படம் | JDSrilanka

ஒரு வழியாக ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிது ஏமாற்றந்தான். இனச்சுத்திகரிப்பினைப் பற்றியோ, முக்கியமாக போர்க்குற்ற விசாரணைகள் பற்றியோ அது கூறவில்லை. மாறாக, மனித உரிமைகள் ஆணையாளர் இரு சாராரும் (அரசும் விடுதலைப் புலிகளும்) மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைப் பற்றிய 2002ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையிலான  ஒரு பூரணமான சுயாதீனமான விசாரணையை நடத்தவேண்டும் என அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ‘பூரணமான விசாரணை’ என்னும் பதத்தில் சில அனுகூலங்கள் இருக்கின்றனதான். போர்க்களத்திலும் போர்க்களத்திற்கு வெளியேயும் நிகழ்ந்த சகல நடவடிக்கைகளையும் அதில் தொடர்புள்ள சகல நபர்களையும் அடையாளம் காண இந்த அதிகாரம் உதவுகின்றது. ஆயினும், சர்வதேச சட்டத்தில் போர்க்குற்றங்கள் என்பதற்கும் மனித உரிமைகள் மீறல் என்பதற்கும் இடையில் பெரியதொரு இடைவெளி இருக்கின்றது என்பதையும் நாம் உணராமலில்லை. இவ்வாறு உத்தியோகபூர்வ ஆவணங்களில் போர்க்குற்றங்கள் என்னும் விடயம் குறிப்பிடப்படாதுபோனால், அது நிகழ்ச்சி நிரலிலிருந்தே அகற்றப்பட்டுவிடுமோவென்ற அச்சமும் இங்கு ஏற்படுகின்றது.

சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் பொய்ல் என்பவர் இந்தப்பிரேரணையை பூப்பூவென்று ஊதித் தள்ளியிருக்கின்றார். மனித உரிமைகள் பேரவையின் நோக்கங்களில் முக்கியமானதாகிய ‘இனச்சுத்திகரிப்பைத் தடுத்தலும் தண்டனை வழங்குதலும்’ என்கின்ற கடமையை இப்பேரவை செய்யவில்லை என்கின்ற குற்றச்சாட்டினை அவர் முன்வைக்கின்றார். இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதாய்தான் இது இருக்கப்போகின்றது என அச்சம் தெரிவிக்கின்றார். மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைகள் கால வரையறையின்றி நீடிப்பதற்கும் இது இடம் கொடுக்கின்றது என்கிறார். வாஸ்தவம்தான். இன்றுவரை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் சிரியாவிலும் போர்க்குற்றங்களைப் புரிந்துகொண்டிருக்கும் நாடுகளிடம் வேறெதனை நாம் எதிர்பார்த்திருக்க இயலும்? தமிழ் மக்களின் அழிவுக்குத் துணைபோன நாடுகளல்லவா இவை? இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இன்னொரு போராட்ட இயக்கம் வளர்ந்துவிடக் கூடாதென்கின்ற முனைப்புடன் ஜெனீவாத் தீர்மானம், கமரூனின் யாழ். விஜயம் என ஒவ்வொரு சீனி மிட்டாயாக நீட்டிக்கொண்டிருக்கும் சக்திகளல்லவா அவை? அப்படியிருந்தும் கோள அரசியலின் சில நிர்ப்பந்தங்களினால் எமக்கு சாதகமான நடவடிக்கைகளை அவை எடுக்குமோவென்று இருந்த எமது நப்பாசை நிறைவேறவில்லை.  என்னைக் கேட்டால், தரப்பட்ட வரலாற்றுப் பின்னணியில், இந்நாடுகளினால் கொண்டுவரப்பட்டிருக்கும் இப்பிரேரணை மிகத் திறம் என்பேன். இனி, இது கொண்டு தரும் சிறிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இதனை இராஜதந்திர ரீதியில் நகர்த்திக் கொண்டு தமிழ்த் தலைமைகள் செல்ல வேண்டும். ஆனால், நான் பிரதானமாகக் கூற வந்தது இது பற்றியல்ல. இங்கும் ஜெனீவாவிலும் இத்தீர்மானம் குறித்து தமிழ்த் தரப்புகள் மத்தியில் எற்பட்ட கருத்து முரண்பாடுகளைப் பற்றியதாகும்.

இந்தப் பிரேரணை தமிழ் மக்களின் அபிலாஷைகளை எந்த விதத்திலும் பூர்த்தி செய்யவில்லை என்கின்ற விமர்சனக் கண்ணோட்டத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், இதனுடன் இணைந்து செயற்படும் அங்கமான தமிழ் சிவில் சமூக அமைப்பும் கடந்த காலங்களில் தத்தமது அறிக்கைகளை வெளியிட்டிருந்தன என்பதை நாமறிவோம். இவற்றின் பிரதிநிதிகள் இம்முறை ஜெனீவா சென்றிருந்தபோது அங்கு நடத்தப்பட்ட பக்க நிகழ்ச்சிகளின் ஒரு அம்சமான அரசுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் ஒரு கூட்டத்தில் தம்மைப் பேச விடவில்லை என்று தமது உரைகளில் குற்றஞ் சாட்டியிருக்கின்றனர். அரசுகளுடன் தமிழ் மக்கள் ‘கலந்துரையாட’ (dialogue) ஒரு வாய்ப்பினைத் தாருங்கள் என தமது சக செயற்பாட்டாளர்களிடம் வேண்டியிருக்கின்றனர். பொதுவாக, ஐ.நா. சபையில் முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்படும்பொழுது அத்தீர்மானங்களின் போக்கு குறித்து செல்வாக்கு செலுத்த விரும்புகின்ற சிவில் அமைப்புக்கள் இம்மாதிரியான பக்க நிகழ்ச்சிகளை எற்பாடு செய்கின்றன. இதன் காரணமாக இந்நிகழ்ச்சிகளுக்கு வரையறுக்கப்பட்ட நோக்கங்கள்தான் இருக்கும். இவை ஒன்றில் தீர்மானத்திற்கான ஆதரவினையோ அல்லது எதிர்ப்பினையோ நாடுவது அல்லது தீர்மானத்தில் காணப்படும் சொற்பிரயோகங்கள் பற்றிய முடிவற்ற விவாதங்களில் அரசு பிரதிநிதிகள் இறங்கியிருப்பார்களேயாயின், அவற்றில் சாதகமான சொற்பிரயோகங்களை அவர்கள் ஏற்கச்செய்வது போன்றவையாகும். ஒரு பொழுதும் அரசு பிரதிநிதிகளுடன் பொதுவாக கலந்துரையாடுவதற்காக சிவில் அமைப்புக்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில்லை. அதற்கான நேர அவகாசமும் அரசு பிரதிநிதிகளுக்கு கிடையாது. இந்த நிலையில், புதிய கருத்துக்களை அவர்களுக்கு ஊட்டுவதில் அர்த்தமே இல்லையாகும். தரப்பட்ட சந்தர்ப்பத்தில், ஏனைய தமிழ்த் தரப்புக்கள் இலங்கை அரசுக்கெதிரான தீர்மானத்தினை ஆதரித்து வாதாடும் நோக்கத்துடனான கூட்டமாக அனேகமாக இதனை ஒழுங்கு செய்திருக்கலாம். இதன்மூலம் கூடிய அங்கத்துவ நாடுகளின் வாக்குகளைப் பெற அவர்கள் முயற்சித்திருக்கலாம். அக்கூட்டத்தில் அவர்கள் எப்படி அதனை விமர்சனம் செய்யும் பேச்சாளர்களை பேச வைக்க முடியும்? இந்த நிலையைப் புரிந்துகொள்ளாமல் இப்பிரதிநிதிகள் முரண்பட்டது வீணான செய்கையாகும். இத்தகைய ஒரு பக்கச் சார்பான குழுநிலை வாதங்களினால்தான் தமிழ் மக்களுடைய முழு அரசியலும் அடிபட்டுப் போவதை நாம் திரும்பத் திரும்பப் பார்க்கின்றோம்.

இந்நிகழ்வுக்குப் பின்னர், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் இவ்விரு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பேசியிருக்கின்றனர். அவ்வுரைகள் இன்னமும் பரிதாபமாக இருந்தன. தமிழ்த் தேசியத்தைப் பற்றியும் தமிழர் எதிர்நோக்கும் இனச்சுத்திகரிப்பு என்னும் பயங்கரத்தைப் பற்றியும் சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனப்பொருள்பட இப்பேச்சுக்கள் அமைந்தன. தமிழ்த் தேசியம் பற்றி எந்த சர்வதேச சமூகத்துக்கு அக்கறை இருக்கின்றது ஐயா? ஏன் அவர்கள் அக்கறைப்படவேண்டும்? இப்படி தொடர்ந்தும் தொடர்ந்தும் மேற்கு நாடுகளைப் பணிந்து இறைஞ்சும் எமது காலனித்துவப் பழக்கத்தை நாம் விடவே மாட்டோமா? ஜெனீவாத் தீர்மானம் எல்லாவற்றிற்கும் முன்னதாக நாம் அரசியல் பண்ணப் பழக வேண்டும் போல் தெரிகிறது. இந்த இடத்தில், மனதை புண்படுத்தவல்ல ஆனால், சிந்திப்பதற்காக கொஞ்சம் இடக்கு முடக்கான சில கேள்விகளைப் போட விரும்புகின்றேன்.

தமிழ்த் தேசியப் பற்றிருக்கும் எமது தலைவர்கள், விடுதலைப் புலிகள் அதே தமிழ்த் தேசியத்திற்கான ஆயுதப்போராட்டத்திலீடுபட்டிருந்தபொழுது, தாம் நாடாளுமன்றம் சென்றது ஏனோ? அச்செய்கை, நாடாளுமன்ற அரசியலை பிரதான நீரோட்டமாகவும் புலிகளின் போராட்டத்தினை ஒரு பக்க உதவியாகவும் (side support) தமிழ் மக்கள் நோக்குவதற்கு இடம் கொடுக்கவில்லையா? போராட்டம் நடந்த அக்காலத்தில் எப்பொழுதோ செல்லாக்காசாகிப் போய்விட்ட எமது நாடாளுமன்றத்துக்கு சென்றபொழுது இக்கட்சிப் பிரமுகர்களுக்கு ஒரு தெளிவான மூலோபாயமாவது இருந்ததா? உதாரணமாக, ஆயுதப் போராட்டம் ஒன்றுடன் கூடவே பொது மக்கள் போராட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிந்து தமது பதவிகளைப் பயன்படுத்தி தமிழ்ப் பிரதேசங்களின் மூலை முடுக்குகளெல்லாம் மக்களை அரசியல் தெளிவுடன் அணிதிரட்டும் செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்று நினைத்தார்களா? அல்லது போராட்ட காலங்களில் மனித உரிமைகள் மீறல்கள் நிச்சயம் நடக்கும் என எதிர்வு கண்டு அப்படிப் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வண்ணம் தமது பதவிகளை உபயோகித்து நிதிகளைத் திரட்டி சட்ட உதவி செய்யும் மனித உரிமைகள் பாதுகாக்கும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கில் அங்கு சென்றார்களா? அல்லது தமிழர் பிரச்சினையின் தீர்வில் செல்வாக்கு செலுத்தும் நாடுகளிலுள்ள முக்கிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களை தம் பக்கம் இழுப்பதற்காக தமது நாடாளுமன்றப் பதவிகளை உபயோகித்து அந்தந்த நாடுகளில் நிரந்தர அலுவலகங்களைத் ஸ்தாபித்து தொடர்ந்து பரிந்துரைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்காகத்தான் சென்றார்களா? இவை போன்ற எதனையும் செய்திருந்தால் தமிழ்த் தேசியத்துக்காக அவர்கள் உண்மையாக உழைத்திருக்கின்றார்கள் என்று நாம் கூற முடியும். உண்மை என்னவெனில், இன்றுவரை இப்பணிகளில் முக்கால் பங்கு மக்கள் தமது வாக்குகளை வழங்காத அரசு சாரா நிறுவனங்களினாலேயல்லவா செய்யப்பட்டு வருகின்றன? இவ்வாறு, ஒருவிதத் திட்டமுமின்றி தரிசனமுமின்றி நாடாளுமன்றம் போய் நாட்களை விரயமாக்கியிருக்கிறார்கள். இன்று விடுதலைப்புலிகளும் இல்லாத நிலையில், ஜெனீவாவில் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மேற்கூறிய ஜெனீவாக் கூட்டத்தில் ஜெனீவாத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாதென்றால் அதற்கு மாற்று வழி என்ன என்று எம்மிடம் கேட்கின்றனர். விமர்சித்துக் கலந்துரையாடும்பொழுதுதானே மாற்று வழியைக் கண்டுபிடிக்கும் வெளி (space) உருவாகும்? என்றும் தமிழ் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதி போதாக்குறைக்கு மேலும் வினவியிருக்கின்றார். சரிதான், மாற்று வழியைப் பற்றி இவர்களுக்கும் இன்னும் தெரியவில்லை போலிருக்கின்றது. இப்படியே போனால் இதே போன்று குழுக்களாகப் பிரிவடைந்து பேசிக்கொண்டே வாழ்க்கையைக் கடத்தி விடுவோம்.

தமது அரசியல் தலைவர்கள் எவ்வகையாக இருக்க வேண்டும் என்கின்ற தெளிவு மக்களுக்கு இருந்தால் அந்தப் பிரதிமையிலேயே அத்தலைவர்களும் தோன்றுவார்கள். மக்கள் நாங்கள் வளவளா கொளகொளா என்பது போன்று இருந்தோமாயின், இப்படித்தான் வாய்ச்சொல்லில் வீரர்களைத்தான் எமது அரசியல் செயற்பாட்டாளர்களாகவும் பிரதிநிதிகளாகவும் காண்போம்.

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.