பட மூலம், Selvaraja Rajasegar

இலங்கை முஸ்லிம் சமூகம் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாக‌ மிகப்பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கும் இக்கட்டத்தில் இவ்வாறானதொரு தலைப்பு அவசியமானதா? என்ற கேள்வி எழுவது இயல்பானது. இத்தலைப்பு ஏன் முக்கியம் பெறுகின்றது என்பதை பின்வரும் அடிப்படை காரணங்களினூடாக புரிந்துகொள்ள முடியும். இக்காரணங்களே விரிவாக எழுதுவதற்கு எம்மை தூண்டின:

1 பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு முஸ்லிம் பெற்றோரும் பிள்ளைக்கு செய்ய வேண்டிய இஸ்லாமிய வழிகாட்டல்களை அச்சொட்டாக செய்வதில் மிகவும் கரிசனையோடிருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம். இப்பின்னணியில் பெண் பிள்ளைக்கு கத்னா செய்ய வேண்டுமா? என்ற கேள்வி தோன்றுவது மிகவும் இயல்பானது. பலர் இது பற்றி என்னிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் கேட்டிருக்கின்றனர். பெரும்பாலான‌ முஸ்லிம் குடும்பங்களில் தோற்றம்பெறும் கேள்வியாக உள்ளதால் இது பற்றி எழுதுவது அவசியமானது.

2 பெண்கள் கத்னா சாதாரணதொரு கிளைப்பிரச்சினையாக சிலரால் கருதப்பட்டாலும், இன்னும் ஒரு சாராரால் மனித உரிமை மீறலாகவும், பெண் அடக்குமுறையின் ஒரு வடிவமாகவும் காட்சிப்படுத்தப்பட்டு கிளைப்பிரச்சினை என்ற நிலையிலிருந்து மிக முக்கிய அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று என்ற கட்டம் நோக்கி நகர்த்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் இத்தலைப்பு பேஸ்புக்கில் மிகவும் சூடுபிடித்த ஒன்றாக பரிணாம வளர்ச்சியடைந்திருந்ததை அவதானிக்கலாம். இவ்விரு சாராரது நிலைப்பாடுகளைத் தாண்டி அல்குரானும் சுன்னாவும் பெண் கத்னா பற்றி என்ன கூறியிருக்கின்றன? அல்லது பெண்கள் கத்னா பற்றிய சமூக வழமைகள் அல்குரான், சுன்னாவில் வந்துள்ளனவா? ஆகிய இரு கேள்விகளுக்கும் விடை தேட வேண்டியுள்ளது.

3 பெண்கள் கத்னா பற்றி ஆரம்ப மற்றும் நவீன கால அறிஞர்கள் உரையாடியிருக்கின்றனர், எழுதியிருக்கின்றனர். ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்களான‌ மாவர்தி, நவவி, இப்னு ஹஜர், இப்னுல் முன்திர், பைககீ என்று தொடரும் அப்பட்டியல் நவீனகால அறிஞர்களான‌ சலீம் அல் அவா, கர்ழாவி, முஹம்மத் அஸ் ஸபாக், செய்யது சாபிக் என்று நீட்சி பெறுகிறது.

4 அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பெண்கள் கத்னாவை வாஜிப் எனக் கூறியிருக்கிறது (பார்க்க: 005/ACJU/F/2008). குறிப்பிட்ட கருத்துக்கு மாற்றமானதொரு கருத்தையே நாம் கொண்டிருக்கிறோம். கருத்து வேறுபாட்டுக்கு இடம்பாடான விடயங்களில் வித்தியாசமான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட‌ கருத்துக்கள் முன்வைக்கப்படுவது மிகவும் ஆரோக்கியமானது எனக் கருதுகிறோம். ஒற்றுமையை குலைக்கும் செயல் எனக் கருதுவது கருத்துவேறுபாட்டை எவ்வாறு அணுகுவது எனத் தெரியாததன் விளைவே தவிர வேறொன்றுமில்லை. ஆரோக்கியமான உரையாடலொன்றை முன் நகர்த்தவே இங்கு முனைகிறோம்.

பெண் கத்னா பற்றிய அல்குரான் வசனங்கள்:

கத்னா பற்றி நேரடியான அல்குரான் வசனங்கள் எதனையும் கண்டுகொள்ள முடியாது. ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆண், பெண் இருவருக்கும் கத்னா கடமையானது என்ற தமது வாதத்தை வலுப்படுத்த பின்வரும் அல்குரான் வசனத்தை ஆதாரமாக முன்வைக்கின்றனர்: “இணைவைப்பில் ஈடுபடாத‌ இப்ராஹீம் உடைய மார்க்கத்தை நீங்கள் பின்பற்றுங்கள் என நாம் உங்களுக்கு வஹி அறிவித்தோம்” (நஹ்ல்: 123). இவ்வசனத்தை விளக்க, “இப்ராஹீம் தனக்கு 80 வயதாக இருக்கும்போது கத்னா செய்தார்? (புஹாரி, முஸ்லிம்) எனும் ஹதீஸையும் ஆதாரம் காட்டி இப்ராஹீமின் வழியைப் பின்பற்றுவதாயின் ஆண், பெண் இரு சாராரும் கத்னா செய்வது கட்டாயமானது என்ற முடிவுக்கு வருகின்றனர். அவர்கள‌து கருத்து மேற்கூறிய வசனம் மீதான ஒரு வலிந்துகொடுக்கும் விளக்கமாகவே இருக்கிறது. இப்ராஹீம் நபி பற்றி பேசும் அல்குரான் வசனங்கள் அவரது ஏகத்துவம் மீதான தொடர்ந்தேர்ச்சியான முயற்சியையும் அப்பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்களையுமே சுட்டிக்காட்டுகின்றன. கத்னா சம்பந்தமான நேரடியான வசனங்கள் அல்குரானில் இல்லை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மேலே பதியப்பட்ட ஹதீஸ் பெண்கள் கத்னாவை பேசுகிற‌து என்று கூறுவதை விட‌ ஆண்களுக்கான கத்னாவையே குறிக்கிறது.

பெண்கள் கத்னா பற்றிய ஹதீஸ்கள்

கத்னா பற்றிய ஹதீஸ்கள் அறிஞர்கள் மத்தியில் நீண்ட உரையாடலுக்கு உட்பட்டிருக்கின்றன. குறிப்பாக இத்தலைப்பு பற்றி பேசும் மூன்று ஹதீஸ்கள் அதிக கவனம் கொடுத்து நோக்கப்பட்டிருக்கின்றன:

1 நபியவர்கள் கூறினார்கள், “இரு கத்னாக்கள் இணைந்தால் குளிப்பு கடமையாகிவிடுகிறது” (அஹ்மத்). இதன் அறிவிப்பாளர் வரிசை சம்பந்தமான கருத்துவேறுபாடுகள் இருப்பினும் அர்னாஊத், அல்பானி போன்றோர் இதன் அறிவிப்பாளர் வரிசையை ஸஹீஹ் என்கின்றனர். சில அறிஞர்கள் ஹதீஸின் உள்ளடக்கத்தை வேறுவிதமாக விளக்குகின்றனர். அரபு மொழியில் இருமையில் கூறும் வழமை இருக்கிறது. அபூபக்ரையும் உமரையும் “உமரானி” (இரு உமர்கள்) என்றழைத்தனர். தந்தையையும் தாயையும் “அபவைனி” (இரு தந்தைகள்) என அழைக்கும் போக்கு இருந்தது. இப்பின்னணியில் ஆணின் கத்னாவை குறிக்க பெண்ணையும் கத்னா செய்யப்பட்டவள் போன்று விழிக்கப்பட்டுள்ளது என சிலர் அபிப்பிராயப்பட்டனர். இக்கருத்து அவ்வளவு பலமானதாக இல்லை. ஏனெனில், ஸஹீஹ் முஸ்லிமில் வரும் “ஒரு கத்னா இன்னொரு கத்னாவை தொட்டால்” என வரும் ஹதீஸ் ஆணினது கத்னா, பெண்ணினது கத்னா என இரண்டையும் குறித்துக்காட்டுகிறது.

எனினும், இங்கு இன்னொரு அவதானத்தையும் அறிஞர்கள் முன்வைக்கின்றனர். அரபிகளிடத்தில் வெளி கலாச்சாரம் காரணமாக பெண்களை கத்னா செய்யும் ஒழுங்கிருந்தது. இப்பின்னணியில்தான் இந்த ஹதீஸை நோக்க வேண்டும். பெண்களுக்கு கத்னாவை கடமையாக்குவதாகவோ அல்லது விருப்பத்துக்குரிய ஒன்றாகவோ ஆக்குவதாகவோ இந்த ஹதீசின் வார்த்தைகள் அமைவதாக இல்லை. அன்றிருந்த வழக்காறை அடியாக வைத்து கூறப்பட்ட ஒரு கூற்றாகவே இது உள்ளது.

2 உம்மு அதிய்யா அறிவிக்கும் ஹதீஸ்: மதீனாவில் கத்னா செய்யும் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு நபியவர்கள் “சிறியதொரு பகுதியை அகற்றுங்கள். சதைத்துண்டை அடியோடு வெட்டி விடாதீர்கள். அதுவே பெண்ணுக்கு செழிப்பை கொடுக்கும். கணவனுக்கு விருப்பத்துக்குரியதாகவும் இருக்கும்” (அபூ தாவூத்). இதே கருத்தைக் குறிப்பிடும் வகையில் பல ஹதீஸ்கள் வித்தியாசமான சொற்களினூடாக வந்திருக்கின்றன. அனைத்து ஹதீஸ்களும் ழஈப் (பலவீனம்) தரத்தை உடையன என்பதே இப்னுல் முந்திர், ஷவ்கானி போன்ற அறிஞர்கள‌து கருத்தாகும். இவ்வகையான ஹதீஸ்களை ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என வைத்துக்கொண்டால் அவை என்ன கருத்தை வலியுருத்துகின்றன? கட்டாயமானது (வாஜிப்) என்ற கருத்தையா? அல்லது விருப்பத்துக்குரியது (முஸ்தஹப்) என்ற கருத்தையா கொடுக்கிறது? அல்லது அன்றிருந்த வழக்காறொன்றை நெறிப்படுத்துகிறதா? என்ற கேள்விக்கு நாம் கடைசி கருத்தையே பலப்படுத்துகிறோம். மனிதனது உலக விவகாரங்களோடு தொடர்புபடும் விதத்திலேயே நபியவர்களது கருத்து அமைகிறது. பெண்ணினது முகம் செழிப்படைகிறது, கணவனுக்கு விருப்பத்துக்குரியதாக‌ மாறுகிறது போன்ற சொற்பிரயோகங்கள் இதனையே சுட்டிக் காட்டுகின்றன. மகரந்தச் சேர்க்கை செய்து கொண்டிருந்த ஸஹாபாக்களிடம் இது அவசியமற்றது என்ற கருத்தில் நபியவர்கள் கூறுகிறார்கள். விளைச்சல் குறைவாக கிடைக்க நபியவர்களிடம் முறையிட்ட போது “உங்களது உலக விவகாரங்களில் மிகவும் அறிந்தவர்கள் நீங்களே” என்று நபியவர்கள் கூறினார்கள். இதனை ஒத்த ஒரு கருத்தையே நபியவர்கள் பெண்கள் கத்னா விடயத்திலும் கூறுகிறார்கள்.

3 நபியவர்கள் கூறினார்கள்: “கத்னா செய்வது ஆண்களுக்கு சுன்னாவாகும். பெண்களுக்கு கண்ணியமாகும்” (அஹ்மத்). இந்த ஹ‌தீஸை அல்பானி போன்றவர்கள் ழஈப் எனக் கருதுகின்றனர். இதனை ஸஹீஹான ஹதீஸ் என எடுத்துக்கொண்டாலும் கூட அது கொடுக்கும் கருத்து வித்தியாசமான‌து. நபியவர்களது காலத்தில் கத்னா செய்துகொள்வது கண்ணியமாகக் கருதப்படும் வழமை இருந்தது என்ற கருத்தை கொடுக்கிறதே தவிர கடமை, விரும்பத்தக்கது போன்ற சட்டத்தை கொடுக்காது. ஒரு காலத்தில் அல்லது பிரதேசத்தில் கண்ணியமாக கருதப்படுவது இன்னொரு காலத்தில், பிரதேசத்தில் கண்ணியமற்றவையாக கருதப்படலாம். கத்னா பற்றிய இந்த ஹதீஸும் போதிய பலமான ஆதாரமாகக் கொள்ளப்பட முடியாதுள்ளது.

மேற்கூறிய மூன்று ஹதீஸ்களில் கடைசி இரு ஹதீஸ்களும் அறிவிப்பாளர் வரிசை ரீதியாக பலவீனமான நிலையில் இருக்கின்றன. முதல் ஹதீஸினது அறிவிப்பாளர் வரிசை விடயத்தில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. அதனை ஸஹீஹ் என எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு கத்னா செய்தல் வாஜிப் அல்லது முஸ்தஹப் என்ற கருத்தை சுட்டிக்காட்டுவதாக இல்லை. ஒட்டு மொத்தத்தில் மூன்று ஹதீஸ்களும் பெண்கள் கத்னா வாஜிப் என்றோ முஸ்தஹப் என்றோ கூறுவதாக இல்லை. மாற்றமாக அன்று நிலவிய வழமையை அனுமதித்ததாக (முபாஹ்) கருதலாம்.

முபாஹ் (அனுமதிக்கப்பட்டது) ஆன விடயங்களில் நலன்களை மையப்படுத்தி அணுகுவதை இஸ்லாமிய அறிஞர்கள் வலியுருத்துகின்ற‌னர். குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட விடயம் உறுதியாக‌ தீங்கை கொண்டு வருமாயின் அதனை தற்காலிகமாகவோ முழுமையாகவோ குறிப்பிட்ட சூழ்நிலையை கருத்திற் கொண்டு தடைசெய்ய முடியும் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வேதம் கொடுக்கப்பட்ட பெண்களைத் திருமணம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பினும், உமர் (ரழி) அவர்கள் தன்னுடைய‌ ஆட்சிக் காலத்தில் அவ்வழமை முஸ்லிம் பெண்களுக்கு பாதிப்பாக அமைந்துவிடும் என்ற காரணத்தால் ஸஹாபாக்களுக்கு வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்வதைத் தடை விதித்தார்கள்.

அனுமதிக்கப்பட்ட விடயம் தீங்காக அமைந்துவிடுமாயின் அதனை தடுக்க வேண்டும் என்பது பின்வரும் ஹதீஸினூடாக புரிகிறது. இந்த ஹதீஸ் இஸ்லாமிய சட்டப் பரப்பில் மிக அடிப்படையானதொரு சட்ட விதியாகவும் கருதப்படுவது மேற்கூறிய‌ கருத்தை மென்மேலும் வலுப்படுத்துகிறது: “தீங்கிழைக்கக் கூடாது. தீங்குக்குப் பகர் தீங்கிழைக்கவும் கூடாது”. எம்முன்னால் உள்ள மிகப்பெரிய பொறுப்பு பெண்கள் கத்னா தீங்காக அமைந்து விடுகிறதா? அல்லது நலன்களை சுமந்து வருகிறதா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுதான். யார் இதனை செய்வது?

பெண்கள் கத்னா அவசியமானதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பவர்கள் யார்?

பெண்கள் கத்னா தீங்கானதா? நலன்மிக்கதா? என்பதை தீர்மாணிப்பவர்கள் மருத்துவதுறை சார்ந்த வைத்தியர்களாக இருப்பதுவே மிகவும் பொறுத்தமானது. அதிலும் குறிப்பாக பெண்கள், பாலியல் சார்ந்த துறைகளை சேர்ந்த அறிஞர்கள் இது பற்றிய உரையாடலொன்றை முன்னெடுப்பார்களாயின் மிகவும் ஆரோக்கியமான நகர்வாக இருக்கும். கத்னா வைத்தியத்துடன் தொடர்பான ஒரு பிரச்சினை. துறை சார்ந்தவர்களிடம் அதற்குரிய அறிவை பெற்றுக்கொள்ளும்படி அல்குரான் ஏவுகிறது: “நீங்கள் அறியாதவர்களாக இருப்பின் துறைசார்ந்தவர்களிடம் கேளுங்கள்”. இன்னொரு வசனம் இப்படி கூறுகிறது: “நிபுனத்துவம் பெற்றவர் உங்களுக்கு அறிவிப்பது போல் வேரு யாரும் அறிவிக்க முடியாது”. சட்டத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இங்கு குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள் நோக்கி செல்ல வேண்டியிருக்கிற‌து. இது சட்டவாக்க முறைமையுடன் (உஸூலுல் பிக்ஹ்) தொடர்புபடும் ஒரு விடயம். பத்வா கூறுவதற்கான அதிகாரம் யாரிடம் உள்ளது என்ற கேள்விக்கு நவீன கால அறிஞர்கள் இன்றிருக்கும் கலைகளில் தேர்ச்சிபெற்றவர்களையும், துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்குகின்றனர். சுருக்கமாகக் கூறுவதாயின் பெண்கள் கத்னா விடயத்தில் அதன் நலன்கள், தீங்குகளை ஆராய்ந்து அது பற்றிய தீர்க்கமானதொரு முடிவுக்கு வரும் பொறுப்பு மருத்துவ துறை சார்ந்த வைத்தியர்களையே சாரும்.

பெண்கள் கத்னா எங்கிருந்து தோற்றம்பெற்றது?

பெண்கள் கத்னா வழக்காறு எவ்வாறு எப்பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை புரிந்துகொள்ளும் போது இப்பிரச்சினையை அணுகுவது எமக்கு இன்னும் இலகுவானதாக மாறிவிடுகிற‌து. பெண்கள் கத்னா பாரம்பரியம் பெண் மீதான பிழையான புரிதல் காரணமாக தோற்றம் பெறுகிறது. பெண் கொடியவள், ஆணை வழிகெடுக்கும் ஷெய்தான், காம இச்சை மிகையாக கொண்டவள் போன்ற கருத்தாக்கங்களும் நம்பிக்கைகளும் முஹம்மத் நபியின் காலத்துக்கு முன்னிருந்தே ஆபிரிக்க பிரதேசத்தில் மிக ஆழமாக வேரூன்றியிருந்தது. மிகையான காம இச்சை கொண்டவளை அடக்குவதற்கும் அவளை கட்டுப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாகவுமே அவளது பாலுருப்பிலிருக்கும் சதைத்துண்டை வெட்டும் வழமை தோற்றம்பெறுகிறது. இது காலப்போக்கில் சமூக வழமையாக வலுப்பெறுகிறது. இப்பின்னணியை சரியாக விளங்கிக் கொள்கின்ற போது பெண் கத்னா எனும் வழமை இஸ்லாத்தினூடாக ஆரம்பிக்கப்பட்டதல்ல, மாறாக ஆபிரிக்க பிரதேசத்தில் தோன்றிய பெண் அடிமைத்துவ மனோநிலையில் இருந்து தோற்றம் பெற்ற ஒன்று என்பதை அறியலாம்.

ரிஷாட் நஜிமுடீன்

பெண்கள் பிறப்புறுப்புச் சிதைவுடன் தொடர்புடைய கட்டுரைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.