படம் | Groundviews
ஒரு நீண்ட அரசியல் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததாகக் காணப்பட்ட, இந்த காட்டுமிராண்டி பௌத்த பிக்குகள், கட்டுப்பாடு இழந்து போயுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்ய வந்துள்ள நிலைமை பிரதிபலிக்கின்ற சிக்கலான நிலையின் மீது ஒரு கடுமையான பார்வையைச் செலுத்துவதும் கூட அதிகளவுக்கு அவசியமாகின்றது. இது ஒன்றும் வேடிக்கை விநோதக் காட்சியல்ல, இது போருக்குப் பிந்திய இலங்கையின் அப்பட்டமான ஒரு நெறிமுறைப் பிறழ்வாகும்; அத்தோடு பொதுபலசேனா ஒரு சில மாத காலங்களிற்குள் அழிந்து போய்விடும் என எதிர்வு கூறிய வணக்கத்திற்குரிய. தம்பர அமில தேரர் (ம.வி.மு) போன்ற விமர்சகர்கள் முற்றிலும் தவறாகிப் போயுள்ளதும் இப்பொழுது எங்களுக்கு அப்பட்டமாகியுள்ளது.
சிங்கள பௌத்தவாதமும் பொதுபல சேனாவும்
ஞாயிறு ஐலண்ட் பத்திரிகையில் (ஏப்ரல் 13, 2014), “சிங்கள பௌத்தத்தின் காவியுடை நாசகாரிகள்” என இரத்தினச் சுருக்கமாகத் தலைப்பிட்டு, சி.ஏ. சந்திரப்பிரேம என்பவரால் எழுதப்பட்ட அரசியல் பத்தியெழுத்தை வாசிக்கும்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த பொதுபலசேனா நிலைமையின் சிக்கலான தன்மை மீது ஒரு கடுமையான மற்றும் அசௌகரியமான பார்வையைச் செலுத்துவது அவசியமாகின்றது. பொதுபல சேனா மற்றும் பௌத்த சாசனத்தின் மௌனம் என்பவற்றின் மீதான அவரது தைரியமான விமர்சனத்துக்காக சந்திரப்பிரேம பாராட்டப்பட வேண்டிய அதேவேளை, அவரது பத்தியெழுத்தின் பரந்த சித்தாந்தங்களுடன் இணங்குவது கடினமாகும். பொதுபலசேனா என்பது சிங்கள பௌத்த பெரும்பான்மைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள முக்கியமான மற்றுமொரு சதியெனவும்; மத/இன ரீதியான சிறுபான்மையினரை பாதிப்பதிலிருந்து விலகி, அதன் இலக்கு, சிங்கள பௌத்தர்களை பாதித்து அழிப்பதாகும் என திரு. சந்திரப்பெரும நம்புகிறார்.
இதனை, பொதுபலசேனாவின் நடவடிக்கைகளின், ஒரு தவிர்க்கமுடியாத பயனான, தெளிவான ஒரு உப உற்பத்தியாக இருக்கலாம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அது பெருமளவிற்கு, சிங்கள பௌத்தத்தை அழிப்பதற்கும் அப்பால், சிங்கள பௌத்த தேசியவாதிகளால் ஆதரிக்கப்படுகின்ற, அதே காரணங்களுக்கு குரல் வழங்குவதால், பொதுபலசேனா நிலைமை மிகவும் சிக்கல் வாய்ந்த ஒன்றாகும். அதனால், பொதுபலசேனா சிங்கள பௌத்தத்தின் ஒரு இழிந்த பக்கமாகும்.
இது பெருமளவிற்கு உண்மை. ஏனெனில், சிங்கள பௌத்தவாதம் கொண்ட குழுக்கள் மற்றும் பொதுபலசேனா போன்ற குழுக்களின் தோற்றத்திற்கு ஏதுவான முக்கியமான அல்லது அடிப்படையான காரணங்கள் ஓரளவிற்கு ஒரே மாதிரியானவை என்பதாகும்.
ஏனைய மதங்களின் முன்னேற்றம், விசேடமாக கிறிஸ்தவ நம்பிக்கை, இலங்கையில் கூட ஐரோப்பிய குடியேற்ற நோக்கங்களுக்கு முக்கியமானதாக இருந்தமை; சிங்கள பௌத்தர்களுக்கு பல வடிவிலான பாரபட்சங்களை ஏற்படுத்தியது (பேராசிரியர்கள் கே.என்.ஓ. தர்மதாச, சுசந்தா குணத்திலக்க ஆகியோரின் பல்வேறு ஆய்வுப் பணிகள், இதனைச் சுட்டிக்காட்டும்) என்பதைக் கவனத்தில் கொண்டு, சிங்கள பௌத்த சமூகத்தால் மறைக்கப்பட்ட வரலாற்று ரீதியான மனக்குறைகள் மற்றும் அச்சங்கள் என்பவற்றை ஒருவர் எண்ணிப் பார்த்தல்வேண்டும். எந்த ஒரு மதமும் அதன் ஆர்வம் மிகுந்த போதனையாளர்கள் மற்றும் பரப்புவோர்களின் கைகளில் பரிசுத்தமானதாக இருந்ததில்லை, மற்றும் இருக்கவும் முடியாது. அவற்றை சிங்கள பௌத்தவாதிகளும் நன்கு அறிவார்கள்.
ஆனால், சிங்கள பௌத்தவாதக் குழுக்கள், அதேபோன்று பொதுபலசேனா போன்ற குழுக்களின் தோன்றுதல்களுக்கு மிகவும் அடிப்படையான காரணம், விசேடமாக அடையாளம் பேணும், அடையாளத்தை ஊக்குவிக்கும் பல்லின மற்றும் பன்மைத்துவ தேசிய அரசியல் ஏற்பாடுகளின், சமகால அரசியல் ஈடுபாட்டுக்கான உண்மையான பௌத்த போதனைகளின் போதாமையுடன் தொடர்புபடுவதாக உள்ளது. வேறு விதமாக கூறுவதாயின், உங்களது சொந்த அடையாளங்கள், உங்களது சொந்த அரசியல் நலன்கள் மற்றும் முன்னபிப்பிராயங்களை உருவாக்கி நீங்கள் ஆர்வத்துடன் ஊக்குவித்தல், பாதுகாத்தல் அல்லது ஏனைய இன மற்றும் மதக் குழுக்களினால் ஊக்குவிக்கப்படுபவற்றுடன் போட்டியிடுதல் ஆகிய அம்சங்கள் புத்தரின் போதனைகளில் இல்லாதவையாக உள்ளன (மேலும், சம கால அரசு மையமான பூகோள அரசியல் கட்மைப்பு). அந்தப் போதனை ஆசைகள், வெறுப்பு மற்றும் மாயை, உருவாக்கப்பட்ட அனைத்து அடையாளங்களினதும் பயன் உணர்தலை துறப்பதை ஒரு முடிவான இலக்காக ஊக்குவிக்கிறது; வேறு வகையில் கூறின், அது, சுயமாக இல்லாத, ஒத்திணங்கும் மற்றும் மாற்றமடையாத, அனைத்து அடையாளங்களினதும் செயற்கையான மற்றும் உருவாக்கப்பட்ட தன்மையை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு உதவுகின்ற ஒரு போதனையாகும் என்பதால்: புத்தரின் போதனை இந்த அரசியல் போராட்டத்தில் பயனற்றது. எனவே, புத்தரிடமிருந்து உங்களது நாட்டையும் அதன் இறையாண்மையையும் எவ்வாறு பாதுகாப்பது, உங்களது சொந்த இனத்தை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது, பௌத்தத்தை எவ்வாறு பாதுகாப்பது, நாளொன்றில் எத்தனை தடவைகள் பிரார்த்திப்பது போன்ற ஒரு தெளிவான போதனையை நீங்கள் பெற மாட்டீர்கள். இன்று, ‘பௌத்தத்தைப் பாதுகாத்தல்’ என்கின்ற எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் புத்தரைப் பொறுத்த வரை அர்த்தமற்றவையாகும்.
இதுவே, உபதேசத்துக்கும் மற்றும் நடைமுறைக்கும் இடையேயான அகன்ற மற்றும் நீடிக்கும் இடைவெளியை விளக்குகின்றது. மேலும், ஒரு உறுதியான அரசியல் சித்தாந்தத்தின் இந்த வெற்றிடமே பௌத்தத்தின் ஒரு கலாச்சாரரீதியாக உருவாக்கப்பட்ட வடிவத்தின் ஏற்றுக்கொள்ளல் மூலமாக நிரப்பப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. இலங்கையில், இது சிங்கள பௌத்தவாதம் என அழைக்கப்படுவதாக வந்தது. இந்தத் திருப்பத்தின் ஆச்சரியப்படத்தக்க ஒரு விடயம் என்னவெனில், புத்தர் மற்றும் அவரது போதனைகளுடன் நீங்கள் இணைந்திருக்கும் அதே வேளையில், உங்களது பல அரசியல் முன்னபிப்பிராயங்கள், அபிலாசைகள் மற்றும் மனக்குறைகள் என்பவற்றையும் நீங்கள் திருப்தி செய்ய முடியுமென்பதாகும். அதனை நீங்கள் புத்தரின் போதனையுடன் செய்ய முடியாது, சிங்கள பௌத்தவாதத்தின் உதவியுடன் நீங்கள் அதனைச் செய்வதற்கு முடியும்.
எனவே, சிங்கள பௌத்தவாதத்துடன், நிறைய விடயங்களை உங்களால் பாதுகாத்துக்கொள்ள முடியும். சுய பாதுகாப்பு அல்லது பௌத்தத்தைப் பாதுகாத்தல் என்ற பெயரில் யுத்தத்தை நீங்கள் ஊக்குவிக்க முடியும் (அல்லது யுத்தத்திற்கு எதிராகவும் உங்களால் இருப்பதற்கு முடியும்); பயங்கரவாதிகளை நீங்கள் கொல்ல முடியும் (அல்லது ‘பயங்கரவாதி’ என்ற அடையாளத்தின் அலட்சியமான உபயோகித்தல் குறித்து நீங்கள் கடுமையாக விமர்சிப்பவராக இருக்க முடியும்); கிராமமட்ட அதிகாரப் பரவலாக்கத்தை நீங்கள் ஊக்குவிக்க முடியும் (அல்லது சிங்கள மற்றும் தமிழ் தேசங்களின் சுயநிர்ணயத்தை நீங்கள் ஊக்குவிக்க முடியும்); 13ஆவது திருத்தத்திற்கு எதிரானவராக நீங்கள் இருக்க முடியும் (அல்லது 13ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்லுமாறு கோருவதற்கு முடியும்); பௌத்தத்தைக் காப்பாற்றுதல் என்ற பெயரில் மேலும் விகாரைகளைக் கட்டுவதற்கு முடியும் (அல்லது அத்கையதொரு செய்முறைக்கு எதிரானவராக இருக்க முடியும்); ‘ஹலால்’ பற்றி நீங்கள் பெரும் கூச்சலிட்டுக் கண்டனம் செய்கின்றவாரகவும் மற்றும் அத்தகைய பொருட்களின் பாவனையைத் தடைசெய்வதற்கு கோருபவராகவும் இருக்க முடியும் (அல்லது ‘ஹலால்’ போன்ற ஒரு விழுமிய ரீதியான எண்ணக்கருவை எவ்வாறு சிங்கள பௌத்த சமூகத்திற்கு பயனுள்ளதாக ஆக்குவதை உறுதிப்படுத்துவதற்கான அமைதியான வழிமுறைகளையும் அதேபோன்று ஒரு மத ரீதியானதல்லாத முறையையும் நீங்கள் நாடுவதற்கும் முடியும்); மற்றையவர்கள் கேட்பதற்கு தயாராக இல்லாதுவிடின் இதுதான் செய்யப்பட வேண்டும் என முற்றிலும் அபத்தமான வகையில் புலம்பித் திரியலாம் (அல்லது ஒரு நாகரீகமான முறையில் செயற்படலாம்); இவ்வாறு இந்தப் பட்டிலை மேலும் நீட்டிக்கொண்டே செல்லாம். அடைப்புக் குறிகளுக்கு வெளியே சொல்லப்பட்ட விடயங்களைச் செய்வது கூடுதல் சௌகரியமானதுடன் ஒரு அதிகளவான பின்பற்றுதலை அடைந்து கொள்வதற்கான ஒரு நிச்சயமான வழி என்பதையும், மற்றும் ஒரு பிரிவினைவாதியாக அடைமொழிப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு உங்களுக்கு உதவும் என்பதை வரலாறு தெரிவிக்கிறது. ஆனால், மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்குவதற்கான சில சுதந்திரத்தை உங்களுக்கு அளிக்கும் சிங்கள பௌத்தவாதத்தின் ஒரு இடைப்பட்ட தன்மை இன்னமும் உள்ளது. அத்துடன், மற்ற அரசியல் சித்தாந்தத்தினால் ஊக்குவிக்கப்பட்ட எந்தவொரு மதத்தைப் போலவே, இது சிங்கள பௌத்தவாதத்தின் இயல்பாகும்; மற்றும் இந்த இடைப்பட்ட தன்மை காரணமாக சிங்கள பௌத்தவாதத்தை அப்படியே நிராகரிப்பவர்களில் நான் ஒருவனல்ல. அந்த அடையாளத்துடன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதிலேயே அது தங்கியுள்ளது என்பதுடன், அதில் எதுவுமே அவசியமான அல்லது உள்ளார்ந்த வகையில் தவறில்லை (தமிழ் தேசியவாதத்துடன் உள்ளார்ந்த வகையில் எதுவும் தவறாக இல்லை என்பதைப் போலவே).
ஆனால், சமகால சிங்கள பௌத்தவாதத்தின் பிரச்சினையாக உள்ளது என்னவெனில் (உண்மையில், இது ஒரு தனிப்பட்ட கண்ணோட்டம்) இன்று சிங்கள பௌத்த தேசியவாதத்தின் முக்கிய காரணங்களாகவுள்ள மேலே சொல்லப்பட்ட (அதாவது, அடைப்புக்குறிகளுக்கு வெளியே குறிப்பிடப்பட்டவை) செயல்களும் மற்றும் கருத்துக்களுமாகும். ஆனால் சுவாரஷ்யமான வகையில், அந்த அதே செயற்பாடுகளும் காரணங்களுமே பொதுபலசேனா போன்ற குழுக்களால் ஆதரிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், முக்கியமான வேறுபாடு, பொதுபலசேனா இந்த செயற்பாடுகளின் ஊக்குவித்தலுக்கு கூடுதல் விபரீதமான மற்றும் ஆபத்தான வெளிப்படுத்தல்களை பிரதிபலிக்கின்றது. பொதுபலசேனா சிங்கள பௌத்தவாதத்தின் அசிங்கமான இழிந்த பக்கத்தை பிரதிபலிக்கின்றது; அத்துடன், அது சிங்கள பௌத்தவாதத்தின் செயற்பாடுகளை அதே அர்த்தத்திலும் மற்றும் வலிதான வகையிலும் நிறைவேற்றுகின்ற ஒரு இயக்கமாகும். சிங்கள பௌத்த தேசியவாதிகளில் சிலர் நினைப்பதை, பொதுபலசேனா நிறைவேற்றி வைக்கும். இன்று அதுவே நடைபெறுகின்றது.
ஓர் அவசியமாக பொதுபலசேனா
மேற்கூறிய வகையில், சிங்கள பௌத்தவாதத்தின் ஊக்குவிப்பாளர்களாக பொதுபலசேனா போன்ற குழுக்களின் முக்கியத்துவம், கீழே தெரிவிக்கப்படுவதில் தங்கியுள்ளது.
ஒரு பரந்த பார்வையிலும், மற்றும் விமர்சகர்கள் கூறப்போவதற்கு முரணான வகையிலும், சிங்கள பௌத்தவாதத்தை ஊக்குவிப்பதற்கு பௌத்த சாசனத்தினுள் உள்ள சக்திகளுக்கு தேவையான ஒரு சக்திமிக்க சாதனமே இந்த பொதுபலசேனாவகும். பொதுபலசேனாவின் குறிப்பிட்ட செயற்படும் முறை தொடர்பாக, பௌத்த சாசனம் மற்றும் அதன் தலைமைத்துவ தேர்ரகளும் உண்மையில் மிகவும் அசௌகரியத்தை உணர்வர். ஆனாலும், பொதுபலசேனா பக்கபலமாக நிற்கின்ற காரணங்கள் தொடர்பிலான நிராகரித்தல்கள் ஏதேனும் அரிதாகவே உள்ளன. கொழும்பு பல்கலைக் கழகத்தில் நிமால் ரஞ்சித் தேவசிறி அவர்களினால் அண்மையில் அளிக்கப்பட்ட ஒரு பகிரங்க உரையில் நிகழ்ந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. உரையின் பின்னர் தொடர்ந்த கலந்துரையாடலின்போது (அது, அண்மைய பௌத்த அரசியல் மீளெழுச்சியின் கருப்பொருள் தொடர்பிலானது), நிமால், பொதுபலசேனாவின் பரந்த நடவடிக்கைகள் சார்பாக (சில பள்ளிவாசல்களின் சட்ட விரோதத் தன்மை தொடர்பாக) குரலெழுப்பிக் கொண்டிருந்த ஒரு முன்னணி பிக்குவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். கட்டுப்படுத்தப்பட முடியாத சிநேகபூர்வ தன்மையின் போதனையான, மெத்த சூத்திரத்தின் படி புத்தரின் போதனை என்ன என்று நிமால் கேட்டார். மெத்த சூத்திரமே வாழ்க்கையை அவர்களுக்கு கடினமாக்கியது என, உடனேயே எந்த வித தயக்கமுமின்றி, பிக்குவிடமிருந்து பதில் வந்தது. (அதாவது, அவர் பதிலளித்த கூற்றின்படி, “மெத்த சூத்திரத்தின் காரணமாகவே எங்களுக்கு தவறு நிகழ்ந்தது!”). இது, உபதேசத்துக்கும் மற்றும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியின் ஒரு தெளிவான ஆனால் மிகவும் அரிதான ஏற்றுக் கொள்ளுதலாகும். ஆனால், பொதுபலசேனா சமகால சிங்கள பௌத்தவாத அரசியலுக்காக அதனை உபயோகிக்காமலில்லை என்பதைத் தெரிவிப்பதற்கான அப்பட்டமான சான்று இதுவாகும் என்பது, மிகவும் கவனத்திற்குரியது.
ஓர் அரசின் அடிப்படையான மற்றும் இறுதியான அரசியல் குறிக்கோளாக, போருக்குப் பிந்திய ஒரு சூழ்நிலையில், சிங்கள பௌத்தவாதத்தின் ஊக்குவித்தல் மற்றும் சிங்கள பௌத்தவாத சித்தாந்தத்தின் ஆதிக்கத்தை ஸ்தாபித்தலுக்கு, பொதுபலசேனா வகையான ஒரு அமைப்பின் பரந்தளவிலான அவசியம் கூடுதல் முனைப்பு பெறுகிறது. விகாரைகளைக் கட்டுதல் மற்றும் புத்தர் சிலைகளை வைத்தல் என்பவை நிகழும் வேகத்தில் இது நடைபெறுவதை நாம் காண்கிறோம் (உள்நாட்டுத் திரைப்படத் துறையாலும் கூட வினைத்திறனான வகையில் ஆதரவளிக்கப்படுகிறது). பின்புலத்தில் சில வலிமையான அமைப்பு இன்றி மேற்கொள்ளப்படக்கூடிய செயற்பாடு இதுவல்ல. ஆனால், விசேடமாக, யுத்தம் முடிவடைந்ததிலிருந்து கடைப்பிடிக்கும் கொள்கைகளிலிருந்து ஏதேனும் வகையிலும் வேறுபாடான கொள்கைகளைக் கடைப் பிடிப்பதற்கு பற்றுறுதியளிக்காத ஒரு அரசின் மீது, அதிகரிக்கும் சர்வதேச அழுத்தத்தைக் கருத்தில் கொள்கையில், கவனத்தைக் குழப்பும் நோக்கங்களுக்காக, இந்த தன்மையுடனான ஒரு அமைப்பு அவசியமாகக் காணப்படுகிறது. வேறு விதமாகக் கூறின், தற்போதைய அரசியல் சந்தர்ப்ப சூழ்நிலைகளே பொதுபலசேனா போன்ற குழுக்களை அவசியமாக்குகிறது.
எனவே, பொதுபலசேனா சிங்கள பௌத்தவாதிகளை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளது என்பது அல்ல விடயம். பதிலுக்கு, விசேடமாக அரசியல் வெற்றியும் மற்றும் சிங்கள பௌத்தவாதத்தைப் பரப்புவதுமே ஓர் அரசின் கொள்கையும், இறுதியான இலக்காக உள்ள போருக்குப் பிந்திய ஒரு சூழ்நிலையில்; தடையற்ற மற்றும் கட்டுப்படுத்தப்படாத சிங்கள பௌத்தவாத நம்பிக்கைகளின் இயற்கையான ஒரு விளைவுற்பத்தியே பொதுபலசேனாவாகும். அதனாலேயே, புலம்பெயர் தமிழ் குழுக்களைத் (அவற்றுள் சில பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பன) தடைசெய்வதற்கு அரசு முண்டியடித்தது, ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்களை அல்ல. இதனாலேயே பொதுபலசேனா போன்ற குழுக்களை அரசு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக நோக்கமாட்டாது. பொதுபலசேனா சிங்கள பௌத்தவாதத்தை அழிப்பதாக (சந்திரப்பிரேம கூறுகின்றமை போல) இருப்பின்,அரசு இந்தக் குழுவை சில காலத்திற்கு முன்பாகவே தடைசெய்திருக்கும்.
மௌனமும் ஆதரவும்
சந்திரப்பிரேம போன்ற விமர்சகர்கள் பௌத்த சாசனத்தின் ஒப்பீட்டளவிலான மௌனத்தினால் கோபமும் மற்றும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர் (மிகவும் சரியானதுதான்). உதாரணத்திற்கு, பொதுபலசேனா மாதிரியான பிக்குகள் ஏற்படுத்தும் ஆபத்துகள் பற்றி பிரதான அல்லது வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட பிக்குகள் அறியாமல் இருக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டுகிறார். தங்கள் நடத்தையை மாற்றுவதற்கு அல்லது திருத்திக்கொள்வதற்கு இந்தக் குழுக்களைக் கட்டாயப்படுத்துவதற்கு பிரயோகிக்கப்படக்கூடிய “தார்மீக அழுத்தங்கள்” பற்றி சந்திரப்பிரேம குறிப்பிடுகின்றார்.
ஆனால், இந்தக் குழுக்களுக்கு தார்மீக ஆதரவை அளிக்கின்ற ஏனைய குழுக்களும் மற்றும் அமைப்புகளும் முன்னைய குழுக்களின் நடத்தையை மாற்றுவதற்கு தார்மீக அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு எதிர்பார்ப்பது கடினமானதொன்றாகும்.
ஓர் அசௌகரியமான, ஆனால் எந்த வகையிலும் சிங்கள பௌத்தவாத செயற்பாடுகளுக்கு முக்கியமான தகவல் அல்லது செய்தி, ஒரு மக்கள் தொகையினுள் மிகவும் விரைவாக தெரிவிக்கப்படுவதற்கான ஒரு சமகாலச் சாதனமாக பொதுபலசேனா காணப்படுவதன் காரணமாக, முன்னணி பௌத்த மத குருக்களால், அநேகம் ஒரு காழ்ப்புணர்வுடனானதாக இருந்தாலும் கூட (முன்னர் விளக்கியவாறு), பொதுபலசேனா ஆதரவைப் பெறுகின்றது. (உதாரணத்திற்கு, மகாநாயக்க தேரர்களோ அல்லது முன்னணி சிங்கள தேசிய கட்சிகளின் முக்கியத்துவமற்ற நபர்களாக இருந்தாலும் கூட மேடையில் ஏறி சிங்களப் பெண்கள் கூடுதலான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்வார்கள் என ஒருவர் எதிர்பார்க்க முடியாது; ஆனால், அந்தச் சவாலை பொதுபலசேனா பிக்குகள் நிறைவேற்றினர்). எவ்வாறாயினும், அந்தச் சவாலை எடுத்துக்கொள்வதற்கு அரசியல் தலைவர்களைப் போசிப்பதுடன் (சிங்கள) பௌத்தவாதத்தை முன்னேற்றுவது மற்றும் பாதுகாப்பது என்பது இலங்கையில் பௌத்த சாசனத்தின் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட வரலாற்று ரீதியான வகிபாகங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. யுத்தத்தின்போது இந்தப் பிக்குகள் யாரென அறியப்படாதவர்களாக இருந்தனர் என சந்திரப்பிரேம கருதுகிறார். ஆனால், அவர்களின், இந்த நிலைமைக்கு பின்னணியில் இருந்த முக்கியமான பிக்குகளில் சிலர் வணக்கத்துக்குரிய. கிராம விமலஜோதி தேரரின் (இலங்கை பௌத்த கலாச்சார நிலையத்தின் ஸ்தாபகர்) தன்மையிலானவர்களாவர். அது பொதுபலசேனாவின் நிலைமை எந்தளவிற்குத் தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. மேலும் ஒருவேளை, சாசனத்தின் இந்த ஈடுபாடு வணக்கத்திற்குரிய சோபித்த போன்றவர்களால் பேணப்பட்ட ஒப்பீட்டளவிலான மௌனத்தையும் கூட விளக்குகிறது. மொத்தத்தில், காவியுடைகள் நாட்டின் அரசியலில் பெரும் இலக்குகளைக் கொண்டுள்ளன. மற்றும் சில தசாப்தங்களுக்கு முன்னரே தமிழ் சமூகத்துக்கான அதிகாரப் பகிர்வை நிராகரித்த அரசியல் இயக்கத்தின் முன்னணியில் இருந்த, அரசியல் இலட்சியம் கொண்ட வணக்கத்திற்குரிய சோபித்த போன்ற பிக்குகள், இவை அனைத்தையும் நன்றாகவே அறிவார்கள்.
பொதுபலசேனா நிலைப்பாடு, பௌத்த பிக்குகளிடமிருந்து மட்டுமன்றி, அரசியல் அமைப்புகள் மற்றும் அரச நிறுவனங்களிடமிருந்தும் கூட தார்மீக மற்றும் சித்தாந்த ரீதியிலான ஆதரவுகளை பெறுகின்றது. ஒரு மதிநுட்பமான அரசியல் பகுப்பாய்வாளரும் மற்றும் ‘கோத்தாவின் யுத்தம்: இலங்கையில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்தமை’ என்ற நூலின் ஆசிரியருமான சந்திரப்பிரேம தனது பத்தியெழுத்தில் இந்த அம்சம் பற்றி கையாளாததுடன் அரசிடம் எந்தக் கேள்வியையும் வைக்கவில்லை. மேலும், பொதுபலசேனா நிலைமை பௌத்த ஆர்வலர்கள் மற்றும் சிங்கள பௌத்த தேசியவாத எழுத்தாளர்களிடமிருந்து அதிகளவிற்கான சித்தாந்தரீதியிலான ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்பட முடியும்.
பேராசிரியர் நளின் டி சில்வாவிடமிருந்து ஒரு அருமையான வரியைக் கடன் பெற்றால் (த.வி.பு இன் சித்தாந்த ரீதியிலான முன்னோடிகளை விளக்குவதற்கு இதனை அவர் உபயோகிப்பார்), அப்போது இவை, பொதுபலசேனாவின் பாட்டன்கள், மாமாக்கள் மற்றும் மச்சான்களுமாகும். அவற்றின் மௌனமான உடன்படுதல் என்ன நடைபெறுகின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கான அவற்றின் இயலாமையின் ஒரு வெளிப்பாடு அல்ல; ஆனால், பொதுபலசேனாவினால் ஊக்குவிக்கப்படும் அடிப்படையான செயற்பாடுகளை அவை குறிப்பாக விளங்கிக் கொள்வதினாலாகும்.
சேதம்
அப்படியெனின் ஒரு முக்கியமான கேள்வி சேதமும் அழிவும் பற்றியதாகும்: பொதுபலசேனா யாரை அழிப்பதற்கு முனைகிறது? சந்திரப்பிரேம நினைப்பது போன்று, அது சிங்கள பௌத்தவாதிகளையா? பொதுபலசேனா போன்ற குழுக்கள் சிங்கள பௌத்தவாதத்தை வேண்டுமென்றே அழிக்கமாட்டாது. இது, அவர்களது தாக்குதல் அதிகம் பரந்துபட்டது என்பதினாலாகும். உதாரணத்துக்கு, ஒருவர் முஸ்லிம் என்பதால் முஸ்லிம்களை இலக்காகக் கொள்வதும், மற்றும் அதனால் ஒரு குறிப்பிட்ட இன மற்றும் மதம் தொடர்பான பாரபட்சம் பொதுபலசேனா ஊக்குவிப்பு நடவடிக்கையில் தெளிவாகத் தெரிகின்றது. ‘ஹலால்’ சின்னம் மீதான தாக்குதலிற்கு அப்பால், முஸ்லிம் உணவு விடுதிகள் வைத்திருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு (முஸ்லிம்கள் அல்லாதவர்கள்) பரிமாறும் உணவுகளில் எச்சில் துப்புவது பற்றி ஒருமுறை பிக்கு ஒருவரால் அறிக்கை விடப்பட்டதுடன், அந்தப் பிக்குவின் கூற்றுப்படி அந்த நடைமுறை குரானினால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததை நாம் இங்கு குறிப்பிடுகிறோம். முஸ்லிம் ஒருவர் ஒரு முஸ்லிமாக இருப்பதினால் இலக்காகக் கொள்ளப்படுகின்ற ஒரு குறிப்பிட்ட நிலைமையே இதுவாகும்.
அத்தோடு, பொதுபலசேனா போன்ற குழுக்களினால் பரப்பப்படும் பீதியும் பயமும் சிங்கள பௌத்தவாதிகளினால் மட்டுமே உணரப்படுகின்ற ஒன்றல்ல; பதிலுக்கு அது அனைத்து இன மற்றும் மதச் சமூகங்களுக்கும் பிரயோகமாகின்றது. வெவ்வேறுபட்ட மதக் குழுக்களினுள் குறிப்பிட்ட பிரிவுகள் உள்ளவெனவும் அவை பொதுபலசேனாவினால் இலக்காகக் கொள்ளப்படவில்லை என சிலர் தெரிவிப்பதை கவனத்தில் கொள்ளாத நிலையே இதுவாகும்.
ஆகவே, சுருங்கக் கூறின், பொதுபலசேனா, சிங்கள பௌத்தவாதிகளை அழிப்பதால் மட்டுமல்ல, இலங்கையின் அரசியல் மற்றும் அதன் பிரஜைகளுக்கு அது ஒரு தொல்லையாக வந்துள்ளதினால் தடுத்துநிறுத்தப்படுதல் வேண்டும். இந்தக் காட்டுமிராண்டிப் பிக்குகள் மக்களை அணுகி பகையுணர்வை உருவாக்குவதன் காரணமாக இருக்கின்ற ஒரேயொரு நடைமுறை ரீதியான தெரிவு வன்முறையே என மக்கள் அதனைக் காண முற்படுவர் என்பதால் பொதுபலசேனா மற்றும் அத்தகைய குழுக்கள் தடுத்து நிறுத்தப்படுதல் வேண்டும்.
முடிவுரை
சில வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்ததிற்கு முரணாக, பொதுபலசேனா போன்ற ஒரு குழுவை விமர்சிப்பதோ அல்லது உள்ளிருந்து மறுசீரமைப்பதோ மிகவும் கடினமானது, அல்லது அநேகம் சாத்தியமற்றதாகும். சிங்கள பௌத்தவாதத்தின் சமகால செயற்பாடுகளுடன் இணைந்துகொண்டு பொதுபலசேனா போன்ற குழுக்களை கலைப்பதற்கு முடியாது. வேறு வார்த்தைகளில் கூறின், பொதுபலசேனா சிங்கள பௌத்தவாதத்தின் அசிங்கமான ஒரு இழிந்த பக்கமாகும்; ஆனால், அவற்றின் பார்வையில், அவை, சிங்கள பௌத்தவாதத்தின் தெளிவான மற்றும் நம்பிக்கைக்குரிய பக்கமாக இன்னமும் உள்ளன.
சுருங்கக் கூறின், பொதுபலசேனா நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த, ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோருடன் நேரடியாக மோதுவதற்கு தீர்மானித்தால் மட்டுமே அழிவடையும். அது நிகழ்வதற்கான சாத்தியங்கள் அரிது. ஆனால், பொதுபலசேனா போன்ற ஒரு நிலைப்பாடு வேரறுக்கப்படுவதற்கு, தர்க்க ரீதியான சிந்தித்தலும் மற்றும் ஒரு ‘சிங்கள பௌத்தவாதி’ எதனைக் கருதுகின்றது என்பது பற்றி தெளிவாக மீளத் தெரிவித்தல் என்பனவே தேவையாக உள்ளன. அத்தகையதொரு மீள் சிந்தித்தலும் மற்றும் சிங்கள பௌத்தவாத அடையாளத்தின் மீள அடையாளப்படுத்தலும் மட்டுமே பொதுபலசேனா போன்ற குழுக்களை தேவையற்ற, அநாவசியமான மற்றும் ஒன்றுக்கும் உதவாத நிலைகளுக்கு உள்ளாக்கும்.
எவ்வாறாயினும், அது உண்மையில் குறைந்த ஆதரவையே கொண்ட ஒரு நீண்டகால அரசியல் செயற்பாடாகும். பொதுபலசேனா போன்ற அமைப்புகளினால் ஏற்படுத்தப்படும் உண்மையான ஆபத்துகளைக் கவனத்தில் கொள்கையில் துரிதமான நடவடிக்கை தேவையாக உள்ளது. ஒருவேளை, சந்திரப்பிரேம ஒரு குறிப்பை ஜாடையாக சுட்டிக்காட்டுகிறார் போலும். அவர் பொதுபலசேனா நிலைமையை ஒரு “பித்துப் பிடித்த பிக்கு நிலைமை” எனக் குறிப்பிடுகின்றார்; மற்றும் இந்த அமைப்பில் ஈடுபட்டுள்ள பிக்குகளை “பித்துப் பிடித்த பிக்குகள்” எனவும் அவர் கருதுகிறார். எனவே, அவர் தெரிவிக்கும் செய்தி இங்கே தெளிவாகுதல் வேண்டும். பித்துப் பிடித்தவர்களை பூட்டிக் காவலில் வைப்பதே நடைமுறை வழக்கமாகும்.
The ‘Mad Monk’ Phenomenon: BBS as the underside of Sinhala-Buddhism என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வௌியான கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.