான புரிதலையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் அல்லது அனைத்தையும் விட்டு ஒதுங்கியிருக்கச் செய்யும்.

இந்த மூன்று வகையான பொதுசன தெளிவுகளுக்கும் அப்பால், மேலுமொரு ஆபத்திருப்பதை  சர்வதேச தீர்மானங்களின் அரசியல் சமிஞ்சையிட்டுக் கொண்டிருக்கிறது. பிரதானமாக மூன்று தரப்பினர் இந்தப் பேராபத்தை எட்டியிருக்கின்றனர்.

  • பிள்ளைகளைத் தேடும் உறவுகள்
  • உள்நாட்டில் செயற்படும் மனித உரிமையாளர்கள் மற்றும் தொண்டுநிறுவனப் பணியாளர்கள்
  • ஊடகவியலாளர்கள்

இலங்கை அரசினால் இதுவரையான எல்லாவகைக் குற்றச்சாட்டுக்களையும் மறைக்க முடியும். திசைதிருப்பிவிட முடியும். கடிக்க வரும் நாயை காவலுக்கு கூட கட்டிவைக்க முடியும். எல்லாவற்றையும் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் காலங்கடத்தி மறக்கவும் செய்துவிடும். ஆனால், காணாமல்போனவர்களின் ஆன்மாக்கள் பேசும் மொழியை மட்டும் எதைக் கொண்டும் சர்வதேச கருணையாளர்களிடமிருந்து மறைக்கமுடியாது. காரணம் இது உயிர்ப்பானது. பிள்ளைகளை, ஆண் துணையை, சகோதரர்களைத் தேடுபவர்கள் அலைந்துகொண்டேயிருக்கின்றனர். ஒவ்வொரு வெள்ளைக்கார அதிகாரி வரும்போதும் பதாகைகளைத் தாங்கிக்கொண்டு தெருவுக்கு வரும் கூட்டத்தினர் இவர்கள். ஆக அறிக்கைகளால் மூடிமூடி மறைக்கப்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உயிர்கொடுக்கும் பணியை இந்தத் தரப்பினர் செய்துகொண்டேயிருக்கின்றனர். யாருக்கு பதில் சொல்லாவிட்டாலும், எந்த வழக்கிற்கு தீர்ப்பெழுதாவிட்டாலும் இந்த அலைச்சலாளர்களுக்காக அழுத்தம் கொடுக்கிறது சர்வதேசம். ஆகவேதான் இலங்கையரசுக்கு இந்தத் தரப்பினர் பெரும் சிக்கலுக்குரியவர்களாக மாறியிருக்கின்றனர். அதற்காகவே இனிவரும் காலங்களில் எந்த வெள்ளைக்காரனின் முன்னாலும் தலைகாட்ட தயங்கும் மனநிலையை உருவாக்கும் செயற்றிட்டங்கள் வன்னி முழுதும் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. காணாமல்போனவர்களை தேடுபவர்களே காணாமல்போகக்கூடும் என்ற பயம் எல்லா இடமும் பரவியிருக்கின்றது.

இதற்கு அடுத்த வகையினர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள். இலங்கையை நோக்கி எழும் சர்வதேச அழுத்தங்களின் பின்னணியில் இந்தத் தரப்பினர் இருப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டுக்கள் எழும். அதாவது, இந்தத் தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதால் அவர்களிடம் சேரும் அறிக்கைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன என்ற ஐயத்தின் விளைவே இந்தக் குற்றச்சாட்டு. போர் தொடங்கிய காலத்திலிருந்தே இவ்வகையில் செயற்பட்ட, மனித  உரிமைகளை மதிக்கக் கோருகின்ற செயற்பாட்டாளர்கள் நாடுகடத்தப்படுவது அச்சுறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த ஜெனீவா தீர்மானத்தின் பின் அது மேலும் நெருக்கமாக்கப்பட்டிருக்கின்றது. நேரடியான கைது, விசாரணை, வெளியுலகுடன் பேசுவதற்கான தடை போன்றன சட்டபூர்வமாகவே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. மீறி சம்பந்தப்பட்ட தரப்பினர் யாரும் பேச முடியாது. தமக்கு என்ன அநீதி ஏற்பட்டாலும் அதை ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாத உறைநிலைக்கு இந்த செயற்பாட்டாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஊடகத் தரப்பினர் இன்னமும் குறிவைக்கப்படவில்லையாயினும் அவர்களை நோக்கியும் ஜெனீவா அபாயம் நீள வாய்ப்புண்டு. கடந்த ஒரு வருடத்துக்குள் தமிழர் பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்களை, நில அபகரிப்பை உடனுக்குடன் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் பணியை முதன்மையாகக் கொண்டு ஊடகர்கள் பணியாற்றியிருக்கின்றனர். உள்ளூர், சர்வதேச அளவில் இலங்கை தொடர்பான சரியான புரிதல் ஏற்படுவதற்கு இந்தப் பணி உதவியிருக்கின்றது. ஆக இலங்கை அரசை அபாயத்தில் தள்ளிவிட்ட தரப்பினருள் இவர்களும் வருகின்றனர். இனி வரும் காலங்களில் இந்தத் தரப்பினர் மீதான நெருக்குதல்கள் மேலும் இறுக்கமடைய வாய்ப்புண்டு.

இவ்வாறு இந்த வருட ஜெனீவா தீர்மானத்துக்கு வலுச் சேர்த்த மூன்று தரப்பினரையும் ஒருவித அச்ச சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. இதனை கூட்டாக உணரமுடியவில்லையாயினும், அவரவர் தனித்தனியே உணர்கின்றனர். விபூஷிகாவை மீட்பதற்கான போராட்டத்தில், வழமையான காணாமல்போனோர் மீட்பு போராட்டங்களில் கலந்துகொண்டவர்களை காணமுடியவில்லை. மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருக்கி மற்றும் அருட்தந்தை பிரவீன் உள்ளிட்டோர் கைதாகிய பின் வேறு எந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பொது வெளியில் குரலெழுப்ப தயாராகவில்லை. வன்னி தேடுதல், கைதுகளுக்குப் பின்னர் அங்கிருந்து வரும் செய்திகள் கூட அருகிவிட்டன. சமூக வலைதளங்களில் பதிவிடும் ஊடகவியலாளர்கள் அடக்கிவாசிக்கத் தொடங்கிவிட்டனர். வன்னியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பீதி நிலை, 2006ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த துப்பாக்கி இரவுகளுக்கு சமமானதாக நோக்கப்படுகின்றது.

இந்த நிலைமையை உருவாக்கியது யார்? வந்துபோன, நம்பிக்கை தந்த வெள்ளைக்காரர்கள். ஊடகங்கள். மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள். இவை தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணி மிக முக்கியமானதாக இருந்தாலும், அமெரிக்க – ஐ.நா. அரசியல் தேவைகளுக்காக மக்களை, செயற்பாட்டாளர்களை காட்டிக்கொடுக்க செய்திருக்கின்றது. ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் பெரும்பலனை அனுபவிக்கத் துடிக்கும் நாடுகளுக்கு இரையாக்கப்படுவது முதலில் இந்த மூன்று தரப்பினரும்தான். எந்த வகையான தரவு திரட்டலிலும் மூலம் முக்கியமானதாக கொள்ளப்படும். அந்த மூலம் மிக முக்கியமான ரகசியமாக பாதுகாக்கப்படும். ஆனால், ஜெனீவா இலங்கையில் செயற்பட்டவிதம் இதற்கு தலைகீழானது. மூலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விட்ட பின்னரே தரவுதிரட்டல் ஆரம்பமானது. அதனாலேயே மேற்குறித்த மூன்று தரப்பினரும் இப்போது ஆபத்து நிலையை அடைந்திருக்கின்றனர். இதற்கெல்லாம் பிராயச்சித்தம் தேடவேண்டியது ஜெனீவாவின் முன்னுள்ள தலையாய கடமை. ஆனால் அது நடக்குமா?

ஜெரா

Jera