பட மூலம், ColomboTelegraph

நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பிற்கு உத்தேச 20ஆவது திருத்தத்தினைக் கொண்டுவருவதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தினைப் பெற்று அதனை வர்த்தமானியில் வெளியிட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளார். உத்தேசிக்கப்பட்டுள்ளவாறாக 20ஆவது திருத்தம் எவ்வாறு நாடாளுமன்ற அதிகாரங்களைக் குறைத்து நீதித்துறையின் சுயாதீனத்தினைச் சீரழித்து சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலவீனப்படுத்தும் என்பதை விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[1] ஆனால், எதிர்காலச் சந்ததிக்கு விலங்கிடும் கட்டற்ற ஊழல் நிறைந்த யுகத்திற்கு 20ஆவது திருத்தம் கட்டியம் கூறும் என்பதை வெகுமக்கள், குறிப்பாக நடப்பு அரசாங்கத்தினை ஆட்சிக்கட்டிலேற்றியவர்கள் அறிந்துகொள்வது இன்றியமையாததாகும். பொருளாதார அபிவிருத்திக்கு 19ஆவது திருத்தத்தினை அகற்றுவது அவசியமானது என ஜனாதிபதியும் பிரதமரும் எம்மிடம் வற்புறுத்திவருகின்றனர்[2]. ஆனால், பொருளாதார அபிவிருத்திக்கு நாம் விலையாகக் கொடுப்பதோ வெளிப்படைத்தன்மையும் மேற்பார்வையும் என்பது அவர்கள் எம்மிடம் சொல்ல மறுக்கும் கதையாகும். நாம் வாக்களித்துத் தேர்வுசெய்த தலைவர்களிடமிருந்து நாம் அதிகமதிகம் கோரமுடியும், மேலும் அவ்வாறு கட்டாயம் கோரவேண்டும்.

2015இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம், தகைமை பெற்ற கணக்காய்வாளர் ஒருவரைச் சுயாதீனமான கணக்காய்வாளர் தலைமையதிபதியாக நியமிக்குமாறு அரசியலமைப்புச் சபையினைத் தேவைப்படுத்துகின்றது. ஜனாதிபதி அவரின் முற்றுமுழுவதுமான தற்றுணிபின் பேரில் எந்தவொரு நபரினையும் இப்பதவிக்கு நியமிப்பதற்கு 20ஆவது திருத்தம் அவரை இயலுமாக்குகின்றது. இதனால், கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவிற்கான அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு மறைந்துவிடும். மேலும், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இனிமேலும் கணக்காய்வுகள் தேவைப்படாது.[3] அதேவேளை, ஊழல் மற்றும் இலஞ்சம் பற்றிய விடயங்களைப் புலன்விசாரணை செய்வதற்காக ஆணைக்குழு அதன் சொந்த விசாரணைகளை முன்னெடுக்க 19ஆவது திருத்தம் ஆணைக்குழுவினை வலுப்படுத்திய அதேவேளை, உத்தேச 20ஆவது திருத்தமானது அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பினை ஒரேயடியாகவே அகற்றுகின்றது. இதன் அர்த்தமாவது நாடாளுமன்றத்தின் எளிய பெரும்பான்மை வாக்கினைக் கொண்டு ஆணைக்குழுவினைக் கலைக்க முடியும் என்பதேயாகும்.[4] இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்திருந்தாலும், உத்தேச 20ஆவது திருத்தமானது ஆணைக்குழு அதன் சொந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதன் அதிகாரங்களை அகற்றிவிடும்[5]. இறுதியாக, உத்தேச 20ஆவது திருத்தமானது தேசிய பெறுகை ஆணைக்குழுவினையும் உடனடியாகக் கலைத்துவிடும்.[6]

இந்த மாற்றங்களினால் யார் நன்மையடைகின்றனர்?

அரசாங்கச் செயற்பாடுகள் பற்றிய சுயாதீனமான கணக்காய்வுகளை நடத்துவதே கணக்காய்வாளர் தலையமைதிபதியின் வகிபாத்திரமாகும். “அரசாங்கச் செலவீனங்களைப் பரிசோதிப்பதற்கு இந்தக் கணக்காய்வுகள் நாடாளுமன்றத்தினை அனுமதிப்பதுடன் நிலைபேறான அபிவிருத்தியினைப் பேணுவதற்காக சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் அரச வளங்களின் உச்சப் பாவனை ஆகியவற்றினையும் இக்கணக்காய்வுகள் உறுதிப்படுத்துகின்றன”.[7] தேசிய கணக்காய்வு ஆணைக்குழு கலைக்கப்பட்டால் அதன் மேலதிக அதிகாரங்களும் கலைக்கப்பட்டுவிடும். அதாவது, பொது நிதிகளைக் கையாடும் தனிநபர்களைத் தனிப்பட்ட ரீதியில் இனிமேலும் வகைப்பொறுப்புக் கூறவைக்க முடியாது என்பதே இதன் அர்த்தமாகும். பொது நிதிகளை அரசாங்கம் பயன்படுத்துவது தொடர்பான வெளிப்படைத்தன்மையினையும் வகைப்பொறுப்பினையும் குறைப்பதன் மூலம் சாதாரண இலங்கையர்கள் எவ்வாறு நன்மையடைகின்றனர்?

இதேபோன்று, உத்தேச 20ஆவது திருத்தம், அரசாங்கத்தின் கொள்வனவுகளுக்காக நியாயமானதும் ஒப்புரவானதும் வெளிப்படைத்தன்மை மிக்கதும் போட்டித்தன்மை மிக்கதும் செலவுச் சிக்கனம் மிக்கதுமான செயல்விதிகளையும் வழிகாட்டல்களையும் உருவாக்குவதற்கும் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வகைப்பொறுப்பினை உறுதிப்படுத்துவதற்கும் சேவையாற்றும் தேசிய கொள்முதல் சேவை ஆணைக்குழுவினைக் கலைத்துவிடும்.[8] பெரிய வரவு-செலவுத்திட்ட அரசாங்க கொள்முதலில் குறைந்த அளவான வெளிப்படைத்தன்மை எவ்வாறு சாதாரண மக்களுக்கு நன்மையான விடயமாக இருக்க முடியும்?

சுருக்கமான பதில்? இல்லை.

19ஆவது திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள மேம்படுத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் நம் அனைவருக்கும் நன்மை பயக்கின்றன. மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தபோது ஹம்பாந்தோட்டையில் துறைமுகக் கருத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார். அதற்கு சீனாவிடமிருந்து கடனாகப் பெற்ற 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியிடப்பட்டது. கருத்திட்டம் சீன ஒப்பந்தக்காரர்களினாலேயே நிறைவேற்றப்பட்டதுடன் கருத்திட்டப் பணிகளில் உள்நாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றவில்லை. 2010 இல் துறைமுகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து துறைமுகம் நட்டத்திலேயே இயங்கிவந்தது. 2015 இல் மஹிந்த மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அவரது பிரச்சாரத்திற்கு சீனத் துறைமுக நிதியத்தில் இருந்து நிதி பெறப்பட்டது என்பதாக அப்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பில்லியன் டொலர் கடனிற்கு இலங்கையினால் வட்டியினைக் கூட மீளச் செலுத்த முடியாத நிலை காணப்பட்டபோது, அப்போதைய சிறிசேன அரசாங்கம் கடன் தவணை தவற நிர்ப்பந்திக்கப்பட்டு துறைமுகத்தினதும் அதனைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் காணியினதும் கட்டுப்பாட்டினைச் சீனாவுக்கு 99 வருடங்களுக்கு வழங்கியது.[9] தற்போது ஹம்பாந்தோட்டையில் சீனக் கைத்தொழில் பேட்டைக்கு இடம் வழங்குவதற்காக உள்ளூர் விவசாயிகளை அவர்களின் காணிகளை விற்குமாறு சீனத் துறைமுக அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.[10]  உள்ளூர்க் குடியிருப்பாளர்கள் தங்களின் பரம்பரைக்கு உரித்தான சொத்தினை விற்காதிருப்பதற்காகப் போராடிவருகின்றனர்.[11] ஆனால், சுயாதீனமான கணக்காய்வுகள் மற்றும் வலுவான இலஞ்ச ஆணைக்குழு இல்லாமல் ஹம்பாந்தோட்டை அனர்த்தம் போன்றவை மீண்டும் நிகழவே வாய்ப்புள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக விடயம் போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை உருவாக்குவதற்காக அவன்ட் கார்ட் எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அரசுக்குச் சொந்தமான 75 மில்லியன் டொலர் ஆயுதங்களை மாற்றினார் என்று 2016ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டார்.[12] மேலும் தனது பெற்றோருக்காக ஞாபகார்த்த அருங்காட்சியகத்தினை நிர்மானிப்பதற்காக 33.9 மில்லியன் ரூபாவினைக் கையாடினார் என்று வேறு ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது.[13] இந்த வழக்குகளை முன்னெடுத்துச் செல்வதை ஜனாதிபதி சட்டக் காப்புத் தடுக்கின்ற அதேவேளை, அரச நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு சுயாதீனமான கணக்காய்வும் சுயாதீனமான பெறுகைச் செயற்பாடுகளும் அவசியமாகின்றன.

பாரிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை ஆரம்பிக்கும் பணியில் அரசாங்கம் தற்போது இறங்கியுள்ளது. இதனால் அதிகமான அரசாங்க நிறுவனங்கள் ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்களின் கீழும் இராணுவ உத்தியோகத்தர்களின் கீழும் கொண்டுவரப்படுகின்றன. சுயாதீனமான கணக்காய்வுகளும் கொள்முதல் ஆணைக்குழுவும் இல்லாத சூழ்நிலையில் உறவினர்களுக்கும் அடிவருடிகளுக்கும் வாய்ப்பு வசதிகள் வழங்குவதும் ஊழலும் கட்டின்றிப் பெருகும் என்றால் அது மிகையாகாது. கணக்காய்வு ஆணைக்குழுவினைக் கலைத்து ஜனாதிபதியின் அலுவலகத்தினையும் பிரதமரின் அலுவலகத்தினையும் கணக்காய்வினில் இருந்து விதிவிலக்குப் பெறவைத்த காரணத்தினால் அரச நிதிகள் பகற்கொள்ளையடிக்கப்படுவதற்கு 20ஆவது திருத்தம் அனுமதி வழங்குகின்றது. உயர் பதவி வகிக்கும் இந்த அதிகாரிகள் வழக்கு விசாரணைக்குள்ளாவதில் இருந்தும் சட்டக் காப்பினைக் கொண்டுள்ள காரணத்தினால் ஊழலுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

எனவே, இவற்றால் எல்லாம் யார் நன்மை பெறப்போகின்றனர்? ராஜபக்‌ஷாக்கள்தான் என்பது தெட்டத்தெளிவானதாகும். அவ்வாறாயின் அதில் எமக்கு என்னதான் கிடைக்கப்போகின்றது? அதீத சுமை கொண்ட பெருங் கடன் உதவியுடன் பாரிய பணச் செலவில் அமையப்போகும் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக அனைத்து இயற்கை வளங்களையும் பயன்படுத்துவது என்றோ அல்லது தனியார் சொத்துக்களைக் கையகப்படுத்துவது என்றோ நாளை ஜனாதிபதி தீர்மானித்தால் அவரை யாரால் தடுத்து நிறுத்த முடியும்? அரசாங்க உத்தியோகத்தர்கள் எமது நம்பிக்கைப் பொறுப்புக்களைக் கபளீகரம் செய்யும்போது எமக்கு என்ன மேற்பார்வை இருக்கப்போகின்றது, எமக்கு என்ன மாற்றீடுதான் இருக்கப் போகின்றது? ஆனால் ,பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து மறுசீரமைப்புக்களுடனும் 20ஆவது திருத்தம் இன்றியமையாதது என்று ராஜபக்‌ஷ உடன்பிறப்புக்கள் எம் காதில் ஓதி வருகின்றனர். ஆனால், உலக வங்கியோ இதற்கு எதிரான கருத்தையினையே . “ஊழல் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போட்டு வளர்ச்சியிலும் தொழில்களிலும் அதன் விளைவாகத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. ஊழலை எதிர்க்கும் ஆற்றல் உள்ள நாடுகள் தங்களின் மனித வளங்களையும் நிதி வளங்களையும் மிகவும் வினைத்திறனுடன் பயன்படுத்தி வருவதுடன் அதிக முதலீடுகளைக் கவர்ந்து மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.”[14]

உத்தேச மறுசீரமைப்புக்கள் எமக்கு நன்மையாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா என்பதைத் திறனாய்வுடன் சிந்திக்கவேண்டியது பிரஜைகள் என்ற ரீதியில் எம் கடமையாகும். மேற்பார்வையினைக் குறைத்தமை ராஜபக்‌ஷாக்களுக்கு நிச்சயம் நன்மைதான் என்றபோதிலும் இது அவர்களைப் பற்றியதே அல்ல. எந்த ஓர் அரசாங்கத்தினதும் மையமாக இருப்பது பொது நம்பிக்கைப் பொறுப்பு ஆகும். நாம் அரும்பாடுபட்டு தேடிச் சேர்த்த செல்வத்தினையும் எம் உரிமைகளையும் அரசாங்கத்தின் கரங்களில் நம்பி ஒப்படைத்துவிட்டு அதற்கு பதிலாக அரசாங்கத்திடமிருந்து கேட்பதெல்லாம், எம் கூட்டு நலனிற்காகச் செயற்படுகின்றதா என்பது மட்டுமே. இந்த நம்பிக்கைக்கு அவசியமானது அரசாங்கம் சரியான தடத்திலேயே தொடர்ந்தும் செல்கின்றதா என்பதை அறிந்துகொள்வதற்காக சுயாதீனக் கணக்காய்வாளர்களிடம் இருந்தும் சுயாதீன ஆணைக்குழுக்களிடம் இருந்தும் பிரஜைகள் என்கின்ற ரீதியில் நாம் முன்னேற்ற அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வது எமது ஆற்றலாகும். சுயாதீன கணக்காய்வாளர் தலைமையதிபதி, கொள்முதல் ஆணைக்குழு மற்றும் அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்படும் ஆணைக்குழுக்கள் கணக்காய்வுகளை மேற்கொண்டு ஊழலை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது அரசாங்கம் எமக்காகப் பணியாற்றுகின்றதேயன்றி எம்மை அரசாங்கம் விலையாகக் கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அவசியமானவையாகும். கணக்காய்வு, பெறுகை மற்றும் ஊழலுக்கெதிரான செயற்பாடுகளை 20ஆவது திருத்தம் பலவீனமாக்காமல் அவற்றினை வலுப்படுத்தி அவற்றின் சுயாதீனத்தினை எவ்விதமான அரசியல் தலையீட்டிலும் இருந்து பாதுகாக்கவேண்டும் என்பதை இலங்கையர்களாகிய நாம் கோரவேண்டும்.

சிறீன் அப்துல் சரூர்

 

 


[1]           சுதா ராமச்சந்திரன், Sri Lanka’s Democracy on the Edge, The Diplomat (Sept. 26, 2020), https://thediplomat.com/2020/09/sri-lankas-democracy-on-the-edge/.

[2]           Nuwan Senarathna, MR calls for two-thirds majority to repeal 19A, Daily FT (June 22, 2020), http://www.ft.lk/news/MR-calls-for-two-thirds-majority-to-repeal-19A/56-701995

[3]           பார்க்க, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்(CPA), உத்தேச 20 வது திருத்தத்தின் கீழ் மாற்றங்களின் தொகுப்பு (செப்டெம்பர் 2020), https://www.cpalanka.org/statement-on-the-twentieth-amendment-2/, at pp. 28-29.

[4]           Id. at pp. 27-28.

[5]           சுலோசனா ராமையா மோகன், Commission Removal Compromises Accountability—TISL, Ceylon Today (Sept. 11, 2020), https://ceylontoday.lk/news/commission-removal-compromises-accountability-tisl.

[6]           CPA Summary of Changes, supra, at p. 31.

[7]           இலங்கை தேசிய கணக்காய்வு அலுவலகம், தொலைநோக்கு, பணிநோக்கு மற்றும் விழுமியங்கள், http://www.naosl.gov.lk/web/index.php/en/our-vision-mission-and-values (last visited Sept. 26, 2020).

[8]           தேசிய பெறுகை ஆணைக்குழு, தொலைநோக்கு, பணிநோக்கு மற்றும் விழுமியங்கள், https://www.nprocom.gov.lk/web/index.php?lang=en (last visited Sept. 26, 2020).

[9]           மரியா அபி ஹபீப், How China Got Sri Lanka to Cough Up a Port, N.Y. Times (Jun. 25, 2018), https://www.nytimes.com/2018/06/25/world/asia/china-sri-lanka-port.html.

[10][10]        லோரன் பிரேயர், In Sri Lanka, China’s Building Spree is Raising Questions About Sovereignty (Dec. 13, 2019), https://www.npr.org/2019/12/13/784084567/in-sri-lanka-chinas-building-spree-is-raising-questions-about-sovereignty.

[11]          Id.

[12]          Sri Lanka’s Gotabhaya Rajapaksa charged with corruption, BBC News (Aug. 31, 2016), https://www.bbc.com/news/world-asia-37234654.

[13]          சிஹார் அனீஸ், Sri Lanka presidential frontrunner loses bid to get corruption case dismissed, Reuters (Sept. 11, 2019), https://www.reuters.com/article/us-sri-lanka-politics-rajapaksa/sri-lanka-presidential-frontrunner-loses-bid-to-get-corruption-case-dismissed-idUSKCN1VW1UF.

[14]          ஊழலை எதிர்த்தல், உலக வங்கி, https://www.worldbank.org/en/topic/governance/brief/anti-corruption (last visited Sept. 26, 2020).