தலைநகரத்தின் வீதிகளில் பயணிக்கின்ற நாம் நிச்சயம் தெருவோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை நிச்சயம் கடந்திருப்போம். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களது அதீத அலங்காரங்களையோ உடைகளையோ நகப்பூச்சு நிறங்களையோ பார்த்துக் கிண்டலடித்திருப்போம். குறைந்தபட்சம் நம்முடன் வருபவர்கள் அல்லது நண்பர்களிடம் அங்கே பாரு ஒரு …… நிற்கிறது என்று கூறியிருப்போம். சில வேளைகளில் சிலர் இப்படி எம்மிடம் சொல்லுவதையாவது கேட்டுமிருப்போம். தொழில்களை சாதியாக்கி அதனை சண்டைகள் வரை கொண்டு சென்ற நமக்கு அன்றிலிருந்தே பாலியல் தேவைக்கென குறிப்பிட்ட பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதும் நாமனைவரும் அறிந்த விடயமே. உழைப்பிற்கு அல்லது சேவைக்கு ஊதியம் பெறப்படின் அதனை தொழில் என வரையறுக்கும் நாம் ‘விபச்சாரம்’, ‘விபச்சாரி’ (இப் பெண்பால் சொல்லிற்கான ஆண்பால் சொல் என்ன என்பது கூட தெரியாது. ஆனால் பல நாடுகளில் ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்) என்கின்ற பதங்களைக் தவிர்த்து ‘பாலியல் தொழிலாளி’ என்கிறதான சொற்பதங்களை கையாள முயல்வதே நம் முதற்கண் நாகரீகம் என கருத வேண்டும். பாலியல் தொழிலை சட்டமாக்குவதற்கான விவாதங்கள் இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அதேவேளை பல நாடுகள் அதனை சட்டபூர்வமானதாக்கி பாலியல் தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தி வருகின்றன.”பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்படல் வேண்டுமா?” என்கின்ற வினாவை இம்முறை இரு பாலியல் தொழிலாளிகளிடம் கட்டுரைக்காக அணுகி கேட்டிருந்தோம்.
மல்வந்தி (வயது – 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது)
பதினெட்டு வயதில் திருமணமாகி இன்று நான் இரு குழந்தைகளுக்கு தாய். கடைசிக்குழந்தை வயிற்றிலிருக்கும் போது எனது கணவரை போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுபண்ணி விட்டார்கள். தற்போது வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குழந்தை பிறக்கும் வரை எம்மிடம் இருந்த நகைகள் பொருட்களை வைத்து காலந்தள்ளினோம். பின்னர் ஒன்றும் செய்ய என்னால் முடியவில்லை. பிள்ளைகளுக்கும் கணவரின் வழக்கு செலவிற்கும் நிறைய பணம் தேவைப்பட்டது. தெரிந்தவர்களும் பெரிதாக உதவி செய்ய முன்வரவில்லை. எனக்கும் படிப்பறிவு இல்லை. கணவர் முன்னர் வேலை செய்த முதலாளியிடம் உதவி கேட்டேன். சிறிதளவு பணம் தந்தார். மறுபடியும் உதவி செய்ய வேண்டும் எனின் தன்னுடைய பாலியல் தேவைக்கு உடன்படுவதாயின் தருவதாக சொன்னர். எனக்கும் ஆரம்பத்தில் தயக்கமாகவிருந்தாலும் குறைந்தபட்சம் என் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காகவது பணம் தேவையாயிருந்தது. தற்கொலை செய்யவும் முயற்சித்தேன். அதுவும் முடியவில்லை. இறுதியில் அந்த முதலாளியின் விருப்பத்திற்கு உடன்பட்டேன். ப்பணம் கிடைத்தது. அவர் மூலம் அவரது நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. அவர்களது பாலியல் தேவைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் மேலும் சம்பாதிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னர் என்னுடைய ஊரிலிருந்து இவ்வாறான தொடர்புகளை மேற்கொள்ள முடியவில்லை. பின்னர் தலைநகருக்கு வந்து வீதிகளில் நின்று ஆட்களைப் பிடிக்கிறேன். கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு தான் சம்பாதிக்கிறேன். ஊரிலிருந்து இத்தொழிலை செய்தால் என் இரு பெண் பிள்ளைகளினதும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் இங்கு வந்து போவது நல்லதெனப்படுகிறது. பிள்ளைகளை எங்கள் பக்கத்து வீட்டு ஆச்சியிடம் விட்டுவிட்டு காலையில் வேலைக்கு போவதாக கூறி இங்கு வருவேன். மாலையில் பெரும்பாலும் ஆறு மணிக்கு முன் வீடு சென்று விடுவேன். யாரும் சந்தேகப்படவில்லை. கொழும்பிலுள்ள கடையொன்றில் வேலை செய்வதாக தான் நினைக்கிறார்கள்.
கேள்வி: இது பற்றி உங்கள் கணவருக்கு தெரியுமா?
பதில்: (முதலில் சிரித்து பின்னர் கைகளை பிசைந்த படி கலங்கிய கண்களுடன்…) ஒருநாள் கணவரைச் சந்திக்க சிறை சென்றபோது சொல்லி விட்டேன். இரண்டு மூன்று தடவைகள் பார்க்க சென்றபோது கோபத்தில் பேசவில்லை… பிறகு சரி… குடும்பம் பற்றி கவலை இருந்திருந்தால் இப்படி குடு வேலைக்கு போய் மாட்டி எங்கள நடுத்தெருவில விட்டுட்டு போயிருப்பாரா?
கேள்வி: பாலியல் நோய்கள் மற்றும் தொற்றுக்கள் குறித்த வைத்திய பரிசோதனைகள் செய்வதுண்டா?
பதில்: இல்லை… அந்தப் பரிசோதனைகள் எங்கு செய்கின்றார்கள் என்று தெரியாது. அதிகளவு பணம் கொடுத்து செய்ய எங்களைப் போன்றவர்களிடம் பணம் இல்லை. (தனது கைகளைத் திருப்பிக்காட்டியபடி…) இப்படி ஏற்படுகின்ற காயங்களுக்கு மட்டும் மருந்து ஏதும் கட்டுவதுண்டு…
கேள்வி: காயங்களா?
பதில்: ம்ம்ம்ம்…..பாலியல் தொழிலுக்காக வருகிறவர்கள் சில நேரங்களில் எம்மை அடித்துத் துன்புறுத்துவதுமுண்டு. அப்படி வருகின்ற காயங்கள் தான் இவை…
கேள்வி: பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக்குவதில் உங்கள் கருத்து?
பதில்: அப்படி ஆக்கினால் நல்லம் தான். மருந்துகளை நாங்கள் எடுக்க முடியும்…. கொஞ்சம் மரியாதையும் கிடைக்கும்….
###
சாமிலி (வயது 41, பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்னுடைய தாயாரும் ஒரு பாலியல் தொழிலாளிதான். அப்பாதான் என் அம்மாவை வற்புறுத்தி இத்தொழிலுக்கு அனுப்பினார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவை எமக்கு தந்துவிட்டு அவர் மிச்சத்தினை வைத்து தொடர்ந்து குடிப்பார், சூதாடுவார். எனக்கு 16 வயதிருக்கும்போது அம்மாவுக்கு திடீரென்று கடுங்காய்ச்சல் வந்தது. நான்கு நாட்களில் இறந்துவிட்டார். பிறகு நானும் அம்மாவைப் போல் இத்தொழிலுக்கு வந்துவிட்டேன். என்னுடைய சகோதரர்கள் இருவரை படிப்பித்து, இன்று அவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஆனால், என்னை சகோதரி என்றே சொல்ல மாட்டார்கள். அவர்கள் பெயர் கெட்டுவிடும் என்று பயம்.
கேள்வி: பாலியல் நோய்கள் மற்றும் தொற்றுக்கள் குறித்த வைத்திய பரிசோதனைகள் செய்வதுண்டா?
பதில்: என் உள்ளுறுப்புகளில் ஒருவித தொற்று ஏற்பட்ட போது மருத்துவரிடம் சென்று மருந்தெடுத்துள்ளேன். இரத்தப்பரிசோதனை எல்லாம் செய்ததில்லை. இரு முறை கருக்கலைப்பும் செய்துள்ளேன். அதில் முதல் முறை அதிக இரத்தப்பெருக்காகி கடும் கஸ்டப்பட்டுவிட்டேன்.
கேள்வி: பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக்குவதில் உங்கள் கருத்து?
பதில்: நல்லம்தான், இப்போது நாம் வீதியில் நின்று இந்த தொழிலைச் செய்கின்றோம். யாருடனாவது விடுதிகளுக்கு போய் விட்டால் பொலிஸார் வந்து விடுவார்கள். எம்மிடம் பணம் கேட்பார்கள். கொடுக்காவிட்டால் வீதியில் வைத்து அடித்து துன்புறுத்தி ஏற்றிப்போவார்கள். அவர்களிடம் இருந்து விடுதலையாகி வருவதற்கு செலவளிப்பதை விட கேட்கும் போது கொடுத்து விட்டால் நல்லம் என்று தான் நினைத்துக்கொடுப்போம்.
தொழில்செய்யும் ஒரு பிள்ளையை வந்தவன் அடிச்சு கையில் சிகரெட்டால் சுட்டு காசையும் பறிச்சிட்டான். அந்தப்பிள்ளையுடன் நானும் பொலிஸுக்கு போய் முறையிட்டம். தொழில் செய்றவங்கள் இதெல்லாம் தாங்கத்தான் வேணும், எங்களுக்கு பணம் தரவேணும் இல்லாட்டி ஏதாவது செய்வம் என்று பொலிஸாரும் பணம் வாங்கிவிட்டார்கள். கடைசியில் நீதி கிடைக்கல, இருந்த பணமும் பொய்ட்டுது. நாம் இதனை செய்ய அனுமதி கிடைத்தால் இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.
இவ்வாறான பல மல்வந்திக்களும் சாமிலிக்கலும் எம் தெருக்களில் நின்றுகொண்டு தம் அன்றாட வாழ்விற்காக பாலியல் தொழில் செய்துகொண்டுதானிருக்கின்றார்கள். இப்பாலியல் தொழிலினை சட்டபூர்வமானதாக்குவதன் மூலம் மற்றும் நிர்வாக அலகாக ஸ்தாபிப்பதன் மூலம்
- பாதுகாப்பான உறவிற்கான பாலியல் கல்வியை வழங்கலாம்
- வயதெல்லைகளை நிர்ணயிப்பதன் மூலம் சிறுவர்கள் இத்தொழிலிற்கு நிர்ப்பந்திக்கப்படுவதை அல்லது கடத்தப்படுவதை (Child Trafficking) தடுக்கலாம்.
- சட்ட பூர்வமானதாக்கி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்கினால் பாலியல் தொழிலாளிகள் சித்திரவதைக்கு உள்ளாவதைத் தடுக்கலாம். குறைந்தபட்சம் சித்தரவதைக்குள்ளாவதைக் குறைக்கலாம்.
- அனுமதிக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பாலியல் தொற்றுக்கள் மற்றும் நோய்களைத் தடுக்கலாம் அல்லது வெகுவாகக் குறைக்கலாம்.
- இலங்கை போன்ற சுற்றுலாத்துறை சார் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் நாடுகள் இத்தகைய பாலியல் சார் தொழில்களை சட்டபூர்வமானதாக்குவதன் ஊடாக பாலியல் சார் வன்முறைகள், சித்திரவதைகளைக் குறைக்கவும் எதிர்காலத்தில் நிவர்த்திக்கவும் முடியும்.
- சட்டவிரோதமாக நடாத்தப்படுகின்ற இவ்வாறான விடயங்களில் தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி சுரண்டல்களை மேற்கொள்கின்றவர்களிடமிருந்து பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்க முடியும்.
பாலியல்சார் தேவைகளாயினும் சரி தொழிலாயினும் சரி காலங்காலமாக மாறாததொன்று. இதனை சட்டபூர்வமானதாக்கினாலும் இல்லாவிட்டாலும் இத்தொழில் குறைவடையவோ நிறுத்தப்படவோ போவதில்லை. இதில் ‘கலாசாரம்’ என்பதைக் காட்டி எதுவும் ஆகிவிடப்போவதுமில்லை. குறைந்தபட்சம் நாட்டு மக்களின் வாழ்தலுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கி கொடுப்பது அரசின் தலையாய கடமையல்லவா….
கேஷாயினி எட்மண்ட்