பட மூலம், Johnkeellsfoundation
கொவிட்-19 தொற்று ஒரு மருத்துவ நெருக்கடியாக இருப்பினும் அது பலவித சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவ அனர்த்தம் வெறுமனே கிருமிகள் பரவி நோயை உருவாக்குவதற்கப்பால் பொருளாதார நெருக்கடியூடாக வறுமையை உருவாக்கி, போசாக்கின்மையை தோற்றுவித்து, நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகளுக்கு காரணியாகக் கூட அமையலாம்.
இவ்வாறான நெருக்கடி, முக்கியத்துவம் மிக்க பாலுணவு கொள்வனவில் எவ்வாறான தாக்கத்தை உருவாக்கும்? குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் பாலுணவில் தங்கியிருக்கும் எமது சமூகம் இந்த கொவிட்-19 நெருக்கடிக்கு முதலே போசாக்கின்மைக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி பொருட்களை குறைக்கும் பொழுது மேலும் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகலாம்.
பாலும் போசாக்கும்
2016ஆம் ஆண்டின் குடிசன சுகாதார மதிப்பீட்டின்படி ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் 17% தமது வயதுக்கேற்ற உயரம் அற்றவர்களாகவும், 15% உயரத்திற்கேற்ற உடல்நிறை குறைந்தவர்களாகவும் மற்றும் 21% வயதுக்கு குறைந்த உடல்நிறை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், இலங்கை தனிநபர் மொத்த தேசிய உற்பத்தியின் அடிப்படையில் “உயர்ந்த நடுத்தர” நாடாக உலக வங்கியால் 2019ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதாவது, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியை அதன் சனத்தொகையால் பிரிக்கும் பொழுது தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி 4,000 அமெரிக்க டொலர்களுக்கு மேலாக அமைந்திருப்பதையே குறிக்கிறது. இங்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறிகாட்டிகளான நிறை மற்றும் உயரம் போன்றவற்றில் குறைபாடுகள் இருப்பது எங்கள் சமூகத்தில் இருக்கும் பெரும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டும் வெட்கக்கேடான விடயமாகும்.
இது இவ்வாறு இருக்கையில் பொருளாதார நெருக்கடி வறுமையை தோற்றுவிக்குமாயின் மேற்கூறிய வகையிலான போசாக்குச் சார்ந்த பிரச்சினைகள் மேலும் அதிகமாகும். இதற்காகத்தான் கடந்த பல வருடங்களாக பால் உற்பத்தியில் தன்னிறைவு இருக்கவேண்டும் எனும் தேசிய கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், கடந்த வருடங்களில் அவற்றை நிறைவேற்ற முடியாத நிலைதான் இருந்தது.
அதற்கான காரணம் திறந்த பொருளாதார கொள்ளைகள் உள்வாங்கப்பட்ட பின்பு பல்நாட்டுக் கம்பனிகளின் ஆதிக்கம் மற்றும் பிரச்சாரங்களுக்கிணங்க இலங்கையில் பால்மாவை இறக்குமதி செய்து நுகர்ச்சி செய்யும் ஒரு கலாச்சாரம் உருவாகியமை. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம், பால்மா என்பது உடன் பாலிலும் பார்க்க குறைந்த போசாக்கினைக் கொண்டதும் மேலதிக இரசாயன பக்கவிளைவுகளை உள்ளடக்கியதுமாகும்.
பால்மா இறக்குமதியும் பாலின் தன்னிறைவும்
நிதியமைச்சினுடைய 2018ஆம் ஆண்டறிக்கையின்படி 332 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (ரூபா. 6,600 கோடி) பால் மற்றும் பாலுற்பத்திப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி பால்மாவாகும். அதன் அளவு 99 மில்லியன் கிலோகிராம். ஒரு கிலோகிராம் பால்மா உற்பத்தி செய்வதற்கு எட்டு லீற்றர் உடன் பால் தேவைப்படும். அந்தவகையில் பார்த்தால் இலங்கையில் ஆண்டுக்கு 792 மில்லியன் லீற்றருக்கு சமமான பால் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே நேரம் இலங்கைக்குள் உற்பத்தி செய்யப்படும் பாலின் தொகை வெறுமனே 422 மில்லியன் லீற்றர்கள் தான். அதாவது இலங்கை மக்களின் மொத்த நுகர்ச்சியில் 38% மான பாலே உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுகாதார அமைச்சின் முன்மொழிவு என்னவென்றால், நாளொன்றிற்கு ஒருவர் 200 மில்லிலீற்றர் பாலை உட்கொள்ள வேண்டும். அந்த கணக்கீட்டின்படி வட மாகாணத்தில் 230,000 லீற்றர் பாலை கொள்வனவு செய்ய வேண்டும். ஆனால், தற்போது வட மாகாணத்தில் இருக்கும் பால் உற்பத்தியின் அளவு 2018ஆம் ஆண்டுக்கான வட மாகாண சபையின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் 104,000 லீற்றர்கள் தான். அதில் முறையாக சேகரிக்கப்படும் பாலின் அளவு 76,000 லீற்றர்கள் மட்டுமே. ஆகவே, வட மாகாணத்தில் பாலின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் உண்டு.
2016ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீட்டுத்துறை வருமான மதிப்பீட்டின்படி ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக மாதாந்தம் ரூபா. 1,600 பால் தேவைக்காக செலவுசெய்கிறார்கள். இது ஒவ்வொரு வீட்டிற்குமான உணவுச்செலவில் 8.2% ஆகும். அதில் 70% பால்மாவிற்காக செலவு செய்யப்படுகிறது.
இதன் அடிப்படையில் வட மாகாணத்தில் ரூபா. 5 பில்லியன் (500 கோடி) பால் உணவு நுகர்வுக்காக செலவு செய்யப்படுகிறது. இதில் ரூபா. 3.5 பில்லியன் பால்மாவிற்குரியது. வட மாகாணத்தில் பயன்படுத்தப்படும் பால்மாவை உடன்பாலாகக் கணக்கிட்டால் ஒரு வருடத்திற்கு 34 மில்லியன் லீற்றர் உடன்பாலுக்கான கேள்வி உருவாகும். ஆகவே, இலங்கையில் பலவகையான இறக்குமதிகளும் குறைக்கப்படும் சந்தர்ப்பத்தில் பால்மாவின் இறக்குமதியும் குறைக்க அல்லது நிறுத்தப்படலாம். இங்கு கடந்த காலங்களில் பால்மாவை நுகர்வு செய்த வட மாகாணத்தில் உடன்பாலை விநியோகம் செய்வதற்கான ஒரு திட்டம் இருப்பின் அது ஆக்கபூர்வமானதாக இருக்கும்.
கூட்டுறவும் பாலின் உற்பத்தி மற்றும் விநியோகமும்
பாலின் உற்பத்தி வட மாகாணத்தில் அதிகரிக்க வேண்டிய நிலைமையில் வட மாகாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 39 கால்நடை வளர்போர் கூட்டுறவுச் சங்கங்கள் இதற்கான தீர்வை வழங்குவதற்கு முன்வரலாம். உண்மையில் உலகெங்கும் பால் உற்பத்தித் துறையில்தான் கூட்டுறவு வெற்றிகண்டுள்ளது. இதற்கான காரணம், கிராமப்புறங்களில் பல சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை சேகரித்து நகர்ப்புறங்களில் விநியோகிக்கும் செயற்பாடாகும். இங்கு இந்தியாவின் அமுல் பால் கூட்டுறவு அமைப்பின் பாரிய பெறுமதியதிகரிப்புத் திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்ட விநியோகத்திற்கான வலையமைப்பும் முன்னுதாரணங்களாக அமைகின்றது. அதேபோல் இலங்கையில் பால் அதிகார சபையின் (Milk Board) நீண்டகால வரலாற்றையும் கவனத்தில் கொள்ளலாம்.
வடக்கில் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்று ரீதியான செயற்பாட்டை எடுத்து பார்க்கும் போது, சிறு உற்பத்தியாளர்களுக்கான நிதி மற்றும் மூலப்பொருட்களை வழங்குவதற்கப்பால் ஒழுங்காகவும் நியாயமான விலையிலும் அவர்களிடமிருந்து பாலை வாங்கி அந்த பால் பழுதடைவதற்கு முன்பே மக்கள் மத்தியில் விநியோகித்தார்கள். காலப்போக்கில் பலவிதமான பெறுமதி அதிகரிப்புத் திட்டங்களை ஆரம்பித்து தயிர், நெய், யோகட், ஐஸ்கிறீம், யூஸ், பன்னீர் மற்றும் பால் ரொபி போன்ற பால்சார்ந்த உணவுகளையும் உற்பத்தி செய்ததன் ஊடாக பாலை சற்று நீண்ட நாட்கள் தக்கவைக்கக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான பெறுமதி அதிகரிப்பு முயற்சிகள் வட மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்பு குறைந்த அளவில்தான் இயங்குகின்றன. இந்த நிலைமையில்தான் நெஸ்லே போன்ற பல்நாட்டு கம்பனிகள் மற்றும் பெரிய தனியார் நிறுவனங்கள் வட மாகாணத்திற்கு வந்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை சேகரித்து பெறுமதி அதிகரிப்பை வேறு பிரதேசங்களில் செய்து மீண்டும் அவற்றை வட மாகாணத்தில் கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். இவ்வாறான கம்பனிகள் பெறுமதி அதிகரிப்பு திட்டங்களால் பெரிய இலாபத்தை பெற்றுக்கொள்கிறார்கள். அதாவது, வட மாகாண உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லீற்றர் பாலை கொள்வனவு செய்து, பின்னர் அதே இடங்களிலேயே இரண்டரை மடங்கு விலைக்கு ஒரு லீற்ரர் பாலுக்கு சமமான பால்சார்ந்த உணவுகளை விற்பனை செய்கிறார்கள். இந்த நிலைமையில் வட மாகாணத்தில் பால்சார்ந்த உணவு உற்பத்தி கைத்தொழில்சாலைகளில் வேலை வாய்ப்புகளும் குறைவாக இருக்கின்றன.
நடைமுறையில் பாலின் பெறுமதி அதிகரிப்புத் திட்டங்களுக்கான தேவைக்கு வேறு காரணங்களும் உண்டு. எல்லா உணவுப் பொருட்களையும் போல பாலின் நுகர்ச்சியும் பருவ மாற்றத்துடன் தொடர்புபட்டதாக இருக்கிறது. வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் மாரி காலத்தில் பால் அல்லது பால் சார்ந்த ஐஸ்கிரீம், யூஸ், யோகட் போன்றவற்றை நுகர்ச்சி செய்வது குறைவாக இருக்கும். ஆகவே, அந்தக் காலங்களில் பால் ரொபி, பன்னீர், நெய் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து உடன்தேவைகளுக்கோ அல்லது நீண்டகால தேவைகளுக்கோ பயன்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களுக்கூடாகத்தான் சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கூட்டுறவு சங்கங்கள் தொடர்ச்சியாக சேகரிக்கலாம்.
பாலுற்பத்தியின் விரிவுபடுத்தலும் வாழ்வாதார மேம்பாடும்
வட மாகாணத்தில் மக்களுடைய வாழ்வாதாரங்கள் நலிவடைந்திருக்கும் பட்சத்தில் ஒரு குடும்பம் எட்டு லீற்றர் பாலை உற்பத்தி செய்து விற்க முடிந்தால் அவர்களுக்கு ஒழுங்காக தினமும் 600 ரூபா வருமானம் கிடைக்கும். அது அவர்களுடைய உணவுப்பாதுகாப்பிற்கு பெரியளவில் உதவும். பால் உற்பத்தியாளர்களுக்கு தினமும் குறிப்பிட்டளவு வருமானம் கிடைத்து கொண்டிருப்பதால் கூட்டுறவு சங்கங்கள் இந்த நெருக்கடி காலங்களிலும் கூட அவர்களுக்கு கடன்களை வழங்கி தவணை தப்பாத விதத்தில் அறவீடுகளையும் செய்யக்கூடியதாக உள்ளது.
இலங்கையின் தேசிய கொள்கைகளில் உள்வாங்கப்பட்டிருக்கும் பால் உற்பத்தியின் தன்னிறைவை நோக்கி பல அரச நடவடிக்கைகளும் திட்டங்களும் தேவைப்படுகின்றன. வன்னிப் பகுதிகளில் மேய்ச்சல் காணிகள் வன பாதுகாப்பு திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டதால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. அரசாங்கம் இவ்வாறான மேய்ச்சல் காணிகளை அவசரமாக விடுவிப்பதுடன் மேலதிக மேய்ச்சல் காணிகளையும் உருவாக்க வேண்டும். மேலும் பால் உற்பத்தி, பெறுமதி அதிகரிப்பு மற்றும் விநியோகத்திற்கான அரச முதலீடுகளையும் செய்ய வேண்டும்.
அடுத்து கூட்டுறவு சங்கங்களை பொறுத்தவரையில் பால் சேகரிப்பிற்கும் விநியோகத்திற்குமான புதுத்திட்டங்களை அவசரமாக உருவாக்க வேண்டும். குறிப்பாக பாலை நேரடியாக வீடுகளுக்கு பெரியளவில் விநியோகித்து, எதிர்காலத்தில் இறக்குமதி தட்டுப்பாட்டால் நாளாந்தம் கொள்வனவு செய்யும் பால்மாவிற்கு ஒரு மாற்றுவழியை உருவாக்கமுடியும். இவ்வாறான செயற்பாட்டை கூட்டுறவு சங்கங்கள் முன்னெடுக்குமாக இருந்தால் கிராமப்புறங்களில் பால் உற்பத்திக்கான கேள்வியை அதிகரித்து படிப்படியாக பாலின் உற்பத்தியை உயர்த்தக்கூடியதாக இருக்கும். உதாரணமாக, காலையில் மட்டுமல்லாது மாலையிலும் பெரியளவில் பாலை சேகரித்து விநியோகப்படுத்த முடியும்.
வட மாகாணத்தில் பால் உற்பத்தியின் பலம் என்பது கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களின் இயக்கமும் சிறிய பால் உற்பத்தியாளர்களின் செயற்பாடுகளுமேயாகும். அவர்களுக்கூடாக இந்தத் திட்டங்களை அவசரமாக முன்கொண்டு போவதற்கூடாகத்தான் பால்சார்ந்த போசாக்கை அதிகரிக்க கூடியதாகவும் இருக்கும். இவ்வாறான சுகாதார, உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பார்வையும் எம் முன்னிருக்கும் கொவிட்-19 நெருக்கடியை கையாளும் முயற்சிகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.
கலாநிதி அகிலன் கதிர்காமர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்