பட மூலம், ILO Asia-Pacific
1970ஆம் ஆண்டுகளிலிருந்து நாடளாவிய, உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடித் தன்மைகள் பெருப்பித்துக் கொண்டு வந்து கொவிட்-19 அனர்த்தத்துடன் ஒரு மாபெரும் உலக நெருக்கடியாக எழுச்சியடைந்துள்ளது. இந்த உலக நெருக்கடியை பல ஆய்வாளர்கள் 1930ஆம் ஆண்டு வந்த மாபெரும் பொருளாதார நெருக்கடியுடனும் அதனுடன் தொடர்புபட்ட இரண்டாம் உலக யுத்தத்தால் வந்த குழப்பத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். மேலும் கைத்தொழில் முதலாளித்துவம் முதலில் வளர்ச்சியடைந்த பிரித்தானியாவில் இருக்கும் சில அறிஞர்கள் தற்போதைய நெருக்கடிதான் கடந்த 300 வருடகால பிரித்தானிய முதலாளித்துவ வரலாறு எதிர்கொண்ட மிகப்பெரிய நெருக்கடி என்று கூறுகிறார்கள்.
தற்போது இருக்கும் உலக பொருளாதார நெருக்கடியின் தன்மைகள் என்ன? உலக பொருளாதாரத்தை மீண்டும் இயங்கவைப்பதில் உள்ள சவால்கள் என்ன?
அண்மைக்கால பொருளாதார வீழ்ச்சி
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைக்கால அறிக்கைகளில் உலக பொருளாதாரம் 3 வீதத்தால் சுருங்கப்போவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாடுகளினதும் பொருளாதாரக் கட்டமைப்பைப் பொறுத்து மேலதிக வீழ்ச்சி ஏற்படலாம் என்றும் கூறுகிறார்கள். உதாரணமாக இலங்கையைப் பொறுத்தவரை 3 வீதத்தால் சுருங்கும் என்றும் வேறு சில நாடுகளில் 13 வீதத்தால்கூட சுருங்கலாம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து உலக வர்த்தக அமைப்பின் (WTO) அண்மைக்கால அறிக்கையின்படி உலகளாவிய வர்த்தகம் 32 வீதத்தால் சுருங்கப்போகிறது என்ற தகவலை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முதலாளித்துவம் சார்ந்த சர்வதேச அமைப்புகள் பகுப்பாய்வை செய்யும் போது பல பொருளாதார ஆய்வாளர்கள் இதைவிட பாரியளவிலான வீழ்ச்சி உருவாகலாம் என்று கருதுகிறார்கள். உதாரணமாக உலக வங்கி இந்தியாவினுடைய பொருளாதாரம் இந்த வருடம் 2 வீதத்தால் வளரும் என்று கூறும் போதும் சில இந்திய பொருளாதார ஆய்வாளர்கள் இந்தியாவினுடைய பொருளாதாரம் நிலைமையைப் பொறுத்து 33 வீதத்தால் கூட சுருங்கலாம் என்று எதிர்வு கூறுகிறார்கள். உண்மையில் இந்த நெருக்கடி எந்தளவில் வீழ்ச்சியைக் கொண்டுவருமென்பதை அடுத்தடுத்த மாதங்களில்தான் தெளிவுபடுத்த முடியுமென்றாலும் எல்லோரும் இது ஒரு மாபெரும் பொருளாதார நெருக்கடியென்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
நிதிமயமாக்கலும் கடன் பொருளாதாரமும்
தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் கடந்த தசாப்தங்களில் உருவாக்கப்பட்ட பொருளாதார காரணிகளுமாகும். குறிப்பாக கடந்த நான்கு தசாப்தங்களாக உலக பொருளாதாரம் பெருமளவில் நிதிமயமாக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சிக்கான கேள்வி கடன்களில்தான் தங்கியிருந்தது. அதாவது முதலாளிகள் பொருட்களை உற்பத்தி செய்யும் போது அதை கொள்வனவு செய்வதற்கான கேள்வி மக்களிடம் மிகக் குறைவாக இருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் கடன்களை பெற்றுத்தான் நுகர்ச்சிசெய்து வந்தார்கள்.
உற்பத்தியையும் வர்த்தகத்தையும் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த முதலாளித்துவம் கடந்த தசாப்தங்களில் நிதித்துறையூடாகத்தான் பெருமளவு இலாபத்தைத் திரட்டியது. தற்போதைய நெருக்கடி உற்பத்தி மற்றும் வர்த்தகத்திற்கப்பால் நிதித்துறையையும் பெருமளவில் பாதித்துள்ளது. இந்த நெருக்கடியுடன் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களும் கடன்களை அறவிடமுடியாது பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. மேலும் அரசாங்கங்களின் நிதிநிலைமையும் கூட ஸ்திரமற்றதாக காணப்படுகிறது.
இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் முதலாளித்துவம் ஒரு சரியான வருமானத்தை உழைக்கும் மக்களுக்குக் கொடுத்தால்தான் உற்பத்தி பொருட்களை அம்மக்கள் வாங்கக் கூடியதாக இருக்கும். ஆனால், சர்வதேச ரீதியாக கடந்த நான்கு தசாப்தங்களில் மொத்த தேசிய வருமானத்தில் ஊழியத்தினுடைய பங்கு தொடர்ச்சியாகக் குறைவடைந்துள்ளது. மேற்கு நாடுகளுடைய பொருளாதார புள்ளிவிபரங்களை எடுத்துப் பார்க்கும் போது மொத்த தேசிய வருமானத்தில் 75 அல்லது 70 வீதத்தில் இருந்த ஊழியத்தினுடைய மொத்த வருமானப் பங்கு (labour share of income) மூலதனத்தினுடைய மொத்த வருமானப்பங்குடன் (capital share of income) ஒப்பிட்டுப்பார்க்கும்போது கடந்த நான்கு தசாப்த காலத்தில் 60 அல்லது 55 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஊழியத்தினுடைய வருமானம் குறையும் பொழுது நுகர்ச்சிப் பொருட்களை வாங்குவதற்கான கேள்வி அந்த நாடுகளில் குறைவாக இருக்கும்.
இந்த நிலைமையில் நிதிநிறுவனங்களும் நெருக்கடிக்குள் போகும் போது அவர்களாலும் மேலதிக கடன்களை வழங்க முடியாது. மேலும் நெருக்கடி மத்தியில் உற்பத்தி குறைந்து வேலைவாய்ப்புகள் அழிவடைந்து மக்களுடைய மற்றும் கப்பனிகளுடைய வருமானமும் சரிவடைந்து அவர்களுடைய கடந்தகாலக் கடன்களையும் கட்ட முடியாத நிலையேற்படுகிறது. அத்துடன், பொருளாதாரத்தில் நுகர்ச்சியும் பெருமளவில் சுருங்குகிறது. இந்த நெருக்கடி பொறிக்குள்தான் சமகால உலகபொருளாதாரம் சிக்கி நிற்கிறது.
கடன்முறையிலான நுகர்ச்சிக்கான மற்றொரு காரணம் கடந்த நான்கு தசாப்தங்களாக மக்கள் மத்தியில் அதிகரித்த வருமானம் மற்றும் சொத்துக்களினுடைய ஏற்றத்தாழ்வுகள் ஆகும். உச்சக்கட்டத்திலிருக்கும் ஒரு வீதமான மக்களிடம்தான் சொத்துக்கள் குவிந்துள்ளது. ஆனால், நுகர்ச்சிப் பொருட்களை பாரியளவு கொள்வனவு செய்து உற்பத்திக்கான கேள்வியை உருவாக்குவது பெரும்பான்மையான சாதாரண மக்களாக இருக்கின்றனர்.
1930களின் பாரிய நெருக்கடியும் அதன் விளைவுகளும்
1929ஆம் ஆண்டு ஏற்பட்ட பங்கு சந்தையின் வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெரும் நெருக்கடிகூட 1890ஆம் ஆண்டுகளில் இருந்து நான்கு தசாப்த கால நிதிமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்புடன் தொடர்புபட்டதாகும். அந்தப் பொருளாதார குழப்பத்தினால் உலகப் பொருளாதாரத்தின் கேள்வி பெருமளவில் வீழ்ச்சியடைந்து உற்பத்தி குறைந்து மக்களுடைய வேலைவாய்ப்புகளும் சிதைந்து அவர்களுடைய வருமானமும் தொடர்ந்து குறைந்து மீளமுடியாத சுழற்சி சக்கரத்திற்குட்பட்டது.
அங்கு வந்த மாபெரும் சவால் என்னவென்றால், எவ்வாறு மீண்டும் உலகப் பொருளாதாரத்திற்கான கேள்வியை உருவாக்குவது? எவ்வாறு மக்களை திரட்டி உற்பத்தியை அதிகரிப்பது? அவர்களுக்கு உழைக்கும் வாய்ப்புகளை கொடுத்து எவ்வாறு அவர்களுடைய வருமானத்தை அதிகரிப்பது?
இவ்வாறான பிரச்சினைகளுக்கு வழி காணமுடியாத நிலைமையில்தான் 1930ஆம் ஆண்டுகளில் பாசிசம் தோன்றியது. அதாவது, பாசிசம் என்பது அரசும் முதலாளிகளும் இணைந்து நிர்வாக ரீதியாகவும் இராணுவமயமாக்கலுக்கு ஊடாகவும் மக்களைத் திரட்டும் ஒரு அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பாகும். இந்த சூழலில்தான் ஜேர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிகண்டது.
உண்மையில் 1930ஆம் ஆண்டுகளில் வந்த மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இரண்டாம் உலக போரின் ஊடாகத்தான் தீர்வை காண முடிந்தது. அதாவது, உலகப் போரின் மத்தியில்தான் இராணுவ இயந்திரங்கள் மற்றும் போர் ஆயுதங்களை உற்பத்திசெய்யும் கைத்தொழில் வளர்ச்சியை முன்கொண்டு பாசிச நாடுகளும் அதை எதிர்த்துநின்ற நேசநாடுகளும் தங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருந்தது. மேலும் கோடிக்கணக்கான ஆண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் பெண்களுடைய பெருமளவான பொருளாதார பங்களிப்பை உற்பத்தியில் காணமுடிந்தது. இது மேற்கு நாடுகளின் முறைசார்ந்த பொருளாதாரக் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை கொண்டுவந்தது.
இரண்டாம் உலகப் போரால் தரைமட்டமாக்கப்பட்ட ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் உட்கட்டுமானங்களை கட்டியெழுப்பவேண்டிய பாரிய தேவை உருவாகியது. இங்கு போரின் அழிவுகுறைந்த அமெரிக்காவினுடைய தலைமைத்துவம் எழுச்சியடைந்தது. அமெரிக்காவினுடைய பொருளாதார உதவிகளுடன் ஐரோப்பா மற்றும் ஐப்பான் போன்ற நாடுகள் மார்சல் திட்டத்தின் (ஆயசளாயடட Pடயn) அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டன. அவ்வாறான பெரும் முதலீடுகள்தான் உலகப்பொருளாதாரத்தில் கேள்வியை அதிகரித்தது. இரண்டாம் உலகப் போரின் பாரிய அழிவின் பின்புதான் உலகப் பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரமான வளர்ச்சி அதற்கடுத்த தசாப்தங்களில் தோன்றியது.
இங்கு மேலதிகமாக கூறக்கூடிய விடயம் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைவாசிக் காலப்பகுதியில் வந்த இரண்டு உலகப் போர்களின் அழிவுற்கூடாகத்தான் சொத்துசார்ந்த ஏற்றத்தாழ்வு குறைந்தது. அதாவது பெரும் போர்களின் அழிவுடன் மேல்வரக்கத்தின் சொத்துக்கள் அழிந்துபோன காரணத்தால்தான் ஏற்றத்தாழ்வு குறைந்தது. ஆனால், ஏற்கனவே கூறியது போல் இரண்டாம் உலகப் போரின் பின்பு படிப்படியாக முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ஏற்றத்தாழ்வும் பொருளாதாரத்தின் நெருக்கடித் தன்மையும் அதிகரித்தன.
சமகால பொருளாதார நெருக்கடி பொறி
தற்போதிருக்கும் நிலைமை என்னவென்றால் பொருளாதாரத்தில் கேள்வி, விநியோகம் மற்றும் நுகர்ச்சி தேங்கிப்போய் நிக்கிறது. இது பூலோக ரீதியாக ஒரு ஸ்திரமற்ற நிலையை உருவாக்குகிறது. மீண்டும் உலக பொருளாதாரத்தில் கேள்வியை அதிகரித்து முதலீடுகளையும் உற்பத்தியையும் ஊக்குவிப்பதற்கு சொத்துக்களது மீள் விநியோகம் தேவைப்படுகிறது. அதாவது, மீள்விநியோகம் ஊடாகத்தான் மக்களுடைய நுகர்ச்சியும் மற்றும் அரசாங்கங்களினுடைய முதலீடுகளும் சாத்தியப்படும். இவை இரண்டும் முதலாளித்துவ உற்பத்திக்கான கேள்வியை அதிகரிக்கும்.
ஆனால், அவ்வாறான மீள்விநியோகக் கொள்கைகளை முன்னெடுக்கக் கூடிய இடதுசாரி அரசியல் உலகெங்கும் பலவீனமாகத்தான் காணப்படுகிறது. இந்த நிலைமையில் பாசிசம் அல்லது போர்களை உருவாக்ககூடிய வலதுசாரி மற்றும் சர்வாதிகார அரசியலுக்கான வாய்ப்புகள் கூடியுள்ளன. ஆனால், அது மாபெரும் அழிவுகளுக்கான அபாயத்தை நோக்கியது. அல்லது ஒரு ஸ்திரமற்ற தேங்கி நிக்கும் பொருளாதாரத்தைதான் அடுத்த வருடங்களில் உருவாக்கும். இங்கு சர்வதேச முற்போக்கு சக்திகள் பொருளாதார நெருக்கடியை மட்டுமல்லாது அபாயகரமான அரசியல் மாற்றங்களையும் கவனத்திலெடுக்க வேண்டும். உலகெங்கும் மக்கள் மத்தியில் சமகால அரசியல் பொருளாதார நிலை சம்பந்தமான உரையாடலும் தேடலும் தேவைப்படுகிறது.
கலாநிதி அகிலன் கதிர்காமர்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்