Photo, TamilGuardian

“எங்களுடைய நிலத்தை மீட்பதற்காகப் போராடிவந்தமைக்குப் பலனாக எனக்கும் மகனுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்பிருப்பதாகக் கூறி பாதுகாப்புப் படையினர் பல்வேறு வகையில் தொந்தரவுகளைச் செய்தனர். இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 13 தடவை முல்லைத்தீவு பொலிஸ், முள்ளியவளை பொலிஸ், புதுக்குடியிருப்புப் பொலிஸ், 4ஆம் மாடி சிஜடி, இங்கு இருக்கும் 59 சிஐடி என பல தரப்பட்டவர்களால் விசாரிக்கப்பட்டேன். வீட்டினுள் வந்து சோதனை என்ற பெயரில் படையினர் அடாவடித்தனமாக செயற்பட்டதால் பிள்ளைகளும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். 2017 வரை எந்தவித பிரச்சினைகளுக்கும் நாங்கள் முகம்கொடுத்திருக்கவில்லை. எப்போது நாங்கள் கேப்பாபிலவு காணி மீட்புப் போராட்டத்தில் பங்கெடுத்தோமோ அன்றிலிருந்து பிரச்சினை பிரச்சினைதான்…”

கேப்பாபிலவு காணி மீட்புப் போராட்டத்தில் பிரதானமாக அங்கம் வகித்தவர்களுள் ஒருவரான சதீஸ் கெளசல்யா என்பவரே இவ்வாறு கூறினார்.  2017ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் விளைவாக கேப்பாபிலவின் ஒரு பகுதியான பிலக்குடியிருப்பு முதலில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னரும் விடுவிக்கப்படாத கேப்பாபிலவின் ஏனைய பகுதி மக்கள் போராட்டத்தைத் தொடர, கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியின் இடது பக்கமாக இருந்த இராணுவ நிலைகளை விட்டு, அரசாங்கத்திடம் நட்டஈட்டைப் பெற்றுக்கொண்டு இராணுவம் வெளியேறியிருந்தது.

தொடர் போராட்டத்தின் விளைவாக முதலில் விடுவிக்கப்பட்டிருந்த பிலக்குடியிருப்பில் மீள்குடியேறிய கௌசல்யா, பாதையோரமாக, இராணுவ அரணுக்கு அருகாமையில் பெற்றோல் விற்பதற்காக சிறிய கடையொன்றைத் திறந்திருக்கிறார். இந்தக் கடையால் தங்களுக்கு ஆபத்து என்றும், தங்களுடைய வாகனங்கள் செல்லும் போது பெற்றோல் போத்தல்களைக் கொண்டு எறிந்தால், குண்டு போல் வெடிக்கக்கூடும் என்றும் இராணுவத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றனர். அதன் பின்னர் படையினரின் தொடர்ச்சியான அடாவடித்தனத்தால் அங்கிருந்து வெளியேறி முன்னர் குடியிருந்த கேப்பாபிலவு மாதிரிக் கிராமத்துக்கே வந்துவிட்டதாக கௌசல்யா கூறுகிறார். அவர் எதிர்நோக்கிவரும் அச்சுறுத்தல் குறித்து மாற்றத்துக்கு வழங்கிய முழுமையான நேர்காணலை கீழே பார்க்கலாம்.