Photo, IFJ

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அன்றைய பிரதமர் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். கைத்தொழில் துறை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். முதற்தடவையாக பிரதமர் பதவிக்கு வந்த அவர் லேக்ஹவுஸ் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பத்திரிகை ஆசிரியராகியிருப்பேன் என்று பதிலளித்தார்.

விக்கிரமசிங்கவுக்கு பத்திரிகை ஆசிரியராக வருவது ஒன்றும் சிரமமானதாக இருந்திருக்காது. அவரின் குடும்பம் ஊடக நிறுவனங்கள் பலவற்றை சொந்தமாகக் கொண்டிருந்தது. இன்றும் கூட அப்படித்தான். அவரது தந்தையார் எஸ்மண்ட் விக்கிரமசிங்க லேக்ஹவுஸ் பத்திரிகைகளைப்  பயன்படுத்தி அரசாங்கங்களை பதவிக்குக் கொண்டுவரவும் பதவி கவிழ்க்கவும் கூடிய வல்லமைகொண்ட பத்திரிகைத்துறை ஜாம்பவானாக விளங்கினார் என்று கூறப்படுவதுண்டு.

கடந்த வாரம் ஜேர்மனியின் முக்கியமான செய்திச்சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் செய்தியாளரின் சில கேள்விகளுக்கு தனது வழமையான சுபாவத்துக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைதியிழந்து பதிலளித்த வேளையில் கூட ஜனாதிபதி விக்கிரமங்க தனக்கு ஊடகங்களுடன் இருந்த ஈடுபாடுகள் பற்றி குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

அந்த நேர்காணலில் விக்கிரமசிங்க நடந்துகொண்ட முறை பலரையும் ஆச்சரியப்படவைத்தது. நேர்காணர்களில் அவர் ஊடகவியலாளர்களுடன் மிகவும் மகிழ்சிச்சியாகவும் நட்புரிமையுடனும் பேசுவதே வழமை. அவர் பிரதமராக இருந்த காலப்பகுதிகளில் ஊடக நிறுவனங்களோ அல்லது ஊடகவியலாளர்களோ பெரிதாக அச்சுறுத்தலை எதிர்நோக்கியதாகக் கூறமுடியாது. ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிரான வன்முறைகளைக் கண்டிப்பதிலும் அவர் முன்னணியில் நின்றிருக்கிறார்.

இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது ஊடகத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த குற்றவியல் அவதூறு சட்டம் (Criminal Defamation Law) நீக்கப்பட்டது. பிறகு மீண்டும் ஒரு தடவை அவர் பிரதமராக இருந்த அரசாங்கமே தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தை (Right to Information Act) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பொதுவில் அவர்  லிபரல் ஜனநாயக எண்ணப்போக்குடைய ஒரு அரசியல் தலைவராகவே  நோக்கப்பட்டார். மேற்குலகமும் கூட இலங்கை அரசியல் தலைவர்களில் விக்கிரமசிங்கவை பெருமளவுக்கு ஆதரித்தது.

ஆனால், கடந்த வருடம் ஜனாதிபதியாக வந்த பிறகு அவர் தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக விரோத சட்டங்களைக் கொண்டுவருவதில் அடிக்கடி நாட்டம் காட்டுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதற்கு இலங்கையின் வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையில் கடந்த வருடம் இடம்பெற்றதைப் போன்று மீண்டும் மக்கள் கிளர்ச்சி மூண்டுவிடாதிருப்பதை உறுதிசெய்வதில் அரசாங்கத்துக்கு இருக்கும் முனைப்பை தவிர வேறு முக்கிய காரணம் எதுவும் இருக்கமுடியாது.

தற்போது இரு சட்டமூலங்கள் சர்ச்சையை தோற்றுவித்திருக்கின்றன. கடந்த மாதம் வர்த்தமானியில் வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் (Anti – Terrorism Bill) ஒன்லைன் பாதுகாப்பு சட்டமுலம் (Online Safty Bill) ஆகியவையே அவையாகும்.

கடந்த  44 வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் மிகவும் கொடூரமான  பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act) பதிலீடு செய்வதற்காக வரையப்பட்டதே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம். கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்டப்பட்ட  சட்டமூல வரைவு உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதை அடுத்து அதை மீளாய்வு செய்வதாக அரசாங்கம் உறுதியளித்தது.

தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலும் இடம்பெற்றிருக்கும் சட்டமூலம் அரசாங்கம் கூறிய அந்த மீளாய்வுக்கு பின்னரான வடிவமேயாகும். அதை ஆய்வசெய்த சட்டத்துறை நிபுணர்களும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் புதிய வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கக்கூடியதாக நிறைவேற்று அதிகாரத்தை விரிவாக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

குறிப்பாக, நவீன இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் மூண்டிருக்கும் அரசியல் – பொருளாதார நெருக்கடிகள் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் இடையில் ஆழமான அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு நேரத்தில் இத்தகைய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது பெரும் ஆபத்தாக அமையும் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. புதிய சட்டமூலத்தை மீண்டும் ஒரு தடவை மீளாய்வுக்கு அரசாங்கம் உட்படுத்துமா என்பது முக்கியமான ஒரு கேள்வி.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் மார்ச் வடிவம் குறித்து தங்களால் முன்வைக்கப்பட்ட அவதானங்களை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசனம் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஆனால், அதேவேளை ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தை  பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கடந்த செவ்வாய்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைப் போன்றே ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலமும் பொதுவெளியில் பெரும் விவாதத்தை மூளவைத்திருக்கிறது. சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவந்திருப்பதாக  அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், சட்டமூலம் இணையத்தை அரசியல் தொடர்பாடல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக எதிரணி அரசியல் கட்சிகளும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும்  சுட்டிக்காட்டுகின்றன.

ஊடக சுதந்திரத்தை இந்தச் சட்டமூலம் பாரதூரமான ஆபத்துக்குள்ளாக்கும் என்று ஊடகத்துறை அமைப்புக்கள் பலவும் கவலை வெளியிட்டிருக்கின்றன.

சட்டமூலத்தை கணிசமானளவுக்கு மாற்றியமைக்க வேண்டும் அல்லது முற்றாகவே கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் அரசாங்கம் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.

எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று, அன்றைய தினமே  சட்டமூலத்தின் அரசியலமைப்புப் பொருத்தப்பாடு குறித்து கேள்வியெழுப்பி அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முதல் மனுவை ஊடகவியலாளர் ஒருவர் தாக்கல் செய்திருக்கிறார். அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களினால் மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பது நிச்சயம்.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் இணையத்தள உள்ளடக்கங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் பணிக்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமிப்பதற்கான ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் இணையப் பிரசுரங்களையும் தடைசெய்வதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஆணைக்குழு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்லைன் குற்றச்செயல்களுக்கு சிறைத் தண்டனையையும் கூட சிபாரிசு செய்யமுடியும்.

கடந்த வருடம் அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவை சிபாரிசு செய்வதற்கு வகைசெய்யும் ஏற்பாட்டுக்கு புறம்பாக ஒன்லைன் பாதுகாப்பு விவகாரத்தில் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. அதனால், ஆணைக்குழுவின் சுயாதீனம் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது.

உத்தேச ஆணைக்குழுவின் தலைவரையும் உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமிக்கும் ஏற்பாட்டைச் சுட்டிக்காட்டிய  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தானே தெரிவுசெய்து நியமிக்கும் ஒரு குழுவினரின் ஊடாக சமூக ஊடகங்களில் மக்கள் செய்யும் பதிவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகிறார்.

இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தகவல் பரிமாற்றச் சேவைகளைப் (Internet based communication services) பயன்படுத்துகிறவர்களினால் காணப்படுகின்ற, கேட்கப்படுகின்ற அல்லது உணரப்படுகின்ற எதையும் ‘உண்மை’ (Fact) என்று சட்டமூலம் வரைவிலக்கணம் செய்கிறது.

அவமதிப்புக்கு நிகரான பொய்யான வாசகங்கள் (False statements) தொடக்கம் அமைதியைக் குலைக்கும் நோக்குடன் பொய்யான வாசகத்தின் மூலம் திட்டமிட்ட முறையில் நோக்கத்தோடு அவமதிப்பைச் செய்வது வரை தண்டனைக்குரிய பல்வேறு குற்றச்செயல்கள் சட்ட மூலத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த விசாலமான வார்த்தைப் பிரயோகங்களுடனான குற்றங்கள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன என்று ஊடகத்துறை தொடர்பான சட்டங்களில் நிபுணத்துவம் கொண்டவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்படுமேயானால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மிகவும் மோசமாகப் பாதிக்கும் என்பதுடன் இலங்கையில் ஏற்கெனவே சுருங்கிக் கொண்டிருக்கும் சிவில் பரப்பை (Civic Space) மேலும் குறுகச்செய்துவிடும் என்று சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு (International Commission of Jurists) கூறியிருக்கிறது.

தகவலைப் பெறுவதற்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் உட்பட மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதை சட்டமூலம் மலினப்படுத்தும் என்றும் அந்த ஜூரர்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

அதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தையும் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தையும் கைவிடவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறது. இரு சட்டமூலங்களுமே மக்களின் சுதந்திரத்தைப் பாரதூரமாகப் பாதிக்கும் என்பதுடன் நாட்டில் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாரிய பாதிப்பைக் கொண்டுவரும் என்று கூறியிருக்கும் சட்டத்தரணிகள் சங்கம் சட்டத்துறை சமூகம் உட்பட இந்த விவகாரங்களில் பங்கும் ஈடுபாடும் கொண்ட தரப்புகளுடன் கலந்தாலோசிக்காமல் சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டுவந்திருப்பதை கடுமையாக கண்டனம் செய்திருக்கிறது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவரும் தருணம் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சர் ரிறான் அலஸுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமூலங்களின் ஊடாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஆபத்துக்குள்ளாக்குவதைத் தவிர்த்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்களின் நிறுவன ரீதியான ஆற்றல்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு கூறியிருக்கிறது. சட்டமூலத்துக்கு ஏழு திருத்தங்களையும் ஆணைக்குழு முன்மொழிந்திருக்கிறது.

சட்டமூலத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் ஒன்லைன் ஆபத்துக்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கமுடையது என்று பெற்றோர்கள் தவறாக நம்புவதற்கு வழிவகுக்கிறது என்று கூறியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ், சட்டமூலம் உண்மையில் சமூக ஊடகங்களினால் விமர்சிக்கப்படுகின்றவர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று குறிப்பிட்டார்.

“பல்வேறு விமர்சனங்களில் இருந்தும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பாதுகாப்பதே ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தின் நோக்கமாகும் என்று சுட்டிக்காட்டும் சாலிய பீரிஸ் சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதுதான் அரசாங்கத்தின் உண்மையான நோக்கமாக இருந்தால் அதற்கு புதிய சட்டங்கள் தேவையில்லை. இணையவெளிக் குற்றச்செயல்களை கையாளுவதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களே போதுமானவை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தை புறமொதுக்கிவிடக்கூடியதும் அந்தச் சட்டத்தின் மூலமாக கடந்த சில வருடங்களாக அடையக்கூடியதாக இருக்கும் நேர்மறையான விளைவுகளை பயனற்றவையாக்கிவிடக்கூடியதுமான சட்டங்களைக் கொண்டுவருவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும். பிரதமராக இருந்தபோது தானே நீக்கிய குற்றவியல் அவதூறுச் சட்டத்தை பின்கதவின் ஊடாக மீண்டும் கொண்டவரும் ஒரு முயற்சியாக ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் அமையும் என்பதை ஜனாதிபதி விக்கிரமசிங்க உணர்ந்து கொள்ளவேண்டும் என்று ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகை கடந்தவாரம் அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவருவரும் விவகாரத்தில் நடந்து கொண்டதைப் போன்றே ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூல விவகாரத்திலும் பொது விவாதத்துக்கு அல்லது பரந்தளவிலான கலந்தாலோசனைக்கு அரசாங்கம் வாய்ப்பைத் தரவில்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. சட்டங்களை கொண்டுவரும்போது பரந்தளவிலான கருத்தாடலுக்கு வாய்ப்புக்களை வழங்காமல் இருப்பது பொதுவில் இலங்கை அரசாங்கங்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

சட்டவாக்கச் செயன்முறைகள் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அல்லது ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அன்றி நாட்டினதும் மக்களினதும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். அந்த செயன்முறைகளை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கவேண்டும்.

சட்டங்கள் நீதியானவையாகவும் பயனுறுதியுடையவையாகவும் அமைவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக சமூக நலனில் அக்கறைகொண்ட சட்டநிபுணர்கள், கல்விமான்கள், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் விரிவான கலந்தாலோசனைகளை நடத்துவதும் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்வதுமே ஆரோக்கியமான ஜனநாயக செயன்முறைகளாக இருக்கும்.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னதாக அகல்விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்ட இரு சர்வதேச உதாரணங்களை அவதானிகள் கவனத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்

நான்கு வருடகால பொது விவாதத்துக்குப் பின்னரே பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இரு வாரங்களுக்கு முன்னர் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமொன்றை நிறைவேற்றியது. உலகளாவிய சமூக ஊடகத் தளங்களுடன் மாத்திரமல்ல, சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஈடுபாடு கொண்ட அமைப்புக்களுடனும் விரிவான கலந்தாலோசனைகள்  நடத்தப்பட்டன.

அந்தச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் கணிசமானளவுக்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன் பொதுமக்களினாலும் நாடாளுமன்றத்தின் மக்கள் சபை மற்றும் பிரபுக்கள் சபையினாலும்  முன்மொழியப்பட்ட திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இலங்கை சட்டமூலத்தில் கூறப்பட்டிருப்பதைப் போன்று அரசாங்கத்  தலைவரினால் நியமிக்கப்டும் ஒரு  ஆணைக்குழுவிடம் அல்ல ஐக்கிய இராச்சியத்தின் அரச ஒழுங்கமைப்பு நிறுவனமான தகவல் தொடர்பு அலுவலகத்திடமே (UK Office of Communications) ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் சட்டம் கருத்துவெளிபாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் கருத்தூன்றிய கவனத்தைச் செலுத்தியிருக்கிறது என்று தகவல் அறிவதற்கான உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினரும் குடியியல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் மிகுந்த அக்கறைகொண்டவருமான சட்டத்தரணி  கிஷாலி பின்ரோ ஜெயவர்தன எழுதியிருக்கிறார்.

இலங்கையின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் சிங்கப்பூரின் சமூக ஊடக பாதுகாப்பு சட்டத்தை (Protection from Online Falsehood and Manipulation Act) பின்பற்றியதாக  வரையப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசியல் நோக்கங்களுக்காகச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கும் பேச்சு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கவும் கூடியவை என்று நியாயமான அச்சத்தை தரக்கூடியதாக சில ஏற்பாடுகள் இலங்கையின் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவதானிகள் கூறுகிறார்கள்.

ஒளிவுமறைவின்றி பரந்தளவிலான பொது ஆலோசனைச் செயன்முறைகளுக்குப் பின்னரே சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இலங்கையில் அரசாங்க வர்த்தமானியில் சட்டமூலம் வெளியான பின்னரே விவாதம் அதுவும் அரசாங்க தரப்பின் ஈடுபாடு இன்றி சிவில் சமூக அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த விவாதங்களில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை அரசாங்கம் கவனத்தில் எடுத்து மாற்றங்களைச் செய்யமுன்வருமா என்று நம்பிக்கை வைக்கக்கூடியதாக நிலைவரம் இல்லை. ஏனென்றால், இன்னொரு மக்கள் கிளர்ச்சி மூண்டுவிடுமோ என்று அஞ்சிக்கொண்டிருக்கும்

அரசாங்கத்தைப் பாதுகாப்பதே சட்டமூலத்தின் உண்மையான நோக்கமாக இருக்கிறது.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமேயானால் தோன்றக்கூடிய நிலைவரம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை உணர்த்துவதற்கு உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீன் தனது நாட்டில் பேச்சு சதந்திரம் பற்றி ஒரு தடவை தெரிவித்த கருத்தை நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

“உகண்டாவில் பேச்சுச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், பேச்சுக்கு பிறகு அந்தச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியாது.”

வீரகத்தி தனபாலசிங்கம்