பட மூலம், TheDiplomat
உத்தேச 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் முக்கியமான குறைபாடுகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. அதற்கு அனுசரணை வழங்குவோரும் அதை வரைந்தவர்களும் அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு மிகவும் தவறான ஒரு அணுகுமுறையை தெரிவுசெய்திருப்பதே முக்கியமான தவறுகளில் ஒன்றாகும். இந்த அணுகுமுறை ஏன் தவறானது என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
கடந்தகால அரசியலமைப்பு சீர்திருத்த பரிசோதனைகளில் இருந்து பயனுடைய பாடங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மறுத்ததே முதலாவது தவறாகும். பெற்றுக்கொண்டதாக தோன்றுகிற பாடங்கள் எல்லாமே தவறானவையாக இருக்கின்றன. 20ஆவது திருத்தத்தை வரைந்தவர்கள் இலங்கை மக்கள் கூட்டாக உருவகப்படுத்தி நிற்கின்ற அரசியல் சமுதாயத்தின் பரந்தளவு ஜனநாயக நலன்களினால் உற்சாகப்படுத்தப்படவில்லை. பதிலாக, மிக முக்கியமான ஊக்குவிப்புக் காரணியாக அரசியல் சுயநலன்களே இருந்திருப்பது போன்று தெரிகிறது.
மூன்றாவது, எமது சமுதாயத்துக்கும் அரசியலமைப்பு சார்ந்த அதன் சொந்த முற்போக்கு – நவீன மரபுகளுக்கும் பொருத்தமான விதிமுறைகளுக்கும் நியமங்களுக்கும் கட்டுப்படுகின்ற ஜனநாயக கட்டமைப்பு ஒன்று உத்தேச திருத்தத்தில் அறவே இல்லாததாகும். பதிலாக, எமது சமுதாயத்தின் நவீன அரசியல் மற்றும் சமூக வாழ்வின் முற்போக்கான மரபுகளில் இருந்து விலகியதாக உத்தேச திருத்தம் அண்மைய கடந்தகால அரசியலமைப்பு உருவாக்கத்தின் மிகவும் வெறுக்கத்தக்கதும் கெடுதியானதுமான ஒன்று அல்லது இரண்டு பரிசோதனைகளின் மீதே அது தன்னைக் கட்டியெழுப்புகிறது.
கடந்தகால பாடங்கள்
இலங்கை அரசியலமைப்பு உருவாக்கத்திலும் அரசியலமைப்பை இல்லாமல் செய்வதிலும் திருத்தங்களைக் கொண்டுவருவதிலும் ஒப்பீட்டளவில் நீண்ட ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு உருவாக்கத்தில் தவிர்க்கப்படவேண்டியவை எவை என்பதைப் பொறுத்தவரை வளமான பெருவாரியான பாடங்களை அவை வழங்குகின்றன.
1972 முதலாவது குடியரசு அரசியலமைப்பும் 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பும் கூட்டாகவும் தனித்தனியாகவும் பின்வரும் பாடங்களைத் தருகின்றன.
- புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான மக்களின் எந்தவொரு மக்கள் ஆணையையும் அரசியல் அதிகாரத்துக்கு இருக்கும் ஜனநாயக தடுப்புகளையும் சமப்படுத்தல்களையும் (Checks and balances) மலினப்படுத்துவதற்கான அல்லது நீக்குவதற்கான அனுமதிப்பத்திரமாக அர்த்தப்படுத்தக்கூடாது. காரணம் மிகவும் தெளிவானது, அது ஆட்சியாளர்களும் உயர் அதிகார பணித்துறையினரும் பிரஜைகளின் சுதந்திரங்களையும் உரிமைகளையும் சட்டத்துக்கு அஞ்சாமல் மீறுவதை உற்சாகப்படுத்தும். மக்களின் ஆணை அவ்வாறாக துஷ்பிரயோகம் செய்யப்படுவது நிச்சயமாக கொடுங்கோன்மையான விளைவுகளைத் தோற்றுவித்து இறுதியில் அரசாங்கத்தின் சட்டமுறைப்படியான தகுதியும் படிப்படியாக அழிந்துபோய்விடும்.
- சட்டத்தின் ஆட்சியை மலினப்படுத்துவதும் நீதித்துறையின் சுயாதீனத்தை பலவீனப்படுத்துவதும் பொறுப்புக்கூறலுக்கான நிறுவனங்களை நிறைவேற்று அதிகாரத்துக்கு அடிபணியச்செய்வதும் ஆரம்பத்தில் அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் தற்பெருமைகளை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால், நீண்டகால நோக்கில் அரசாங்கத்துக்கும் பிரஜைகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே ஆழமான பிளவை ஏற்படுத்துவதில் முடியும்.
- அரசியலமைப்பு உருவாக்கச் செய்முறையொன்றில் அரசியல் சமத்துவத்துக்கும் சமமான குடியுரிமைகளுக்குமான சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கைகளை புறக்கணித்தால் அதற்காகச் செலுத்தவேண்டிய விலை மிகவும் உயர்வானதாக இருக்கலாம். அது சமூகத்தில் இனங்களுக்கிடையிலும் அரசுக்கும் அந்நியப்படுத்தப்பட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு இடையிலும் முடிவிலா பதற்றநிலை தோன்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.
- ஜனநாயகத்துக்கு முரணான நோக்கங்களையும் உள்ளடக்கத்தையும் கொண்ட அரசியலமைப்புகள் பதவியில் இருக்கும் அரசாங்கத்தினதும் நடப்பில் உள்ள சமூக ஒழுங்கு முழுமையினதும் சட்டமுறைப்படியான தகுதியைப் பாதிக்கும்.
1978 அரசியலமைப்பு 18ஆவது திருத்தத்தின் மூலமான பாடங்கள்
1978 அரசியலமைப்பின் மூலமுதல் வடிவமும் அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தமும் கூட்டாகவும் தனித்தனியாகவும் எமக்கு பின்வரும் பாடங்களைத் தருகின்றன.
- அரசியல் அதிகாரம் மட்டுப்பாடு இல்லாத ஒன்று அல்ல என்பதும் அரசியல் அதிகாரத்துக்கான உரிமையும் அதை செயற்படுத்துகின்ற முறையும் இயல்பான மட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதும் ஜனநாயக ஆட்சிமுறையின் தலைசிறந்த விதியாகும். அதை அலட்சியம் செய்கின்ற எந்தவொரு ஆளுங்கட்சியோ அல்லது அரசாங்கமோ சொந்த அழிவையே சந்திக்கும்.
- எந்தவொரு புதிய அரசியலமைப்பும் அல்லது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புக்கு செய்யப்படக்கூடிய எந்தவொரு பெரிய திருத்தமும் ஒரு தனிநபர் எவ்வளவுதான் அதிகாரமிக்கவராக இருந்தாலும் அவரின் விருப்பு வெறுப்புக்களை – தனிப்பட்ட ஆசைகளை திருப்திப்படுத்துவதற்காக வடிவமைக்கப்படக்கூடாது. அவ்வாறு வடிவமைக்கப்படக்கூடிய எந்தவொரு அரசியலமைப்பும் சமூகத்தின் மெய்யான தேவைகளுடனும் அதன் குடிமக்களின் அபிலாசைகளுடனும் முரண்படுவது நிச்சயம்.
- ஒரு புதிய அரசியலமைப்புத் திட்டம் சமுதாயத்தில் புதிதாக வளர்ந்த தனவந்த மேல்நிலை வர்க்கத்துக்குச் சேவை செய்வதற்காக மாத்திரம் வடிவமைக்கப்படக்கூடாது. அரசியலமைப்பொன்று ஜனநாயகத்தில் குடிமக்கள் மத்தியில் அரசியல் அதிகாரம் பரவப்படுவதை சந்தேகத்துடன் பார்க்கின்றதும் அரசை கைப்பற்றும் அரசியல் குறிக்கோளை வளர்த்துக்கொண்டதுமான ஒரு குறுகிய தனவந்த மேல்நிலை வர்க்கத்தின் கருவியாக மாறும்போது அது கொடுங்கோன்மை ஆட்சிக்கு சட்டரீதியான அந்தஸ்தை வழங்கும் ஆபத்தைக் கொண்டுவரும்.
19ஆவது திருத்தத்தில் இருந்து பாடங்கள்
பெரிதும் பழிகூறப்படுகின்ற 19ஆவது திருத்தத்தின் வரைவுச் செயன்முறைகளில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு நான்கு முக்கிய பாடங்கள் இருக்கின்றன.
- வரைவுச் செயன்முறைகளில் பரந்தளவு கலந்தாலோசனை பயனுடையது மாத்திரமல்ல, அரசியல் சமுதாயத்தில் ஜனநாயக ஆரோக்கியத்தின் மட்டத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.
- புதிய அரசியலமைப்புக்காக அல்லது முக்கியமான திருத்தமொன்றுக்காக நாடாளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகள் மத்தியிலும் கருத்தொருமிப்பைக் கட்டியெழுப்புவது எப்போதுமே சிறப்பானது. எம்மைப் போன்ற ஆழமாகப் பிளவுபட்டிருக்கும் அரசியல் சமுதாயமொன்றில் அரசியலமைப்புக்காக கருத்தொருமிப்பைக் கட்டியெழுப்புவது பொறுமையை இழக்கச்செய்கின்றதும் நீண்டகாலத்தை எடுக்கின்ற ஒரு அரசியல் செயற்பாடும் ஆகும். இருந்தாலும் அது செயன்முறையில் பங்கும் ஈடுபாடும் கொண்ட தரப்புகள் சகலரும் அல்லது பெரும்பான்மையானவர்கள் தங்களது யோசனைகளையும் முன்வைக்க வகைசெய்கிறது. அதன் மூலமாக அவர்கள் அந்த செயன்முறையின் விளைவுகளுக்கு ஓரளவு உரித்துடமையை கோரமுடியும். ஒருதலை சார்பான நோக்கங்களுக்காக சிலர் கருத்தொருமிப்பில் இருந்து விலகக்கூடும் என்ற போதிலும் இந்த செயன்முறை நல்லதேயாகும்.
- அரசியலமைப்பு உருவாக்கத்தில் கலந்தாலோசனையும் கருத்தொருமிப்பைக் கட்டியெழுப்புதலும் நோக்கத் தெளிவுடன் அரசியல்ரீதியாக கையாளப்படவில்லை என்றால் அரசியலமைப்புச் சார்ந்த விட்டுக்கொடுப்பின் ஒட்டுமொத்த இலக்குகளுமே உட்புறமான முரண்பாடுகளையும் வழமைக்கு புறம்பான அம்சங்களையும் கொண்ட மிகவும் பாதகமான அரசியலமைப்புத் திட்டத்தை தோற்றுவிக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன.
- ஜனநாயக அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைக்கு முன்னெப்போதையும் விட இன்று தடுமாற்றமில்லாத அரசியல் தலைமைத்துவம் ஒன்று தேவைப்படுகிறது. அந்தத் தலைமைத்துவம் அரசியலமைப்பு உருவாக்க செயன்முறை புத்தாக்கமானதும் புனைவாற்றல் மிக்கதுமான வழிவகைகளின் ஊடாக இறுதிவரை வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும். இதற்கான காரணம் புதிரான ஒன்றாகும். ஜனநாயகத்துக்கான மாற்றுக்களும் மக்களின் ஆதரவையும் விசுவாசத்தையும் பெறுவதற்காக பெருமளவு பொருள்வளங்களுடன் ஜனநாயக ரீதியான வழிமுறைகளின் ஊடாக ஜனநாயகத்துடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் வலது சாரி ஜனரஞ்சகவாதம், ஊடகங்கள் உற்பத்திசெய்யும் பொது இணக்கம் மற்றும் தகவல் மாசுபடுத்தலின் ஊடான பொதுக்கருத்து நிறைந்த இன்றைய யுகத்தில் ஜனநாயகத்துக்குப் பின்னரான மாற்றுக்கள் மக்கள் மத்தியில் எளிதாக செல்வாக்கையும் நியாயப்பாட்டையும் பெற்றுவிடும்.
அரசியலமைப்புகளும் அரசியல் சமுதாயமும்
ஒரு நாட்டுக்கான அரசியலமைப்பு என்பது இறுதி ஆய்வில் ஒரு நாட்டுக்குள் உள்ள முழு அரசியல் சமுதாயத்துக்குமான அரசியலமைப்பாகும். அந்த அரசியலமைப்பின் அடிப்படை தன்மையின் கருத்தியல் ஆளுங்கட்சியினால் வரையறுக்கப்படக்கூடிய போதிலும், அது நிலைபேறானதாகவும் ஆட்சி மாற்றங்களின் தாக்கங்களைக் கடந்து நீடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டுமானால் அது அந்த ஆளுங்கட்சியின் அல்லது தலைவர் ஒருவரின் நிகழ்ச்சி நிரலை மாத்திரம் பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது. அத்தகைய அரசியலமைப்புகள் ஏதோ ஒரு வடிவிலான கொடுங்கோன்மை ஆட்சிக்கான முதலாவது படியாக இருந்து வந்திருக்கிறது என்பதை இலங்கையினதும் வேறு நாடுகளினதும் அனுபவங்கள் வெளிக்காட்டுகின்றன.
மேலும், அரசியலமைப்பு ஒன்று அரசியல் சமுதாயத்தின் உயர்ந்த ஜனநாயக குறிக்கோள்களையும் அபிலாசைகளையும் உருவகிப்பதாக இருக்க வேண்டும். அந்த குறிக்கோள்களும் அபிலாசைகளும் அந்த அரசியல் சமுதாயத்தின் பரந்தளவு பெரும்பான்மை உறுப்பினர்களினால் சுயாதீனமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்க வேண்டும்.
நல்ல அரசியலமைப்பொன்று எப்போதும் ஜனநாயக ரீதியானதாக இருக்க வேண்டும். இலங்கைக்கான நல்லதொரு அரசியலமைப்பு எமது சொந்த தாராள ஜனநாயக பாரம்பரியங்களின் வழியாக எமது அரசியல் சமுதாயத்தின் மக்கள் மரபுரிமையாகப் பெற்றுக்கொண்ட விதிமுறை கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கவியல் பண்புகளின் சேர்க்கை ஒன்றை உருவகிக்கும் விழுமிய கட்டமைப்பு ஒன்றினால் வழிநடத்தப்பட வேண்டும்.
இந்தியாவினதும் தென்னாபிரிக்காவினதும் அரசியலமைப்புகள் அவற்றின் உள்நாட்டு கலாசாரங்கள் மற்றும் வரலாறுகளிலிருந்து மரபாக பெற்ற ஒப்புரவான – சமூகநீதி உணர்வுகளிலிருந்தும் நவீன அரசியலமைப்பு உருவாக்க முறைமையின் சிறந்த பாரம்பரியங்களிலிருந்தும் பெறப்பட்ட அத்தகைய விழுமிய சேர்க்கையினால் வழிநடத்தப்படுகின்ற பின் காலனித்துவ அரசியலமைப்புகளின் வகை மாதிரியாகும்.
வழிவழி சொத்தாக பெற்ற மரபுரிமை
இறுதியாக, இலங்கையில் அரசியலமைப்பை வரைபவர்கள் இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு முன்மாதிரி வடிவமாக தென்கிழக்காசிய நாடுகளில் பொருளாதார அபிவிருத்தியை குறியாகக் கொண்ட எதேச்சாதிகார அரசுகளை வகைமாதிரியானதாகக் கருதக்கூடாது (Developmentalist authoritarian state). ஏனென்றால், அது கடந்த நூற்றாண்டில் அல்லது அதற்கும் கூடுதலான காலமாக படிமுறை வளர்ச்சி கண்ட சொந்த முற்போக்கு அரசியலமைப்பு உருவாக்க மரபுக்கு எதிராக அமைகிறது. உள்நாட்டில் வகுக்கப்பட்ட நம்பத்தகுந்த நவீன பாணியிலான முற்போக்கான அரசியலமைப்பு உருவாக்க முறைமை போக்குகளையே நாம் மரபுரிமையாக பெற்று மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். உள்நாட்டு அனுபவங்களையும் வெளிநாட்டு அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஜனநாயக விதிமுறைக்கு கட்டுப்பட்ட உள்ளடக்கம் எதுவும் இல்லாத தவறான அரசியலமைப்பு வகைமாதிரியிலிருந்து 20ஆவது திருத்தத்தின் கட்டமைப்பு ஊக்கத்தை பெற்றிருக்கிறது போல் தெரிகிறது.
உத்தேச 20ஆவது திருத்தம் அரசியலமைப்புக்கு இசைவானதா இல்லையா என்ற விடயம் பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்ற உச்சநீதிமன்றமே மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களை சுட்டிக்காட்டி பேசுவதற்கான தலைசிறந்த பொருத்தமான அரங்காகும். முன்னைய பல தீர்ப்புகளிலும் 2018 டிசம்பரில் வழங்கிய தீர்ப்பிலும் எமது உச்சநீதிமன்றம் இலங்கையின் சொந்த ஜனநாயக அரசியலமைப்பு முறைமைப் பாரம்பரியத்தின் இயல்பாய் அமைந்த விதிமுறைக்கு கட்டுப்பட்ட கட்டமைப்பை திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி ஒப்புக் கொண்டிருக்கிறது. குடிமக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் இறுதி காவலரணாக இருக்கும் மிகவும் மதிக்கப்படுகின்ற பொதுநிறுவனமான உச்சநீதிமன்றத்தின் எமது மதிப்புக்குரிய நீதியரசர்கள் எமது சொந்த சிறந்த அரசியல் மற்றும் நவீனத்துவத்தின் மரபுகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தின் அங்கமாக விளங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட
The 20A: A Very Wrong Approach to Constitution-Making என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.