பட மூலம், இணையம்

நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதனை தெரிவித்திருக்கும் நிலையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டவுடனேயே பதவிப் பிரமாணம் செய்து கொள்வார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கென ஏற்கனவே பல வேட்பாளர்கள் முன் வந்துள்ளார்கள். 35 வயதை அடைந்திருப்பதுடன், வேறு நாட்டின் ஒரு பிரஜை அல்லாத, மக்களால் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிராத, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராக தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியை இழக்காத எந்தவொரு வாக்காளரும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றினால் ஒரு வேட்பாளராக நியமனம் செய்யப்படும் பொழுது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஆவதற்கான தகுதியை பெற்றுக் கொள்கிறார் அல்லது நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் எந்தவொரு  கட்சியினாலும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக நிறுத்தப்பட முடியும்.

2020 தொடக்கம் நாடாளுமன்ற அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வரக்கூடிய பல வேட்பாளர்கள் ஏற்கனவே தமது கொள்கைள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் சொகுசு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற கூட்டங்களில் அந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். வேறு சிலர் அதற்கென சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தக் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன நாட்டின் ஆட்சியை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான, நிர்ணயகரமான விடயங்களாக இருந்துவரக் கூடிய பொருளாதார, சமூக, தேசிய பாதுகாப்பு மற்றும் அதனை ஒத்த ஏனைய பிரச்சினைகள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒரு வேட்பாளர் தான் அறிமுகம் செய்து வைக்க விரும்பும் புதிய அரசியல் யாப்பின் ஒரு பிரதியையும் கூட வெளியிட்டுள்ளார். எமது செய்திப் பத்திரிகைகள் இந்த உத்தேசக் கொள்கைள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை விமர்சனபூர்வமாக பகுப்பாய்வு செய்வதற்கென வழமையாக பல பத்திகளை ஒதுக்கி வருகின்றன. 19ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி ஆட்சிமுறைக்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சி முறையை எடுத்து வரும் செயன்முறை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் தினத்தில் முழுமை அடைய முடியும் என்ற விடயத்தை இதுவரையில் எவரும் உணர்ந்து கொண்டிருப்பதாக தெரியவில்லை. அந்தத் திகதியன்றும், அதன் பின்னரும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் அரசியல் கட்சியின் கொள்கைள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன நாடெங்கிலும் அமுல் செய்யப்படும்.

அடுத்து வரும் ஜனாதிபதி ஓர் அமைச்சராகவும் இருந்துவர முடியாது

அரசாங்கத்தை நெறிப்படுத்தி, கட்டுப்படுத்தும் பொறுப்பு அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அசியல் யாப்பின் 42ஆவது உறுப்புரை குறிப்பிடுகின்றது. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு கூட்டாக பொறுப்புக்கூற வேண்டியதாகவும், பதிலளிக்க வேண்டியதாகவும் இருந்து வருகின்றது. உறுப்புரை 45 இன் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஓர் அமைச்சராக நியமனம் செய்யப்பட முடியும். ஜனாதிபதி சிறிசேன தானே பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அவரை இயலச் செய்த இந்த 45 ஆவது உறுப்புரை, 19ஆவது திருத்தத்தின் முன்னெப்பொழுதும் இருந்திராத ஒரு நிலைமாறு கால ஏற்பாடாக இருந்து வருகின்றது. அந்த நிலைமாறு கால ஏற்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதிப் பதவியை விட்டு விலகுவதுடன் இணைந்த விதத்தில் செயலற்றுப் போய்விடும். அடுத்து வரும் ஜனாதிபதி அரசாங்கத்தின் ஏதேனும் ஒரு அமைச்சை அல்லது ஒரு விடயத்தை அல்லது ஒரு கருமத்தை தனக்கென ஒதுக்கிக் கொள்வதற்கான உரித்தினைக் கொண்டிருக்கவில்லை. பாதுகாப்பு தொடர்பான விடயத்தைக் கூட அவர் தனக்கென ஒதுக்கிக் கொள்ள முடியாது.

அடுத்த ஜனாதிபதியின் வகிபங்கு 

அப்படியானால், அடுத்து வரவிருக்கும் இலங்கை ஜனாதிபதியின் வகிபங்கு என்ன? அவர் அரசின் தலைவராகவும், நிறைவேற்றுத் துறையின் (அதாவது அரசாங்கத்தின்) தலைவராகவும், ஆயுதப் படைகளின் பிரதம தளபதியாகவும் இருந்து வருவார். இது 1972ஆம் ஆண்டின்  அரசியல் யாப்பின் கீழ் ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவ  அவர்கள் வகித்து வந்த அதே வகிபங்காகவே இருந்து வருகின்றது. உண்மையிலேயே 1946ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் கீழும் கூட நிறைவேற்று அதிகாரம் மகா தேசாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் – சேர் ஹென்றி மொன்க் – மேசன் மூர், சோல்பரி பிரபு மற்றும் சேர் ஒலிவர் குணதிலக ஆகிய அனைவரும் – அனைத்து அமைச்சரவை பத்திரங்களினதும் பிரதிகளை வாரா வாரம் பெற்று வந்ததுடன்,  வழமையாக இராணி இல்லத்தில் புதன்கிழமை இடம்பெறும் பகல் போசன விருந்தின் போது அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து பிரதம மந்திரி அவர்களுக்கு அறிவித்து வந்தார். மகா தேசாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரேயொரு சந்தர்ப்பம், 1958ஆம் ஆண்டு அவசரகால நிலையின் போது சேர் ஒலிவர் குணதிலக அமைச்சரவையில் பங்கேற்ற நிகழ்வாகும்.

19ஆவது திருத்தம் அலட்சியம் செய்திருப்பதாக தோன்றும் 42 ஆவது உறுப்புரையின் பிரகாரம், அடுத்து வரும் ஜனாதிபதி தொடர்ந்தும் “அமைச்சரவை அமைச்சர்களின் தலைவராக” இருந்து வருவார். இதன் பொருள் அநேகமாக சபாநாயகர் நாடாளுமன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதைப் போலவே ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை தாங்க முடியும் என்பதாகும். அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பாக தனது அபிப்பிராயங்களை முன்வைக்கவும், தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு விடயம் குறித்த ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்கவும் அவரால் முடியும். ஆனால், குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான தனது ‘கொள்கையை’ அவரால் அமுல் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதானது, குறிப்பிட்ட விடயம் ஒப்படைக்கப்பட்டு, உரிய விதத்தில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் அமைச்சரவை அமைச்சரின் பிராந்தியங்களுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதாக இருந்துவர முடியும்.

ஆலோசனையின் பேரில் மட்டுமே ஜனாதிபதி செயற்படுகின்றார்

19ஆவது திருத்தம் ஏற்கனவே –

i. ஜனாதிபதி அனுபவித்து வந்த (எந்தவொரு செயல் தொடர்பாகவும் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியாது என்ற) விடுபாட்டுரிமையை நீக்கியுள்ளது.

ii. மீயுயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள், சட்ட மா அதிபர் மற்றும் ஏனைய மூத்த அதிகாரிகள் ஆகியோரை நியமனம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி அனுபவித்த வந்த முற்று முழுதான அதிகாரத்தை நீக்கியுள்ளது; அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அவரால் அவ்வாறு செய்ய முடியும்.

iii. சுயாதீன ஆணைகுழுக்களை நியமனம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி அனுபவித்து வந்த முற்று முழுதான அதிகாரத்தை நீக்கியுள்ளது. அரசியல் அமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அவர் அவ்வாறு செய்ய முடியும்.

iv. எந்தவொரு நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி அனுபவித்து வந்த முற்றுமுழுதான அதிகாரத்தை நீக்கியுள்ளது.  ஜனாதிபதியின் பதவிக் காலத்தின் இறுதி ஆறு மாத காலப் பிரிவு தவிர, ஏனைய காலப் பிரிவுகளின் போது நாடாளுமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே அவர் அவ்வாறு செய்ய முடியும்.

v. அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஆகியோரை நியமனம் செய்யும் விடயத்தில் ஜனாதிபதி அனுபவித்து வந்த முற்றுமுழுதான அதிகாரத்தை நீக்கியுள்ளது. பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அவர் அந்த நியமனங்களை மேற்கொள்ள முடியும்.

vi. ஓர் அமைச்சரை அல்லது பிரதி அமைச்சரை பதவி நீக்கம்  செய்வது தொடர்பாக ஜனாதிபதி அனுபவித்து வந்த முற்று முழுதான அதிகாரத்தை நீக்கியுள்ளது. பிரதமரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அவர் அத்தகைய பதவி நீக்கங்களை மேற்கொள்ள முடியும்.

vii.      பிரதமரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக ஜனாதிபதி அனுபவித்து வந்த முற்று முழுதான அதிகாரத்தை நீக்கியுள்ளது.

அரச தலைவர் ஒருவரின் சம்பிரதாயபூர்வமான அதிகாரங்கள்

ஜனாதிபதி உண்மையிலேயே அரச தலைவர் ஒருவருக்குரிய சம்பிரதாயபூர்வமான உரிமைகளை தொடர்ந்து அனுபவித்து வருவார். ஜனாதிபதி ஒரு போரை பிரகடனம் செய்ய முடியும்; எவ்வாறிருப்பினும், போரில் ஈடுபடுவதற்குத் தேவையான ஆள் பலம் மற்றும் ஆயுதங்கள் என்பவற்றை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினாலே ஒழிய, அவருடைய போர் பிரகடனம் வினைத்திறன் மிக்கதாகவோ அல்லது செயல்வடிவம் கொடுக்கக் கூடியதாகவோ இருந்துவர மாட்டாது. அவர் ஒரு வெளிநாட்டுத் தூதுவரை நியமனம் செய்ய முடியும். ஆனால், அவரால் அவ்விதம் நியமனம் செய்யப்படும் ஆள், எந்த நாட்டிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளாரோ அந்த அரசிலிருந்து வெளிநாட்டு அமைச்சர் ‘உடன்பாட்டை’ பெற்றுக்கொண்டிருந்தாலே ஒழிய, அந்த நாட்டின் எல்லைக்குள் அவரால் பிரவேசிக்க முடியாது. ஜனாதிபதி ஒரு அவசரகால நிலைமையை பிரகடனம் செய்ய முடியும். ஆனால், அவசரகால நிலைமையை செயற்படுத்துவதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் ஏனைய வளங்கள் என்பவற்றை அமைச்சரவை வழங்காதிருந்தால் அதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. அதன் பின்னர் அந்தப் பிரகடனம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அமர்வின் அங்குரார்ப்பணத்தின் போதும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை குறித்த ஒரு அறிக்கையை வெளியிட முடியும். ஆனால், அந்த அறிக்கை அவருடைய அறிக்கையாக இருந்துவர மாட்டாது. பிரதமரினால் சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவையின் ஒரு அறிக்கையாகவே அது இருந்து வரும்.

முடிவுரை

அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதியின் பதவி வெறுமனே வைபவ ரீதியான இயல்பை கொண்டதாகவே இருந்து வரும் என்ற விடயம் குறித்த முழுமையான, பூரணமான அறிவை கொண்டிருக்கும் நிலையில், எவரேனும் ஒருவர் இன்னமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பினால், ஏதேனும் பாரிய சீர்திருத்த செயன்முறைகள் மற்றும் நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை அறிமுகம் செய்து வைத்து, அமுலாக்கம் செய்வதில் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதனையும் (அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி அதனை செய்யக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கமாட்டார்) ஒரு விதமான சுயதிருப்தி மற்றும் சுயகர்வம் என்பவற்றை கருத்தில் கொண்டே அவர் அத்தகைய ஒரு முயற்சியை மேற்கொள்கிறார் என்றும் நாங்கள் அனுமானிக்க வேண்டியிருக்கும். அதுவே அவர்களை உந்தித்தள்ளும் சக்தியாக இருந்து வந்தால், ஜனாதிபதி பதவிக்கென நாடளாவிய ரீதியில் ஒரு தேர்லை நடத்துவதன் மூலம் பல கோடிக் கணக்கான ரூபா பணத்தை விரயம் செய்து, பல்லாயிரக்கணக்கான குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பை ஏன் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும்? 20ஆவது திருத்தம் தொடர்பாக ஜேவிபியினால் உத்தேசிக்கப்பட்டிருக்கும் மிகவும் விவேகபூர்வமான பிரேரணையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் ஊடாக அல்லது ஜனநாயக ரீதியில் அமைக்கப்படும் ஓர் தேர்தல் சபையின் ஊடாக இலங்கை குடியரசின் அரசியல் சார்பற்ற உயர் ஜனாதிபதிப் பதவிக்கு தேசிய ரீதியில் மதிக்கப்படும் அறிவு, அனுபவம் மற்றும் நாணயம் என்பவற்றை கொண்டிருக்கும் ஒரு நபரை தெரிவு செய்வது ஒரு புத்திசாலித்தனமான காரியமாக இருந்து வரமாட்டாதா? எமது அயல் நாடான இந்தியாவையும் உள்ளடக்கிய விதத்தில் ஏனைய பல ஜனநாயக நாடுகளில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகின்றது.


The Presidential Hopefuls – Have They Not Read Article 43? என்ற தலைப்பில் கலாநிதி நிஹால் ஜயவிக்கிரம எழுதி கொழும்பு ரெலிகிராப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.