படம் | Panoramio

அண்மையில் நடைபெற்ற யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்தலில் வாக்கு நிர்ணயச் சதி ஒன்று நடைபெற்றுள்ளது. இது பாரியதொரு குற்றமாகும். சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் நடைபெறும் ஆட்ட நிர்ணயச் சதியைக் காட்டிலும் இந்த வாக்கு நிர்ணயச் சதி மோசமானது.

– அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளது யாழ். பல்கலையின் கல்விசார் நேர்மைக்கான உப குழு.

இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கல்விக்கு முக்கியத்துவமளிக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றும் ஒரு சமூகமாக எமது சமூகம் அறியப்பெற்றிருந்தது. சற்றே பின்தங்கிப் போயிருந்த எம் சமூக கல்விநிலையை உயர்த்துவது குறித்து, சமூகத்தில் அக்கறைகொண்ட அனைவரும் இன்று சிந்தித்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் செயற்பாட்டின் விளைவால் நாம் மீண்டும் கல்வி நிலையில் மேலெழுவோம் என்னும் நம்பிக்கையை அண்மைய உயர்தரப் பரீட்சை முடிவுகள் தந்திருந்தன.

வட மாகாணத்திலுள்ள உயர்கல்வி நிலையங்களில் முதன்மையானது யாழ். பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் சமூகத்தின் முதுகெலும்பாக, வழிகாட்டியாகத் திகழவேண்டிய ஒன்று.

அதிதகைமை கொண்ட கல்வியாளர்களால் நிர்வகிக்கப்படுவதற்கான சுயாதிபத்தியம் கொண்ட இப்பல்கலைக்கழகம் பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அரச பல்கலைக்கழகம். எனவே, பல்கலைக்கழக நிர்வாகிகள் தமது நடவடிக்கைகளுக்கான பொறுப்புக் கூறல் செயற்பாட்டிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. “பல்கலைக்கழகம் யாருடைய தனிப்பட்ட சொத்துமல்ல, அது மக்களின் பணத்தில் இயங்குகின்றது” என்ற உண்மையை காலத்துக்குக் காலம் நிர்வாகிகளுக்கு நினைவூட்ட வேண்டியிருப்பது கவலையானதொரு விடயமே.

30 வருட கால ஆயுதப் போராட்டத்தின் முடிவுடன் உலகிற்கான கதவு வட பகுதிக்கும் திறக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகம் துடிப்புடன் செயற்படுமாயின் உலகின் பல பாகங்களிலும் உள்ள எம் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலமையாளர்களின் உதவியுடன் பல்கலைக்கழகத்தின் தரத்தினை உயர்த்துவதுடன் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பங்காற்றிட முடியும். ஆனாலும், பல்கலைக்கழகத்தை தம் தனிப்பட்ட சொத்தாகக் கருதும் சிலர் தரத்திற்கும், வளர்ச்சிக்குமான கதவுகளையும் யன்னல்களையும் சாத்திக்கொள்வதிலேயே ஆர்வமாக உள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்தலில் எமது சமூகத்தின் உயர்கல்வி நிலையங்களின் தலையாய நிறுவனமாகிய பல்கலைக்கழகத்தின் உயர் நிர்வாகியை தெரிவு செய்வதற்கு பேரவை உறுப்பினர்கள் சமூகத்தின் சார்பாக வாக்களிக்கின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்கும் பேரவை உறுப்பினர்கள் தமது தெரிவு குறித்தான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. வேட்பாளர்களின் தகைமைகளை ஆராய்ந்து அதிதகைமை கொண்ட வேட்பாளரை/வேட்பாளர்களை கண்டறியும் பக்குவமுள்ள ஒருவரே பேரவை உறுப்பினராக இருக்கத் தகுதியுள்ளவர். அண்மையில் நடைபெற்ற துணைவேந்தர் தேர்தலில் பெரும்பான்மையான பேரவை உறுப்பினர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்காது தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமையவே தமது வாக்குகளை அளித்துள்ளனர். தேர்தல் முடிவுகளே இதற்கான சான்றாக அமைகின்றது. பேரவை உறுப்பினர்களிடமும் சமூகத்திலும் பெரிதாக அறியப்படாத பல்கலைக்கழக வளர்ச்சி பற்றியோ, சமூகமேம்பாடு பற்றியோ ஏற்கத்தக்க ஆர்வம் காட்டியிராத ஒருவர் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் நன்மைக்கு முதலிடம் அளித்தே வாக்களிப்பதாக பேரவை உறுப்பினர்கள் கூறுவார்களாயின் தேர்தலுக்கு முன் அறியப்பட்டிராத, பல்கலைக்கழக வளர்ச்சி பற்றியோ, சமூக மேம்பாடு பற்றியோ ஏற்கத்தக்க ஆர்வம் காட்டியிராத ஒருவருக்கு அவர்கள் கூட்டாக இரண்டாவது பெரும்பான்மை வாக்குகளை வழங்கியதன் காரணத்தை கூறியே தீரவேண்டும்.

இது அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்தலில் வாக்கு நிர்ணயச் சதி ஒன்று நடைபெற்றுள்ளது என்பதையே காட்டுகிறது. இது பாரியதொரு குற்றமாகும். சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் நடைபெறும் ஆட்ட நிர்ணயச் சதியைக் காட்டிலும் இந்த வாக்கு நிர்ணயச் சதி மோசமானது. கற்பித்தலுடன் ஆராய்ச்சிகளிலும் ஈடுபடும் கல்வியாளர்களிடம் அடிப்படையாக இருக்கவேண்டிய பண்புகள் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை என்பனவாகும். உண்மையாகவும் நேர்மையாகவும் நம்பகத்தன்மையுடன் வாழ்ந்த எமது ஆசிரியர்களான இளைப்பாறிய பல கல்வியார்கள் இன்றும் சமூகத்தால் மதிக்கப்படுகின்றனர். பதவி மற்றும் அதிகார ஆசைகளுக்காக உண்மை, நேர்மை, நம்பகத்தன்மை போன்றவற்றையெல்லாம் தொலைத்துவிட்டு நிற்கும் எமது தற்போதைய நிர்வாகிகள் பல்கலைக்கழகத்திற்கோ அல்லது எமது சமூகத்திற்கோ நன்மை எதுவும் செய்யமாட்டார்கள்.

நம்பகத்தன்மை இழந்துவிட்ட, இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் மட்டுமன்றி வழங்கப்படும் பட்டங்களும் நம்பகத்தன்மையை இழக்கின்றன.

ஒரு பல்கலைக்கழகத்தின் தரம் அதன் ஆசிரியர்களின் தரத்தில் பெரிதும் தங்கியுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்கள் அரசியல் மயப்படுத்தப்படுவது ஆபத்தான பின்விளைவுகளுக்கு வழிகோலும். பதவிக்கும் அதிகாரத்திற்கும் ஆட்பட்டு பொதுநல நோக்கம் துறந்த நிர்வாகிகளான எமது கல்வியாளர்களால் கல்விசாரா ஊழியர்கள் நியமனம் மாத்திரமன்றி கல்விசார் ஊழியர் நியமனமும் அரசியல்மயப்படுத்தப்படுகின்றது. அரசியல் நியமனங்கள் எனும் போர்வையில் நிர்வாகிகள் தமக்குத் தேவையானவர்களுக்கும் நியமனம் வழங்குகின்றனர். இவ்வாறு நியமனம் பெற்ற தகுதியற்ற கல்வியாளர்களினால் பயிற்றுவிக்கப்படும் பட்டதாரிகளே எமது பாடசாலைகளில் ஆசிரிய நியமனங்களைப் பெறுவர்.

தற்போதைய மற்றும் எதிர்கால கல்வி சூழல் எதிர்நோக்கியுள்ள அபாயத்தை முன்னறிவிப்பது ஆசிரியர்களாகிய எமது கடமை. “எனது குழந்தை யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கின்றார்” எனப் பெருமையுடன் ஒவ்வொருவரும் கூறத்தக்க வகையில் நாமெல்லோரும் கூட்டாகச் சேர்ந்து இப்பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தப் பாடுபடுதல் வேண்டும்.

எமது பல்கலைக்கழகத்தை தமது சுயநலன்களிற்காகப் பயன்படுத்துவோருக்கு இப்பல்கலைக்கழகத்தின் தரத்தில் அக்கறையில்லை. மேற்படி நபர்களின் சுயநல நடவடிக்கைகளினால் பாதிக்கப்படப்போவது சாதாரண அப்பாவி மக்களே.

பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்தலில் நடந்தேறிய நகைப்புக்கிடமான பொம்மை வேட்பாளரின் அறிமுகம் முதலிய முறைகேடுகள் அபாய சமிக்ஞைகளாகும். ஊழல்களால் பயனடைவோர் அதை எவ்வகையிலும் எவ்விலை கொடுத்தும் தொடர்வதற்கே முயல்வர்.

எமது சமூகத்தின் குழந்தைகளின் எதிர்காலம் இப்பல்கலைக்கழகத்தின் தரத்திலேயே தங்கியுள்ளது. எனவே, மக்களே விழித்துக்கொள்ளுங்கள். எமது சொத்தாகிய இப்பல்கலைக்கழகம் பேராசை கொண்ட சுயநலமிகளின் தனிச் சொத்தாக மாற இடமளியாதீர். பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக சீரமைக்கப்படவேண்டும். இல்லாவிடின் எமது கல்வியின் எதிர்காலம் இருண்டதாகிப் போய்விடும்.

கல்விசார் நேர்மைக்கான உபகுழு
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்