பட மூலம், இணையம்
எமது அரசாங்கமுறை குறித்து நிலவி வரும் தப்பெண்ணம் எதிர்கால அதிகார அத்துமீறல்கள் மற்றும் அரசியல் யாப்பிற்கு எதிரான செயற்பாடுகள் என்பவற்றை நோக்கிய முதலாவது படியாக இருந்து வர முடியும்.
இலங்கை 2019 நவம்பர் 16 ஆம் திகதி ஒரு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யவுள்ளது. புதிய ஜனாதிபதி இம்முறை எந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்படுகின்றாரோ அந்தப் பதவியின் அதிகாரங்கள் மற்றும் கருமங்கள் என்பவற்றின் அடிப்படையில் அது ஒரு புதிய பதவியாக இருந்து வரப்போகின்றது. தற்போதைய ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ வகித்து வரும் பதவிகளை ஒத்தவையாக இனி வரவிருக்கும் ஜனாதிபதி பதவியோ, பிரதமர் பதவியோ இருந்து வரப்போவதில்லை.
அதற்கான காரணம், 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றி வைக்கப்பட்ட அரசியல் யாப்புக்கான 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஒரு சில ஏற்பாடுகளாகும். இந்த ஏற்பாடுகளின்படி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு இருந்த ஒரு சில அதிகாரங்கள் கூட அடுத்து தெரிவுசெய்யப்படவிருக்கும் ஜனாதிபதி இல்லாமல் போகும்.
ஆனால், ஒரு சில நிபுணர்கள் வாதாடுவதற்கு முயற்சித்து வருவதைப் போல, அது ஜனாதிபதி பதவியை, 1972 அரசியல் யாப்பின் கீழ் இருந்து வந்த ஜனாதிபதி பதவியைப் போன்ற வெறுமனே ஒரு சடங்கு ரீதியான அல்லது வைபவ ரீதியான ஜனாதிபதி பதவியாக ஆக்க மாட்டாது. ஏனெனில், ஜனாதிபதி தொடர்ந்தும் ஒட்டுமொத்த நாட்டு மக்களினாலும், அவர்களது வாக்குகளினாலும் நேரடியாக தெரிவு செய்யப்படவிருப்பதுடன், நிறைவேற்று பிரிவிற்குள் இருக்கும் முதன்மையான ஒரு சில அரசியல் யாப்பு ரீதியான கருமங்களை அவர் தன்வசம் வைத்திருப்பார். ஆனால், இதுவரை காலமும் ஜனாதிபதி பதவியுடன் சம்பந்தப்பட்டிருந்த ஒரு சில முக்கியமான அதிகாரங்கள் மற்றும் கருமங்கள் என்பன புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு கிடைக்கமாட்டாது என்பதே இதன் பொருளாகும். அதாவது, 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தை அடுத்து ஏற்கனவே அமுலுக்கு வந்திருக்கும் வரையறைகள் இது தொடர்பாக செல்லுபடியாகும்.
19ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களின் செயல்பரப்பு தொடர்பாக அடிப்படையான சில மாற்றங்களை எடுத்து வந்துள்ளது என்ற விடயம் பொதுவாக யாவரும் அறிந்த விடயமாகும். எனினும், துல்லியமாக அந்த மாற்றங்கள் எவை என்பன குறித்தும், அவை எடுத்துவரக்கூடிய பிள்விளைவுகள் குறித்தும் இன்னமும் பெருமளவுக்கு ஒரு குழப்ப நிலை நிலவி வருகின்றது. இலங்கையின் ஜனாதிபதி பதவி, முன்னர் இருந்து வந்ததைப் போல சர்வ அதிகாரங்கள் கொண்ட ஒரு பதவியாக இனிமேல் இருந்து வரப்போவதில்லை என்ற விடயத்தை குறிப்பாக பல அரசியல்வாதிகள் உணர்ந்திருக்கவில்லை போல் தெரிகின்றது. நாட்டில் 2018 அக்டோபர்/ டிசம்பர் காலப்பிரிவின் போது இடம்பெற்ற அரசியல் யாப்பு நெருக்கடி, 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தம், 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்ற விடயத்தை அதி உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட அறிந்திருக்கவில்லை என்பதனை காட்டுகின்றது. இந்த விளக்கமற்ற நிலை, அடுத்த தேர்தலின் பின்னர் இன்னொரு அரசியல் யாப்பு நெருக்கடி தோன்றுவதற்கான ஒரு காரணமாக இருந்து வர முடியாது. ஒரு புதிய நெருக்கடியை நாடு இனி எந்த விதத்திலும் தாங்கிக் கொள்ள முடியாது என்ற விடயத்தை பொருளியல் வல்லுனர்கள் மீண்டும் மீண்டும் ஆணித்தரமாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இந்த நவம்பர் மாதம் தெரிவு செய்யப்படவிருக்கும் ஜனாதிபதிக்கு கிடைக்காதிருக்கும் – எந்த விதத்திலும் கிடைக்காத – ஒரு சில அதிகாரங்கள் மற்றும் கருமங்கள் என்பவற்றை எடுத்து விளக்குவதற்கு இங்கு ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. பொது வாசகரை குழப்பத்தில் ஆழ்த்துவதை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகார கட்டமைப்புக்கள் தொடர்பான நுணுக்கமான குறிப்புக்களை இங்கு நான் முன்வைக்கப்போவதில்லை. அதேபோல, ஜனாதிபதியின் கருமங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களையும் முன்வைக்கப் போவதில்லை.
அதற்குப் பதிலாக, 19ஆவது திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறித்த பிரதான சிறப்பம்சங்கள் மற்றும் கோட்பாட்டுச் சட்டகம் என்பன குறித்த ஒரு விவரணத்தை நான் இங்கு முன்வைக்கின்றேன். அதேவேளையில், ஜனாதிபதி முறையில் காணப்படும் சிக்கலான தன்மைகளை பெருமளவுக்கு எளிமைப்படுத்திக் காட்டவும் நான் முயற்சிக்கவில்லை.
நவம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் பிரதான நிறுவன ரீதியான பண்புக்கூறுகள்
நிலையான ஐந்தாண்டு பதவிக் காலத்துடன் கூடிய ஜனாதிபதி ஒருவர் நேரடியாக தெரிவு செய்யப்படுவார். ஜனாதிபதி தனது முதலாவது பதவிக்காலத்தின் போது, அந்தப் பதவிக்காலம் தொடங்கி நான்கரை வருட காலத்தின் பின்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடிய தற்றுணிபு அதிகாரத்தை கொண்டுள்ளார். ஒருவர் ஜனாதிபதி பதவியை இரு பதவிக் காலங்கள் தொடர்பாக மட்டுமே வகிக்க முடியும் என்ற வரையறை உள்ளது
ஒட்டுமொத்த நாட்டிலிருந்தும் தனிப்பட்ட ஒரு பணிப்பாணையைப் பெற்றுக் கொண்டிருக்கும் தெரிவு செய்யப்பட்ட ஓர் உறுப்பினராக ஜனாதிபதி மட்டுமே இருந்து வருகின்றார். ஜனாதிபதி ஒருவர் தனது அரசியல் யாப்பு ரீதியான கருமங்களை மேற்கொண்டு வரும் விதத்தின் அடிப்படையில் கணிசமான அளவிலான அதிகாரம் மற்றும் சட்டபூர்வத் தன்மை என்பவற்றின் மூலாதாரமாக இப்பணிப்பானை இருந்து வரும்.
ஜனாதிபதி அரச தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும், முப்படைகளின் பிரதம தளபதியாகவும் இருந்து வருவார். இவை வெறுமனே சடங்கு ரீதியான வகிபங்குகளாக இருந்து வரவில்லை. ஏனென்றால், நிறைவேற்றுத் தலைவர் என்ற முறையிலும், அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஜனாதிபதி அமைச்சரவையின் ஓர் உறுப்பினராகவும், அதன் தலைவராகவும் இருந்து வருகின்றார்.
ஜனாதிபதி மக்களின் இறைமை தொடர்பான நிறைவேற்று அதிகாரத்தை அனுபவித்து வருவதுடன், இலங்கையின் பாதுகாப்பு அந்த அதிகாரத்தின் ஒரு பாகமாக குறிப்பாக குறிப்பிடப்படுகின்றது. இந்த அதிகாரம் பாதுகாப்பு, இராணுவம், உளவுச் சேவைகள் என்பவற்றிலும் – சட்ட அமுலாக்கல் விவகாரங்களிலும் கூட – ஜனாதிபதிக்கு கணிசமான அளவிலான அதிகாரத்தை வழங்க முடியும்.
அமைச்சரவை செயலாளர், பிரதமரின் செயலாளர், அதேபோல அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்கள் ஆகியோரை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஜனாதிபதி தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார். அமைச்சரவை செயலாளரைத் தவிர, ஏனைய அனைத்து நிர்வாகத் தலைவர்களும் பிரதமரின் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரின் பணிப்புரைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டியுள்ளது. எவ்வாறிருந்தபோதிலும், அவர்களை நியமனம் செய்யும் அதிகாரம் முழுமையாக ஜனாதிபதியின் கைகளிலிருந்து வரும் விடயத்தை இங்கு நாங்கள் அலட்சியம் செய்துவிட முடியாது.
இறுதியாக, ஜனாதிபதி செயலகத்தின் பாரியளவிலான வளங்கள் மற்றும் உபகரணத் தொகுதிகள் என்பவற்றுக்கு ஜனாதிபதியே முழுமையாக பொறுப்பாக இருந்து வருகின்றார். அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் என்பவற்றின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டாலேயொழிய, ஜனாதிபதி செயலகம் ஜனாதிபதியின் முறைசாராத அதிகாரத்தை எடுத்துக் காட்டுவதற்கான மிகவும் விரிவான ஒரு மூலாதாரமாகவும், கருவியாகவும் இருந்து வருகின்றது.
இத்தகைய முறைசார்ந்த வளங்கள் மற்றும் முறைசாராத அதிகாரம் என்பவற்றின் பின்புலத்தில், 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் எடுத்து வந்திருக்கும் வரையறைகளை நாங்கள் சீர்தூக்கிப் பார்த்தல் வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவை
இது அநேகமாக 19ஆவது திருத்தத்தின் நன்கு அறியப்பட்ட அம்சமாக இருந்து வருகின்றது. முதன்மையான அரசியல் யாப்பு ரீதியான அலுவலகங்களுக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் செயன்முறையிலிருந்து அரசியலை களைவதன் ஊடாக நல்லாட்சியை சாதித்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், பொதுத்துறை நியமனங்கள் தொடர்பாக அரசியலமைப்பு பேரவையை அறிமுகம் செய்து வைப்பதன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் கணிசமான அளவில் தடுக்கப்பட்டுள்ளன. இது இரு வழிகளில் இடம்பெறுகின்றது: ஒன்றில் ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளின் பேரில் நியமனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது அல்லது அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்கு அமைவாக நியமனங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
தேர்தல்கள், பகிரங்க சேவை, பொலிஸ், அரசாங்க கணக்காய்வு, மனித உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழல், பகிர்ந்தளிக்கப்பட்ட நிதி அதிகாரம், தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயம் செய்தல் மற்றும் அரசாங்கத்திற்கான கொள்வனவு போன்ற விடயப் பரப்புக்களை மேற்பார்வை செய்வதற்கென சுயாதீனமான ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த சுயாதீனமான அமைப்புக்களுக்கான நியமனங்களை அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே மேற்கொள்ள முடியும். ஜனாதிபதி 14 நாட்களுக்குள் அத்தகைய பரிந்துரைகளுக்கு செவிமடுக்கத் தவறினால், அத்தகைய நியமனங்கள் சட்டத்தின் செயற்பாட்டின் மூலம் இடம்பெற்றிருப்பதாக கருதப்படும்.
அரசின் ஏனைய சிரேஷ்ட அரசியலமைப்பு அலுவலகங்களுக்கான நியமனங்களை (மற்றும் பதில் நியமனங்களையும் கூட) அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே ஜனாதிபதியினால் மேற்கொள்ள முடியும். இது பிரதம நீதியரசர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் நீதிபதிகள், நீதிசேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ் மாஅதிபர், ஒம்புட்ஸ்மன் மற்றும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஆகிய பதவிகளை உள்ளடக்குகின்றது. நீதிபதிகளின் நியமனத்தின் போது அரசியலமைப்பு பேரவை பிரதம நீதியரசரின் அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்து வருகின்றது.
எனவே, இந்தப் பரந்த துறைகளில் ஜனாதிபதியினால் இனிமேலும் தனது தற்றுணிபின் பேரில் செயற்பட முடியாது. அரசியமைப்பு பேரவை சபாநாயகரின் தலைமையில் செயற்படுவதுடன், அது பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படும் அரசியல்வாதிகளல்லாத நன்கு கீர்த்திவாய்ந்த மூன்று நபர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை
19ஆவது திருத்தம் அரசியல் யாப்பில் ஒரு மாற்றத்தை எடுத்து வந்து, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைவடையச் செய்த மிக முக்கியமான ஒரு வழிமுறை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்குள் பிரதமரின் நிலையை பலப்படுத்தியமையாகும். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கியமான மாற்றங்கள் முன்னர் ஜனாதிபதி அநேகமாக வரையறையற்ற விதத்தில் அனுபவித்து வந்த அதிகாரங்களை நீக்கியுள்ளன அல்லது குறைத்துள்ளன.
முதலாவதாக, பிரதமரை நியமனம் செய்தல் மற்றும் பதவிநீக்கம் செய்தல் தொடர்பான ஜனாபதியின் ஏகபோகமான அதிகாரம் நீக்கப்பட்டதன் மூலம் பிரதமரின் நிலையை அது பலப்படுத்தியது. அதாவது, நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றிருக்கும் உறுப்பினர் ஒருவர் மட்டுமே பிரதமராக நியமனம் செய்யப்பட முடியும் என்ற கோட்பாட்டை 19ஆவது திருத்தம் பலப்படுத்தியது. இப்பொழுது பிரதமர், ஒட்டுமொத்தமாக அரசாங்கம் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் சந்தர்ப்பத்தில், அவருடைய மரணம் நிகழும் சந்தர்ப்பத்தில், அவர் ராஜினாமா செய்யும் சந்தர்ப்பத்தில் அல்லது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராக இல்லாத நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே வெளிப்படையாக பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியும்.
இரண்டாவதாக, அமைச்சரவை மற்றும் ஏனைய அமைச்சர்கள் ஆகியோரை நியமனம் செய்யும் சந்தர்ப்பத்திலும், பதவிநீக்கம் செய்யும் சந்தர்ப்பத்திலும் இப்பொழுது ஜனாதிபதி பிரதமரின் ஆலோனையின் பேரில் செயற்படுவது அவசியமாகும். எவ்வாறிருப்பினும், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதிலும், அமைச்சர்களுக்கு விடயங்களை பகிர்ந்தளிப்பதிலும் மட்டுமே ஜனாதிபதி பிரதமருடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியுள்ளது. அவர் இந்த விதத்தில் நிறைவேற்று ஜனாதிபதி அமைப்புக்குள் தொடர்ந்தும் முக்கியமான ஒரு வகிபங்கினை வகித்து வருவார். எவ்வாறிருப்பினும், இதன் பொருள் நிறைவேற்று அதிகாரம் என்பது இனிமேலும் ஜனாதிபதியினால் மட்டுமே பிரத்தியேகமாக வைக்கப்பட்டு, தன்னிச்சையான விதத்தில் பிரயோகிக்கப்பட்டு வரும் ஒரு அதிகாரமாக இருந்துவர மாட்டாது என்பதாகும். அதாவது, பிரதமரும், அமைச்சரவையும் தனக்கு கீழ்ப்பணிந்து நடக்க வேண்டும் என்ற விதத்தில் ஜனாதிபதி இனிமேலும் தன்னிச்சையான விதத்தில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. ஆனால், நிறைவேற்று அதிகாரம் இப்பொழுது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் மத்தியில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
ஜனாதிபதி சிறிசேன தொடர்பாக மட்டும் பிரயோகிக்கப்படத்தக்க விசேட ஏற்பாடுகள் அவர் பதவி விலகுவதுடன் செல்லுப்படியற்றதாகும் நிலையில் மற்றொரு முக்கியமான வரையறை தோன்றுகின்றது. பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்களை ஜனாதிபதி சிறிசேன ஜனாதிபதியாக இருந்து வரும் வரையில் வகிப்பதற்கான ஏற்பாடு 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் பதவியை விட்டுச்செல்லும் பொழுது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மட்டுமே அமைச்சவை அமைச்சராக ஏனைய அமைச்சு அலுவலகங்களுக்கு நியமனம் செய்யப்பட முடியும். எனவே, நவம்பர் 16ஆம் திகதிக்குப் பின்னர் பதவியேற்கவிருக்கும் புதிய ஜனாதிபதி தனக்குத் தானே அமைச்சுக்களை ஒதுக்கிக் கொள்ளும் அதிகாரத்தை கொண்டிருக்க மாட்டார்.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றம்
பிரதமர் இப்பொழுது நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டிருக்க வேண்டிய தேவை இருந்து வருவதுடன், ஜனாதிபதியின் விருப்பத்தை பார்க்கிலும், பிரதமரின் பதவிக் காலத்தை நிர்ணயிக்கும் ஒரு விடயமாக அது இப்பொழுது இருந்து வருகின்றது. 19ஆவது திருத்தம் நாடாளுமன்றம் தொடர்பாக ஜனாதிபதியின் அதிகாரத்தை வரையறை செய்திருக்கும் மிக முக்கியமான ஒரு வழிமுறை, நாடாளுமன்றத்தை கலைக்கும் அவருடைய அதிகாரத்தை நீக்கியமையாகும்.
இப்பொழுது நாடாளுமன்ற பதவிக் காலத்தின் கடைசி ஆறு மாத காலப் பிரிவின் போது மட்டுமே ஜனாதிபதி தனது முழுமையான தற்றுணிபின் பேரில் நாடாமன்றத்தை கலைக்க முடியும். நாடாளுமன்றத்தின் முதல் நான்கரை வருட காலப்பிரிவின் போது, 2/3 பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானத்தின் மூலம் முன்னரே கலைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றமே ஒரு வேண்டுக்கோளை விடுக்கும் சந்தர்ப்பத்தில் மட்டுமே அது கலைக்கப்பட முடியும்.
உண்மையிலேயே, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை தோல்வியடையச் செய்வதன் மூலம் அல்லது வரவு செலவுத்திட்டத்தை தோல்வியடையச் செய்வதன் மூலம் அரசாங்கத்தை நீக்குவதற்கான அதிகாரத்தை இப்பொழுது நாடாளுமன்றம் தன்வசம் கொண்டுள்ளது. ஆனால், இந்த விடயங்களின் போது ஜனாதிபதியிலும் பார்க்க, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோரே பாதிக்கப்படுகின்றார்கள். ஜனாதிபதி தொடர்ந்து பொறுப்பாக இருந்து வருகின்றார். ஆனால், நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டியவராக அவர் இருந்து வரவில்லை. ஆனால், குற்றப் பிரேரணையின் நடைமுறைகளை தூண்டக்கூடிய விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அவர் நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டியவராக இருந்து வரவில்லை.
நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரமும் எத்தகைய வரையறைகளும் இல்லாமல் அதே விதத்தில் இருந்து வருகின்றது. ஆனால், இது மறைமுகமான வழிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (உதாரணமாக, செலவொதுக்கு பிரேரணைகளை நிறைவேற்றும் பொருட்டு நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய தேவை உள்ளது). மேலும், நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்து, அங்கு உரை நிகழ்த்துவதற்கான அதிகாரத்தையும், நாடாளுமன்றத்திற்குச் செய்திகளை அனுப்பி வைக்கக்கூடிய அதிகாரத்தையும் ஜனாதிபதி தக்கவைத்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் நீதிமன்றங்கள்
பதவி வகிக்கும் காலத்தின் போது தனது பதவி வழியிலான செயல்பாடுகள் மற்றும் தவறுகள் தொடர்பாகவும், அதேபோல தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் தவறுகள் தொடர்பாகவும் பொதுவான தண்டனை விலக்குரிமையை ஜனாதிபதி தொடர்ந்து அனுபவித்து வருகின்றார். எவ்வாறிருப்பினும், (போர் மற்றும் சமாதானப் பிரகடனங்கள் தவிர) ஜனாதிபதியின் பதவி வழியிலான செயல்பாடுகள் அல்லது தவறுகள் என்பவற்றுக்கு சவால் விடுக்கும் விதத்தில சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும் அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளமுடியும்.
முடிவுக் குறிப்புக்கள்
நவம்பர் 16ஆம் திகதிக்கு பிறகு பதவியேற்கவிருக்கும் புதிய ஜனாதிபதியின் பதவி தொடர்பான இந்த விளக்கம் எமக்கு பல முக்கியமான விடயங்களை தெரிவிக்கின்றது. முதலாவதாக, அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி பதவி வெறுமனே வைபவ ரீதியான ஒரு நிறுவனமாக மாற்றமடையும் என்ற விதத்தில் அரசியல் யாப்புப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் முறைசார்ந்த சட்டரீதியான வாதங்கள் பொருத்தமற்றவையாகும்.
இரண்டாவதாக, இதற்கு மாறான விதத்தில், புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி 19வது திருத்தத்துக்கு முன்னர் நிலவி வந்த ஜனாதிபதி பதவியின் இயல்பில் நடந்து கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்புக்கள் சட்டம் குறித்த அறியாமை காரணமாகவே தோன்றுகின்றன. குறிப்பாக, ஜனாதிபதி தேர்தல் எந்த விதத்திலும் தற்போதை பிரதமரின் பதவிக்காலத்தின் தொடர்ச்சியின் மீது ஒரு சட்டரீதியான தாக்கத்தை எடுத்து வரமாட்டாது. பிரதமர் பல்வேறு வழிகளில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட முடியும்; ஆனால், ஜனாதிபதியினால் வெறுமனே மேற்கொள்ளப்படும் ஒரு பதவிநீக்கத்தின் ஊடாக அது இடம்பெறாது.
மூன்றாவதாக, புதிய ஜனாதிபதி 2020 பெப்ரவரி மாதம் வரையில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாத நிலையிலும் இருந்து வருவார் (2020 பெப்ரவரி மாதத்திலேயே 2015 ஆகஸ்ட் மாதத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அதன் ஆயுள்காலத்தின் கடைசி ஆறு மாதங்களுக்குள் பிரவேசிக்கின்றது). அதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றமே 2/3 பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஒரு பிரேரணையை நிறைவேற்றினால் மட்டுமே ஜனாதிபதியினால் அவ்வாறு செய்ய முடியும்.
நான்காவதாக, நிறைவேற்று ஜனாதிபதி அமைப்புக்குள்ளேயும், அதேபோல நிறைவேற்று மற்றும் நாடாளுமன்றம் ஆகிய தரப்புக்களுக்கிடையிலும் உறவுகளை நிர்வகிக்கும் ஒரு புதிய நிறுவன ரீதியான சட்டகம் இப்பொழுது இருந்து வருகின்றது. இது புதிய ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் விரிவான அரசியல் நடவடிக்கையொன்றை தடுக்காதிருக்கும் அதே வேளையில், குழப்பநிலையை (நெருக்கடி மற்றும் பெரும் குளறுபடி நிலையை) தவிர்த்துக் கொள்வது நிர்ணயகரமானதாக இருந்து வரும்.
நவம்பர் 16ஆம் திகதிக்குப் பின்னர் பதவி வகிப்பவர்கள் அரசியலின் பொருத்தமான சட்டரீதியான வரம்புகளை நன்றாக புரிந்துகொள்வது அவசியமாகும்.
இறுதியாகவும் மற்றும் பொதுவாகவும் 19ஆவது திருத்தம் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் கீழ் செயல்பட்டு வந்த அரசாங்கத்தின் கட்டமைப்பில் குறிப்பிட்ட சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்ற விடயம் தெரியவரும். அது 1978 அரசியல் யாப்பின் மிக முக்கியமான ஒரு கூறாக இருந்து வரும் அரை ஜனாதிபதி மாதிரி அரசாங்கத்தை இல்லாதொழிக்கவில்லை.
அதன் பிரகாரம், ஜனாதிபதி குறிப்பிட்ட சில கருமங்களை நிறைவேற்றும் பொருட்டு நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார். பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகிய தரப்புக்களால் நிறைவேற்றிவைக்கப்படவிருக்கும் குறிப்பிட்ட சில கருமங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கும். வினைத்திறன் மிக்க அரசாங்க நிர்வாகம் மற்றும் வினைத்திறன் மிக்க பொறுப்புக் கூறல் நிலை என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு மூன்று நிறுவனங்களும் அரசியல் யாப்பின் கீழ் தமக்கே உரிய தனித்துவமான வகிபங்குகளை வகிக்கின்றன.
எமது அரசாங்க அமைப்பு முறையைத் தவறாகப் புரிந்து கொள்வது, எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அரசியல் யாப்புக்கு முரணான செயல்கள் என்பவற்றை நோக்கி எடுத்து வைக்கப்படும் முதல் படியாக இருந்துவரும். அது விளக்கமின்மை மற்றும் விரக்தி என்பவற்றின் காரணமாகத் தோன்ற முடியும். புதிய ஜனாதிபதியும், அவரைச் சூழ இருப்பவர்களும் அவர் எதனைச் செய்வதற்கென தெரிவு செய்யப்பட்டிருக்கிறாரோ அதனை அவரால் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வர வேண்டிய ஒரு நிலை தோன்றும்.
கலாநிதி அசங்க வெலிகல
The Powers and Functions of the New President என்ற தலைப்பில் DailyFT பத்திரிகையில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.