படம் | Fotostation

யாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக சொல்வதென்றால், தின்னவேலி மார்க்கெட் ரொம்ப பிரபலம். காலையிலேயே களை கட்டிவிடும். பொடி நடையாக நடந்துபோனால் பின்வருபவனவற்றை நீங்கள் பார்க்கலாம். பீடியை இழுத்து பனியில் அற்புதமாக விடும் வீபூதி பூசிய வயதான முகங்கள், கொஞ்சம் தள்ளி மரக்கறி வந்து நிற்கும் வண்டிகள், மூட்டை தூக்கும் தொழிலாளிகள், அவர்கள் எப்போதும் மூட்டையை தூக்குவதில்லை, கைப்பற்றுவார்கள். எப்படி என்றால், ஒரு மோட்டார் சைக்கிளில் மூட்டை வருகிறதென்றால், ரன்னிங்க்லையே போய் கொக்கியை மாட்டி விடுவார்கள், பிறகென்ன, சாவகாசமாக போய் இறக்கி வைப்பார்கள். அவ்வளவு போட்டி! இதுல கூட போட்டியா எண்டதும், ரொம்ப பீலிங் ஆகாம இருப்பீர்கள் என்றால், அவர்கள் பற்றிய சில கதைகளை உங்களுக்குச் சொல்கிறேன்.

திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருக்கும் இடம் பால்ப்பண்ணை. அதை சுற்றியிருக்கும் இடங்களை எங்கள் வீடுகளில் கொலனி என்று குறிப்பிடுவார்கள். அங்கே இருப்பவர்கள் சாதி குறைந்தவர்கள் என்று நாங்கள் சின்னதாக இருக்கும்போதே சொல்லி வைத்திருந்தார்கள். அவர்களில் அழகன்கள் இல்லை, அழகிகள் இல்லை, கிழவிகள் முதல் குமரிகள் வரை பெரும்பாலும் ஒரே நிறம்தான். கலைந்த தலைமுடி, நாறும் உடல், மண் ஒட்டிய தோல்… இது தான் அவர்கள். தமிழ்நாட்டின் குப்பம், சேரி போன்ற இடங்களை சினிமாவில் பார்த்திருப்பதால், இவர்கள் அப்படி தானோ என்று நினைத்தேன், இருந்தும் இவர்கள் என் வயது பிள்ளைகள், எனக்கு இப்போது 20. 13 வயதில் பாரதியாரை தெரியும் வரை இவர்களை எனக்கு கீழாகவே நினைத்திருந்தேன். யெஸ், அவர்களை ஒரு ஸ்லம் (Slum) ஆகவே நான் எண்ணினேன். பின், நான் பள்ளிக்கூடம் போனேன், அவர்கள் போகவில்லை. பள்ளிக்கூடங்களை பார்த்து பயந்தார்கள் அல்லது போக வசதியில்லை. கோயில் திருவிழாக்களில் அபிஷேகம் செய்த இளநீர் கோம்பைகளை நாங்கள் கொடுக்கவில்லை. ஆகவே, திருடினார்கள். நான் தங்கச் சங்கிலி போட்டிருந்தபோது, அவர்கள் சட்டை பட்டன் இல்லாமல் நின்றார்கள்.

இவை எனது கடந்தகால நினைவில் இருப்பவை.

இப்பொழுது மீண்டும் அவர்களைப் பார்க்கிறேன். சைக்கிள் கடைகளில் வேலை செய்கிறார்கள். கையில் கொக்கிகளுடன் வீதியில் மூட்டை தூக்கிகளாக நிற்கிறார்கள். சிலர் என் முகத்தை தெரியாதது போல் திரும்பினார்கள். சிலர் எதற்கென்றே தெரியாமல் முறைத்தார்கள்.

இனி, அவர்களுடைய இன்றைய தலைமுறை பற்றிய கதை, டால் என்பவன்தான் இருப்பதிலேயே வயது கூடியவன். அநேகமாக அந்தக் கூட்டத்தின் தலைவன். பெயர்க் காரணம் – பெரிய பருப்பு என்பதால். அடுத்தது டிக்கி இவன்தான் இருக்கிறதிலேயே வயது குறைந்தவன். ஜட்டி போடும் பழக்கம் அறவே இல்லையென்பதாலும், பின்புறத்தை எப்போதும் காட்டும் படி காற்சட்டை போடுவதாலும் அவனை டிக்கி என்று அழைப்போம். டமாலுக்கு, துப்பாக்கி சுடும் படங்கள்தான் மிகப் பிடிக்கும். சரி, இவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால், யாருக்கும் தெரியாமல் கொத்து ரொட்டி சாப்பிட்டு விட்ட, எங்கள் வாசலில் கொட்டியிருக்கும் மணல் கும்பியில் ரெஸ்லிங் விளையாடுகிறார்கள்! அடி என்றால் அடி, மரண அடி, அந்த அடி எனக்கு விழுந்திருந்தால் அழுது கொண்டு அம்மாவிடம் போய் நின்றிருப்பேன். ஆனால், அவனோ, சிரித்துக் கொண்டு எழுந்து நின்றவன் தமிழ் சினிமாவின் அநேக கதாநாயகர்களில் ஒருவனாக தன்னை கற்பனை செய்துகொண்டு, டிக்கியை தூக்கி டமால் என்று தரையில் போட்டான். கழுத்தெலும்பு ‘டிக்’ என்றது, பயந்துபோன நான் பிடித்து நிறுத்தினேன், “அண்ணை பயந்துட்டார்” எண்டான் டால். அழுதுகொண்டு ஓடிய டிக்கியை பிடித்து சமாதானம் பண்ணினார்கள். அவனும் தினசரி பழக்கப்பட்டவன் தானே சமாதானமாகிவிட்டான். நானும் அவன் பாவம் என்று நினைத்தேன்.

இரவில் அவன் செய்த ரவுடித்தனத்தை பார்த்தபோது, அடக் கடவுளே நானே நாலு போட்டிருப்பன். அவனது அப்பாவின் சாறத்தை பிடித்து இழுத்தான் (அவருக்கு இப்பொழுது தான் தாடி அரும்பியிருக்கிறது. ரொம்ப சின்ன வயசு. திருமணம்! அப்பா! குடும்பம்!) “அடிடா பாப்பம்” என்று அப்பாவை திட்டிக் கொண்டிருந்தான், பக்கத்து வீட்டுக்காரர்கள், “டேய், அப்பாண்ட சாறத்த களட்றா, களட்றா” என்று உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து அடுத்த சில நாட்களில் டிக்கியின் அப்பா யாரையோ அடித்து விட, இறங்கிய பெண்கள் கூட்டம், பேசிய பேச்சென்ன! ஆடிய ஆட்டமென்ன! ஒரு கிழவி, எல்லாவற்றையும் முறையாக தொடங்குவது போல், வேழூழூழூழூழூ (இது ஒரு தடை செய்யப்பட்ட கெட்ட வார்த்தை) அந்த கடவுளுக்குத் தான் எல்லாம் தெரியும் என்று கடவுளைத் திட்டி தனது உரையை ஆரம்பித்து முடித்தாள். டிக்கி வயதும் டமால் வயதும் இருக்கும் நிறைய குழந்தைகள் தெரு முழுதும் அலறினார்கள், கத்தினார்கள், ஆரவாரித்தார்கள். தடிகள், பியர் போத்தல்கள் ஆயுதமாயின. பின் கலைந்து சென்றனர். எப்போதும் நடப்பது போல்.

டால், நேற்று போகும்போது என்னைப் பார்த்து புன்னகைத்தான். டிக்கி ஒரு கொடுப்புச் சிரிப்பொன்று சிரித்தான். குழந்தைகளா? கொலைகாரர்களா? இவர்கள். இவர்களின் இசை பற்றிய கொண்டாட்டத்தை இன்னொரு பத்தியில் கூறுகிறேன், அற்புதமாக இருக்கும்.

கடவுளும் – சாத்தானும் வாழும் பகுதியில் ஒரு அப்பாவியாக இருக்கும் என்னை அவர்கள் ஏன் முறைக்கிறார்கள். ஏன் ஒதுங்குகிறார்கள். என் முன்னோர் சொன்ன சொற்கள் என்னிலும் ஒட்டியிருக்கும், அவர்களுக்குத் தெரிகிறதோ என்னமோ? அவர்கள் வீட்டில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பார்கள், நான் சாத்தானா? கடவுளா?

கிரிஷாந்

Krishanth