பட மூலம், brookings.edu

பெரிதாகப் பேசப்பட்டதும் எதிர்பார்க்கப்பட்டதுமான  ‘ குவாட் ‘ (அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல் –  Quadrilateral  Security  Dialogue – Quad) வெளியுறவு அமைச்சர்கள் மட்ட இரண்டாவது மாநாடு கடந்த வாரம் ( 6/10/2020) டோக்கியோவில் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மேறிஸ் பேனே, இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ரொஷிமிட்சு மொட்டேகி மற்றும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ ஆகியோருக்கிடையிலான இந்த மாநாடு கூட்டறிக்கையொன்றை வெளியிடாமலேயே முடிவடைந்தது.

இத்தகைய உயர்மட்ட மாநாட்டுக்குப் பிறகு கூட்டறிக்கையொன்றை வெளியிடத்தவறியமைக்காக குவாட்டை பல அவதானிகள் குறைகூறினர். ஒரு நிரந்தர அமைப்பாக தன்னை நிறுவனமயப்படுத்துவதற்கு முயற்சியெடுப்பதிலும் குவாட் தயக்கம் காட்டுகிறது போன்று தெரிகிறது. அதனால் இந்த மாநாடு வழமையான ஒன்றாகவே இருந்தது.

அவுஸ்திரேலிய, இந்திய, ஜப்பானிய வெளியுறவு அமைச்சுக்களும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் தனித்தனியான அறிக்கைகளை வெளியிட்டன. ஒவ்வொரு அறிக்கையினதும் முழுமையான உள்ளடக்கத்தைக் கருத்தூன்றிக் கவனித்தால் நான்கு நாடுகளும் குவாட்டின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதை  புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த மாநாட்டை முதலில் கடந்த வருடம் செப்டெம்பரில் புதுடில்லியில் நடத்துவதற்கே திட்டமிடப்பட்டிருந்தது. நான்கு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சர்களும் கலந்துகொள்கின்ற விரிவான மாநாடாக நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சீனாவின் செல்வாக்கு விரிவடைவதைத் தடுப்பதற்கு  குவாட் ஒரு ‘ஆசிய நேட்டோ’வாக மாற்றியமைப்பதற்கு அமெரிக்கா  விரும்பியது  என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும். உறுப்பு நாடுகளின் ஒரு கூட்டு பாதுகாப்புக் கட்டமைப்பாக குவாட்டை வளர்க்கும் நோக்கத்தையும் அமெரிக்கா கொண்டிருந்தது. அத்திலாந்திக் சமுத்திரத்தின் இருமருங்கிலும் உள்ள நாடுகளை உள்ளடக்கியதே வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பாகும் (நேட்டோ). இந்த அமைப்பின் உறுப்பு நாடொன்று மீது மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் தடுப்பதற்கு ஏனைய உறப்புநாடுகள் பரஸ்பர இணக்கப்பாட்டை கொண்டுள்ளன.

குவாட்டை ஆசிய நேட்டோவாக மாற்றும் அமெரிக்க முயற்சி  நியாயமான அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகளை மீறுவது போல் இருப்பதாக சில அவதானிகள் வர்ணிக்கிறார்கள். எது எவ்வாறிருந்தாலும், 2019 செப்டெம்பரில் புதுடில்லியில் மாநாட்டை நடத்துவதிலிருந்து இந்தியா பின்வாங்கிக்கொண்டது. மாநாட்டை நடத்துவதற்கான நாடும் திகதியும் மாற்றப்பட்டன.

டோக்கியோ மகாநாட்டில் பங்கேற்றவர்கள் முடிவில் கூட்டறிக்கையொன்றை வெளியிடத்தவறிய நிலையில், குவாட்டை ஆசிய நேட்டோவாக மாற்றும் ஆர்வமும் குவாட்டின் ஊடாக சீனாவைக் கட்டுப்படுத்தும் சீனாவின் எதிர்பார்ப்பும் வீணாகிப்போயின. குவாட்டின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் போதுமான  காரணங்கள் இருந்தன.

முதலாவதாக, சீனாவுக்கு எதிரான வர்த்தகப்போரிலும் தொழில்நுட்பப் போரிலும் தோல்விகண்டு வந்ததன் காரணமாக அமெரிக்கா அதன் கொள்கையை மாற்றியமைக்கவேண்டும் என்று பெரும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. தொழில்நுட்பப்போருக்கு அமெரிக்க இலத்திரனியல் உபகரண தொழில்துறையினால் தாக்குப்பிடிக்கமுடியாமல் போகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சீனாவுக்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆரவாரப்பேச்சுக்கள் நவம்பர் 3 நடைபெறவிருக்கும் தேர்தலில் அமெரிக்க வாக்காளர்களைக் கவருவது சாத்தியமில்லை. வர்த்தகப் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும் அமெரிக்கர்களிடமிருந்து சீனா அபகரிப்பதாக அவர் கூறுகின்ற தொழில்வாய்ப்புக்களை மீட்டெடுப்பதற்கும் நடைமுறைச்சாத்தியமானதும் உருப்படியானதுமான தீர்வுகளை ட்ரம்பினால் வழங்க இயலாமல் உள்ளது.

ருவிட்டர் சமூக ஊடகத்தில் சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் நடத்திவரும் சொற்போரினால் அமெரிக்காவின் உண்மையான பொருளாதார பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கமுடியாது என்பதை அமெரிக்கர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். மாறாக, வர்த்தகப்போர் பலாபலன்களைத் தருவதற்குப் பதிலாக வேதனையையே அமெரிக்கர்களுக்கு கொடுக்கிறது.

சீனப்பொருட்கள் மீது கடந்தவருடம் ட்ரம்ப் விதித்த தீர்வைகளின் விளைவாக அமெரிக்காவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1000 டொலர்கள் மேலதிக செலவு ஏற்படுகிறது. அண்மைய  வாரங்களில் சீன தீர்வைகள் தொடர்பாக ட்ரம்ப் நிருவாகத்துக்கு எதிராக 3500 க்கும் அதிகமான கம்பனிகள் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கி்ன்றன. இது ட்ரம்பின் தூரநோக்கற்ற வர்த்தகப்போர் தொடர்பில் வர்த்தகத்துறையினர் மத்தியில் எந்தளவுக்கு விரக்தி நிலவுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

வர்த்தகப்போரும் தொழில்நுட்பப்போரும் எதிர்பார்க்கப்பட்ட பயன்களைவிடவும் நினையாப்பிரகாரமான பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதனால், மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாவதற்கான முயற்சியில் அவர் வெற்றி பெறப்போவதில்லை. பெரிதாகப் பேசப்பட்டாலும் எந்தப் பயனையும் தராத சீனாவுக்கு எதிரான வர்த்தகப்போரும் தொழில்நுட்பப்போரும் அவரின் தேர்தல் வெற்றிக்கு உதவப்போவதில்லை.

வெற்று ஆரவாரப் பேச்சுடனான வரத்தகப்போரும் தொழில்நுட்பப்போரும் நவம்பர் 3ஆம் திகதி வெள்ளைமாளிகையின் கதவுகள் ட்ரம்புக்காக மீளத்திறக்கப்டுவதற்கு உதவப்போவதில்லை போவதில்லை என்பதை இப்போது ட்ரம்பின் அணியினர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சீனா தொடர்பான கொள்கையில் தவறுகளைத் திருத்திக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.

ட்ரம்பின் அணியினர் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு தங்களுக்கு இனிமேலும் உதவப்போவதில்லை என்ற முடிவுக்கு இப்போது வருகிறார்கள். சீனா மேற்கொள்ளக்கூடிய பதிலடி நடவடிக்கைகளினால் மேலும் பாதகம் ஏற்படுவதை தடுப்பதற்காக அவர்கள் கொள்கையை மாற்றியமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. அத்துடன், 2060ஆம் ஆண்டளவில் பசுமைப் பொருளாதாரத்தக்கு செல்லப்போவதாக பெய்ஜிங் அண்மையில் சூளுரைத்திருக்கின்றமையும் அமெரிக்கா விளித்துக்கொள்வதற்கான இன்னொரு  எச்சரிக்கையாகும்.

டோக்கியோ மாநாட்டில் உரையாற்றியவேளை பொம்பியோ ஆரம்பத்தில் சீனா கொவிட்-19 தொற்றுநோயை தவறாகக் கையாண்டதாக கடுமையாக கண்டனம் செய்த போதிலும், அமெரிக்காவும் இத்தடவை குவாட்டின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதை இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கை தெளிவாகக் வெளிக்காட்டியது.

இரண்டாவதாக, குவாட் அமைச்சர்கள் மட்ட இரண்டாவது மாநாட்டில் அவுஸ்திரேலியா விருப்பத்துடன் பங்கேற்றதாகக் கூறமுடியாது. ஆனால், அமெரிக்காவின் நெருக்குதல்களைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே  அது கலந்துகொண்டதாகத் தெரிகிறது. ஆனால், சீனா மேற்கொள்ளக்கூடிய பதிலடி நடவடிக்கைகள் அவுஸ்திரேலிய பொருளாதாரத்துக்குப் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அவுஸ்திரேலியாவின் பண்ணை உற்பத்திகள், வைன், கனிப்பொருட்கள் மற்றும்  உலோக தாது, நிலக்கரி மற்றும் இயற்கை வாயு ஆகியவை மீது சீனாவினால் தடைவிதிக்கமுடியும். அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதற்கு மாணவர்களை அனுப்பாமலும் சீன சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமலும் சீனாவினால் அவுஸ்திரேலியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும். அவுஸ்திரேலிய மாட்டிறைச்சியையும் வாற்கோதுமையையும் ஏற்கெனவே சீனா தடைசெய்திருக்கிறது. அதனால், குவாட் தொடர்பான அதன் நிலைப்பாட்டை அவுஸ்திரேலியா தளர்த்துவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

மூன்றாவதாக, குவாட் என்பது முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் மூளையில் உதித்த யோசனை என்ற போதிலும், சீனாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கக்கூடியதாக அநாவசியமான சூழ்நிலையை உருவாக்க ஜப்பானும் விரும்பவில்லை. ஜப்பானிய உயர் தொழில்நுட்ப கம்பனிகள் சீனச்சந்தையில் அவற்றின் வர்த்தக வாய்ப்புக்ளை இழப்பதையும் டோக்கியோ விரும்பவில்லை.

இறுதியாக, இந்தியா பெரும் நெருக்குதலின் கீழ் இருக்கிறது போலத் தோன்றுகிறது. குவாட்டை ஒரு ஆசிய நேட்டோவாக மாற்றுவதற்குத் தெளிவான திட்டத்தை அமெரிக்கா கொண்டிருந்தது. ஆனால், அந்த யோசனை குறித்து இந்தியா மிகவும் உற்சாகமானதாக இருக்கவில்லை. இந்தியா எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் ஒருபோதும் அங்கம் வகிக்காது என்று ஜெய்சங்கர்

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக சீனப்பொருளாதாரம் மார்ச் அல்லது ஏப்ரல் மட்டில் நிலைகுலையும் என்று இந்தியா எதிர்பார்த்தது. 1962 சீன – இந்திய போரில் அடைந்த தோல்விக்காக சீனாவை பழிவாங்கமுடியும் என்றும் இந்தியா நினைத்தது. அமெரிக்காவின் உதவியுடன் சீனாவின் பொருளாதார, இராணுவ மற்றும் மூலோபாய முன்னேற்றத்தை தடுத்துநிறுத்தலாம் என்பதும் இந்தியாவின் நம்பிக்கையாக இருந்தது.

ஆனால், மார்ச் மாத இறுதிமட்டில் சீனா தொற்றுநோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதற்கு மாறாக இந்தியாவும் அமெரிக்காவும் மே, ஜூன் அளவில் தொற்றுநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டன. எதிர்பாராத அளவுக்கு இரு நாடுகளினதும் பொருளாதாரங்கள் வீழ்ச்சி கண்டன.

2018 & 2019 சீனத் தலைவருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற உத்தியோகபூர்வமற்ற உச்சி மாநாடுகளின்போது காணப்பட்ட கருத்தொருமிப்பையும் அதற்கு முன்னரான இணக்கப்பாடுகளையும் உறுதியாக கடைப்பிடிக்குமாறு மே மாத முதல் வாரத்தில் இருந்து சீனா இந்தியாவை நெருக்குதலுக்குள்ளாக்கியது. சீனா அதன் நிலைப்பாட்டை மாற்றவில்லை. இந்தியா மீதான நெருக்குதலை அது தொடர்ந்தது.

இமாலயத்தில் குளிர்காலம் நெருங்கியதும் இந்தியா கூடுதலான அளவுக்கு கலக்கமுற்றது. சியாச்சென் பிராந்தியத்தில் கடும் குளிர் காரணமாக மரணமடையும் இந்திய படைவீரர்களின் எண்ணிக்கை எதிரியின் தாக்குதலில் பலியாகும் படைவீரர்களின் எண்ணிக்கையை விடவும் பல மடங்கு அதிகமானதாக இருந்தது. விநியோகங்களை கொண்டுசெல்வதில் போதுமான போக்குவரத்து ஒழங்கமைப்புகள் இல்லாத நிலையில் அதன் துருப்புக்களைப் பாதுகாப்பதில் இந்தியா சவால்களை எதிர்கொள்கிறது. சாத்தியமானளவு விரைவாக லடாக்கில் இருந்து துருப்புக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இந்தியா விரும்புகிறது. இந்தக் காரணிகளின் விளைவாக கடந்த வருடம் குவாட் அமைச்சர்கள் மட்ட மாநாட்டை நடத்துவதில் இருந்து இந்தியா பின்வாங்கியது.

அவ்வாறு செய்ததன் மூலம், செப்டெம்பர் 10 மாஸ்கோவில் நடைபெற்ற சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிற்கு சென்றிருந்தவேளையில் சீன வெளியுறவு அமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற தனியான பேச்சுவார்த்தையின்போது காணப்பட்ட இணக்கப்பாடுகளின் முதலாவது அம்சத்தை இந்தியா கடைப்பிடித்தது. “வேறுபாடுகள் தகராறுகளாக மாறுவதை அனுமதிக்காமல் இருப்பது உட்பட இந்திய – சீன உறவுகளை வளர்த்தெடுப்பது தொடர்பில் தலைவர்களுக்கிடையில் காணப்பட்ட தொடர்ச்சியான கருத்தொருமிப்புகளில் இருந்து வழிகாட்டல்களை இரு தரப்புகளும் பெறவேண்டும் என்று இரு அமைச்சர்களும் இணங்கிக்கொண்டார்கள்” என்பதே அந்த அம்சமாகும்.

மாஸ்கோவில் இணக்கப்பாடு காணப்பட்ட பின்னரும் கூட, சீனா இந்தியா மீது தொடர்ந்து  நெருக்குதல்களைப் பிரயோகிக்கிறது. அதனால், முதலில் குவாட் மாநாட்டை புதுடில்லியில் நடத்தாமல் விட்டதன் மூலமும் அடுத்து கடந்த வாரம் டோக்கியோ மாநாட்டுக்குப் பிறகு இருமுகப்போக்குடைய அறிக்கையொன்றை வெளியிட்டதன் மூலமும் குவாட்டின் முக்கியத்துவத்தை குறைத்துமதிப்பிட இந்தியா நிர்ப்பந்திக்கப்பட்டது.

டோக்கியோ குவாட் மாநாடடில் பங்கேற்ற நான்கு நாடுகளில் எந்தவொன்றிடமிருந்தும் உருப்படியான கருத்து எதையும் பெறமுடியவில்லை. குவாட் மீதான தங்கள் பற்றுறுதியை மீள உறுதிப்படுத்துவதற்கான ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே டோக்கியோ மாநாடு அமைந்தது எனலாம். இந்த நிகழ்வுப் போக்குகள் சகலதையும் ஒருங்கே நோக்கும்போது ‘ஆசியா நேட்டோ’ என்ற யோசனை பயனற்றதாகவே போனது.

பிம் பூர்டெல்
நேபாள தெற்காசிய நிலையத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளராவார்.

 


‘Asian NATO’ plan stillborn at Tokyo Quad meet என்ற தலைப்பில் AsiaTimes இல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.