பட மூலம், The Diplomat
சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது நாடாளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக்கொண்டதாகத் தெரியவில்லை.
இந்தச் சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு தற்போதைய அரசியலமைப்பின் 17A யில் உள்ள 154R உறுப்புரையை திருத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அந்த உறுப்புரை மாகாண சபைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நோக்கத்துக்கு வருடாந்த பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதை விதந்துரைக்கும் நிதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு பேரவையின் விதந்துரையின் பெயரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற அந்த ஆணைக்குழு மூன்று உறுப்பினர்களை கொண்டிருக்கும். அந்த உறுப்பினர்கள் மூன்று பிரதான சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவும் ஒவ்வொருவரும் நிதி, சட்டம், நிர்வாகம், வர்த்தகம் அல்லது கல்வி ஆகிய துறைகளில் புலமை கொண்டவர்களாகவும் உயர் பதவிகளை வகித்தவர்களாகவும் இருக்க வேண்டும். புதிய சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு அரசியலமைப்பு பேரவை என்று குறிப்பிடுவதை நீக்குவதன் மூலமாக இந்த நியமனங்களை ஜனாதிபதி தானாகவே செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
17A அத்தியாயத்தில் உள்ள எந்தவொரு ஏற்பாட்டையும் நீக்குவதற்கு அல்லது திருத்துவதற்கான எந்தவொரு சட்டமூலமும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்வதற்கு முன்னதாக ஒவ்வொரு மாகாண சபைக்கும் அவற்றின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்காக ஜனாதிபதியால் அனுப்பப்பட வேண்டும். அனுப்பப்படாத பட்சத்தில் அது சட்டமாக வர முடியாது. சகல மாகாண சபைகளினதும் பதவி காலங்கள் முடிந்த காரணத்தால் அவ்வாறு செய்யப்படவில்லை. புதிய மாகாண சபைகளும் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அதனால் கடந்தவாரம் 20ஆவது திருத்த சட்டமூலம் ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்யப்பட்டமை அரசியலமைப்பின் உறுப்புரை 154G க்கு முரணானதாகும். மேலும், தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளுடன் கலந்தாலோசனை செய்யத் தவறியமை மக்களின் வாக்குரிமையையும் பாதிப்பதாகும். மக்களின் வாக்குரிமை என்பது அரசியலமைப்பின் உறுப்புரை 3இனால் பாதுகாக்கப்படுகின்ற மக்களின் இறையாண்மையுடன் சம்பந்தப்பட்ட அம்சமாகும்.
சாதாரணமாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வு ஒழுங்கு பத்திரத்திலிருந்து 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை வாபஸ் பெற்று அதிலிருந்து அதன் 41ஆவது பிரிவை நீக்கிவிட்டு மீண்டும் ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெறச் செய்வதாகும். ஆனால், அத்தகையதொரு நடவடிக்கை எடுப்பது பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. உறுப்புரை 154R அதன் தற்போதைய வடிவிலேயே அரசியலமைப்பில் தொடர்ந்து இருக்கும் வரை அரசியலமைப்பு பேரவையும் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால், அந்தப் பேரவையின் ஆலோசனையின் பேரிலேயே நிதி ஆணைக்குழுவுக்கான நியமனங்களை ஜனாதிபதி செய்யலாம். ஆனால், 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் அரசியலமைப்பு பேரவையை நீக்குவதை நோக்காகக் கொண்டிருக்கிறது. இங்கு தான் பெரும்பாலும் எளிதில் கையாள முடியாத பிரச்சினை இருக்கிறது.
20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வரைந்த அநாமதேய நபர் அரசியலமைப்பின் 17A அத்தியாயத்தின் அவசியத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார் போலும். சட்டமூலத்தின் முதலாவது வாசிப்பை முன்மொழிந்த நீதியமைச்சரும் அரசியலமைப்பின் உறுப்புரை 154G (2) இன் அவசியத்தை அலட்சியம் செய்துவிட்டார் போலும். இந்த இருவரும் சேர்ந்துதான் இந்த திரிசங்கு நிலையை தீர்த்து வைக்க வேண்டும்.
கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம
The 20th Amendment: A violation of procedure? என்ற தலைப்பில் டெய்லி எவ்டியில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.