முதல் கட்டுரை: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்

###

ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக் குடிக்கும் உண்டு. தாழ்த்தப்பட்டோருக்கும் உண்டு. டைட்டானிக் படத்தில் இந்த மேட்டுக்குடி பம்மாத்துகளுக்கும் எளிய மக்களின் கொண்டாட்டத்திற்கும் ஒரு அருமையான உதாரணம் உண்டு. கதாநாயகன் ஜாக் கதாநாயகி றோசை காப்பாற்றுவான், அதற்காக அவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளை அவனை விருந்துக்கு அழைப்பான். அப்போது மேட்டுக் குடியின் உணவுக் கலாசாரம் மற்றும் விருந்து என்பன எவ்வளவு போலியான வெற்றுப் பம்மாத்து என்பதை காட்டுவார்கள். பின் ஜாக், றோசை, தனது தளத்திற்கு (மூன்றாம் தர பயணிகள் இருக்கும் இடம்) அழைத்துச் செல்வான். அங்கே, ஆடலும் பாடலும் குடியும் கூத்தும் ஒரு வகை பித்த நிலையில் இருக்கும். அங்கே யாரும் ஆடாமல் இருக்க முடியாது. அந்த இசை அப்படி. அந்த மக்கள் அப்படி, அப்படி பட்டதே உண்மையான கொண்டாட்டம், கொண்டாட்டத்தில் வெட்கம் இல்லை. துயரம் இல்லை, போலித்தனம் இல்லை, அங்கே நீங்களே கூட இல்லை. கொண்டாட்டத்தில் நீங்கள் ஆடலும் பாடலும் உன்மத்தமும் தான்.

பெரும்பாலும் எளிய மக்களின் இசை, கையில் கிடைக்கும் சிறிய மத்தளங்களும் நரம்புக் கருவிகளும், வாய்ப்பாட்டும் தான். இப்படி இயற்கையின் அமைப்பிலிருந்தே உருவாகும் இந்த வகை இசை ஒரு வகை ஓர்கானிக் தன்மை கொண்டது. அதனால், அதான் அதற்கு அப்படி ஒரு வசியமும் ஈர்ப்பும் இருக்கிறது. மரண வீடுகளில் வாசிக்கும் பறை எனப்படும் வாத்தியக் கருவி டையோனியன் வகையைச் சேர்ந்தது. பொதுவாக இசைக் கருவிகள் தரும் அனுபவத்தைப் பொறுத்து அதை இரண்டாக பிரிக்கலாம். அப்பலோனியன் என்பது, இசையை ஒரு ஆன்மீக மற்றும் தனிமனித அகம் சார்ந்த எழுச்சியாக மாற்றுவது. ஒரு தியானம் மாதிரி. டையோனியன் இதற்கு எதிர்மாறானது. உடலின் ஒவ்வொரு தசையையும் ஆட வைக்கும் ஒரு பிரபஞ்ச இசை அது. அது மனிதர்களை, தங்களை மறந்து ஆட வைப்பது. பறை இரண்டாம் வகை. ஆனால், நமது சமூகத்திலோ பறை வாசிப்பவர்களை அவர்களது வாத்தியத்தை குறியீடாக்கி சாதிப் பெயராக இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பறையை அடிக்கும்போது ஆடத் தோன்றாதவர்களே இல்லை. மரணத்தைக் கூட கொண்டாட்டமாக்கும் இசையை சிருஷ்டிப்பவர்களை நாம் தீண்டத்தகாதவர்கள் ஆக ஒதுக்கி வைத்திருக்கிறோம்.

அடுத்து, இப்பொழுது யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பாடல் முயற்சிகள் பற்றி, பொதுவாக அவை வரவேற்புக்குரியவை. ஆனால், சின்னச் சின்ன சமூக அக்கறை கொண்டவையாக அவை இருப்பது கவலையாக இருக்கிறது. பாடலை கேட்டுவிட்டு ஒருத்தன் திருந்தினாலும் போதும் என்று வெற்று ஜால் ஜாப்புகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள் படைப்பாளிகள். இசை என்பது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது, இன்னும் வருகிறது, அது புரட்சியை ஏற்படுத்துகிறது அல்லது குறைந்தபட்சம் கொண்டாட்டத்தை வலியுறுத்துகிறது. இங்கே ஒரே அழுகுனிப் பாப்பா கதைதான். சமூகம் திருந்த வேணும். காதல் லீலைகள் என்று ஒரே புலம்பல். இதில் இந்த காதல் பாடல்கள் இருக்கிறதே, கடவுளே! எல்லோருக்கும் ஈசியா வாறது இது தான். தமிழ் உணர்வு வேற அப்ப அப்ப பொங்கும். இதில இவர்களை சொல்லி குற்றமில்லை. அப்படி ரசனை கெட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வேறு என்ன தான் சொல்ல.

இசை விடுதலையின் குறியீடு, கொஞ்ச வருஷங்களுக்கு முன்னர் இருந்த புலிகள் அமைப்பு அதை தவறாகவே பயன்படுத்தியதாக நான் கருதுகிறேன். அவர்கள் விடுதலையை அமைப்பின் வெற்றியாக, பக்தியாக மாற்றிவிட்டார்கள். இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலவோ, ஆபிரிக்க நாடுகளை போலவோ இசையை மொழியாகவும் விடுதலையின் வடிவமாகவும் மாற்றியிருக்கலாம். ஆனால், நடந்தது உலகறிந்தது. (நாடக ஆற்றுகைகள் இதில் கருத்தில் கொள்ளப்படவில்லை, தனியே பாடல்கள் மாத்திரம்)

விக்தர் ஹாரா என்ற சீலே நாட்டு பாடகர் ஒருமுறை இப்படி சொன்னார்,

“என்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து நான் மிகவும் வேதனைப் படுகிறேன்.

“என் தேசத்தின் வறுமை, உலகின் பல்வர் பகுதி மக்களின் வறுமை, வார்ஸாவில் யூதர்களுக்காக எழுப்பபட்டிருக்கும் நினைவுச் சின்னங்கள், வெடிகுண்டுகளால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் திகில் போரின் காரணமாக மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கும் துயரம்… ஆனால் இவ்வளவுக்கும் இடையிலும் அன்பின் வலிமையை நான் கொண்டிருக்கிறேன்.

“நான் விரும்புவது அமைதியை. அதுவே எல்லாவற்றுக்கும் மேலானது. என் கிதார் நரம்புகளின் வழியே துக்கமும் சந்தோஷமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் வழியே இதயத்தை துளைக்கும் பாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன; நாமே நம்மை பார்த்துக் கொள்வதினின்றும் விலகி, இந்த உலகை புதிய கண்களால் பார்க்க உதவும் சில கவிதை வரிகளும் அதன் வழியே வந்து கொண்டிருக்கின்றன”

–    கலகம் காதல் இசை (சாரு நிவேதிதா)

இப்படி சொல்லும் ஒருவர் தானும் இங்கே கிடைக்காமல் போனது நமது துரதிர்ஷ்டம் தான். துரதிர்ஷ்டம் என்பது ஒரு தொற்று நோய் என்று தாஸ்தவேஸ்கி சொன்னது போல் இன்றைய படைப்பாளிகள் வாய்த்திருக்கிறார்கள். அவர்களின் உலகம் தென்னிந்தியாவோடு நின்று விட்டது. இன்னும் ஏதாவது எழுதினால், படைப்புச் சுதந்திரம் அது இதென்று கதைக்கத் தொடங்கி விடுவார்கள். ஆகவே, அவர்களின் முழு படைப்புக்களையும் உள்ளடக்கி என் பார்வையை பின்னர் எழுதுகிறேன்.

சரி, டால் டிக்கி டமால் கதைக்கு வருவோம். மாலை வேளைகளில் சூரியன் பழுத்து பூமியே சிவப்பாக மாறும்போது வருவார்கள், உடைந்த டின்கள், ரப்பர் வாளிகள் சகிதம். பின்னர் டின்களில் அடிப்பார்கள், வாயால் கத்துவார்கள். உற்றுக் கேட்டால், மெல்ல மெல்ல ஒரு தாளத்தை உணரலாம். அவர்களின் வெற்றுக் கத்தல்களில் ஒரு ஒருங்கிணைவை கேட்கலாம். கோயில்களில் சாமியை உள்ளே கொண்டு போகும் போது வாசிக்கும் நாதஸ்வரத்தை டமால் வாயாலேயே வாசித்தான். டிக்கி எழுந்து ஆடினான். பின்னர் ஐய்யப்பன் பாடலொன்று. பின்னர் மாரியம்மா. கொஞ்சம் கொஞ்சமாக வெறியேறி, உச்சத்தை அடைந்தார்கள். நான் எழுதிக் கொண்டிருந்தேன், எனக்கே எழுந்து ஆட வேண்டும் போலிருந்தது. அப்படி ஒரு வாசிப்பு, அப்படி ஒரு கிரகிப்பு. அதை மீண்டும் நினைவிலிருந்து அப்படியே, வாயாலும் டின்களிலும் வாசிக்கும் இவர்களை கடந்த பத்தியில் நான் சாத்தான் என்றேன். ஆனால், டிக்கி கேட்ட ஒரு கேள்வி, இவர்கள் தேவ தூதர்களோ என்று என் கண்களை பனிக்க வைத்துவிட்டது. ஒரு சின்ன கேள்விதான், ஆனால், இந்த ஊரின் கோயில்களுக்கோ, பாட்டு கோஷ்டி வைக்கும் ஊடகங்களுக்கோ இல்லாத இங்கிதம் அவன் கேள்வியில் இருந்தது. அவன் கேட்டது இவ்வளவுதான், “அண்ணை, எழுதிக் கொண்டிருக்கிறியள், குழப்பிறமா? நிப்பாட்டட்டுமா?”, நான், “நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன், நல்லா இருக்குது தொடர்ந்து வாசியுங்கோ” என்றேன்.

இரவு நடக்கப் போகும் மெகா பிளாஸ்ட் போன்ற நிகழ்வுகளுக்கு, நூலகங்களுக்கு பக்கத்தில் காலையிலிருந்தே பாடல் போட்டு, இம்சை கொடுக்கும் சில ஊடக ரவுடிகளுக்கு (அது ஏன் என்று அடுத்த பத்தியில் கூறுகிறேன்) டிக்கியின் அளவுக்கு கூட Sense இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால், டிக்கியின் இசை கொண்டாட்டம், அதுபோக தனது கொண்டாட்டத்தின் சுதந்திரம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. அவன் போன்றவர்களுக்கே இசை ஒரு கொண்டாட்டம். மற்றவர்களுக்கு அது ஒரு பிழைப்பு. அவ்வளவு தான்.

கிரிஷாந்

Krishanth