படம் | Groundviews
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பெண்களுக்கெதிரான சகலவித பாகுபாடுகளையும் களையும் சமவாயத்தினை கொண்டு வந்த பொழுது எமது இலங்கை அரசு அதற்குக் கையொப்பமிட்ட அரசுகளில் முன்னணியில் திகழ்ந்தது. சீடோ எனப்படும் இந்த சமவாயத்தில் 1981ஆம் ஆண்டு கையொப்பமிட்டதோடு, அதன் எதிரொலியாக 1984ஆம் ஆண்டு இலங்கையில்பெண்கள் விவகாரங்களுக்கென ஒரு விசேட அமைச்சு முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வமைச்சுக்கு பெரியளவில் நிதிகள் ஒதுக்கப்படாவிட்டாலும் அது வருடந்தோறும் ஏதோ தனக்கு முடிந்தளவில் பெண்களின் உரிமைகளின் முன்னேற்றம் குறித்து சில செயற்பாடுகளை மேற்கொண்டது என்று கருதலாம்.
இதன் தலைமையின் கீழ் 1993ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலாக பெண்களின் உரிமைப் பிரகடனங்களை வெளிப்படுத்தும் பெண்கள் பட்டயம் எங்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டது. இப்பட்டயத்தினால் ஏற்பட்ட நன்மைகளோ அளப்பரியன. அதுவரை பெண்களுக்கு பாரபட்சமான குடியுரிமைச் சட்டங்களே வழக்கில் இருந்து வந்தன. உதாரணமாக, ஒரு இலங்கைப் பிரஜையான ஆண் வெளிநாட்டுப் பெண்ணொருத்தியை மணம் முடித்தால் அப்பெண்ணுக்கு இலங்கைக் குடியுரிமை உடனடியாக வழங்கப்பட்ட அதேநேரத்தில், ஒரு இலங்கைப் பிரஜையான பெண் வெளிநாட்டைச் சேர்ந்த ஆணை மணம் முடித்தாலோ அந்த ஆணுக்கு பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை. அதாவது, பெண்களின் பிரஜாவுரிமை ஒரு ஆணின் மூலமாகவே கிடைக்கப் பெறுகின்றது என்னும் தந்தையுரிமைவாத சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான சட்டம் இது. இந்தச் சட்டம் அன்று அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு மாற்றப்பட்டது. இதன் பயனாகவே இன்று நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் வெளிநாட்டுக் கண்வன்மார்களுக்கு பிரஜாவுரிமை பெற்றுக்கொடுக்க முடிகின்றது. அது மட்டுமல்லாது, 1995ஆம் ஆண்டு எங்கள் பழமையான பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கும் வகையில் மாற்றப்பட்டதும் இப்பட்டயத்தின் உதவியினாலேயே. இப்படியே 2004ஆம் ஆண்டும், 2005ஆம் ஆண்டும் குடும்ப வன்முறைத் தடைச்சட்டமும், தொடர்ந்து பொதுவிடங்களில் பாலியல் தொந்தரவுத் தடைச்சட்டமும் கொண்டு வரப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து பல வருடகாலம் முயன்று, (ஏனெனில் இக்காலகட்டத்திற்குப் பின் தற்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்து விட்டது) இலங்கையின் தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் தயாரிக்கப்பட்டபொழுது அதற்குள்ளும் பெண்கள் உரிமைகள் தொடர்பான சில செயற்திட்டங்களை பெண்கள் அமைச்சு உட்புகுத்தியது.
இவ்வாறுரேணுகா ஹேரத், காலஞ்சென்ற ஸ்ரீமணி அத்துலத் முதலி, அமரா பியசீலி இரத்நாயக போன்ற பெண் அரசியல்வாதிகள் பெண்கள் விவசார அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதன் பயனாக இத்தனை நன்மைகளும் எம்மை வந்தடைந்தன எனக் கூறலாம். இப்படியிருக்கும் காலத்தில் கடந்த தேர்தலின் பின்னர்தான் முதன் முதலாக ஒரு ஆண் அரசியல்வாதி திஸ்ஸ கரலியத்த பெண்கள் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். பெண்கள் அமைச்சர் ஓர் ஆணா என்று எம்மில் பலர் புருவம் உயர்த்தினாலும், பெண்கள் உரிமைகளை பெண்கள் மட்டும்தான் முன்னேற்ற வேண்டும் என்றில்லையே என்பதனால் அதனை ஏற்றுக்கொண்டோம். அன்று ஆரம்பித்தது கலம்பகம்.
தனக்கு ஆறு சகோதரிகளும் ஒரு மனைவியும் இரண்டு மகள்மாரும் இருப்பதனால் பெண்கள் விவகார அமைச்சராக சகல தகுதிகளும் தனக்கு இருப்பதாக கூறிக்கொண்டு வந்தார் இவர். போச்சடா என நாம் தலையில் கைவைக்க முதலேயே “பெண்களை உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாது. ஏனெனில், அவர்கள் பொறாமை பிடித்தவர்கள் என்பதனால் தமக்கு அடுத்தவர்களை ஒருபோதும் முன்னேற விட மாட்டார்கள்” என்று திருவாய் மொழிந்தார். உடனேயே இலங்கையின் முன்னணி பெண்கள் அமைப்புக்களெல்லாம் இக்கூற்றுக்கு ஆட்சேபணை தெரிவித்து அறிக்கைகள் இட்டன. இவ்வறிக்கைக்கு ஒருவித பதிலும் இன்றிப் போகும் காலத்தில் திரும்ப “சீடோ சமவாயத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அதன் பல அம்சங்கள் எங்கள் நாட்டின் கலாசாரத்திற்கும் மதக்கொள்கைகளுக்கும் எதிராகவுள்ளன” என்று போட்டார் ஒரு போடு. இதற்கும் பெண்கள் அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்து சகல நாடுகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் இப்பட்டயத்தினை எங்கள் அரசு இத்தனை வருடங்களுக்குப் பின்பு விமர்சிப்பதன் காரணங்களைக் கோரின. அதற்கும் ஒரு பதிலுமில்லை. ஆனால், அதற்காக எங்கள் அமைச்சருடைய வாயும்ஓய்ந்தபாடில்லை. “பெண்கள் உரிமைகள் பற்றிப் பேசுகின்ற என்.ஜி.ஓ. பெண்கள் எல்லோரும் பத்தினிகளல்ல” (அதாவது தமது கணவர்களுக்கு விசுவாசமாக இருக்கும் பெண்களல்ல)என்று ஒரு பகிரங்க செவ்வியில் சொன்னார். கடந்த நவம்பர் மாதம் இதற்கு ஆட்சேபணை தெரிவித்து பெண்கள் அமைப்புக்கள் ஒன்று கூடி 168 பேர் கையொப்பமிட்ட ஒரு அறிக்கையினை ஒரு பத்திரிகையாளர் மாநாட்டினூடாக வெளியிட்டன. இந்த அறிக்கையில் திஸ்ஸ கரலியத்தவின் இராஜிநாமாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கும் அரச தரப்பில் இருந்து ஒரு பதிலோ நடவடிக்கையோ இல்லை. இதைக்கொண்டு இவருடைய கூற்றுக்களை அரசு ஆதரிக்கின்றது என்றே நாம் அனுமானித்தோம். இக்காரணத்தினால் இவருடைய ஆட்டம் இன்னமும் தொடரப்போகின்றது என்பது தெளிவாகியது.
நாம் பயந்தபடியே அடுத்த கணையுடன் இப்பொழுது வந்திருக்கிறார் அமைச்சர். இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகள் சகல பிரதேசங்களிலும் அதிகரித்திருக்கின்றன என்பது வெள்ளிடை மலை. இதற்கெதிராக காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்கின்ற கோரிக்கைகள் அரசின் மீதான அழுத்தங்களாயின. இதன் பிரதிபலிப்பாக தன்னால் உருவாக்கப்பட்ட புதிய பாலியல் வன்முறைத் தடைச் சட்டத்தினை அமைச்சர் இப்பொழுது அறிவித்திருக்கின்றார். எனக்கு அதிகாரம் தரப்பட்டால் ஒவ்வொரு பாலியல் வன்முறைக் குற்றவாளியையும் தூக்கில் தொங்கவிடுவேன் என்னும் அறிமுகத்துடன் தனது சட்டத்தின் அம்சங்களை நாட்டுக்கு முன்வைத்தபொழுது உண்மையில் அதிர்ச்சியடைந்தோம். பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளியை விரும்பினால் மணம் முடிக்கும் தெரிவு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் – அப்பெண் 18 வயதுக்குக் குறைவானால் அவள் அவ்வயது எட்டும் வரையில் குற்றவாளி காத்திருக்கவேண்டும் என்றும் – இச்சட்ட வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சு முழுமையாக வரைந்த பின்னர் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் அவற்றின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படுமாம். அதன் பின்பு சட்டமாக்கப்படுமாம்.
1980களின் ஆரம்பக் கட்டம் வரை எமது தமிழ் சினிமாவிலும் பாலியல் வன்முறை புரிந்த குற்றவாளியை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மணம் முடித்து வைக்கும் அபத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆனால், அந்தக் கதையைத் துணிந்து இப்பொழுது 21ஆம் நூற்றாண்டில் சொல்வார்களா என்பது சந்தேகம். இப்படி தமிழ் சினிமாவே நிராகரிக்கத் தொடங்கியிருக்கின்ற விடயத்தை எமது அமைச்சர் அனாயாசமாகக் கூறிவிட்டார். இங்கு பல கேள்விகள் எழுகின்றன. பாலியல் வன்முறைக் குற்றவாளி தன்னால் குற்றமிழைக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமென்றால் அவன் இழைத்தது குற்றமேயில்லையென்றல்லவா ஆகின்றது? இது ஆண்களின் பண்பாடு என்பது போல அதற்கு சமூக அங்கீகாரம் வழங்கும் செயலாகவல்லவா இருக்கின்றது? இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களின் கதி என்ன? ஒரு பண்பாடற்ற பயங்கரக் குற்றவாளியை மணம் செய்துகொள் என எந்தப்பெண்ணுக்கும் நாம் கூற இயலுமா? இலங்கையில் பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு முக்கிய காரணம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்பதாலாகும். நீதிமன்றங்களில் எங்களுடைய வழக்குகளை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மைகள் விளங்கும். இப்பொழுதே சட்டத்தில் காணப்படுகின்ற ஓட்டைகளினாலும், அரசியல் தலையீடுகளினாலும் குற்றவாளிகள் தப்பித்துப் போக, அவற்றிற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட பெண்ணை மணம் முடிக்கும் சலுகையும் குற்றவாளிக்கு வழங்கப்படவிருக்கின்றது. பாலியல் வன்முறை புரிந்த ஒருவன் எமது சமூகத்தால் விலக்கப்பட்ட குற்றவாளியாக மாற்றப்பட்டால் மட்டுமே இக்குற்றத்தினை இல்லாதொழிக்கலாம். அவ்வகையான சட்டங்களைக் கொண்டு வருவதற்கு இந்த அரசு தயாரில்லை என்பதைத்தான் இது எமக்கு உணர்த்தியது.
பௌத்த மதகுருமார், கிராமிய முதலாளித்துவ வர்க்கம் என ஒரு நிலப்பிரபுத்துவ பண்பாடு கொண்ட ஆதரவுத் தளத்தில் உருவான கட்சி ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியாகும். அதிகாரப்பரவலின் அடிப்படையிலான நவீன ஜனநாயகக் கோட்பாடுகளைக் குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவேனும் முடியாமல்மனித உரிமைகள் கோட்பாடுகளை பரணில் ஏற்றி வைத்தும், இதுகாலவரையும் கட்டிக் காத்து வந்த பெண்கள் உரிமைகளுக்கு வேட்டு வைத்தும் அது தனது குணாம்சங்களைத் தெளிவாகக் காட்டிக்கொண்டு வருகின்றது. இந்த அரசின் தன்மைகளை உணர்ந்து, பெண்கள் தங்களது போராட்டங்களை தனியே பெண்களின் உரிமைப் போராட்டமாக மட்டும் பார்க்காது இந்நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கெதிரான பொதுப் போராட்டமாக மாற்றாத வரையில் இப்படியே பெண்களின் உரிமைகளும் படிப்படியாக வேரறுக்கப்படும் என்பது நிச்சயம்.
அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்
தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.