படம் | Asiantribune

‘தமிழ் தேசியம்’ என்னும் சுலோகத்தின் கீழ் இயங்கிவரும் அரசியல் தரப்பினருக்கு முன்னால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்தும் வறியவர்களாவே இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்தியா எடுத்திருந்த ஒரு வெளிவிவகார நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிலர் வெளியிட்டிருந்த அறிக்கைகள், அந்த வறுமை நிலையை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருந்தது. அமெரிக்க அனுசரனையின் கீழ் 2012 மற்றும் 2013இல் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்டிருந்த பிரேரணைகளை ஆதரித்து வாக்களித்திருந்த இந்தியா, இம்முறை கொண்டுவரப்பட்ட பிரேரணையின்போது வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தது. அதாவது, ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்னும் முடிவை எடுத்திருந்தது. அதுவரை இந்தியாவைப் புகழ்ந்து கொண்டிருந்த ஒருசிலர் உட்பட பல தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், இந்தியாவின் மேற்படி முடிவால் அதிருப்தியடைந்தனர். சிலர் இந்தியா தமிழர்களுக்கு மாபெரும் துரோகம் செய்துவிட்டதான பொருளில் அறிக்கைளை வெளியிட்டிருந்தனர். அவ்வாறானவர்களில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பும் ஒருவர். நாடுகளின் வெளிவிவகார கொள்கை தொடர்பில் தெளிவிருந்திருப்பின் இவ்வாறு ஆவேசப்பட வேண்டிய தேவையிருந்திருக்காது.

இந்தியா ஒரு விடயத்தை ஆதரிக்கும்போது மகிழ்சியடைவதும் பின்னர், ஒரு விடயத்தை தனது வெளிவிவகார நலன்களிலிருந்து எதிர்க்கும் அல்லது நடுநிலை வகிக்கும்போது ஆவேசப்படுவதும் அர்த்தமற்ற செயல்களாகும். இவ்வாறான அர்த்தமற்ற செயல்கள் அரை குறையான புரிதல்களிலிருந்தே பிறக்கின்றன. ஆனால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் முடிவு தொடர்பில் நிதானமான பார்வை வெளிப்படுத்திருந்ததாகவே நான் கருதுகிறேன். அவர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கியிருந்த விசேட நேர்காணலில், அந்த விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது, இந்தியாவின் முடிவு தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளித்தாலும் கூட, அதனை தமிழ் மக்களுக்கு சாதகமான ஒன்றாகவும் கூட பார்க்க முடியும் என்னும் பொருளில் சம்பந்தன் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருந்தார். இங்கு ஒரு விடயத்தை அழுத்தம் திருத்தமாக குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, இந்தியா முன்னைய இரு பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததும், தற்போது நடுநிலைமை வகித்திருப்பதும், இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவையல்ல. அது முற்றிலும் இந்தியாவின் தேசிய நலன்களில் இருந்து எடுக்கப்பட்ட முடிவாகும். ஒரு நாட்டின் வெளிவிவகார முடிவானது எப்பொழுதுமே குறித்த நாட்டின் நலன்களிலிருந்தே எடுக்கப்படும். இதுவே வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை. இது ஏன் தமிழ் தேசியவாதிகள் என்போருக்கு ஒருபோதும் விளங்குவதில்லை? விளங்கவில்லையா அல்லது விளங்கியும் விளங்காதவர்கள் போல் நடிக்கின்றனரா?

ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையானது மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்படும். ஒன்று அந்த நாட்டின் ‘மக்கள்’ (அடையாளம், விழுமியங்கள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் திறன்) இரண்டு, அந்த நாட்டின் வரலாறு (சூழ்நிலை, வாய்ப்புக்கள் மற்றும் கடந்த காலத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள்) மூன்று, அந்த நாட்டின் புவிப்பரப்பு (அமைவிடம், வளங்கள் மற்றும் அயலவர்கள்) பலம்பொருந்திய நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கை திட்டமிடலானது, மேற்படி மூன்று விடயங்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். இந்த அடிப்படையில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை எடுத்து நோக்கினால், தமிழ்ச் சூழலில் நிலவும் குழப்பங்கள் நீங்கும்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுப்பட்ட இந்தியாவின் வெளிவிவகார அனுகுமுறையை பனிப்போருக்கு முன் – பனிப்போருக்கு பின் – என்று பிரித்து நோக்கலாம். இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னரான இரு துருவ உலக ஒழுங்கில் இந்தியா சோவியத் முகாமுடன் இணைந்திருப்பதன் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் அணுகுமுறையைக் கைக்கொண்டிருந்தது. இந்தியா, சோவியத் முகாமுடன் இணைந்திருந்த காலத்தில்தான் இலங்கையின் உள் விவகாரத்தில் நேரடியாக தலையீடு செய்தது. இந்த விடயம் வெளித்தோற்றத்தில் ஈழத் தமிழர்களின் உரிமை தொடர்பான விடயமாக நோக்கப்பட்டாலும், உண்மை முற்றிலும் மாறானது. அன்றைய புவிசார் அரசியல் முரண்பாடுகளின் விளைவாகவே இந்தியாவின் நேரடியான தலையீடு நிகழ்ந்திருந்தது. தனது பிராந்திய அதிகார எல்லைக்குள்ளிருந்து விலகிச்செல்ல முற்பட்ட இலங்கைக்கு ஒரு பாடத்தை எடுப்பதும், அதன் மூலம் இப்பிராந்தியத்திலிருக்கும் ஏனைய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுப்பதுமே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. அன்றைய பனிப்போர் கால சூழலும் அதற்கு உகந்ததாக இருந்தது. ஆனால், 1991இல் சோவியத் முகாம் வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து, இந்தியா அதுவரையான தனது வெளிவிவகார அனுகுமுறையை முற்றிலுமாக மாற்றிக் கொண்டது. சோவியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உலகின் ஒரேயொரு வல்லரசாக மேற்கிளம்பிய அமெரிக்க அதிகார மையத்துடன் இணைந்திருப்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அணுகுமுறையை இந்தியா தெரிவு செய்தது.

இந்த பின்புலத்தில்தான் கிழக்கை உற்று நோக்குங்கள் (Look East) என்னும் நிலைப்பாட்டை இந்தியா தெரிவு செய்தது. அமெரிக்காவுடன் இணைந்திருந்த ஆசியாவின் நான்கு புலிகள் என்று வர்ணிக்கப்பட்ட ஹொங்கொங், சிங்கப்பூர், தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் அபாரா வளர்ச்சியை முன்னிறுத்தியே கிழக்கை உற்றுநோக்குங்கள் என்னும் கொள்கையை இந்தியா முன்னிறுத்தியிருந்தது. இந்தப் பின்னனியில் ஆசியாவில் சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்து பொருளாதரா நிலையில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடாக இந்தியாவே நோக்கப்படுகின்றது. இந்த பின்னணியில் நோக்கினால் தனக்கு முன்னால் விரிந்துகிடக்கும் பல்வேறு பிரச்சினைகளை கருத்தில்கொண்டுதான் இந்தியா தன்னுடைய வெளிவிவகார முடிவுகளை எடுக்கும். வெளிவிவகார முடிவுகள் எடுக்கப்படும்போது அதன் உடனடி – நீண்டகால தாக்கங்களை கருத்தில்கொண்டுதான் எந்தவொரு நாடும் தன்னுடைய முடிவுகளை அறிவிக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில் கொழும்புடன் அதிக இறுக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தன்னுடைய அயலுறவுசார்ந்த அணுகுமுறையில் எத்தகைய விளைவுகள் ஏற்படலாம் என்பதை கணித்தே முடிவுகளை எடுக்கும். இந்தியா கொழும்புடன் தொடர்ந்தும் கடுமையாக நடந்துகொண்டால், கொழும்பின் முன் சீனா மட்டுமே ஒரேயொரு தெரிவாகும் நிலைமை ஏற்படும். இலங்கையின் உடனடி அயல்நாடென்னும் வகையில் தன்னுடைய அருகில் இருக்கும் ஒரு நாட்டின் மீது தன்னுடைய பிடி அதிகம் தளர்ந்து செல்லாதவாறுதான் இந்தியாவால் முடிவுகளை எடுக்க முடியும். இந்த அடிப்படையில்தான் இந்தியா தற்போது எடுத்திருக்கும் முடிவை நோக்க வேண்டும். இன்று இந்தியா ஆதரிக்கவில்லையே என்று புலம்புவோர் முன்னர் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகளும் இந்திய ஆதரவினால்தான் வெற்றிபெற்றன என்பதை உணரத் தவறுகின்றனர். இந்தியா ஒரு கட்டம் வரைக்கும் அமெரிக்க அழுத்தத்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு அதற்கான பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறது. இந்தியா முன்னைய பிரேரணைகளின்போது நடுநிலை வகித்திருக்குமாயின் இந்த விடயத்தை தொடர்ந்தும் அமெரிக்காவினால் முன்னெடுக்க முடியாது போயிருக்கும். இந்தியா காலை வாரிவிட்டதே என்று மண்ணை வாரி இறைப்போர் ஒரு கேள்விக்கு பதலளிக்க வேண்டும் – இவ்வாறு இந்தியா விலகியதன் மூலம் தமிழர்களுக்கு அப்படியென்ன பாதிப்பு ஏற்பட்டுவிட்டது? ஒருவேளை இந்தியா வாக்களித்திருந்தால், 23 நாடுகள் ஆதரவளித்திருந்தன என்பதற்கு மாறாக 24 நாடுகள் என்று வந்திருக்கும். இதன் மூலம் தமிழர்களின் வாழ்வில் நிகழப்போகும் அதிசயங்களை பட்டியலிடும் ஆற்றல் உள்ளவர்கள் எவராவது இருக்கின்றனரா?

எனவே, இங்கு விடயங்களை உணர்ச்சிவசப்பட்டு நோக்காமல் அறிவுபூர்வமாக நோக்க வேண்டியதே கட்டாயம். இந்தியா தற்போது நடுநிலை வகித்திருப்பதன் ஊடாக தமிழர்கள் தொடர்பில் சில விடயங்களை கொழும்பிற்கு வலியுறுத்தக் கூடிய ஏதுநிலையை பெற்றிருக்கிறது. குறிப்பாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சில பரிந்துரைகளை வலியுறுத்துவதற்கான வாய்ப்பு முன்னரை காட்டிலும் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த இடத்தில் தமிழர்கள், கிடைத்திருக்கும் புதிய வாய்ப்பை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்றே யோசிக்க வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வடக்கு மாகாணசபை தொடர்பில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண சபையை திறம்பட இயக்குவதற்கான உதவியை இந்தியாவிடம் கோரலாம். வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தங்களின் விளைவாகவே நடந்தேறியது. கொழும்பு, இந்தியாவிற்கு எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்திருந்தது, அவற்றில் எவற்றையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தெற்கில் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் கூட அதனை இல்லாமலாக்கும் முயற்சிகளில் அரசு இறங்கியிருக்கவில்லை. அதனை இந்தியாவே தடுத்து நிறுத்தியிருந்தது. அத்திருத்தச் சட்டத்தின் கீழான வடக்கு மாகாணசபை தேர்தலை வைக்குமாறு இந்தியா அழுத்தியன் காரணமாகவே, இன்று அந்த மாகாணசபை கூட்டமைப்பின் வசமிருக்கிறது. இது இரண்டும் இந்தியாவினால் நிகழ்ந்த நன்மை என்பதை ஏன் தமிழர்கள் நினைத்துப் பார்க்கக் கூடாது? இதில் பிறிதொரு வாதமுண்டு. இந்தியா 13ஆவது திருத்தச் சட்டத்திற்குள் தமிழரின் அபிலாஷைகளை சுருக்க முற்படுவதாக சிலர் அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர். மந்திரக்கோல் கொண்டு சுவர்க்கத்தை சிருஸ்டிப்போம் என்றுரைக்கும் மாயாவிகளுடன் மோதும் ஆற்றல் இப்பத்தியாளரிடம் இல்லை. அவர்களை நம்பும் மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் உரைக்க இல்லை.

இந்தியா எடுத்திருக்கும் முடிவின் வாயிலாக இரண்டு முக்கிய உண்மைகள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்றன. ஒன்று, இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தமிழ் நாடு எந்தவகையிலும் செல்வாக்குச் செலுத்த இயலவில்லை. இரண்டு, இந்திய வெளிவிவகாரக் கொள்கை, இந்திய அரசியல்வாதிகளின் வசமில்லை. அது முற்றிலும் இந்திய அதிகாரிகள் வசமிருக்கிறது. புதுடில்லியைத் தளமாகக் கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகாரக் கொள்கை குழாமானது, மூன்று தளங்களில் இயங்குகின்றது. இந்திய பிரதமர் அலுவலகம், சக்தி வாய்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்புப் பேரவை, வெளிவிவகார அமைச்சு –  ஆகியவையே அந்த மூன்று தளங்களாகும். ஆனால், இவற்றில் அரசியல்வாதிகளின் செல்வாக்கு எதுவுமில்லை. ஒருவேளை இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் அரசியல்வாதிகள் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலைமை இருந்திருப்பின், ஆளும் காங்கிரஸ் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருக்கும்போது, இலங்கை விடயத்தில் நடுநிலைமை வகித்திருக்கும் முடிவை எடுத்திருக்காது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை, மாறாக இந்திய தேசிய நலன்களிலிருந்தே முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது; இனிமேலும் எடுக்கப்படும். இவற்றை தமிழ் தேசியவாதிகள் என்போர் தெளிவாக விளங்கிக் கொண்டால்தான் தமிழர்களுக்கு நன்மை.

யதீந்திரா

DSC_4908