பட மூலம், CBS News
2017இல் கிரவுண்ட்விவ்ஸ் இலங்கையின் முன்கூட்டிய அனர்த்த எச்சரிக்கை முறைமை குறித்து அறிந்துகொள்வதற்காக பல தகவல் அறியும் உரிமை வேண்டுகோள்களை முன்வைத்தது (காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்து நிலையம்).
அவ்வேளை, அனர்த்த முகாமைத்துவத்தை கையாளும் பொறுப்புமிக்க பல அரச ஸ்தாபனங்கள் எங்கள் வேண்டுகோள்களிற்கு பதிலளிப்பதற்கு தயாராகயிருக்கவில்லை அல்லது தயங்கின. காலநிலை அவதான நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது என்பது மிகவும் கடினமான விடயமாகக் காணப்பட்டது. திணைக்களத்தின் பல பிரிவுகள் ஊடாக சென்று இறுதியாக செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தை சென்றடையவேண்டியிருந்தது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஓரளவு தயாரான நிலையில் காணப்பட்டது
எனினும், காலநிலை அவதான நிலையமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் ‘டொப்ளர் ராடர்’ முறை குறித்து மேலதிக தகவல்களை வழங்குவதற்கு தயங்கின. குறிப்பிட்ட ராடர் 2015 முதல் செயலிழந்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய காலநிலை அவதான நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, செயற்படாத ராடர் என்பது பிரச்சினைக்குரிய ஒரு விடயமாக காணப்படுவதை ஏற்றுக்கொண்டார்.
அது தற்போது செயற்படும் நிலையிலிருந்திருந்தால் எங்கள் எதிர்வுகூறல்கள் தெளிவானவையாக இருந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார். எனினும், இந்தப் பகுதியில் 300 மில்லிமீற்றர் மழை பெய்யுமா என்பதை துல்லியமாக கூற முடியாது, குறிப்பாக பகுதிகளைப் பிரிப்பது கடினமான விடயம் என அவர் தெரிவித்தார்.
வெள்ள நிலையேற்படுவதற்கு சில நாட்களிற்கு முன்னரே பாரிய மழை குறித்து காலநிலை அவதான நிலையம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்தமை குறித்த ஆவணங்களை அவர் எங்களிடம் காண்பித்தார். பொதுமக்களிற்கு இயற்கை அனர்த்தம் குறித்து எச்சரிக்கை விடுப்பதற்கு திணைக்களம் பல நடவடிக்கைகளை எடுத்தது. ராவய பத்திரிகையில் கட்டுரை எழுதுவது போன்ற நடவடிக்கைகளை கூட அது முன்னெடுத்தது என அவர் குறிப்பிட்டார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையமும் அந்த அறிக்கைகளின் பிரதிகளை வழங்கியது. எனினும், அவர்கள் தங்களுடைய எச்சரிக்கைகள் குறுஞ்செய்திகள் மூலமே வழங்கப்பட்டன என தெரிவித்தனர் (அவர்களால் அவ்வேளை எழுத்து மூல ஆவணங்களையோ அல்லது அனுப்பப்பட்ட எச்சரிக்கைகளின் உள்ளடக்கங்களையே சமர்ப்பிக்க முடியவில்லை).
எனினும், பரந்துபட்ட அளவில் தெரிவிக்கப்பட்டது போன்று காலநிலை அவதான நிலையம் இயற்கை அனர்த்தம் எவ்வாறானதாக காணப்படும் என்பதை எதிர்வுகூறுவதில் தோல்வி கண்டது. 2017 இல் 600,000 மக்கள் இடம்பெயர்ந்தனர். அதற்கு முந்தைய வருடம் 500,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். 2017 இல் 200ற்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். அதேவேளை இலங்கை முழுவதிலும் வரட்சி காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியது குறித்து மக்கள் சீற்றம் கொண்டிருந்த தருணத்தில் இந்த தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 2016இல் வெள்ளத்தினால் பேரனர்த்தம் ஏற்பட்ட போதிலும் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை போலத் தோன்றியது.
வரைபட உதவி, desinventar.net பேரழிவுகள் குறித்த தரவுகளை சேகரிப்பதற்கான ஐநாவின் முயற்சி. இந்த வரைபடம் நீரில் மூழ்குதல், விபத்துக்கள் மற்றும் மண்சரிவு ஆகியவை உட்பட பல்வேறு தொடர்புபட்ட காரணங்களால் ஏற்பட்ட விபத்துக்களை பதிவு செய்கின்றது.
கடந்த மாதம் ஜேர்மனியின் 2019ஆம் ஆண்டிற்கான காலநிலை ஆபத்து சுட்டி வெளியாகியுள்ளது. அதில் தரப்பட்டுள்ள 2017இற்கான தரவுகளை அடிப்படையாக வைத்து பார்த்தால் மோசமான காலநிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடு இலங்கை என்பது தெரியவந்துள்ளது.
கிரவுண்ட்விவ்ஸ் மேலதிக ஆராய்ச்சிக்காக மேலும் நேரத்தை எடுத்துக்கொண்டதுடன், 2018 இல் புதிய வேண்டுகோளை தாக்கல் செய்தது. இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக இலங்கை எவ்வாறு தயாராகின்றது என்ற நுட்பமான விபரங்களை அறிவதே இதன் நோக்கம்.
இயற்கை அனர்த்தங்களை கையாள்வதற்கான விடயத்தில் இலங்கை முன்னேற்றங்களை கண்டுள்ள போதிலும் முன்தயாரிப்பை பொறுத்தவரையில் இலங்கை மேற்கொள்ளக்கூடிய பல நடவடிக்கைகள் உள்ளன. அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாடுகள், அரசியல் உறுதிப்பாடின்மை ஆகியவற்றில் ஒன்று அல்லது இரண்டும் இலங்கை இயற்கை அனர்த்தம் தொடர்பாக முழுமையான திட்டமிடலை மேற்கொள்வதை தடுக்கின்றன.
தேசிய இடர் முகாமைத்துவ பேரவையே பேரிடர் ஆபத்து தொடர்பான முக்கிய பிரதான அமைப்பாகும். இதன் தலைவராக ஜனாதிபதி காணப்படுகின்றார். இந்த அமைப்பின் கூட்டம் தொடர்ச்சியாக இடம்பெறவேண்டும். இயற்கை முகாமைத்து சட்டத்தின் கீழ் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை இது தொடர்பான கூட்டம் இடம்பெறவேண்டும். எனினும், 2018 இல் ஒரு தடவையும், 2017 இல் இரண்டு தடவையும் மாத்திரமே இதன் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 2016 இல் ஒரு தடைவ கூட இந்த அமைப்பின் கூட்டம் இடம்பெறவில்லை.
தேசிய இடர் முகாமைத்துவ பேரவையின் கூட்டங்கள் எப்போது இடம்பெற்றன என்பதை பார்வையிடுவதற்காக இங்கே அழுத்தவும். நாங்கள் விடுத்த தகவல் அறியும் உரிமை வேண்டுகோளிற்கு இவை மின்னஞ்சல் மூலம் பதிலாக கிடைத்தன.
இந்தக் கூட்டங்கள் நடைபெறவேண்டியது ஏன் அவசியமானது? இடர் முகாமைத்துவம் தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதே தேசிய பேரவைக்கான முக்கியமான ஆணையாகும். முன்கூட்டியே தயாராகயிருத்தல், தடுத்தல், உடன் பதில் நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் நிவாரணம் ஆகியவற்றிற்கு சிறந்த விதத்தில் வளங்களைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.
திஸ்ஸமஹாராமவில் நீர்நிலையொன்றில் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற விபத்தினால் 12 பேர் பலியானார்கள். அதனையடுத்து ‘9ஆவது பேரவை’ குளங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைக் கேட்டுக்கொண்டது. அக்காலப்பகுதியில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்கனவே 20 சட்டங்களை உருவாக்கியிருந்தது. மீன்பிடித்துறை சட்டம் முதல் கடற்படை சட்டம் வரை பலவற்றை அது உருவாக்கியிருந்தது, பல பரிந்துரைகளையும் உருவாக்கியிருந்தது. பேரிடரை எதிர்கொள்வதற்குத் தயாராகயிருத்தல் தொடர்பான கவனத்தை வலுப்படுத்துவதில் இந்த பேரவை முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.
பேரவையின் கூட்டம் இடம்பெறாதமைக்கான காரணம், பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பது போன்று மிகச்சமீப காலம் வரை பேரவையின் தலைவர் தான் என்பது ஜனாதிபதிக்கு தெரியாததாகயிருக்கலாம். நவம்பரில் கிரவுண்ட்விவ்ஸ் தகவல் கோரல் ஒன்றை சமர்ப்பித்தவேளையில் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மேம்படுத்தப்பட்ட தேசிய கொள்கையொன்றை தேசிய அனர்த்த முகாமைத்துவநிலையம் தயாரித்துக்கொண்டிருந்தது.
தவறான தகவல் பரிமாற்றமும் அதிகார வர்க்கமும் தொடர்ந்தும் தடையாக விளங்குகின்றன.
உதாரணத்திற்கு, தேசிய இடர் நிலையத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரின் அனுமதியை பெறவேண்டும். எனினும், பேரிடர் முகாமைத்துவ சட்டத்தில் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டவேளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்ற ஒன்று இல்லாததே இதற்கு காரணம். எனினும், இந்த அனுமதி பெறுதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் என தோன்றினாலும் இதன் காரணமாக வாழ்வா சாவா நிலை எழக்கூடும்.
2016இல் வெள்ளம் காலியில் ஆரம்பித்தது என நினைவுபடுத்திய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சத்துர லியனாராச்சி அவ்வேளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தலைமை அலுவலகத்தை அழைத்து வெள்ள நிலை குறித்து எச்சரித்தார் என குறிப்பிட்டார். உதவி பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி அந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்துள்ளார். அவர் வெள்ளம் குறித்து தகவல் வழங்கியவரிடம் உங்களை நான் நம்ப முடியுமா என கேட்டுள்ளார். இதற்கு நீங்கள் என்னை நம்பவேண்டும் என பதில் அளித்துள்ளார்.
வெள்ள ஆபத்துள்ளதாக படையினர் மூலம் செய்தி அனுப்பப்பட்டுள்ளது, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான நேரம் இருக்கவில்லை. நாங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நல்லெண்ணத்துடன் செயற்பட்டோம் என லியனராச்சி தெரிவித்தார்.
இவ்வாறு அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பதை விட முன்கூட்டியே சிறந்த விதத்தில் தயாராகயிருப்பதே சிறந்தது.
இலங்கைக்கு என அனர்த்த முகாமைத்து கொள்கையொன்று உள்ளது (இங்கே அழுத்தி பார்க்கலாம்). இதேபோன்று தேசிய கொள்கையும் உள்ளது (இங்கே அழுத்தி பார்க்கலாம்). இவை இரண்டும் அவசர நடவடிக்கை நிலையத்தை ஏற்படுத்துவது, பொதுமக்களிற்கு எச்சரிக்கைகள் வழங்குவதை ஒழுங்குபடுத்துவது உட்பட பல தகவல்களைக் கொண்டுள்ளன.
இவ்வாறு திட்டமிடுவதன் முக்கியத்துவம் வெளிப்படையானது. இலங்கையின் இயற்கை அனர்த்தங்கள் மக்கள் பகுதிகளை பாதிக்கின்றன. அனேகமாக இவற்றை எதிர்கொள்வதற்கான வசதிகள் அற்ற நிலையில் உள்ளவர்களை இவை பாதிக்கின்றன.
இயற்கை அனர்த்தங்களால் இலங்கையில் அழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை காட்டும் வரைபடம்.
வீடுகள் அழிக்கப்படுவதற்கு அல்லது சேதமாக்கப்படுவதற்கு காரணமான அனர்த்த சம்பவங்களை காட்டும் வரைபு.
இலங்கையின் இயற்கை ஆபத்துக்கள் குறித்த விபரங்களை 2012 இல் வெளியான அறிக்கையில் பார்வையிடலாம். இது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிற்கும் யுஎன்டீபீக்கும் இடையிலான கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. வெள்ள அபாயம் குறித்து இந்த அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள விடயங்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவில் உள்ள ஆறுகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பல இயற்கை அனர்த்த ஆபத்துக்கள் குறித்த வரைபடங்களை உருவாக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பானவை. எதிர்கொள்ளவேண்டிய பல தடைகள் உள்ளன. உதாரணத்திற்கு தேவையான அளவிற்கு தளவரைபடங்கள் இல்லாதது மற்றும் உயர்தர செய்மதி வரைபடம் மற்றும் தளவரைபடங்களின் உயர்ந்த விலையும் குறிப்பிடவேண்டிய விடயங்கள் (தேசிய அனர்த்த முகாமைத்து திட்டத்தின் 15ஆம் பக்கத்தைப் பார்க்கவும்). இதன் காரணமாக இலங்கை அளவில் காணப்படுகின்ற இயற்கை அனர்த்தம் குறித்த வரைபடம் இன்னமும் தயாராகவில்லை அல்லது ஆகக்குறைந்த அளவில் அவை பொதுமக்களிற்கு கிடைக்கவில்லை.
வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து ஆபத்துக்களைப் பதிவு செய்யும் பல முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. வெஸ்ஸ எனும் வரைபடம் வரலாற்று வெள்ளங்களையும் (2010 வரை) நிலப்பயன்பாட்டையும் (2012 வரையிலும்) காண்பிக்கின்றது. உலக வங்கியின் காலநிலை மாற்ற அறிவுசார் தளம் இலங்கையில் உள்ள இயற்கை ஆபத்துக்களைப் பதிவு செய்துள்ளது.
கிரவுண்ட்விவ்ஸ் அங்கு சென்றவேளை அமைச்சு சுனாமி குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுப்பதில் தீவிரமாகயிருந்தது. ஆபத்தின் போது தப்பி வெளியேறுவதற்கான வழிமுறைகளை பொதுமக்கள் அறிந்து வைத்திருக்க உதவுவதே அதன் நோக்கம். தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் சிறுவர்களிற்காக வடிவமைக்கப்பட்ட பல பாடசாலை நூல்களை காண்பித்தது. இடி மின்னல் முதல் மண்சரிவு வரை பலவகையான ஆபத்துக்கள் குறித்ததாக அவை காணப்பட்டன. இது தவிர அந்த பாடசாலைகள் உட்பட ஆர்வம் கொண்ட அமைப்புகளுடன் இணைந்து அவர்களிற்கான அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்க உதவுகின்றது.
2016, 2017 வெள்ளத்திற்குப் பின்னர் கண்காணிப்புகள் தீவிரமடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் சில பலாபலன்களை அளித்துள்ளன. 2018 இல் 26 பேர் உயிரிழந்தனர், 19,519 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது இவை குறைந்த எண்ணிக்கையாகும்.
இந்த முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை, அதேவேளை இலங்கை இன்னமும் செய்யவேண்டியுள்ளது.
லியனராச்சி சுட்டிக்காட்டியது போன்று முன்கூட்டியே தயாராகயிருத்தலிற்கு செலவு செய்யப்படும் ஒரு டொலர் மூலம் அனர்த்தம் நிகழ்ந்த பின்னர் பதில் நடவடிக்கைகளிற்காக செலவிடப்படக்கூடிய பல டொலர்களை சேமிக்கலாம்.
பல டொலர்களை சேமிக்கலாம், பல உயிர்களையும் காப்பாற்றலாம்.
குறிப்பு: தகவல் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட அறிக்கைகளை கிரவுண்ட்வியுஸ் கீழே இணைத்துள்ளது.
National Disaster Management Policy
National Disaster Management Plan 2013 – 2017
Sri Lanka Comprehensive Disaster Management Programme 2014 -2018
Hazard Profiles – December 2012