படம் | Groundviews

அமெரிக்காவின் அனுசரணையுடனான மூன்றாவது தீர்மானம் வெளியானதைத் தொடர்ந்து, அது தொடர்பான அங்கலாய்ப்புகளும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. சிலர் சர்வதேசம் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக ஆதங்கப்படுகின்றனர். சிலரோ இனியும் சர்வதேசத்தை நம்பியிருப்பதில் அர்த்தமில்லை என்கின்றனர். இன்னும் சிலரோ இதுதான் சந்தர்ப்பமென்று கூட்டமைப்பு மக்களை ஏமாற்றிவிட்டதாக விமர்சிக்கின்றனர். ஆனால், சர்வதேச அரசியல் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வந்தவர்களுக்கு இது ஆச்சரியமான ஒன்றாக இருக்கப் போவதில்லை. கூட்டமைப்பின் தலைமைக்கும் இது ஆச்சரியமான ஒன்றாக இருக்கப் போவதில்லை. சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் ஜெனிவாவில் அதிசயங்கள் ஏதும் நிகழ்ந்துவிடுமென்று அவர் நம்பியிருக்கவில்லை என்பதை கோடிகாட்டியது. ஜெனிவாவில், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் இடம்பெறும் விடயங்கள், அதனை ஆதரிக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில், அமெரிக்க பிரேரணையை ஏனைய நட்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதே சம்பந்தனின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதுதான் இன்று நடைபெற்றுமிருக்கிறது.

ஆனால், கூட்டமைப்புக்குள் இருக்கும் சில கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து மாறுப்பட்ட அபிப்பிராயங்கள் உள்ளவர்களாக இருந்திருக்கலாம். இதேவேளை, உலகில் இருக்கும் அனைவரும் தங்களின் நலன்களை தியாகம் செய்துவிட்டு, இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்காக களமிறங்க வேண்டுமென்று விரும்பும் ஒரு சில தமிழ் அறிவாளிகளோ தற்போது அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையானது, புதுடில்லியின் பங்களிப்புடன் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டாளிகளால் வடிவமைக்கப்பட்டதென்று வாதிடுகின்றனர். மேலும், மேற்படி அமெரிக்க பிரேரணையானது, இனப்படுகொலையொன்றிற்கு முகம்கொடுத்துவரும் ஈழத் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். புதுடில்லியின் தலையீடு இருந்திருக்கும் என்பதிலும் ஆச்சரியப்பட என்னவிருக்கிறது? இது ஒரு தெற்காசிய அரசியல் யதார்த்தம் என்பதைத் தவிர.

ஆனால், இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்கப் பிரேரணையானது, முன்னைய பிரேரணைகளிலிருந்து ஒரு படி மேல் சென்றிருக்கிறதா அல்லது கீழிறங்கியிருக்கிறதா? ஒருபடி மேல் சென்றிருக்குமாயின் அதுதான் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரைநிகழ்த்திய அமெரிக்க பிரதிநிதி சாரா சீவோல், இலங்கைப் போரின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை உள்ளிட்ட, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீன விசாரனை நடத்துமாறு 2012இலும் 2013இலும் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கோரப்பட்டிருந்தது. ஆனால், இலங்கை அரசு இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை. இதனைக் கருத்தில்கொண்டே குறித்த விசாரனையை ஜ.நா. மனித உரிமைகள் பணிமனை நடத்தவேண்டுமென்று கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த இடத்தில் ஏற்கனவே வெளிவந்த ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளையின் அறிக்கை குறித்தும் பார்த்துக் கொள்வோம். கடந்த மாதம் வெளிவந்த பிள்ளையின் 74 விடயங்கள் அடங்கிய அறிக்கையில் பிள்ளை, இலங்கை நிலைமைகளை மதிப்பிடும் நோக்கில் ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கான பரிந்துரையை வழங்கியிருந்தார்.

ஆனால், பிள்ளையின் அறிக்கையை கொழும்பு முற்றிலுமாக நிராகரித்திருந்தது. ஆனால், அமெரிக்கப் பிரேரணையோ, பிள்ளையின் அறிக்கையை வரவேற்றிருக்கிறது. ஆனால், சர்வதேச விசாரணைக்கான பொறிமுறையை மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்பாக்கியுள்ளது. அதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசிற்கும் அழைப்பு விடுத்துள்ளது. முன்னைய பிரேரணைகளைப் போன்று இதுவும் உள்ளக விசாரனை ஒன்றையே சுட்டுவது போன்று தோற்றமளித்தாலும், அந்த விசாரனையில் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையையும் ஈடுபடுத்தும் ஒரு நோக்கிலேயே தற்போதைய பிரேரணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்த விசாரணை என்பது இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாக கருதப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பானதாகவே அமைந்திருக்கும். அதுவும் பிரேரணையில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆரம்பத்தில், ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே விடயங்கள் அணுகப்படும். குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், அரசின் மீது ஜந்து குற்றச்சாட்டுகளும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஆறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மனித உரிமைகள் பேரவை விசாரிக்க முற்படும். அவ்வாறு நிகழுமாயின், இதுவரை அரச படைகள் பற்றி மட்டுமே பேசப்பட்டுக் கொண்டிருந்த குற்றச்சாட்டுகள், விடுதலைப் புலிகள் பக்கமாகவும் திரும்பும். தமிழ் சூழலில் இயங்கிவரும் சில அரசியல் செயற்பாட்டாளர்கள் இதனை விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளும் வெளிவருமாக இருப்பின், இதுவரை அவர்கள் முன்வைத்து வந்த அரசியல் கோஷங்கள் கேள்விக்குள்ளாக நேரிடலாம்.

சர்வதேசம் ஏமாற்றிவிட்டதாக தங்களின் அதிர்ச்சியை வெளியிடுவோர் முதலில் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, சர்வதேசம் எங்களை நம்புங்கள் என்று எப்போது குறிப்பிட்டது? தமிழர்களாக அப்படி நம்பிக்கொண்டு கற்பனையுலகில் சிறகடிப்பதற்கு மற்றவர்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? எந்தவொரு சர்வதேச சக்தியும் தனது நலன்களை புறம்தள்ளிவிட்டு எந்தவொரு விடயத்திலும் ஈடுபாடு கொள்ளாது. இதனை பலமுறை எனது பத்திகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். இன்னும் அதனை எவ்வாறு அழுத்திச் சொல்வதென்னும் சூட்சுமங்களும் விளங்கவில்லை. ஆனால், ஒரு விடயத்தை குறிப்பிடலாம், விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்குமான யுத்தம் என்பது முற்றிலுமாக இலங்கைக்குள் தீர்மானிக்கப்பட்ட விடயம்.

இலங்கை அரசிற்கு எதிரான யுத்தம் என்பது அதன் இறுதிக்கட்டம் வரை, தொன்னூறுவீதமான தமிழ் மக்களால் ஆதரிக்கப்பட்ட ஒரு விடயம். இதனை இன்று பலரும் தங்களின் வசதிகருதி மறந்து விடுகின்றனர். அந்தப் போருக்கு பலரும் தங்களின் கோட்பாட்டு சட்டகங்களுக்குள் நின்றவாறு விடுதலை அரசியல் என்றும் – புரட்சி என்றும் – தேசிய விடுதலைப் போராட்டம் என்றும் விளக்கவுரை எழுதினோம். போர் செய்தது தமிழர்கள். அதற்கு விளக்கவுரை எழுதியது தமிழர்கள். இப்போது விளைவுகள் என்று வரும்போது மட்டும் சர்வதேசத்தை குற்றம் சாட்டுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும். உண்மையில் சர்வதேசம் அதாவது, மேற்குலக மற்றும் கிழக்குலக அரசுகள் அனைத்தும் போர் என்று வரும்போது, அரசுகளைக் காப்பாற்றவே முயற்சிக்கும். ஒரு போதுமே நீதி, விடுதலை என்னும் சொற்களை கருத்தில் கொள்ளாது. இந்த அடிப்படையில்தான் இலங்கையின் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதற்கும் தேவைப்பட்டால் முற்றிலுமாக இல்லாமலாக்குவதற்குமாக மேற்குலகு, கிழக்குலகு என்னும் பாகுபாடுகளின்றி அனைத்து தரப்பினரும் கொழும்பிற்கு முண்டு கொடுத்தனர். உண்மையில் அவர்கள் எவரும் தமிழ் மக்களுக்கு எதிராக கொழும்மை ஆதரிக்கவில்லை மாறாக, சொல்கேளாத புலிகள் அமைப்பு போன்ற ஒன்றுடன் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்னும் அடிப்படையில்தான் அனைவரது தலையீடும் அமைந்திருந்தது. ஆனால், எந்தவொரு சர்வதேச சக்தியும் தமிழ் பொது மக்களை கொல்லுமாறு குறிப்பிடவில்லை. மக்களை பாதுகாப்பதற்கான வாக்குறுதியையே கொழும்பும் கொடுத்திருந்தது.

ஆனால், கொழும்பு கொடுத்திருந்த வாக்குறுதிக்கு அமைவாக நடந்துகொள்ளவில்லை. அந்த அடிப்படையில்தான் தற்போது கொழும்பின் மீதான அழுத்தங்கள் தொடர்கின்றன. இந்த அழுத்தங்களின் பின்னாலும் பல்வேறு தரப்பினரின் நலன்கள் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. பிராந்திய உலகளாவிய சக்திகளுக்கு இலங்கையின் மீது இருக்கும் நாட்டத்தின் அடிப்படையில்தான், இலங்கையின் மீதான அழுத்தங்களின் தன்மையும் அமையும். இதனை விளங்கிக் கொள்ளாமல் நம்பிக்கையை வளர்ப்பதும் பின்னர் கூச்சலிடுவதும் முற்றிலுமாக தமிழர் பிரச்சினையாகும். அது சர்வதேச சமூகத்தின் பிரச்சனையில்லை. தங்களது இராணுவ பொருளாதார நலன்களுக்கு உகந்ததெனின், விடுதலை, நீதி போன்ற சொற்களுடன் களமிறங்கவும் அவர்கள் தயக்கம் காட்டுவதில்லை. இது வரலாறு முழுவதிலும் நாங்கள் காணக் கூடிய அரசியல் நியதியாகும். இதில் ஆச்சரியப்படவோ, தடுமாறவோ, விரக்தியடையவோ எதுவும் இல்லை. கவனிக்க வேண்டியது, அவர்களது நலன்களை கணித்துக்கொண்டு, அதில் நாங்கள் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை தேடிக் கொண்டிருப்பதுதான்.

யதீந்திரா

DSC_4908