Photo, REUTERS/Dinuka Liyanawatte

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை என்பவற்றுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம், எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை கவனத்திலெடுக்கத் தவறுகின்றது. அதற்குப் பதிலாக, அது உழைக்கும் மக்கள் மீது மிக மோசமான விதத்திலான பாதிப்புக்களை எடுத்துவரக் கூடிய பெருமளவுக்கு பிற்போக்கு இயல்பிலான வழிமுறைகள் மீது கவனம் செலுத்துவதுடன், அது நாட்டின் தொடர்ந்து நீடிக்கும் கடன் சுமையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.

இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் அவருடைய சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை வெளியேற வைத்த அறகலய என அழைக்கப்பட்ட பாரிய மக்கள் எதிர்ப்பியக்கம் முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு சற்று மேற்பட்ட காலப் பிரிவுக்குள் இலங்கை மக்கள் மீண்டும் ஒரு முறை வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.

பொது மக்களின் அதிருப்தி மீண்டும் தலைதூக்குவதற்கான தூண்டுதல் காரணி சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் என்பவற்றுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தமாகும். நாட்டின் நீடித்து வரும் சென்மதி நிலுவை நெருக்கடியைக் கவனத்திலெடுக்கும் நோக்கத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் நான்கு வருடத்துக்கு மேற்பட்ட காலப் பிரிவின் போது இலங்கைக்கு 3 பில்லியனுக்கும் குறைந்த அமெரிக்க டொலர்களையே வழங்குகின்றது – நாடு அதன் கடன்களை திருப்பிச் செலுத்தும் கடப்பாட்டினை நிறைவேற்றி வைப்பதற்குத் தேவைப்படும் தொகையில் இது ஒரு சிறு அளவாக இருந்து வருவதுடன், 2022ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 18 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து வந்த அதன் அந்நியச் செலாவணி வருவாயில் ஆறில் ஒரு பங்கு மட்டுமேயாகும்.

இந்த அவசர கடனுதவிக்கு பகரமாக சர்வதேச நாணய நிதியம் தொடரான பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்நிபந்தனைகள் இலங்கையின் ஊதியம் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிகள் என்பவற்றை கணிசமான அளவில் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, சந்தை செலாவணி விகிதங்களுக்கு நகர்ந்து செல்ல வேண்டும் எனக் கட்டாயப்படுத்திய பணிப்புரை உடனடியாக தீவிரமான நாணயப் பெறுமதி இறக்கமொன்றுக்கு வழிகோலியது. அதன் விளைவாக, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் என்பவற்றின் விலைகள் வானளாவ அதிகரித்தன. மேலும், ஜூன் 2022 க்கும் பெப்ரவரி 2023 க்கும் இடைப்பட்ட காலப் பிரிவின் போது மின்சார கட்டணங்களில் 165% அதிகரிப்பு ஏற்படுவதற்கு அது பங்களிப்புச் செய்தது.

அரசிறை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பொருளாதாரம் தொடர்ந்தும் அதன் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP) 2022 இல் 7.8% ஆல் வீழ்ச்சியடைந்ததுடன், 2023 இன் முதல் காலாண்டின் போது 11.5% ஆல் வீழ்ச்சியடைந்திருந்தது. இது வேலைவாய்ப்பு, வாழ்வாதாரங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சியின் சாத்தியப்பாடு என்பவற்றின் மீது மிக மோசமானதொரு தாக்கத்தை எடுத்து வந்திருந்தது. அதனையடுத்து மெய் வேதனங்கள் 2022 இல் 30 – 50% ஆல் வீழ்ச்சியடைந்ததுடன், அவை தொடர்ந்தும் தேக்க நிலையில் இருந்து வந்துள்ளன.

ஊழலுக்கெதிராகப் போராடுதல் மற்றும் சட்ட விரோதமான நிதிப் பாய்ச்சல்களைத் தடுத்து நிறுத்துதல் என்பவற்றின் முக்கியத்துவம் குறித்து வார்த்தைஜாலங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் இந்தப் பிரச்சினைகளை வினைத்திறன் மிக்க விதத்தில் கையாள்வதற்கு போதிய வலுவைக் கொண்டதாக இருந்து வரவில்லை. கம்பனித்துறை வருமான வரிகளில் அது ஒரு மிதமான அளவிலான அதிகரிப்பை உள்ளடக்கினாலும் கூட, செல்வ வரியினை விதிக்கும் சாத்தியப்பாட்டினை அது புறக்கணிக்கின்றது. மேலும், பெறுமதி சேர் வரியை 15% ஆல் அநேகமாக இரட்டிப்பாக அதிகரித்தல் போன்ற பெருமளவுக்கு பிற்போக்கு இயல்பிலான வரி முறைகள் மீது அது கவனம் செலுத்தியிருப்பது, மறைமுக வரிகளுக்கூடாக உருவாக்கப்படவிருக்கும் மேலதிக வருமானத்தின் பெரும் பகுதி சாதாரண மக்கள் மீது மிதமிஞ்சிய அளவிலான ஒரு தாக்கத்தை எடுத்து வரும் என்பதைக் குறிக்கின்றது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன்களை மீளமைப்புச் செய்ய வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு இணங்கியொழுகுவது குறித்து அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்துக்கான ஓர் எதிர்வினையாகவே தற்போதைய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அலை தோன்றியிருக்கிறது. வெளிநாட்டுக் கடனை தாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு மட்டத்துக்கு குறைக்கும் விடயத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்த ஒப்பந்தம் மொத்தக் கடனை குறைக்கும் விடயத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் மூலம் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்கள் தொடர்பாக விதிக்கப்பட்டிருக்கும் பிணைகளின் பெறுமதி இழப்பு விகிதத்தை 30% ஆக மட்டுமே வைத்துள்ளது.

இது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதுடன், அதனை நியாயப்படுத்துவது சிரமமானதாக இருந்து வருகின்றது. உலகளாவிய நாணய இருப்பை வெளியிடாத நாடுகளில் உள்நாட்டுக் கடன் மற்றும் வெளிநாட்டுக் கடன் என்பவற்றுக்கிடையில் ஒரு தெளிவான வேறுபாடு இருந்து வருகின்றது. அரசாங்கங்கள் தமது சொந்த நாணயங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்; அவை அவ்வாறு செய்தும் வருகின்றன. தமது சொந்த நாணயங்களின் வழங்கல் அந்தந்த அரசாங்கங்களின் மத்திய வங்கிகளினால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு மாறான விதத்தில், வெளிநாட்டு நாணயத்தில் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டுமானால் அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டுவதோ அல்லது புதிய கடனெடுப்புக்களை மேற்கொள்வதோ அவசியமாகும்.

இலங்கை எதிர்கொண்டு வரும் நெருக்கடி, அந்நியச் செலாவணி இருப்புகள் போதியளவில் இல்லாதிருப்பதன் காரணமாக வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாதிருக்கும் நிலையின் விளைவாகவே தோன்றியிருக்கின்றது. அரசாங்கம் 2016 தொடக்கம் இரு தரப்பு மற்றும் முத்தரப்பு கடன் வழங்குநர்களையும் உள்ளடக்கிய விதத்தில் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கென பிரதானமாக தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து புதிய சர்வதேச கடன்களைப் பெற்றுக் கொள்ள விரும்பியது. மாற்றுத் தீர்வுகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, அதன் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதனை நிறுத்துவதற்கு 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம் முடிவு செய்தது.

ஆனால், ஏற்கனவே வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரத்தில் உள்நாட்டுக் கடன்களை மீளமைப்புச் செய்வது என்பது, வேதனைமிக்கதாகவும், அதேபோல அநாவசியமானதாகவும் இருந்து வருகிறது. இலங்கையின் உள்நாட்டுக் கடன்களை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் பல்வேறு நிறுவனங்கள் வைத்துள்ளன. நாட்டின் வங்கித் தொழில் முறைமை ஏற்கனவே மிகவும் மோசமான விதத்தில் பலவீனமடைந்திருக்கும் பின்னணியில், எதிர்பார்க்கப்படும் சீராக்கத்தின் மிக மோசமான பாதிப்புக்களை ஓய்வூதிய நிதியங்கள் நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இது ஏற்கனவே பாரிய விலை அதிகரிப்புக்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் ஓய்வுகால சேமிப்புக்கள் மீது கணிசமான ஒரு தாக்கத்தை எடுத்து வர முடியும். இலங்கையின் மிகப் பெரிய ஓய்வூதிய நிதியங்கள் வைத்திருக்கும் இறைமைக் கடன் முறிகளின் வட்டி விகிதங்களை 20% இலிருந்து 12% ஆக குறைப்பதன் மூலமும், அதன் பின்னர் 2025ஆம் ஆண்டு தொடக்கம் அவை முதிர்ச்சியடையும் வரையில் வட்டி விகிதத்தை 9%ஆகக் குறைப்பதன் மூலமும் அரசாங்கம் அதன் வட்டி சுமையை வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.5% ஆகக் குறைத்துக் கொள்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அகிலன் கதிர்காமர் அண்மையில் மேற்கொண்ட மதிப்பீடுகள், இதன் விளைவாக இன்றிலிருந்து ஒரு தசாப்த காலத்துக்குள் ஓய்வூதிய நிதியங்களின் மதிப்பு 30% ஆல் வீழ்ச்சியடையும் என உத்தேசிக்கின்றன. மேலும், பெரும்பாலான சந்தரப்பங்களில் உழைக்கும் மக்கள் வைத்திருக்கும் ஒரேயொரு நிதிச் சொத்தாக இருந்து வரும் இந்த ஓய்வூதிய நிதியங்களின் ஆதாயங்கள் மீது 30% வரி அறவிடப்படவுள்ளது. இது கம்பனித்துறையில் பல கம்பனிகள் மீது பிரயோகிக்கப்படும் வரி விகிதத்திலும் பார்க்க உயர்வானதாகும்.

தமது வாழ்நாள் சேமிப்புக்களை இந்த ஓய்வூதிய நிதியங்களில் முதலீடு செய்திருக்கும் பெருந் தொகையான தொழிலாளர்கள் வரி அறவிடப்படக் கூடிய குறைந்தபட்ச வருமானத் தொகையிலும் பார்க்க குறைவான வேதன வருமானங்களையே உழைத்து வருகின்றார்கள். ஆடைத் தொழில்துறையில் வேலை செய்து வரும் பெண்கள் மற்றும் சிறுபான்மை தமிழ் குழுக்களைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போன்ற பால்நிலை மற்றும் இனத்துவ அடிப்படையில் பாரபட்சம் போன்ற ஒன்றுடனொன்று சம்பந்தப்பட்ட எண்ணற்ற பாதிப்புக்களை எதிர்கொண்டு வரும் தொழிலாளர்களையும் இது உள்ளடக்குகின்றது.

இந்தக் குழுக்கள் ஏற்கனவே தமது வாழ்க்கைத் தரங்களில் பாரியளவிலான ஒரு வீழ்ச்சியை அனுபவித்து வந்துள்ளன. இலங்கையின் 22.2 மில்லியன் மக்களில் சுமார் 56% த்தினர் இப்பொழுது பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட பலவீன நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களில் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரிவினராக இருக்கின்றனர். ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளில் சுமார் 43% த்தினர் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, கணிசமான அளவிலான கர்ப்பிணித் தாய்மார் மற்றும் தாய்ப் பாலூட்டும் பெண்கள் ஆகியோரும் போசாக்கின்மையை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கையின் வேதனத் தொழிலாளர்களுக்கு உரித்தான சிறு அளவிலான ஓய்வூதிய நிதியங்களை இலக்காகக் கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மீளமைப்புத் திட்டம் தற்போதைய வர்க்க, பால்நிலை மற்றும் இனத்துவ ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்த முடியும். கடின உழைப்புக்கூடாக ஈட்டிக் கொண்டிருக்கும் தமது சேமிப்புக்கள் இல்லாமல் செய்யப்படும் பொழுது, வறுமை மட்டத்திலிருக்கும் தொழிலாளர்கள் மேலும் கீழ் நிலைக்குள் தள்ளப்படுவார்கள்.

அதே வேளையில், இந்த சீராக்க செயன்முறை, சிக்கனம் மற்றும் குறைந்து வரும் சமூக சேவைகள் என்பவற்றின் பின்னணியில் தொடர்ந்தும் வேதனமற்ற பராமரிப்புப் பணிகளை வழங்கி வரும் பெண்களின் மீது பெருமளவுக்கு தங்கியிருந்து வருகின்றது. இலங்கையின் உழைக்கும் வர்க்க பெண்களின் இந்தப் பரிதாப நிலை, நாட்டின் கடன் நெருக்கடி தெளிவான விதத்தில் எடுத்து வந்திருக்கும் பால்நிலை அடிப்படையிலான பாதிப்புக்களையும், அதனை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையையும் எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கையின் தொடர்ந்து நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான ஒரு தீர்வு கிட்ட வேண்டுமானால் உத்தி தொடர்பான தீவிரமான ஒரு மாற்றம் அவசியப்படுகின்றது. வலுவான ஒரு பொருளாதார மீட்சியை எடுத்து வரும் முயற்சியின் போது அரசாங்கமும், சர்வதேச நாணய நிதியமும் உழைக்கும் மக்கள் மீது இந்தச் சீராக்க நடவடிக்கையின் சுமைகளை ஏற்றுவதற்குப் பதிலாக, அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை விருத்தி செய்யும் விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

ஜயாத்தி கோஷ்

ஜயாத்தி கோஷ், மசாசுசெட்ஸ் அமஹர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியராக இருந்து வருவதுடன், ரோம்ஸ் கிளப்பின் நிலைமாற்றப் பொருளாதார ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினராகவும் உள்ளார்.

காஞ்சன என். ருவன்புர

கோத்தன்பெர்க் பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி புவியியல் பேராசிரியராக பணியாற்றி வரும் காஞ்சன என். ருவன்புர, இலங்கை அரசியல் பொருளாதாரத்துக்கான மெய்நிகர் மற்றும் தன்னார்வ முன்முயற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

PROJECT SYNDICATE தளத்தில் Sri Lanka’s Dangerous Domestic Debt Restructuring என்ற தலைப்பில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.