படம் | News.ebru

எங்களில் பலர் கடலோனியாவினைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாகும். வருகின்ற நவம்பர் மாதம் 9ஆம் திகதி கடலோனியாவின் சமஷ்டி அரசு தனது மக்கள் மத்தியில் சர்வசன வாக்கெடுப்பினை நடத்துவதற்கான பிரகடனத்தை வெளியிட்டிருக்கின்றது. அதற்கான கேள்விகள் இவைதான். “கடலோனியா ஒரு அரசாக இருப்பதை விரும்புகிறீர்களா? ஆம் எனில், அது ஒரு சுதந்திரமான அரசாக இருப்பதை விரும்புகிறீர்களா?” என்பனவாகும். எதிர்பார்த்தபடி ஸ்பெயினின் மத்திய அரசு இந்த சர்வசன வாக்கெடுப்பிற்குத் தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. அதன் பிரதம மந்திரி மரியானோ ரஜொய் இது நடக்க முடியாது என்பதற்கு இரு காரணங்களை முன்வைத்துள்ளார். முதலாவதாக, இப்போதைய ஸ்பானிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு மட்டுமே சர்வசன வாக்கெடுப்பினைக் கோர முடியும். அடுத்ததாக, இந்த அரசியலமைப்புச் சட்டம் ஸ்பெயின் நாட்டினை பிரிக்க முடியாத ஓரங்கமாகவும், அதன் இறைமை ஸ்பானிய மக்கள் அனைவரையும் சார்ந்து இருப்பதாகவும் கருதுவதனால், ஏதாவதொரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் அது சகல மக்கள் மத்தியிலும் நடத்தப்படவேண்டும். இவர் இந்த வாதத்தினை முன்வைத்திருந்தும், அவற்றைச் சட்டை செய்யாதவர்களாக கடலோனியாவின் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கூட்டாகச் சேர்ந்து சர்வசன வாக்கெடுப்பிற்கான பிரகடனத்தினை வெளியிட்டிருக்கின்றனர்.

என்ன வகையான சட்டங்கள் இருந்தாலும், கடலன் மக்கள் தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையினை அவை ஒருபோதும் தடை செய்ய முடியாது என்பது இவர்களின் வாதமாக இருக்கின்றது. அந்த வகையில் கடலன் மக்களின் வரலாறு எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடியதாகும்.

11ஆம் நூற்றாண்டில் முன்னாள் அரகன் இராச்சியம் சிதறிக்கிடந்த கடலன் சமூக மக்களை ஒன்று சேர்த்து தனது ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும்போதுதான் கடலன் என்கின்ற சுய அடையாளம் அம்மக்களுக்கு ஏற்பட்டது எனலாம். அதன் பின்பு இந்த இராச்சியம் மத்தியதரைக் கடலின் முக்கிய துறைமுகங்களைத் தன் வசம் கைப்பற்றியபோது அதன் மூலம் வர்த்தக நிலையங்களின் மீது செல்வாக்கு செலுத்துவதனால் குறிப்பாக கடலன் மக்கள் பெரும் செல்வந்தர்களாயினர். இந்த செல்வத்தின் மூலம் கலை கலாசார அபிவிருத்தி அம்மக்கள் மத்தியில் எற்பட்டு கடலன் மொழி எழுத்து வடிவில் உருவாகியது. நாளடைவில் இலத்தீன் மொழியை கைவிட்டு கடலன் மொழியை ஆட்சி மொழியாக இப்பிராந்தியம் கைக்கொண்டது. இக்காலத்தில் அரகனின் ஆட்சியாளர்களைக்கட்டிப்போடுமளவிற்கு செல்வாக்குச் செலுத்துபவர்களாக கடலன் மக்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மக்கள் கடின உழைப்பாளிகளாக இருந்த காரணத்தினால், காலப்போக்கில் இந்த வர்த்தக நிலையங்கள் கைவிட்டுப் போனாலும்கூட, மறுமலர்ச்சிக்குப் பின்பு உருவாகிய கைத்தொழிற் புரட்சியின்போது கடலோனியாப் பிராந்தியம் தொழில்மயப்படுத்தப்பட்டது. 1700களில் அரகன் இராச்சியம் கஸ்டில் இராச்சியத்துடன் சேர்ந்து ஸ்பெயின் என்கின்ற நாடு உருவானபோது கடலோனியா ஸ்பெயினின் ஓரங்கமாகியது. ஸ்பெயினின் ஏனைய பிரதேசங்கள் விவசாயப் பிரதேசங்களாக இருந்தமையினால் கடலோனியத் தொழிற்றுறையின் சந்தையாக அவை இருந்தன. இந்தக் காலகட்டத்தின்போது கடலன் மக்களின் தேசிய இயக்கம் உருவாகியிருந்தும் பொருளாதாரக் காரணிகளினால் அது வளாச்சி காணவில்லை. அக்காலத்தில் ஸ்பெயின் நாட்டுடன் இணைந்திருப்பது இலாபகரமாக அவர்களின் தொழிலதிபர்களினால் கருதப்பட்டது.

இந்நிலை, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்திலும் மாற்றடையத் தொடங்கியது. கடலன் மக்களின் சட்டங்களை மாற்றி அவற்றை ஸ்பெயினின் பொதுச் சட்டங்களின் கீழ் கொண்டுவர முயன்றதே இந்த முரண்பாடுகள் எழுந்ததற்குக் காரணமாகும். மேலும், கடலன் மொழி பேசுபவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர் என்பதும் குறைபாடுகளாக சுட்டிக் காட்டப்பட்டன. அதன் பின்பு ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தின்போது இப்பிரிவு மேலும் வலுவடைந்தது. அப்போது ஜெனரல் பிராங்கோவிற்கு எதிராக கடலன் மக்களும் தமது படைகள் கொண்டு போர்தொடுத்தனர். இப்போர் தோல்வியில் முடிவடைந்தபோது அவர்களின் தலைவரான கொம்பனிஸ் தனது படைகளுடன் பிரான்ஸுக்கு ஓடித்தப்பினார். ஆயினும், பிராங்கோ அரசுக்கும் ஹிட்லர் அரசுக்கும் இடையில் நட்பின் காரணமாக பிரான்ஸ் ஜேர்மனியின் கைகளில் 1940ஆம் ஆண்டில் விழவே, கொம்பனிஸ் ஸ்பெயினுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார். அங்கு அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பின்பு பகிரங்கமாகக் கொலை செய்யப்பட்டார். இறக்கும்போது அவர் ‘சுதந்திர கடலோனியா!’ எனக் கோஷமிட்டு இறந்தார். இந்நிகழ்ச்சி கடலன் மக்களின் தேசிய எழச்சி பெறுவதற்கு முக்கிய காரணமாயிற்று. ஆயினும், அது வெளிப்படுவதற்கு ஜெனரல் பிராங்கோ 1975ஆம் அண்டு இறக்கும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

1978இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஸ்பெயினில் கொண்டுவரப்பட்ட பின்பு கடலோனியாவிற்கு சுயாதீன சமூகம் (Autonomous Community) என்கின்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இதன் கீழ் 23 வருடங்கள் ஆட்சி செய்தாலும்கூட அம்மக்களுக்கு கொடுக்கப்பட்ட அரசியல் அதிகாரம் போதாது என்பதும், கடலன் மொழிக்கு சம அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்பதும், அவர்களுடைய பிரத்தியேக வரலாறுகள் பொதுவாக ஸ்பெயின் மக்களினால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் பெருங்குறைகளாக நீண்டன. 2006ஆம் ஆண்டு கடலோனியாவிற்கும் ஏனைய சுயாதீன சமூகங்களுக்கும் அரசியல் அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும் என்பதற்கான சர்வசன வாக்கெடுப்பு  நடத்தப்பட்டபோது கிட்டத்தட்ட 73 விதமான மக்கள் அதற்கு ஆதரவளித்தனர். இந்த சீர்திருத்தங்களும் அவர்களுக்குப் போதவில்லை. அவர்கள் ஒரு சுவாரசியமான நடவடிக்கையில் இறங்கினர். அது என்னவென்றால் கடலோனியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊர்கள் 2009இற்கும் 2011இற்கும் இடையில் தாமே தனித் தனியாக தம்மை சுதந்திர கடலன் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தும் உத்தியோகபூர்வமற்ற சர்வசன வாக்கெடுப்புக்களை நடத்தின. இந்த வாக்கெடுப்பு ஒவ்வொன்றும் தனிநாட்டுக்கு ஆதரவாக அமோக வெற்றி பெற்றது. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னரும் அவை “ஸ்பெயினின் சட்டங்கள் ஸ்பானிய மக்களுக்கே பொருந்தும் என்பதனால், கடலோனிய நாடாளுமன்றம் புதிய தலைமைத்துவத்தினையும் சட்டங்களையும் எதிர்நோக்கி நிற்கின்றோம்” என அறிவித்தல் விடுத்தன. இது மக்களை அணி திரட்டவும், சுதந்திர பிரகடனத்தைப் பற்றிய அரசியல் விழிப்புணர்வினை அவர்களுக்கு வழங்குவதற்கான முக்கிய நடவடிக்கையானது. இதன் பயனாக, 2013 ஜனவரியில் கடலோனியாவின் நாடாளுமன்றம் கடலன் மக்களின் இறைமைக்கும் அவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமைக்கும் ஆதரவான பிரகடத்தை அங்கீகரித்தது. ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் இதனை சட்டபூர்வமில்லாத பிரகடனமாக அவ்வருடம் மே மாதம் தீர்மானித்ததாயினும், தொடர்ந்த நடவடிக்கைகளின் பயனான மக்கள் எழுச்சி பின் தள்ள கடலன் அரசியல் தலைவர்கள் சர்வசன வாக்கெடுப்பினை நோக்கி உறுதியுடன் செல்லுகின்றனர்.

இதன் தொடர்பில் கடலோனியாவின் தலைவர் அர்டுர் மாஸ் ஸ்பெயின் நாட்டுக்கெதிராக கடலன் மக்களின் குறைகள் என்னவென்பதை விளக்கி 50 பக்க அறிக்கையொன்றினை வெளியிட்டார். இதில், கடலோனியாவிற்கு கடனாளியாக பல வருடங்களாக மத்திய அரசு இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். தமது மக்களுக்கு கிட்டத்தட்ட 9.3 பில்லியன் யூரோக்கள் தருமதியாக இருக்கின்றதென எனக் கூறியுள்ளார். இவை தவிர, ஸ்பெயின் நாடாளுமன்றம் தான் விரும்பியபடி சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்ததால் கடலன் பிரதேசங்கள் பொருளாதார ரீதியாக எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் இதில் கணிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், இப்பிரதேசங்களுக்கு வந்துசேர வேண்டிய முதலீடுகள் மத்திய அரசினால் தடைசெய்யப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறு, தமது குறைகளை பொருளாதார மொழியில் தெரிவித்தது இன்னுமொரு புதுமையாகும். இதன் மூலம் ஒரு சிறுபான்மை மக்களின் குறைகளுக்கு உருவமும் அளவும் கொடுக்க (concretize) முடிந்திருக்கின்றது.

17ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையான காலமானது முக்கியமாக நவீன தேசிய அரசுகள் தோற்றம் பெற்ற வரலாறாகும். இப்போக்கு முதலில் ஐரோப்பாவில் ஆரம்பித்து பின் அந்நாடுகளின் காலனித்துவ நாடுகளில் தொடர்ந்தன. இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பல நாடுகள் புதிய அரசு வடிவம் பெற்றது அனுபவ ரீதியாகக் காணப்பட்டிருந்தும், அரசு, நாடு என்பன ஏதோ கடவுளால் விதிக்கப்பட்ட கட்டமைப்புக்களாக மக்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டன. ஆயினும், 20ஆம் நூற்றாண்டின் கடைசியிப் பகுதியில் சோவியத் யூனியனின் உடைவும் பின்பு 21ஆம் நூற்றாண்டில் ஜனநாயகம், தேசியம் போன்ற புதிய கோட்பாடுகளும் ஒற்றையாட்சி செய்யும் அரசுகளின் நியாயப்பாடுகளைத் தகர்க்க ஆரம்பித்திருக்கின்றன. இதற்கான மக்கள் போராட்டங்களும் ஆங்காங்கே முடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் கடலன் மக்களின் போராட்டங்கள் ஒரு விதத்தில் பார்த்தால் புதுமையாகவும் தரப்பட்ட சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வண்ணமும் அமைந்திருப்பதைக் காணலாம். அவர்கள் வெறுமனே தமது தலைவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அல்லது மத்திய அரசு இடம்கொடுக்கவில்லையே என அண்ணாந்து பார்த்துக் கிடக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு ஊரும் உத்தியோகபூர்வமற்ற முறையிலாவது சர்வசன வாக்கெடுப்பினை நடத்தியது இந்த அணுகுமுறைக்கு சாட்சி பகருகின்றது. இவ்வகையான புத்தாக்கமான தீர்வுகளை நாமும் கண்டு பிடிக்கலாமே?

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.