Photo: SriLanka Brief
ஊழியர் சேமலாப நிதி உரிமைகளைப் பேணுவதற்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் ஆரம்பித்த போராட்டத்திற்கு 10 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2011.05.30ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ரொஷேன் சானக்க என்ற தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார், மேலும் ஏழு தொழிலாளர்கள் வாழ்நாள் பூராகவும் விசேட தேவையுடையோராக்கப்பட்டார்கள். சுமார் 400 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் 3,000 தொழிலாளர்கள் உடல் ரீதியாக பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால்,பாதிக்கப்பட்ட எந்தவொரு தொழிலாளிக்கும் இதுவரைகாலம் அரசு எதுவித நீதியையும் வழங்கவில்லை. இச் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ‘மஹாநாம திலக்கரத்ன’ ஆணைக்கழு நியமிக்கப்பட்டது. ஆனால், மேற்படி ஆணைக்குகுழு பரிந்துரைத்த பரிந்துரைகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
ரொஷேன் சானக்கவினது கொலை எதிராக தாக்கல்செய்யப்ட்ட வழக்கானது இன்னமும் நீர்கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணையானது இன்னமும் முடியவில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில், வழக்கின் தீர்ப்பிற்காக எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும் என்பது நிச்சயமற்றிருக்கிறது.
ரொஷேன் சாணக்க என்ற தொழிலாளி படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்புடைய 43 சாட்சியாளர்கள் பெயர் குறித்துரைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களில் அரைவாசிப் பேரேனும் இதுவரை நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவில்லை. இந்நிலைமையின் கீழ் இவ்வழக்கின் தீர்ப்பைப்பெற எவ்வளவுகாலம் எடுக்கும் என உறுதியாகக் கூற முடியாது.
ஊழியர் சேமலாப நிதி உரிமைக்கான போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது. சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களின் அதீத அர்ப்பணிப்பு காரணமாகவே இப்போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இப்போராட்டத்தின்போது தாக்குதல்களுக்கு ஆளான தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இப்போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் அதிகாரத்தை அத்துமீறிப் பிரயோகித்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சேமலாப நிதிக்கு உரிமை கோரும் பலர் இன்று இதனை மறந்துள்ளனர். சுதந்திர வர்த்தக வலயத்தின் புதிய பரம்பரை இந்த வெற்றிகரமான போராட்டத்தைப் பற்றியும் இப்போராட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் தொழிலாளர்கள் தொடர்பாகவும் குறைந்த அக்கறை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். 2011இல் தோல்வி கண்ட ஓய்வூதியச் சட்டம் இன்று வேறு வடிவத்தில் சமர்ப்பிக்கப்படும் அபாயம் எல்லோரும் எதிர்நோக்கும் சவாலாக அமைந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனை வெளிப்படுத்தியுள்ளது.
தொழிற்சங்கங்களை அமைப்பது தொழிலாளர்களின் உரிமையாகும். இதனை உலகத் தொழிலாளர் அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், காலத்துக்குக் காலம் ஆட்சிபீடம் ஏறும் அரசாங்கங்கள் இவ்வுரிமையைப் பொருட்படுத்தாமலே செயற்பட்டு வருவது பெரும் கவலைக்குரிய விடயமாகும். சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான சட்டபூர்வமான உரிமையைக்கூட இவ்வரசாங்கங்கள் மறுத்து வருகின்றன. சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்களுக்கான ஒன்றுகூடும் உரிமையையும் இந்த ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
அதே சமயம் கொவிட்-19 தொற்று நோய் துரிதமாகப் பரவுவதன் காரணமாக சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்கள் தமது தொழில் செய்யும் உரிமையை இழந்து வருகின்றனர். இத்தகைய சவால்மிகுந்த நிலைமையின் கீழ் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றித் தொழிலாளர்கள் உட்பட அனைவரும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே, கொவிட்-19 தொற்று நோய் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே, முதலீட்டு வலயங்களில் சேவை செய்யும் தொழிலாளர் சமூகத்தின் சுகாதார நிலைமைகளோடு தொழில்களின் பாதுகாப்புப் பற்றியும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இதன்போது,
- கொவிட்-19 தடுப்பூசி வழங்குகையில், சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி, PCR பரிசோதனைகளை தொடர்ச்சியாகவும் துரிதமாகவும்மேற்கொள்ள வேண்டும்.
- தொழிற்சாலைகளினுள் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும். அதேசமயம், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் தொழிற்சாலையின் நிதி ஏற்பாட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் குணமடைந்ததும் துரிதமாக மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
- குறிப்பிட்டதொரு தொழிற்சாலை கொவிட்-19 தொற்று காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட நேர்ந்தால், மேற்படி தொழிலாளர்களுக்கு உரித்தான மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிற்சாலை மூடப்படவில்லையாயின், தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட கால எல்லைக்கு சம்பளமும் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.
- மேன்பவர் தொழிலாளர்களுக்கும் நிரந்தரமாக்கப்படாத தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா பெறுமதியான நிவாரணத்தை மாதாமாதம் வழங்க வேண்டும்.
மத்திய வங்கி அறிக்கைகளுக்கு அமைய, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆடைத் தொழில் ஏற்றுமதியின் ஊடாக இலங்கையின் வருமான சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலைமைகளைக் கருத்தில் கொண்டே மேற்படி கோரிக்கைளை நாம் முன்வைக்கின்றோம்.
எனவே, எமது உரிமைகளைப் பேணும் கோரிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நடவடிக்கை எடுக்கும்போது, தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தின்போது படுகொலைக்கு ஆளான ரொஷேனையும் விசேட தேவைக்குள்ளான தொழிலாளர்களையும் நினைவுகூருவது எமது மாபெரும் கடமையாகும். எமது போராட்டத்தை நாம் கைவிடாமல் முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.
சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பு